எனது அண்ணன் மகேஸ்வரனின் படுகொலைக்கு தொழில் அதிபர் விண்ணணும் காரணம் ! தியாகராசா விக்கினேஸ்வரன்
முன்னாள் அமைச்சராக இருந்த தன்னுடைய சகோதரன் தியாகராசா மகேஸ்வரன் படுகொலை செய்யப்பட்டதற்கு தொழில் அதிபர் விண்ணன் முக்கிய காரணம் எனக் குற்றம்சாட்டுகின்றார் மகேஸ்வரனுடைய சகோதரர் தியாகராசா விக்கினேஸ்வரன். பிரித்தானியாவிலிருந்து புலம்பெயர்ந்து தற்போது அவுஸ்திரேலியாவில் வாழும் விக்கினேஸ்வரன் தேசம்நெற்க்கு அளித்த நேர்காணலில் மகேஸ்வரனுடைய கொலையின் பின்னணியில் தொழில் அதிபர் விண்ணணுக்கு முக்கிய பங்கிருப்பதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.
விண்ணன் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் கூட்டிய ஊடகவியலாளர் சந்திப்பில் ஆயதம் ஏந்திய இயக்கங்கள் பற்றி மிகக் கடுமையான விமர்சனங்களை வைத்திருந்தார். ஈபிடிபி, புளொட், ரெலோ, ஈபிஆர்எல்எப் ஆகிய இயக்கங்கள் கடத்தல், கொள்ளை, கொலை ஆகிய சம்பவங்களில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டியிருந்தார். இது விடுதலைப் போராட்ட அமைப்புகளை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டம் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் லண்டன் பிரிதிநிதி சாம் தேசம்நெற்க்குத் தெரிவித்து இருந்தார்.
முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன் ஆலயத்தில் வைத்து வசந்தன் என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். சுட்டுக்கொல்லப்பட்டவர் ஈபிடிபி அமைப்பைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் உண்மையிலேயே விடுதலைப் புலிகளால் ஈபிடிபிக்குள் அனுப்பி வைக்கப்பட்ட புலனாய்வுப் புலி உறுப்பினராகவே அடையாளம் காணப்பட்டார். இது தொடர்பில் தியாகராசா விக்கினேஸ்வரனிடம் கேட்ட போதே அவர் தொழிலதிபர் விண்ணனை நோக்கி குற்றச்சாட்டை வைத்தார்.

