“பொதுசன வாக்கெடுப்பின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு: பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும்” – அமைச்சர் விஜித ஹேரத்
காலாவதியாகியுள்ள அரசியலமைப்பை இரத்துச் செய்து, மக்களின் விருப்பத்துடன், புதிய அரசியலமைப்பை நிச்சயம் உருவாக்குவோம். வழங்கிய வாக்குறுதிக்கு அமைய பயங்கரவாத தடைச்சட்டத்தை வெகுவிரைவில் இரத்துச் செய்வோம் என வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் அண்மையில் இது தொடர்பில் உரையாற்றியிருந்த அமைச்சர் விஜித ஹேரத், எதிர்க்கட்சிகள் கலக்கமடைந்துள்ளதை கண்டு அரசாங்கம் கலக்கமடைய போவதில்லை. மக்களுக்க வழங்கிய வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றுவோம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களும், பெருந்தோட்ட மக்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியுள்ளார்கள். ஆகவே மக்களின் ஆணைக்கமைய செயற்படுவோம்.
புதிய அரசியலமைப்பு தொடர்பில் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம் காலாவாதியடைந்துள்ள இந்த அரசியலமைப்பை இரத்துச் செய்து மக்களின் விருப்பத்துடன், பொதுஜன வாக்கெடுப்புடன் புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம்.
நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கு அமைச்சரவை உப குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. குழுவின் அறிக்கைக்கு அமைய இந்தச் சட்டம் இரத்துச் செய்யப்படும். அதேபோல் நிகழ்நிலை காப்புச் சட்டத்தை திருத்தம் செய்வதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.