கெஹலிய ரம்புக்வெல

கெஹலிய ரம்புக்வெல

“ஜனாதிபதியையும் ஹிட்லரையும் இணைத்து கூறப்பட்ட கருத்து இராஜாங்க அமைச்சருடைய தனிப்பட்ட கருத்தேயாகும்.” – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல

“ஜேர்மன் சர்வாதிகாரி ஹிட்லரைப் பற்றி இராஜாங்க அமைச்சர் ஒருவர் அண்மையில் வெளியிட்ட கருத்து அரசின் நிலைப்பாடு அல்ல.” என அரசாங்க பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல  தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஹிட்லரைப் போன்று ஆட்சியை முன்னெடுக்க வேண்டும் என்பதே அவருக்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களின் எதிர்பார்ப்பாகும். அவர் அவ்வாறு செயற்படாமையின் காரணமாகவே அவர் மீது குற்றஞ்சுமத்தப்படுகிறது என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்திருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக அரசாங்க பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவிக்கையிலேயே மேற்குறித்த கருத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில் ,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஹிட்லர் ஆகியோரைப் பற்றி தெரிவிக்கப்பட்டது ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரின் தனிப்பட்ட கருத்து என்று கூறினார். இந்த கருத்து அரசாங்கத்தின் கூட்டு நிலைப்பாடு அல்ல என்றும் அரசாங்கத்தின் முன்னோக்கு என்று கருதக்கூடாது என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தின் 225 உறுப்பினர்களின் தனிப்பட்ட கருத்துக்களை தீவிரமாக எடுத்துக் கொள்ள முடியாது, ஏனெனில் அவை தனிப்பட்ட கருத்துக்கள் என்றும் அவர் தெரிவித்தார். இந்தக் கருத்து இலங்கையில் உள்ள ஜேர்மன் தூதுவருடன் முரண்பாட்டை ஏற்படுத்தாது என்று தான் நம்புவதாகவும் அமைச்சர் ரம்புக்வெல மேலும் தெரிவித்தார்.

“போரில் ஒரு சில தவறுகள் இடம்பெறுபவை தவிர்க்க முடியாது” – கெஹலிய ரம்புக்வெல

“போரில் ஒரு சில தவறுகள் இடம்பெறுபவை தவிர்க்க முடியாது” என அமைச்சரவைப் பேச்சாளாரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல நேற்று(26.01.2021)  தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

ஜெனிவாவில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் முற்று முழுதாக தேசத்துரோக செயல் என்பதே எமது நிலைப்பாடாகும்.

ஆணைக்குழுக்களை உருவாக்கி உள்ளகப் பொறிமுறை ஒன்றின் மூலமாக தீர்வுகளை எட்ட முயற்சித்த காலகட்டத்திலேயே 2015இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது எனவும் அவர் கூறினார்.

மங்கள சமரவீர, இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றன என்பதை ஏற்றுக்கொண்டு நாட்டுக்கு எதிரான நெருக்கடியை 2015 இல் ஜெனிவாவில் உருவாக்கினார். எனினும், இறுதி ஜெனிவாக் கூட்டத்தில் திலக் மாரப்பன, 2015 தீர்மானத்தில் இலங்கை அரசமைப்புக்கு முரணான பல சரத்துக்கள் உள்ளன என்று சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை ஏற்றுக்கொள்ளும் அல்லது நிராகரிக்கும் அதிகாரம் எமக்கே உள்ளது. சுயாதீன நாடு என்ற அடிப்படையில் அரசு தீர்மானம் எடுக்கும் .

போரில் ஒரு சில தவறுகள் இடம்பெறுபவை தவிர்க்க முடியாது. தவறுகள் இடம்பெறவில்லை என எம்மால் கூற முடியாது. எனவே, அது குறித்து ஆராய்ந்து, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுப்பதில் அரசு  உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“யாழ். பல்கலைக்கழகம் ஒரு காலத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இயங்கியது” – ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல

“யாழ். பல்கலைக்கழகம் ஒரு காலத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இயங்கியது” என அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

நேற்று முன்தினம் யாழ்ப்பாண பல்கலைகழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டிருந்தது. இதனை கண்டித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. இந்நிலையில் யாழ்.பல்கலைக்கழக நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

யாழ். பல்கலைக்கழகத்தில் நினைவுத்தூபி உடைக்கப்பட்ட விவகாரத்தைத் தமிழ்க் கட்சியினர் தமது சுயலாப அரசியல் பிரசாரத்துக்குப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இதற்கு மாணவர்கள் எவரும் துணைபோகக்கூடாது என்பதே எமது வேண்டுகோளாகும்.

பல்கலைக்கழகம் ஒரு கல்விக்கூடம். சகல இனத்தைச் சேர்ந்த மாணவர்களும் ஒற்றுமையாகக் கற்கும் இடம். அங்கு அரசியலுக்கு இடமில்லை.போர்க்காலச் சின்னங்கள் பல்கலைக்கழகத்தில் எதற்காக நிறுவப்பட வேண்டும். யாழ். பல்கலைக்கழகம் ஒரு காலத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இயங்கியது. கடந்த அரசின் காலத்திலும் அந்த எண்ணத்தில் சில மாணவர்கள் அங்கு செயற்பட்டார்கள். பல்கலைக்கழக வளாகத்தில் வைத்துப் விடுதலைப்புலிகளைப் பகிரங்கமாக நினைவேந்தினார்கள்.

