விதுர விக்கிரமநாயக்க

விதுர விக்கிரமநாயக்க

“வடக்கு-கிழக்கில் பௌத்தர்கள் வாழ்ந்துள்ளார்கள். அவர்களின் நினைவுச்சின்னங்களை நாம் பாதுகாக்க வேண்டும்.” – விதுர விக்கிரமநாயக்க

வடக்கு, கிழக்கில் உள்ள தொல்பொருள் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத நிர்மாணங்கள் தொடர்பில் முழுமையான அறிக்கை கிடைத்ததும் நடவடிக்கை எடுக்கப்படுமென புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் தொல்பொருளியல் திணைக்களத்தால் அடையாளம் காணப்படும் பகுதிகளில் பௌத்த அடையாளங்கள் நிறுவப்படுதல் மற்றும் தனியார் காணிகளில் பௌத்த விகாரைகள் நிறுவப்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு, கிழக்கில் போர் நிலைமைகள் நீடித்தமையால் தொல்பொருள் பகுதிகள் முழுமையாக அடையாளம் காணப்படவில்லை.  தொல்பொருள் என்பது நாட்டின் மரபுரிமைகள் சார்ந்த விடயமாகும். அதற்கும் இன அடையாளங்களுக்கும் தொடர்பில்லை.

இந்நிலையில் நாம், வடக்கு, கிழக்கில் காணப்படுகின்ற தொல்பொருளியல் பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட அனைத்து அடையாளங்களும் சட்டத்திற்கு முரணானவையாகும்.

ஆகவே அவை தொடர்பில் முழுமையான அறிக்கையொன்றைக் கோரியுள்ளேன் அந்த அறிக்கை கிடைத்ததும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

குருந்தூர்மலை, வெடுக்குநாறி தொடர்பில் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. அந்த வழக்குகளின் தீர்ப்புக்கள் வந்தபின்னரே இறுதியான தீர்மானத்தினை எடுக்க முடியும்.

கிளிநொச்சி உருத்திரபுரம் கந்தசுவாமி கோவில், திருக்கோணேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் தொல்பொருளியல் அடையாளங்கள் காணப்படுவதாக எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த விடயங்கள் சம்பந்தமாக ஆராய்ந்து உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

சில இடங்களில் தொல்பொருளியல் பகுதிகளில் கோவில்கள் உள்ளிட்ட நிர்மாணங்கள் செய்யப்பட்டுள்ளன.

அவை தொடர்பிலும் கரிசனை கொள்ள வேண்டியுள்ளது. அத்துடன், வடக்கு-கிழக்கில் பௌத்தர்கள் வாழ்ந்துள்ளார்கள்.

அவர்களின் அடையாளங்களும் காணப்படுகின்றன. ஆகவே அந்த வரலாற்று தகவல்களையும் பாதுகாக்க வேண்டியது கடமையாகின்றது. அதுபற்றி யாரும் அச்சமடைய வேண்டியதில்லை என்றார்.

குருந்துார் மலை , வெடுக்குநாரி மலை விவகாரங்களுக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா !

முல்லைத்தீவு குருந்துார் மலை மற்றும் வவுனியா வெடுக்குநாரி மலை விவகாரங்களை சுமுகமாக தீர்த்து வைக்கும் வகையில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, விஜதாஸ ராஜபக்ஷ ஆகியோர் எதிர்வரும் நவம்பர் முதலாவது வாரத்தில் குறித்த பகுதிகளுக்கான நேரடி விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளனர்.

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து, அவற்றுக்கு நியாயமான தீர்வினை வழங்கும் வகையில், ஜனாதிபதி தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள அமைச்சரவை உப குழுவின் முதலாவது சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை (25.10.2022) நடைபெற்றது.

இதன்போது, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பல்வேறு விடயங்கள் முன்வைக்கப்பட்டன.

அவற்றுள் தமிழ் மக்களின் வரலாற்று தொன்மைமிகு குருந்தூர்மலை, வெடுக்குநாரி ஆலயம் தொடர்பான விவகாரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய குறித்த இரண்டு அமைச்சர்களும் கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளனர்.

ஏற்கனவே, திருக்கோணேஸ்வர ஆலயத்திற்கு அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் விதுர விக்கிரமநாயக்க ஆகியோர் நேரடியாக சென்று, ஆலயத்தின் புனிதத் தன்மைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வர்த்தக நிலையங்களை அமைப்பதற்கு பொருத்தமான இடத்தினை சம்மந்தப்பட்ட தரப்புக்களின் சம்மதத்துடன் அடையாளப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜெனீவா அமர்வு வரும்போது மட்டும் தமிழ் அரசியல்தலைவர்கள் பௌத்த விஹாரைகள் பற்றி பேசுகிறார்கள் – நாடாளுமன்றில் விமல்வீரவங்ச !

