இடதுசாரி ஜனநாயக முன்னணி

இடதுசாரி ஜனநாயக முன்னணி

“தேர்தலை எதிர்கொள்ள தமிழ் பேசும் மக்களின் அரசியல் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தீர்மானித்துள்ளோம்.” – வாசுதேவ நாணயக்கார

“தேர்தலை எதிர்கொள்ள தமிழ் பேசும் மக்களின் அரசியல் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தீர்மானித்துள்ளோம்.” என இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இலங்கை மேலவை கூட்டணியின் உறுப்பினர்களுக்கிடையில் திங்கட்கிழமை (டிச. 26) இரவு இடம்பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை பிற்போட அரசாங்கம் பல்வேறு வழிமுறைகளை தற்போது முன்னெடுத்துள்ளது. 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்பகட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. தேர்தல் என்பது நாட்டு மக்களின் உரிமை அதனை பாதுகாப்பது மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பாகும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விவகாரம் உயர்நீதிமன்றம் வரை சென்றுள்ளதால் தேர்தலை பிற்போட அரசாங்கம் அரசியல் சூழ்ச்சிகளை முன்னெடுக்காது என எதிர்பார்க்கிறோம். நாட்டு மக்களின் அடிப்படை உரிமையை உயர்நீதிமன்றம் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை முழுமையாக உள்ளது.

இலங்கை மேலவை கூட்டணி தலைமையிலான புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கும் ஆரம்பக்கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பு எதிர்வரும் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும். எதிர்க்கட்சிகளுடன் ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை முன்னிலைப்படுத்தி அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம். தமிழ் பேசும் மக்களின் அரசியல் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தீர்மானித்துள்ளோம். பரந்துபட்ட அரசியல் கூட்டணியை நிச்சயம் ஸ்தாபிப்போம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று 5 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அவர் எந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளார். வரி வீதத்ததை அதிகரித்து பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைப்பது நிச்சயமற்றது என்றார்.