::தேர்தல்கள்

::தேர்தல்கள்

இலங்கைத் தேர்தல்கள் பற்றிய செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

யாழ்.மாவட்டத்தில் 7லட்சத்து 21ஆயிரத்து 359 வாக்காளர்கள்!

எதிர்வரும் ஜனவரி மாதம் 26 ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் 7 இலட்சத்து 21 ஆயிரத்து 359 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் எனத் தெரியவருகிறது.

இதன்படி ஊர்காவற்துறை தேர்தல் தொகுதியில் 53111 பேரும் வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதியில் 63991 பேரும் காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் 69082 பேரும் மானிப்பாய் தேர்தல் தொகுதியில் 71114 பேரும் கோப்பாய் தேர்தல் தொகுதியில் 65798  பேரும் உடுப்பிட்டி தேர்தல் தொகுதியில் 56426 பேரும் பருத்தித்துறை தேர்தல் தொகுதியில் 48613 பேரும் சாவகச்சேரி தேர்தல் தொகுதியில் 65141 பேரும் நல்லூர் தேர்தல் தொகுதியில் 72558 பேரும் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் 64 714 பேரும் கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் 90811 பேரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

யாழ். குடாவிலிருந்து இடம்பெயர்ந்தோருக்கு வசிக்குமிடத்தில் வாக்களிக்க வசதி

யாழ்ப்பாணத்தில் இருந்து இடம் பெயர்ந்து கொழும்பு உட்பட அதன் சுற்றுப் புறங்களில் வசிக்கும் வாக்காளர்களுக்கு தாம் தற்காலிகமாக வசிக்கும் பகுதிகளில் வாக்களிக்க வசதி அளிக்க தேர்தல் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

யாழ் தேர்தல் மாவட்ட வாக்காளர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக தேர்தல் ஆணையாளருக்கு விண்ணப்பிக்குமாறு தேர்தல் திணைக்களம் கோரியுள்ளது. யாழ். தேர்தல் மாவட்ட வாக்காளர் இடாப்புக்கள் இன்று (3) முதல் வெள்ளவத்தை தபால் நிலையத்தில் பார்வைக்காக வைக்கப்படவுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

பாராளுமன்றத் தேர்தல் பணிகளும் ஆரம்பம்

vote.jpgஜனாதிபதித் தேர்தலில் சகலரினதும் பார்வை திரும்பியுள்ள அதேசமயம், பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான நடவடிக்கைகளை தேர்தல் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது. தற்போதைய பாராளுமன்றத்தின் ஆயுள்காலம் அடுத்த ஏப்ரலுடன் முடிவடையவுள்ள நிலையில், தேர்தல் ஆணைக்குழு இந்த நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.

வட மாகாணத்தின் ஆசனங்களின் எண்ணிக்கை தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. 1987 இல் மேற்கொள்ளப்பட்ட இலங்கை இந்திய உடன்படிக்கையை தொடர்ந்து வடக்கு,கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்தன. ஆயினும் 2006 அக்டோபரில் இந்த இணைப்பு சட்டரீதியற்றது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

வடக்கு,கிழக்கு மாகாணங்களின் பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை தற்போது 31 ஆகும். புதிய பாராளுமன்றத்திலும் அந்த எண்ணிக்கை இதே விதமானதாகவே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்துக்கு 9 ஆசனங்களும் வன்னி மாவட்டத்துக்கு 5 ஆசனங்களும் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு 6 ஆசனங்களும் திருகோணமலை மாவட்டத்துக்கு 4 ஆசனங்களும் திகாமடுல்லவுக்கு 7 ஆசனங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பொன்சேகா ஆதரவுக்கு எதிரொலி – மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் ராஜினாமா

மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினரும் சோஷலிச மகளிர் அமைப்பின் தேசிய ஏற்பாட்டாளருமான பிரியங்கா கொத்தலாவல தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் மக்கள் விடுதலை முன்னணி கூட்டாக செயற்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளதுடன் வகித்து வந்துள்ள அனைத்து பதவிகளையும் துறந்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்கவுக்கு கடும் தொனியில் எழுதியுள்ள கடிதத்தில், ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவுடன் கூடிய ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன் சேகாவுக்கு ஆதரவு வழங்க மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ள தையிட்டு தான் கிலேசமுற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக நான்கு சர்வதேச அமைப்புக்களுக்கு அழைப்பு!

