வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம்

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம்

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய நிர்வாக தெரிவு கூட்டம் – திட்டமிட்டு குழப்பம் போய்கொண்ட மறவன்புலவு சச்சிதானந்தம் குழுவினர் !

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய நிர்வாக தெரிவு கூட்டத்திற்குள் அழையா விருந்தாளியாக சிவசேனை அமைப்பினர் சென்றமையால் ஆலய பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளியேறியதுடன் பழைய நிர்வாகத்தை தொடரவும் முடிவு எடுத்துள்ளனர்.

வவுனியா வடக்கு, ஒலுமடு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தின் புதிய நிர்வாகத் தெரிவு மற்றும் மாவட்ட மட்ட தெரிவுகளுக்கான பொதுக்கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை (12) காலை ஒலுமடு பொது நோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது ஆலய பூசகர் மற்றும் ஆலய நிர்வாகத்தினர், ஆலய பக்தர்கள்,  வேலன் சுவாமிகள், வெளி மாவட்டத்தில் இருந்து வருகை தந்தோர் என பலரும் கலந்து கொண்டு கூட்டத்தை ஆரம்பித்தனர்.

இதன்போது, ஆலய நிர்வாகத்தின் அழைப்பின்றி சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம், விபுலானந்த சுவாமிகள் உள்ளிட்ட ஒரு குழுவினர் அங்கு வருகை தந்திருந்தனர்.

குறித்த குழுவினர் குருந்தூர் மலை விகாராதிபதியை இரகசியமாக சந்தித்து அதற்கு ஆதரவு தெரிவித்ததாக கூறி, மக்கள் குறித்த குழுவினரை வெறியேறி நிர்வாகத் தெரிவுக்கு ஒத்துழைக்குமாறு கோரினர்.

அத்துடன் சிவசேனை முன்னிலையில் நிர்வாகத் தெரிவு இடம்பெறமாட்டாது எனவும், வெடுக்குநாறி மலையில் பல பிரச்சனைகள் நடந்தும் சிவசேனை அமைப்பினர் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளவில்லை எனவும் ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை எனவும் மக்கள் தெரிவித்ததுடன், அவர்களை வெளியேறுமாறு கோரினர்.

எனினும், சிவசேனை அமைப்பினர் வெளியேறாமையால் ஆத்திரமடைந்த ஆலய நிர்வாகத்தினர் மற்றும் ஆலய பக்தர்கள் மண்டபத்தை விட்டு வெளியேறியதுடன், ஒரு வருடத்திற்கு தற்போதைய நிர்வாக சபையே தொடர்ந்து இயங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியதுடன், மக்கள் அங்கிருந்து வெளியேறிச் சென்றனர். மக்கள் சென்ற பின்னும் சிவசேனை அமைப்பினர் பொது நோக்கு மண்டபத்தில் காத்திருந்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

வெடுக்குநாறிமலையில் இடம்பெற்ற பொலிஸ் அராஜகத்தை கண்டித்து யாழ்ப்பாணம் நல்லூரில் போராட்டம் !

வவுனியா – வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்ற பொலிஸ் அராஜகத்தை கண்டித்து யாழ்ப்பாணம் நல்லூரில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

 

ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு அகத்தியர் அடிகளாரின் அழைப்பின் பேரில் நல்லை ஆதீனம் முன்பாக இன்று (11) மாலை 4 மணிக்கு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 

இந்த போராட்டத்தில் மதகுருமார், சமயத் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூக பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

 

மகா சிவராத்திரி பூஜையின்போது வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்துக்கு வழிபடச் சென்றவர்கள் மீதான பொலிஸாரின் அட்டூழியங்களை கண்டித்தும் கைது செய்தோரை உடன் விடுதலை செய்ய வலியுறுத்தியும் இந்த போராட்டம் இடம்பெற்றது.

