நுவரெலியா

நுவரெலியா

நுவரெலியாவில் அதிகரிக்கும் சிறுவர் மற்றும் கர்ப்பிணி தாய்மாரின் மரணம் வீதம் !

“நுவரெலியா மாவட்டத்தில்  சிறுவர் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களின் மரணம் அதிகரித்துச்செல்வது பாரிய அச்சுறுத்தலாகும்.” என எதிர்க்கட்சி உறுப்பினர் எம். உதயகுமார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (7) இடம்பெற்ற பிள்ளைகள் தாய்மாரின் மந்தபோசணை தொடர்பாக யுனிசெப் நிறுவனம் விடுத்திருக்கும் அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு வேளை இரண்டாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு  உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்

இலங்கையில் மந்தபாேசணையால் சிறுவர்கள் மற்றும் தாய்மார்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது நுவரேலியா மாவட்டமாகும். ஏனைய மாவட்டங்களில் மந்தபோசணையால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கின்றபோதும்  நுரவரெலியா மாவட்டத்திலேயே சிறுவர் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களின் மரணம் அதிகரித்துச்செல்வது பாரிய அச்சறுத்தலாகும். குறிப்பாக 2020இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் பிரகாரம் பெருந்தோட்ட பிரதேசத்திலே 5வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களில் 34வீதமானவர்கள் வளர்ச்சி குன்றியதாக கண்டறியப்பட்டுள்ளது. அதேபோன்று இறுதியாக இடம்பெற்ற சனத்தொகை மற்றும் சுகாதார கணிப்பீட்டின் பிரகாரம் 5வயதுக்கு உட்பட்ட  நான்கில் ஒரு சிறுவர் குறை நிரையுடனும் 10இல் ஒரு சிறுவன் குறை ஊட்டச்சத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டியப்பட்டுள்ளது. அத்துடன் 72ஆயிரம் குழந்தைகள் ஓரளவு அல்லது நீண்டகால ஊட்டச்சத்து குறைபாடாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் மலையகத்தில் கர்ப்பிணி தாய்மார்கள் கரடுமுரடான பாதைகளில் தேயிலை ஏற்றும் லாெரிகளிலுமே தங்களின் பிரசவத்துக்காக வைத்தியசாலைக்கு செல்லவேண்டிய நிலைமையே இன்றும் காணப்படுகின்றது.இவ்வாறான நிலையில் அவர்களுக்கு சுகப்பிரவசம் மிகவும் குறைவாகும். இந்த நிலை மாற்றப்படவேண்டும். தோட்ட வைத்தியசாலைகள் அரசுடமையாக்கப்பட்டு, அங்கு பிரசவ அறைகள் ஏற்படுத்தப்படவேண்டும். மலையத்தில் கர்ப்பிணித் தாய்மார்கள் தங்களின் பிரசவத்துக்காக பல கிலோமீட்டர் செல்லவேண்டிய அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும்.

அத்துடன் உலக சுகாதார நிறுவனத்தின் உலக போசணை இலக்கு 2028,ன்ஊடாக 5வயதுக்கு குறைவான சிறுவர்களின் குன்றிய வளர்ச்சியை 40சதவீதத்தால் குறைப்பதற்கும் உடல் தேய்வை 5சதவீதத்தால் குறைப்பதற்கும் அதிக உடல் நிலையை முற்றாக கட்டுப்படுத்துவதற்கும் அதேபோன்று பிறப்பு நிரை குறைவை 30சதவீதத்தால் கட்டுப்படுத்துவதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.ஆகவே இந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தி சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களை மந்தபோசணை நிலைமையில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

எனவே மலையகம் உட்பட நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் சிறுவர்கள் மற்றும் தாய்மாரின் மந்தபாேசணை நிலைமைக்கு பொருளாதார நெருக்கடியே காரணமாகும். அதேபாேன்று பொருட்களின் விலை அதிகரிப்பு, போஷாக்கு உணவுக்கு இருந்துவரும் தட்டுப்பாடே காரணமாகும். பெருந்தோட்ட தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு 1000ரூபா பெற்றுக்கொண்டு பாேஷாக்கான உணவு பெற்றுக்கொள்வது பாரிய பிரச்சினையாகும் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும் என்றார்.