dayananda_disanayake.jpgதேர்தல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு நான்கு சர்வதேச அமைப்புக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய கண்காணிப்பாளர்கள் ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்கள் ஆசிய கண்காணிப்பாளர்கள் மற்றும் ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நாட்டில் 12 வீதமானோர் தேசிய அடையாள அட்டை இன்றி காணப்படுவதாகவும் அவர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல்களை சுதந்திரமானதும் நியாயமானதுமான முறையில் நடத்துவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுக்கத் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் 

வேட்பாளரை நிறுத்துவது குறித்து தமிழ்க்கூட்டமைப்பு ஆலோசனை

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் கட்சியின் உயர்மட்டத்தில் தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது. எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராக மகிந்த ராஜபக்ஷவும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகாவும் இடதுசாரி முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக விக்கிரமபாகு கருணாரட்ணவும் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பிலும் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர்கள் பல தரப்பினருடனும் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாகவும் அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டுமென ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியாவிலிருந்து நாடு திரும்பியுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் விரைவில் முடிவு எடுக்கப்படவுள்ளதாகவும் இது தொடர்பில் கட்சியினர் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீதோ அல்லது எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகா மீதோ நம்பிக்கை வைக்கத் தமிழ் மக்கள் தயாரில்லை என்பதால் இவர்கள் இருவரில் ஒருவரை ஆதரிக்க முடியாத நிலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ளதாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்தும் ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

இடம்பெயர்ந்தோர் சுதந்திரமாக வாக்களிக்கும் சூழல் உருவாக்கப்படுவது அவசியமாகும் பவ்ரல் அமைப்பு கோரிக்கை

இடம் பெயர்ந்துள்ள அனைத்து மக்களும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திரமாக வாக்களிப்பதற்கான சூழலை தேர்தல் ஆணையாளர் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்று தாம் வலியுறுத்திக் கோரவுள்ளதாக தேர்தலை கண்காணிப்பதற்கான பவ்ரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஜனவரி 26 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார். இந்நிலையில், இத் தேர்தலை கண்காணிப்பது தொடர்பில் திட்டமிட்டு வருகின்றோம். 10,500 தேர்தல் தொகுதிகளில் ஒருவர் வீதம் நியமித்து கண்காணிக்கவுள்ளோம்.எமது கண்காணிப்புக்கு சக கண்காணிப்பு அமைப்புகளின் உதவி பெறவுள்ளதுடன் சர்வதேச கண்காணிப்பாளரையும் இணைத்துச் செயற்படவுள்ளோம்.

இவ்வாரம் தேர்தல் ஆணையாளரைச் சந்திக்கவுள்ளோம். இதன்போது இடம்பெயர்ந்து முகாம்களில் உள்ளோர் வாக்களிப்பது மற்றும் இடம்பெயர்ந்து பல்வேறு பகுதியில் வதிவோர் வாக்களிப்பது தொடர்பில் கலந்துரையாடவுள்ளோம்.வாக்களிப்பின் போது அடையாள அட்டை இன்மை பிரச்சினை குறித்தும் ஆராயவுள்ளோம். இடம்பெயர்ந்தவர்கள் எங்கு வாழ்ந்தாலும் பதவின்மையினால் வாக்களிக்க முடியாது போகும் சூழல் உள்ளது. இதற்கு தகுந்த நடவடிக்கையெடுக்கப்பட வேண்டுமென கோரவுள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் ஜனவரி 26 ஆம் திகதி – தேர்தல்கள் ஆணையாளர் இன்று அறிவிப்பு

dayananda_disanayake.jpgஇலங் கையின் 6ஆவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஜனவரி 26 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்தார்