அந்தக் காலம் மாதிரி இப்போதைய காலத்தை மாணவர்களும், தமிழ் அரசியல்வாதிகளும் எடைபோடுவது தவறானதாகும்.பல்கலைக்கழத்தில் எது இருக்கவேண்டும்? எது இருக்கக்கூடாது? என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு உண்டு. இதை எவரும் சவாலுக்குட்படுத்த முடியாது. அந்தவகையில் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி யாழ். பல்கலைக்கழத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த போர்க்காலச் சின்னமான நினைவுத்தூபியை துணைவேந்தர் அகற்றியுள்ளார்”  என குறிப்பிட்டார்

“எமது இந்த ஆட்சியில் பயங்கரவாதிகளை நினைவுகூர நாம் ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டோம்.அதை மீறிச் செயற்படுபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” – கெஹலிய ரம்புக்வெல திட்டவட்டம் !

“எமது இந்த ஆட்சியில் பயங்கரவாதிகளை நினைவுகூர நாம் ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டோம்.அதை மீறிச் செயற்படுபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்”  என அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மாவீரர் தின நிகழ்வுகளைத் தடையின்றி நடத்துவதற்குத் தேவைப்பட்டால் ராஜபக்ச அரசுடன் பேசுவோம் என்று தமிழ்த் தேசியக் கட்சிகளின் சார்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அண்மையில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் கருத்துரைக்கும்போதே அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு. எமது நாட்டில் தடைசெய்யப்பட்ட அமைப்பு. இந்தநிலையில், அந்த அமைப்பின் சார்பில் பலியானவர்களை எப்படி நினைவுகூர முடியும்?

நாட்டில் பயங்கரவாதத் தடைச் சட்டமும், கொரோனாத் தனிமைப்படுத்தல் சட்டமும் நடைமுறையில் இருக்கின்றபோது பொதுவெளியில் விடுதலைப்புலிகளை நினைவுகூரும் நிகழ்வுகளை நடத்தவே முடியாது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன்தான் மாவீரர் நாள் வாரத்தைப் பிரகடனப்படுத்தியிருந்தார். இந்த வாரம் (மாவீரர் வாரம்) பயங்கரவாதிகளை நினைவுகூரும் வாரம். இவர்களை நினைவுகூர கடந்த நல்லாட்சி அரசு நாட்டின் சட்டத்தை மீறி அனுமதி வழங்கியது என்பதற்காக எமது இந்த ஆட்சியில் பயங்கரவாதிகளை நினைவுகூர நாம் ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டோம். பயங்கரவாதிகளை நினைவுகூர அனுமதி கோரி தமிழ்க் கட்சிகள் எம்முடன் பேச்சு நடத்த முடியாது. அதற்கு அரசு தயார் நிலையிலும் இல்லை.

அதை மீறிச் செயற்படுபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ் மக்கள் விரும்பினால் போரில் உயிரிழந்தவர்களை தத்தமது வீடுகளிலிருந்து நினைவுகூரலாம். அதை எம்மால் தடுத்து நிறுத்த முடியாது” -எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் .

““கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்த முஸ்லிம் இனத்தவர்களின் உடலை புதைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கமுடியாது” கெஹலிய ரம்புக்வெல

“கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்த முஸ்லிம் இனத்தவர்களின் உடலை புதைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கமுடியாது” என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (17.11.2020) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்த முஸ்லிம் இனத்தவர்களின் உடலை புதைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என கடந்த வாரம் தவறான செய்தி சமூக வலைத்தளங்களில் வெளியாகின. கொரோனா வைரஸ் தாக்கத்தில் உயிரிழப்பவர்களின் உடலை தகனம் செய்வது தொடர்பிலும் இறப்பவர்களின் மத உரிமைகள் தொடர்பிலும் அமைச்சரவையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை இடம்பெற்றன. இவ்விடயம் முஸ்லிம் சமூகத்தினரை அடிப்படையாகக் கொண்டு அமையவில்லை.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடலை தகனம் செய்வது குறித்து எழுந்துள்ள வாதங்கள் தொடர்பில் நீதியமைச்சர் அமைச்சரவைக்கு முன்வைத்த யோசனையை சுகாதார குழுவினருக்கு வழங்கவே கடந்த வாரம் இடம் பெற்ற அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது. நாடுகளின் பௌதீக காரணகளுக்கு அமைய நாடுகள் தீர்மானம் எடுக்க முடியும் என உலக சுகாதார நிறுவனம் குறிப்பட்டதற்கு அமைய இறந்தவர்களின் உடலை தகனம் செய்ய தீர்மானிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இறக்கும் முஸ்லிம் இனத்தவர்களின் உடலை தகனம் செய்வது தொடர்பில் பல்வேறு தரப்பினர் மாறுப்பட்ட கருத்தினை தெரிவித்தார்கள்.

நடைமுறையில் உள்ள சட்டம், சுகாதார அறிவுறுத்தல்கள் ஆகியவற்றை கருத்திற்கொண்டு கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் உடலை உலர்வலய பிரதேசத்தில் புதைக்க முடியுமா என்ற யோசனை மாத்திரம் முன்வைக்கப்பட்டது. நீதியமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனையை தீர்மானம் எடுக்கும் சுகாதார குழுவினரின் பரிசீலனைக்கு வழங்க மாத்திரமே அமைச்சரவை அனுமதி வழங்கியது.கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடலை புதைப்பதா? அல்லது தகனம் செய்வதா? என்ற தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் அமைச்சரவைக்கு கிடையாது. மேலும் இவ்விடயம் தொடர்பாக சுகாதார தரப்பினர் எடுக்கும் தீர்மானத்தை செயற்படுத்த தயாராக உள்ளோம் ” என அவர் மேலும் தெரிவித்தார்.