கலாச்சார அழிப்புக்கும் மக்கள் தொகையை குறைக்கும் திட்டங்களுக்கும் யு.எஸ் எய்ட் நிதியளிப்பு – விமல் வீரவன்ச
இலங்கையில் நாட்டின் கலாச்சாரத்தை அழித்து மக்கள் தொகையைக் குறைக்கும் திட்டங்களுக்கு USAID 7.9 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த விமல் வீரவங்ச,
“யு.எஸ் எய்ட்டினர் பல்வேறு வகையான மாற்றங்களை ஊக்குவித்தனர், குறிப்பாக இளைஞர்களிடையே LGBTQ சமூகப் பிரச்சாரம் மற்றும் அவற்றை மேம்படுத்துவது தொடர்பில் பெரும் ஊக்குவிப்புகளில் ஈடுபட்டனர். 7.9 மில்லியன் அமெரிக்க டொலர் என்பது ஒரு பெரிய தொகை. இந்த திட்டங்கள் பாலின மாற்றத்தை ஊக்குவிக்கவும் இறுதியில் மக்கள் தொகையைக் குறைக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
நமது கலாச்சாரத்தை அழிக்க வடிவமைக்கப்பட்ட இந்த முயற்சிகள் மூலம் இந்த நாட்டு மக்கள் விலைக்கு வாங்கப்பட்டிருப்பது மட்டுமல்லாமல், அரசியல் தலைவர்களும் நிதியளிக்கப்பட்டுள்ளனர்,” என்று கூறியதுடன் எதிர்காலத்தில் அவர்களின் பெயர்களை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனுமான நாமல் ராஜபக்ஷ USAID இலங்கையின் உள்ளூர் அரசியல் விடயங்களில் தலையீடு செய்ததாகவும் இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தமையும் கவனிக்கத்தக்கது.
இலங்கை, இந்தியா உட்பட பல நாடுகளை சீர்க்குலைக்கவும் அரசியல் மாற்றங்களை மேற்கொள்ளவும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் (USAID) 260 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த செய்திகள், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) பெயரில் உள்ள எக்ஸ் கணக்கை மேற்கொள்காட்டி வெளியிடப்பட்டுள்ளன.