வேட்பு மனுக்கள் டிசம்பர் 17 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார். தற்போது பதவியில் உள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதவிக்காலம் முடிய இன்னமும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்ற நிலையில், இந்த தேர்தல் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிறைவேற்று அதிகாரம் ஒழிப்பு, பாராளுமன்ற முறை மாற்றம்; சமகாலத்தில் மேற்கொள்ளப்படவேண்டும் – அநுர பிரியதர்ஷன யாப்பா

anura.jpgநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாமற் செய்வதும், பாராளுமன்ற முறையை மாற்றி அமைப்பதும் சமகாலத்தில் மேற்கொள்ளப்படவேண்டுமென அமைச்சரவைப் பேச்சாளரான தகவல், ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

பாராளுமன்ற முறையை மாற்றாமல் நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறையை நீக்கினால், ஸ்திரமற்ற நிலை உருவாகும். அவ்வாறு பாராளுமன்றத்தைப் பலவீனப்படுத்தி தமது நோக்கத்தை நிறைவேற்றவே எதிர்க் கட்சிகள் முயற்சிக்கின்றன.

இதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்று தெரிவித்த அமைச்சர், இந்த இரண்டு விடயங்களையும் சமகாலத்தில் மேற்கொள்ள எதிர்க் கட்சிகள் முன்வருமானால் அரசாங்கமும் அதற்கு தயாராகவே உள்ளது என்றும் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (26) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் யாப்பா இதனைத் தெரிவித்தார்.

“ஜனாதிபதி முறையை இல்லாது செய்வதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு அவசியம், அத்துடன் சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்படவேண்டும். ஜனாதிபதியால் மாத்திரம் தனித்து இதனைச் செய்ய முடியாது.  எதிர்க் கட்சி கூறுவதைப்போல் செய்வதானால் செவ்வாய்க் கிரகத்தில் உள்ள பாராளுமன்றத்தில் தான் இதனைச் செய்யவேண்டும். நாட்டில் ஸ்திரத்தன்மை இல்லாமல் எதனையும் நடத்த முடியாது.

எனவே மீண்டும் ஜனாதிபதி தலைமையில் பலமான ஓர் அரசாங்கத்தை உருவாக்கவேண்டும் என்று தெரிவித்த அமைச்சர் யாப்பா, பாராளுமன்றம் பலவீனமான நிலையில் ஜனாதிபதி முறையை இல்லாமற் செய்தால், மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. சிறுபான்மையினரின் உரிமைகள் தொடர்பில் சந்தேகம் ஏற்படும் நிலை உருவாகும் என்றும் குறிப்பிட்டார்.

நெருக்கடிகளுக்குப் பின்னரான செயற்பாடுகளில் இப்போது நாடு உள்ளது. உலக அரசியல் மாற்றமடைந்து முன்னேற்றம் கண்டு வருகிறது. அதற்கு ஏற்ற வகையில் நாமும் செயற்படவேண்டும். இராணுவ மூலோபாயத்தினால் மாத்திரம் யுத்தத்தை வெல்ல முடியாது. அவ்வாறெனில் எப்போதோ வென்றிருக்கலாம்.

ஆகவே, அரசியல் மூலோபாயமும் அவசியம். அந்த இரண்டையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது தலைமையில் மேற்கொண்டதனால் தான் எம்மால் யுத்தத்தை வெல்ல முடிந்தது. அந்த வகையில் ஈடினையற்ற ஒரு பொது ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே உள்ளார். அவருக்குச் சவாலாக எவருமே இல்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தலில் ஜே.வி.பி. கட்சியின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா

sarathfonseka.jpgஎதிர்வரும்  ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக ஜெனரல் பொன்சேகாவை தாம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக  ஜெ வி பி கூறியுள்ளது. ஜே.வி.பி கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க இத்தகவலை வெளியிட்டுள்ளார்

பிற எதிர்கட்சிகளும் இவரை ஆதரிக்க வேண்டும் என்று அக்கட்சி கோரியுள்ளது. ஆனால் பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு தேர்தலில் நிற்பது குறித்து ஜெனரல் பொன்சேகா எதவும் கூறாமல் இருந்து வருகிறார்.  அதே நேரம் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியும் இது பற்றி எதுவும் தெரிவிக்காமல் உள்ளது.