வெடுக்குநாறி மலை சம்பவம் தமிழர்களின் கையில் மீண்டும் ஆயுதம் திணிக்க முற்படும் செயலா..? -அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி !

வன்முறை அரசியலை விரும்புகின்றனர் என்பதை வெடுக்குநாறி மலை சிவ வழிபாடு சம்பவம் உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளது. தமிழர்களின் கையில் மீண்டும் ஆயுதம் திணிக்க முற்படும் செயலா என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

இன்று (09) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

 

வவுனியா வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவிலில் நீதிமன்ற அனுமதியுடன் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிவ பக்தர்களையும், அவர்களின் வழிபாட்டையும் அவமானப்படுத்தும் வண்ணம் பொலிஸார் வழிபாட்டுப் பொருட்களை சப்பாத்து காலால் உதைத்து தள்ளியதோடு, பெண்களை இழிவுபடுத்தியும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட அறுவரை கைது செய்துள்ளனர்.

 

இதில் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கும், ஒட்டுமொத்த சிவ பக்தர்களுக்கும் வருத்தத்தை தெரிவிப்பதோடு, இது நாட்டின் அடிப்படை மனித உரிமையும் மற்றும் வழிபாட்டு உரிமையையும் மீறும் செயல் மட்டுமல்ல. தமிழர்கள் மீதும் இந்துக்கள் மீதும் தொடர்ந்து கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இனவாத மதவாத வன்முறையின் தோற்றமுமாகும்.

 

இதில் பொலிஸார் அராஜகத்தோடு பேரினவாத அதிகார அரசியல் பக்கபலமும் அதற்கு உள்ளது என்பதை உணரக்கூடியதாக உள்ளது. இக்கொடிய மதவாத இனவாத வன்முறை தடுத்து நிறுத்தப்படல் வேண்டும். இதனை சமயம் கடந்து அனைத்து சமய தலைவர்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் தமது எதிர்ப்பை கூட்டாக வெளிக்காட்ட வேண்டும்.

 

களனியை மையமாகக் கொண்டு இயங்கும் பௌத்த தகவல் நிலையம் எனும் அமைப்பு வெடுக்குநாறி மலையில் இனவாதம், மதவாதம் என்பவற்றை தோன்றுவிக்கும் வழிபாடு நடைபெறவுள்ளதாக பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இக்கடிதம் எதனை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது? சிவராத்திரி வழிபாடு எவ்வாறு இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டும் எனவும் கேட்கின்றோம்.

 

இனவாதம், மதவாதம் அடிப்படை கருத்தியலில் இயங்கும் பயங்கரவாத அரசின் கூலிகளாக இயங்கும் பொலிஸாரே இனவாத, மதவாத அதிகார வெறியினை சிவ பக்தர்களிடம் காட்டியுள்ளமை வெட்கக்கேடாகும். அங்கு கூடியிருந்த பக்தர்கள் பொலிஸ் அராஜகம் ஒழிக என்றோ அல்லது வேறு எந்த வகையிலோ தமது எதிர்ப்பை காட்டவில்லை. சமய பக்தி கோஷங்களையே அவர்கள் எழுப்பினர். இதுவா மதவாத மற்றும் இனவாத வழிபாடு.

ஜெனிவா மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் நடந்துகொண்டிருக்கும்போதே தமிழர்களின் வழிபாட்டு உரிமை மீறப்பட்டுள்ளது.

 

இலங்கை தொடர்பாக கடந்த காலங்களில் மனித உரிமை பேரவை பல அறிவுறுத்தல்களையும் ஆலோசனைகளையும் கடந்த காலங்களில் வழங்கியபோது அவற்றை பின்பற்றால் சர்வதேசத்தை ஏமாற்றும் ஆட்சியாளர் மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் நடக்கும் சந்தர்ப்பங்களில் அதனை அவமதிப்பது போல் நடப்பது இது முதல் தடவை அல்ல.

