ஹெல்பிங் வீடியோ பணக்காரனான கிருஷ்ணா மக்களால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார் !
உதவி செய்கின்ற காணொளிகளை பதிவேற்றம் செய்யும் யூரியூப் சனலை நடாத்தி வருகின்ற யூரியுப்பர் கிருஷ்ணா என்பவர் நேற்றையதினம் பண்டத்தரிப்பு இளைஞர்களால் இடைமறிக்கப்பட்டார். கிருஷ்ணா இளைஞர்களால் கேள்விக் கணைகளால் துளைத்து எடுக்கப்பட்டார். அவர்களின் கேள்விகளுக்கு உரிய பதில்களை கொடுக்க முடியாது கிருஷ்ணா, ஏதேதோ சொல்லி சளாப்பினார். இறுதியில் கிருஷ்ணா இளைஞர்களின் முயற்சியில் யாழ்.இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைப்பட்டுள்ளார். விசாரணைகள் தொடர்வதாக கூறப்படுகின்றது.
கிருஷ்ணாவினால் பதிவேற்றப்பட்ட காணொளி ஒன்று சமீபத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அந்தக் காணொளியில் கிருஷ்ணா வீடியோ எடுக்க சம்மதிக்காத உயர்தரம் கற்கும் பாடசாலை மாணவி ஒருவரை தரக்குறைவாக விமர்சிக்கிறார். வழமையாகவே கிருஷ்ணா தனது உதவி வழங்கும் காணொளிகளில் தனிப்பட்ட குடும்பங்களின் மற்றும் தனிநபர்களின் அந்தரங்க மற்றும் பிரத்தியேக பிரச்சினைகளை எந்த வித தணிக்கையும் இன்றி வெளிப்படுத்தி வந்தார். இதனை ஏற்கனவே தேசம்நெற் தவிர பெரும்பாலும் யாரும் கண்டிக்கவில்லை.
சமீபத்தில் சர்ச்சையான வீடியோ குறித்து நாடாளுமன்றத்திலும் பேசப்பட்டது. இந்த விடயத்தில் இப்போதாவது எதிர்வினையாற்றியுள்ளார்கள் என்பது காலம்தாழ்ந்த நடவடிக்கையாக இருந்தாலும் வரவேற்றக்கத்தக்கது.
இது ஒரு கிருஷ்ணா என்ற தனிப்பட்ட யுரீயூப்பர் ஒருவருக்கு எதிரான நடவடிக்கையுடன் முடிவடையக் கூடாது. கிருஷ்ணா போன்று இன்னும் பலர்பேர் இத்தகைய காணொளிகளை தயாரித்து வெளியிட்டு வருகிறார்கள். இந்த விடயத்தில் என்பிபி அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சைபர் கிரைம் பிரிவினூடாகவோ அல்லது புதிதாக கொண்டுவரப்பட்ட ஒன்லைன் சட்டத்தின் கீழோ சமூக வலைத்தளங்களுக்காக ஒழுங்கு விதிகளை உருவாக்க வேண்டும். தனிமனித தகவல் பாதுகாப்பு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் இடம்பெறும் அவதூறுகள் மற்றும் அத்துமீறல்கள் தொடர்பில் தணிக்கையை கொண்டு வர வேண்டும்.
