விடுதலை புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு கொண்டு வராமலிருந்தால் தென்னாசியாவில் தமிழீழம் தோற்றம் பெற்றிருக்கும். அது இஸ்ரேல் போல் மாற்றமடைந்திருக்கும், காஸாவின் இன்றைய நிலை எமக்கு ஏற்பட்டிருக்கும். இஸ்ரேலுக்கு ஆயுதத்தை வழங்கி விட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு அமெரிக்கா முதலை கண்ணீர் வடிக்கிறது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற பலஸ்தீன விவகாரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற தாக்குதலினால் பலஸ்தீனர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.பலஸ்தீனர்களின் இன்றைய நிலை குறித்து நாங்கள் கவலையடைகிறோம்.பலஸ்தீனர்கள் இன்று எதிர்கொண்டுள்ள நிலைமைக்கும்,இலங்கையின் நிலைமைக்கும் இடையில் பரஸ்பர ஒற்றுமை காணப்படுகிறது.
இரண்டாம் உலக மகா யுத்தம் தீவிரமடைந்த போது யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருதற்கு பெரிய பிரித்தானியா யூதர்களுடன் ஒப்பந்தம் செய்தது.யுத்தம் முடிந்தவுடன் தமக்கு ஒரு நாடு அல்லது இராச்சியம் வேண்டும் என யூதர்கள் பெரிய பிரித்தானியாவிடம் வலியுறுத்தினார்கள்.இரண்டாம் உலக மகா யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் பெரிய பிரித்தானிய பலஸ்தீனர்களுக்கு சொந்தமான பூர்வீக பூமியில் யூதர்களை குடியமர்த்தி பிரச்சினைகளை தோற்றுவித்தது.
தமிழர்கள் உலகெங்கிலும் வாழ்கிறார்கள்.அவர்கள் தென்னிந்திய திராவிட மொழியை அடிப்படையாகக் கொண்டவர்கள் ஆகவே அவர்களுக்கு இலங்கைக்குள் ஒரு தனித்த நாட்டை உருவாக்கிக் கொடுப்பதாக பெரிய பிரித்தானியா போலியான சுதந்திரத்தை வழங்கி இலங்கையில் வாழ்ந்த தமிழ் தலைவர்களிடம் குறிப்பிட்டது.இதன் பின்னரே 50 :50 அதிகாரம் பற்றி பேசப்பட்டது.
50:50 அதிகாரம் என்பது தோல்வியடைந்த நிலையில் யுத்தம் தோற்றம் பெற்றது. இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளை அழித்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வராமல் இருந்திருந்தால் தென்னாசியாவில் தமிழ் ஈழம் தோற்றம் பெற்றிருக்கும்.அவ்வாறான நிலை தோற்றம் பெற்றால் தென்னாசியாவில் காஸாவை போன்ற நிலைமை எமக்கு ஏற்பட்டிருக்கும்.தமிழ் ஈழம் இஸ்ரேல் போல் செயற்பட்டிருக்கும். பலஸ்தீனர்களின் இன்றைய நிலையை நாங்கள் எதிர்கொண்டிருப்போம்.
விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பாதுகாப்பதற்கு அமெரிக்காவின் மெராய்ன் படையின் கப்பல் இலங்கையின் கடல் பரப்புக்கு அப்பாற்பட்ட சர்வதேச கடல் எல்லைக்கு வருகை தந்திருந்தது. பிரபாகரனை உயிருடன் ஒப்படைக்குமாறு அமெரிக்கா அப்போதைய அரசாங்கத்திடம் வலியுறுத்தியது. ஆனால் அதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இடமளிக்கவில்லை. அதேபோல் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளும் பிரபாகரனை உயிருடன் கோரின. பிரிவினைவாத யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கம் மேற்குலக நாடுகளிடம் இருக்கவில்லை. தமிழ் ஈழத்துக்காகவே உலக நாடுகளும் குரல் கொடுத்தன.
இலங்கையில் தமிழ் ஈழத்தை உருவாக்க பெரிய பிரித்தானிய முன்னெடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. ஆனால் பலஸ்தீனத்தில் அவர்களின் நோக்கம் வெற்றிப் பெற்றன.இரண்டாம் உலக யுத்தத்தின் போது உலகில் நாடற்றவர்களாக இருந்த யூதர்களுக்கு பலஸ்தீன நிலத்தை ஆக்கிரமித்து நாடு உருவாக்கிக் கொடுக்கப்பட்டது.கால போக்கில் யூதர்களான இஸ்ரேலியர்கள் முழு பலஸ்தீனத்தையும் ஆக்கிரமித்து பலஸ்தீனர்களின் அடையாளத்தை அழிக்க முயற்சிக்கிறார்கள்.தமது உரிமைக்காக பலஸ்தீனியர்கள் போராடுகிறார்கள்,ஆகவே பலஸ்தீனர்களின் நிலைமையை எம்மால் உணர்வுபூர்வமாக விளங்கிக் கொள்ள முடிகிறது.
இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கி விட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு அமெரிக்க முதலை கண்ணீர் வடிக்கிறது.யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் ஐக்கிய நாடுகள் சபைக்கு பிரேரணை கொண்டு வரும் போது அமெரிக்க தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி பிரேரணைகளை தோற்கடிக்கிறது.ஆகவே இலங்கைக்கு எதிராக செயற்படுத்தும் போலியான மனித உரிமைகளை பாதிக்கப்பட்டுள்ள பலஸ்தீனர்களுக்காக உண்மையுடன் செயற்படுத்துமாறு உலக நாடுகளிடம் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.