வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள்: சர்வதேசமே பதில் சொல்லு ! செவிட்டு காதுகளில் ஊதும் சங்காகியது !

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள்: சர்வதேசமே பதில் சொல்லு ! செவிட்டு காதுகளில் ஊதும் சங்காகியது !

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் 8ம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது இன்றுவரை தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்தநிலையில் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நேற்று முன்னெடுத்தனர்.

இதன் போது சர்வதேசமே பதில் சொல் சர்வதேசமே எமக்கான தீர்வு என்ன! பிள்ளைகளை தினம் தேடிக்கொண்டே நீதியின்றி இறந்து கொண்டிருக்கின்றோம் கொக்குதொடுவாய் மனித புதைகுழி விடயத்தை மூடி மறைக்க வேண்டாம்! எமக்கு உண்மையும் நீதியும் வேண்டும் தமிழரை கடத்தாதே! இனவழிப்பு செய்யாதே! உங்கள் சிறைக்கூடம் எங்கள் பிள்ளைகளுக்கு என்ன கல்விக்கூடமா? எமது நாட்டில் நாம்வாழ உரிமையில்லையா? உலகமெல்லாம் பெண்கள் உரிமை பேசும் இந்நாளிலும் தெருவில் கிடந்து அழவைத்திருக்கிறது அரசு போன்ற பல்வேறு கோசங்களையும் எழுப்பி பதாதைகளை தாங்கியிருந்தனர்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் !

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க அலுவலகத்திற்கு முன்பாகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் படங்களை தாங்கியவாறு பொதுமக்கள் முன்னெடுக்கப்பட்ட இப் போராட்டத்தின்போது, தங்களின் பிரச்சினைகளுக்கு சர்வதேச விசாரணை ஊடாக தீர்வு வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

A 9 வீதி ஊடாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் போராட்டம் !

யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் இருப்பிடத்தை அறிய வேண்டி ஏழு வருடங்களாக உண்மையைக் கண்டறியும் வேட்கையை நிறைவு செய்யும் வகையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டமானது இன்று(20) காலை 10.30 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது.

இந்த போராட்டமானது கிளிநொச்சியில் கந்தசாமி கோவிலில் இருந்து ஆரம்பமாகி A 9 வீதி ஊடாக டிப்போ சந்தியில் உள்ள சிறப்பு நினைவுச்சின்னம் வரை பயணித்துள்ளது.

மேலும் இந்த போராட்டத்தில், எமது பிள்ளைகளை காணாமல் ஆக்க செய்தவர்கள்  நாடு கடத்தப்பட வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தேங்காய் உடைத்து வேண்டுதல் மேற்கொண்டுள்ளனர்.

இப்போராட்டத்தில் சமயத் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதுடன் சிங்கள மக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவிக்கு விளக்கமறியல் !

வவுனியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன்,ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று வெள்ளிக்கிழமை (05) வவுனியாவிற்கு விஜயம் செய்திருந்ததுடன், நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற வன்னிமாவட்டங்களிற்கான ஒருங்கிணைப்புகுழுக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்.

இதனையடுத்து, வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டநிலையில் சங்கத்தின் தலைவி உட்பட இருவர் வவுனியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் நேற்றையதினம் மாலை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். இதன்போது சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், மற்றைய பெண் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் !

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இன்று ஞாயிற்றக்கிழமை (10) காலை 10 மணியளவில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

குறித்த போராட்டத்தின்போது ‘வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு மரணச் சான்றிதழ் வேண்டாம், இழப்பீடு வேண்டாம், காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் வேண்டாம், சர்வதேசமே நீதியைத் தா’ போன்ற பல்வேறு கோசங்களையும் எழுப்பி போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

இந்த போராட்டத்தில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

காணாமலாக்கப்பட்டோருக்கான 1500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு – எமக்கு நிதி தேவையில்லை நீதியே வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தல் !

எமக்கு நிதி தேவையில்லை நீதியே வேண்டும் என திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி நாகேந்திரன் ஆஷா தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினால் இன்று (15) ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி சுமார் 14 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக போராடி வருகின்றார்கள்.

அவர்களுக்கு இதுவரையில் எவ்வித நீதியும் கிடைக்கவில்லை, ஆனால் இலங்கை அரசு அதனை புறம்தள்ளிவிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்காக வரவு செலவு திட்டத்தில் 1500 மில்லியல் ரூபாவை ஒதுக்கியுள்ளது.

இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம், நாங்கள் நிதிக்காகபோராடவில்லை, பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிக்காகவே போராடுகின்றோம்.

 

எமக்கு இலங்கை அரசின் மீது நம்பிக்கை இல்லை, சர்வதேச விசாரணை ஒன்றே எமக்கான நீதியை பெற்றுத்தரும், எனவே அதை வலியுறுத்தி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர்ச்சியாக போராடி வருகின்றார்கள்.

சர்வதேச சமூகத்தின் பார்வையில் எங்களுடைய போராட்டம் பேசுபொருளாக மாறி உள்ள நிலையில் சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் விதமாக இம்முறை வெளியிடப்பட்ட வரவுசெலவு திட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக நிதி ஒதுக்கப்பட்ட விடயம் கண்டனத்துக்குரியது.