 

அமைச்சர் ஒருவர் அரசியல் கைதிகளின் தலையில் துப்பாக்கியை வைத்து விரட்டி மிரட்டியதும் இவ்வாறான காலப்பகுதியிலாகும். அதேபோன்று நேற்று இந்துக்களின் சிவ வழிபாட்டை கொச்சைப்படுத்தி அராஜகம் புரிந்துள்ளனர்.

 

இது இந்நாட்டில் தமிழர்களுக்கு எதிரான இனவாத வன்முறையை தொடர்கிறது என்பதை சுட்டி நிற்கிறது.

 

உயிர்ப்பு தினத்தில் கூண்டுகளை வடிக்கச் செய்து உயிர்களைக் கொண்டு அரசியல் செய்தவர்கள் தொடர்ந்து வன்முறை அரசியலை விரும்புகின்றனர் என்பதை வெடுக்குநாறி மலை சிவ வழிபாடு சம்பவம் உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளது.

 

தமிழர்களின் கையில் மீண்டும் ஆயுதம் திணிக்க முற்படும் செயலா எனவும் கேட்கின்றோம்.

 

தேர்தல் காலத்தில் தமிழர்களின் வாக்குகளை எதிர்பார்த்து அரசியல் செய்யும் தென்பகுதி கட்சிகள் வெடுக்குநாறி மலையில் நடந்த அரச பயங்கரவாதத்துக்கு எதிராகவும் அதனை தூண்டிவிட்டு குளிர் காய்பவர்களுக்கு எதிராகவும் கருத்து தெரிவிக்க வேண்டும்.

 

சர்வதேச பெண்கள் தினத்தில் அவ்வழிபாட்டில் கலந்துகொண்ட பெண்களை அவமானப்படுத்தியதற்கு பெண்கள் தினத்தை கொண்டாடிய அனைத்து சக்திகளும் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்த வேண்டும்.

 

அத்தோடு மனித உரிமை அமைப்புகள் இதற்கு எதிராக தம் எதிர்ப்பை தெரிவிப்பதோடு ஜெனிவா மனித உரிமை பேரவையில் தமிழர்களுக்கான நீதியை நிலைநாட்டுவதற்கு தனது ஆதரவையும் நல்க வேண்டும்.

 

தமிழர் தாயகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும், சிவில் சமூக அமைப்புகளும், செயற்பாட்டாளர்களும் தமிழர் தாயகத்தை சூழ்ந்துள்ள இருளினை கருத்தில் கொண்டு விழிப்பு நிலையில் இருக்க வேண்டும். அத்தகைய விழிப்பினை கடந்த வாரம் சாந்தனின் உடல் எடுத்துச் சென்றபோது காட்டியது போன்று ஒன்றுபட்ட சக்தியாக வெளிப்படுத்துவதற்கான காலம் உருவாகி வருகின்றது என்பதை உணர்ந்து தேசிய சிந்தனையோடு கூட்டாக செயற்படுவதையும் உறுதி செய்தல் வேண்டும் என்றுள்ளது.

வெடுக்குநாறிமலை ஆதி சிவன் கோவிலில் பொலிசார் அடாவடியாக நடந்துள்ளனர் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

வெடுக்குநாறிமலை ஆதி சிவன் கோவிலில் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் அனைத்தும் அடாவடித்தனம் என சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறான செயற்பாடுகள் நாட்டில் இன நல்லிணக்கதை சீர்குலைக்கும் வகையில் அமைகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

 

பளைப் பகுதியில் எரிபொருள் நிலைய திறப்புவிழா நிகழ்வு இன்றுகாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் குறித்த விடயம் தொடர்பில் கேட்டபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

 

சிவராத்திரிதினம் என்பது இந்துக்களின் முக்கிய சமயம் சார் நிகழ்வாகும். இதனை முன்னிடு குறித்த ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்ள அடியவர்கள் சென்றபோது பொலிசார் தடுத்து நிறுத்து அடாவடியில் ஏடுபடுத்துயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

குறிப்பாக வெடுக்குநாறிமலை ஆதி சிவன் கோவிலில் நீதிமன்ற அனுமதியுடன் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிவ பக்தர்களையும், அவர்களின் வழிபாட்டையும் அவமானப்படுத்தும் வகையில் பொலிசார் நடந்துகொண்ட விதம் அவர்களது அடாவடித்தனமாகவெ இருக்கின்றது.