முல்லைத்தீவு குருந்தூர்மலை தொடர்பில் தொடர்ந்தும் அத்துமீறல்கள் இடம்பெற்று வருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இன்று பாராளுமன்றத்தில் குற்றம் சுமத்தினார்.

ஏற்கனவே அங்கு நிர்மாணிப்புக்கள் எதனையும் மேற்கொள்ளக்கூடாது என்று நீதிமன்றம் கூறியுள்ளபோதும், அங்கு நீதிமன்றத்தை மீறி செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தநிலையில் பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து தரப்பினரையும் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க உறுதியளித்திருந்தார். அதுவரையில் குருந்தூர்மலையில் எவ்வித செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படாது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் பாராளுமன்ற சபையில் மேற்கொள்ளப்பட்ட இந்த உறுதிமொழியை மீறி இன்று கொழும்பில் இருந்து நிலஅளவை திணைக்கள அதிகாரிகள், குருந்தூர்மலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இது நீதிமன்ற உத்தரவை மாத்திரம் அல்ல. பாராளுமன்ற சபையின் உறுதிமொழியையும் மீறும் செயல் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டார். எனவே இந்த விடயத்தில் பிரதமர் கவனம் செலுத்தி உறுதிமொழிகளை நிறைவேற்றவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இதன்போது கருத்துரைத்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள இந்துக்கோயில்கள் தொடர்பில் எவரும் பிரச்சினைகளை எழுப்புவதில்லை. எனினும் வடக்குகிழக்கில் உள்ள பௌத்த விஹாரைகள் பற்றி, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பிரச்சினைகளை எழுப்பி வருவதாக குற்றம் சுமத்தினார். அதுவும், ஜெனீவா அமர்வு வரும்போதே இவ்வாறான பிரச்சினைகள் முன்வைக்கப்படுவதாக அவர் குற்றம் சுமத்தினார்.

இதற்கு பதிலளித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இது நீதிமன்ற உத்தரவுடன் தொடர்புடையது, இதனை பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், இந்த சபையில் அளிக்கப்பட்ட உறுதிமொழியும் இன்று மீறப்பட்டுள்ளமையை தாம் பிரதமரிடம் சுட்டிக்காட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

“எதிர்காலத்தில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் மீது மக்கள் கல்லெறிவார்கள்..” – இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க

“எதிர்காலத்தில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் மீது மக்கள் கல்லெறிவார்கள்..” என இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டை அரசியல் ரீதியாக அபிவிருத்தி செய்வதில் அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ச  தனிமையான பயணத்தை மேற்கொள்வார் என்றால் அவர் பதவியில் இருந்து விலக வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இணைய வழியில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்த போது ,

நாட்டின் அபிவிருத்திக்கு அமைச்சரவையை கோட்டாபய நியமிக்க வேண்டும். அரசாங்கத்தின் உயர் பதவிகளுக்கு சரியான அரச உத்தியோகத்தர்களை நியமித்து அமைச்சரவை மற்றும் அரச அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் அரசதலைவர் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்.

ஐந்தாண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்ய முடியாமல் அரசாங்கம், வீழ்ச்சியடையும் என நம்புகிறேன். ஐந்து வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டியிருக்கும்.

அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகளுக்கு முகங்கொடுத்து எதிர்காலத்தில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது மக்கள் கல்லெறிவார்கள்.

இதேவேளை, எல்என்ஜி விநியோகம் மற்றும் எல்என்ஜி மின் உற்பத்தி நிலையங்களை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றுவதை தனிப்பட்ட ரீதியில் எதிர்ப்பதாக இராஜாங்க அமைச்சர் விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்குள் இந்த அரசு வெடித்துச்சிதறும் – இராஜாங்க அமைச்சர் ஆருடம் !

அரசாங்கம் செயற்படும் விதத்தைப் பார்க்கும் போது இன்னும் சில நாட்களில் அரசாங்கம் வெடித்துவிடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை குறித்து தாம் உண்மையான அக்கறை கொண்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இதன் மூலம் புதிய குழுவொன்று அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளும் என தாம் கருதுவதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறானதொரு நிலையை எதிர்பார்த்து 2019 இல் மக்கள் மாற்றத்தை மேற்கொண்டார்களா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.