 

ஆலய தரிசனம் செய்வது அவரவர் உரிமையாகும். இதை தடுப்பதற்கு எவருக்கும் அதிகாரம் கிடையாது. இவ்வாறான நிலையில் குறித்த ஆலயப் பகுதியில் பொலிஸார் இவ்வாறான தடைகளையும் அடாவடித்தனங்களையும் செய்வதற்கு யார் அனுமதி கொடுத்தது? அதேநேரம் இதை ஏற்றுக்கொள்ளவும் முடியாது.

 

அத்துடன் நடைபெறவுள்ள அமைச்சரவையிலும் இவ்விடயம் தொடர்பில் கொண்டு செல்லவுள்ளேன் என்பதுடன் இனிவருங்காலங்களில் பொலிசார் இவ்வாறான செயற்பாடுகளை மெற்கொள்ளாதிரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்திரிந்தமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரியார் மற்றும் ஆலயநிர்வாக உறுப்பினர் விடுதலை!

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரியார் மற்றும் ஆலயநிர்வாக உறுப்பினர் ஒருவர் நெடுங்கேணி பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்டு பின்பு வவுனியா நீதிமன்றால் இன்று விடுவிக்கப்பட்டனர்.

அண்மையில், வெடுக்குநாறிமலையில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த விக்கிரகங்கள் தகர்த்து எறியப்பட்டிருந்தன. இந்தநிலையில், பொது மக்களின் பாரிய ஆர்பாட்டங்களுக்கு பின்னர் நீதிமன்றினால் குறித்த ஆலயத்தின் விக்கிரகங்களை மீள பிரதிஷ்டை செய்து வழிபாடுகளில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த ஆலயத்தின் பூசகர் உள்ளிட்டோரால், நேற்றைய தினம் பந்தல் ஒன்று அமைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. விக்கிரகங்களை மீள பிரதிஷ்டை செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டிருந்த போதிலும் குறித்தப் பகுதியில் புதிய கட்டுமானங்களுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது

நீதிமன்ற தடையுத்தரவை மீறியமை தொடர்பில், ஆலய பூசகர் உள்ளிட்ட இருவர் இன்று விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இதன்போது, குறித்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் வவுனியா நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

 

வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் 108 கும்ப சங்காபிசேகம் !

வவுனியா வடக்கு வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் 108 கும்ப சங்காபிசேகம் இன்று (10) சிறப்பாக இடம்பெற்றது.

வவுனியா வடக்கு, ஓலுமடு, வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் விக்கிரகங்கள் கடந்த பங்குனி மாதம் இறுதிப் பகுதியில் இனந்தெரியாத நபர்களினால் இடித்து அழிக்கப்பட்டிருந்தது.

அதன் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றின் கட்டளைக்கு அமைவாக கடந்த மாதம் 28 ஆம் திகதி மீளவும் தெய்வ திருவுருவங்கள் எழுந்தருளச் செய்யப்பட்டு, தொடர்ச்சியாகப் பன்னிரெண்டு நாட்கள் பூசை வழிபாடுகள் இடம்பெற்று வந்தன.

அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் (10) 108 கும்ப சங்காபிசேகம் சிறப்பாக இடம்பெற்றது.

இதில் வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வருகை தந்த பக்த அடியார்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நீண்ட காலத்திற்கு பிறகு வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழிபாடுகள் மீண்டும் ஆரம்பம்!

வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நீண்ட காலத்திற்கு பிறகு பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகி உள்ளது.

வவுனியா வடக்கு ஒலுமடு கிராமசேவகர் பிரிவில் இந்த வரலாற்று சிறப்புமிக்க ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது.

இந்த ஆலயத்தில் வழிபாடு செய்வதற்கு இடையூறாக தொல்பொருள் திணைக்களம் மற்றும் காவல்துறை என்பன நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்த நிலையில், நீண்ட காலமாக பூஜைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

பின்னர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆலயத்தில் இருந்த விக்கிரகங்கள் இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டிருந்தது.

மீண்டும் கடந்த 24 ஆம் திகதி வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் அதிபர் சட்டத்தரணி M.A சுமந்திரன் ஆலயம் சார்பாக முன்னிலையாகியிருந்தார்.

இந்தநிலையில், அடியார்கள் வழிபாட்டுக்கு செல்வது மற்றும் ஆலய வழிபாடுகளை நடத்துவது என்பவற்றிற்கு அரச உத்தியோகஸ்தர்கள் எவரும் தடைவிதிக்க முடியாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

அழிக்கப்படும் வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் – பின்னணியில் அரசாங்கம் என்கிறார் வி.மணிவண்ணன்

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் சேதமாக்கப்பட்ட சம்பவத்திற்கு அரசாங்கத்தின் பின்னணி இருப்பது தெளிவானது என்று யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்த செயற்பாட்டின் மூலம், முற்று முழுதாக மத பிரிவினைவாதத்தை ஏற்படுத்தி அதனூடாக சிலர் அரசியல் இலாபத்தை அடைய எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சகலரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுத்தியுள்ளார்.

தமிழர் தாயகம் மீதான வன்முறைச் சம்பவங்களை கண்டித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு!

கடந்த பல காலமாக தமிழர் தாயகம் மீதான வன்முறைச் சம்பவங்கள் வலுவடைந்து வருகின்றது.

இந்தநிலையில், நேற்றையதினம் வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவில் சிலைகள் உடைக்கப்பட்டு, அங்கிருந்த சிவலிங்கம் காணாமல் ஆக்கப்பட்ட செயல் தமிழ் மக்களிடையே மேலும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழர் தாயகம் மீதான அத்துமீறல்களை கண்டித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

வெடுக்குநாறிமலையில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த விக்கிரகங்கள் உடைத்தழிக்கப்பட்டமை தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு !

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த விக்கிரகங்கள் உடைத்தழிக்கப்பட்டமைக்கு எதிராக ஆலய நிர்வாகத்தினரால் வவுனியா பிராந்திய மனிதஉரிமை ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டை வழங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் செயலாளர் து. தமிழ்செல்வன் கருத்து தெரிவிக்கையில்,

எமது ஆலயத்தின் விக்கிரகங்கள் அழிக்கப்பட்டமை மூலம் பௌத்த ஆக்கிரமிப்பின் வெளிப்பாட்டை அனைவரும் உணர்ந்துகொள்ள முடியும். இந்த துன்பியல் சம்பவம் எமக்கு மிகுந்த வேதனை அளிப்பதுடன் இவ்வாறான செயலை செய்தவர்களுக்கு எமது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஆலயத்திற்குள் செல்வதற்கு தொல்லியல் திணைக்களத்தால் எமக்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த திணைக்களத்தின் வாகனங்களே அங்கு தொடர்ச்சியாக சென்றுவந்தது. எனவே இந்தச்சம்பவத்தின் பின்னணி தொடர்பாக தொல்லியல் திணைக்களத்தின் மீதே நாம் சந்தேகம் கொள்கின்றோம்.  மனிதஉரிமை ஆணைக்குழுவிலும் அவர்களுக்கு எதிராகவே எமது முறைப்பாட்டை பதிவுசெய்திருக்கின்றோம். என்றனர்.

இதேவேளை விக்கிரகங்கள் அழிக்கப்பட்ட விடயம் தொடர்பாக இன்றையதினம் காலை நெடுங்கேணி பொலிஸ்நிலையத்திலும் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.