இவ்வருடம் பொங்கல் தினத்தில் யாழ்ப்பாத்தில்வைத்து யாரும் காணாமல் ஆக்கப்படவில்லை என தெரிவித்த அதிபர் ரணில் இப்போது குறித்த விடயத்திற்காக நிதி ஒதுக்குவதாக தெரிவித்திருக்கின்றார் அப்படியானால் எமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டிருப்பதனை அவர் ஏற்றுக்கொள்கின்றாரா? என கேள்வி எழுப்புகின்றோம்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளாகிய நாம் தொடர்ச்சியாக எங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்காகவே போராடி வருகின்றோம்.

இந்நிலையில் எங்களுடைய போராட்டத்தை சிதைக்கும் வகையில் அதற்கு இழப்பீடு வழங்குவதாகக்கூறி சர்வதேச சமூகத்தை ஏமாற்றப் பார்க்கின்றனர் எனவும்” அவர் தெரிவித்தார்.

‘கையளிக்கப்பட்ட மாணவர்கள் எங்கே?’ – வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் !

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று (01) காலை 10 மணியளவில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் சங்கத்தினரது போராட்ட இடத்துக்கு முன்பாக இப்போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘நீதிபதிக்கே உயிரச்சுறுத்தல் உள்ள நாட்டில் எமக்கு நீதி எப்போது?’, ‘சர்வதேசமே எமக்காக குரல் கொடுக்க எழுந்திரு’, ‘கையளிக்கப்பட்ட மாணவர்கள் எங்கே?’, ‘குடும்பமாக ஒப்படைக்கப்பட்ட சிறுவர்கள் எங்கே?’, ‘தமிழ் குழந்தைகள் என்ன பயங்கரவாதிகளா?’, ‘சின்னஞ்சிறு சிறார்களும் ஆயுதம் ஏந்தியவர்களா?’, ‘பாடசாலை சென்ற மாணவன் எங்கே?’ போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோஷங்களையும் எழுப்பினர்.

இலங்கையில் காணாமல்போன தமிழ் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளின் ஒளிப்படங்களையும் இதன்போது கைகளில் ஏந்தியிருந்தனர்.

இந்த போராட்டத்தில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன், காணாமலாக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், சிறுவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

“ஒவ்வொரு ஜெனிவா கூட்டத் தொடரின் போதும் அதன் மீதான நம்பிக்கை போகிறது.” – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்

ஒவ்வொரு ஜெனிவா கூட்டத் தொடரின் போதும் தமக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்தாலும் ஆனால் அந்த நம்பிக்கை அடுத்த நிமிடமே இல்லாது போவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் இம்முறையாவது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்தார்.

மன்னாரில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர், 15 வருடங்களாக வீதியில் இறங்கி போராடி வரும் தமக்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என்றும் இதன் காரணமாகவே ஐ.நா சபை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் குறிப்பிட்டடார்.

நீதிக்காக போராடிக்கொண்டு இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் ஓ.எம்.பி அலுவலகத்தை கொண்டுவந்து இழப்பீடு தருவதாக கூறப்பட்டுள்ளதே தவிர இதுவரை குறித்த அலுவலகத்தினால் எவ்வித பிரயோசனமும் இல்லை ஏறும் அவர் சுட்டிக்காட்டினார்.

உள்நாட்டு பொறிமுறையில் எவ்வித நம்பிக்கையும் இல்லை, சர்வதேசம் தமது பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்றாலும் அவர்கள் தம்மை திரும்பி பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டு உள்ளமை வேதனையை தருவதாகவும் அவர் குறிப்பிட்டடார்.

“இனி எங்களால் போராட முடியுமா? என கூட எமக்குத் தெரியவில்லை” – வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் ஆதங்கம் !

இனி எங்களால் போராட முடியுமா? என்பது கூட எமக்கு தெரியாமல் இருக்கின்றது என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தின் செயலாளர் சி.ஜெனிற்றா தெரிவித்தார்.

வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக செவ்வாய்க்கிழமை (30) இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் முப்பதாம் திகதி  சர்வதேச நீதியை கோரி கவன ஈர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றோம்.  உறவுகளை கடத்தி காணாமல் ஆக்கப்பட்டு, சரணடைந்து, கையில் ஒப்படைக்கப்பட்ட, எமது உறவுகளை தேடித்தான் நாம் ஜனநாயக போராட்டத்தை அகிம்சை வழியில் 14 வருடங்களாக தொடர்ச்சியாக வீதியில் நின்று போராடி கொண்டிருக்கின்றோம்.

புதிய அரசாங்கமானது, பயங்கரவாத தடை சட்டத்தை எடுப்பதாக கூறி, புதிதாக பயங்கரவாத எதிர்ப்பு தடை சட்டத்தை அமுல்படுத்த நினைக்கின்றார்கள்.

ஆனால் அதை செய்கின்ற போது எமது ஜனநாயக போராட்டத்திற்கான கருத்து சுதந்திரமோ , தனியாகவோ அல்லது கூட்டாகவோ சேர்ந்து போராடுவதற்கு பயங்கரவாத எதிர்ப்பு தடை சட்டமானது ஒரு படிக்கல்லாக அமையும் என்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களிடமும், ஏனையவர்களிடமும் நிறைவேற்றாது நிறுத்த வேண்டும் என்பதனை ஊடக வாயிலாக கேட்டு கொள்கின்றோம்.

இலங்கை தேசத்து மக்கள் அழிக்கப்பட்டிருக்கின்ற போதும் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கும் எந்த ஒரு நீதியும் வழங்காமல் இந்த சர்வதேசம் பார்த்து கொண்டிருக்கின்றது. அதேபோன்று கடத்தி காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்ற உறவுகளை தேடி நீதிக்காக போராடிக்கொண்டிருக்கின்ற போது இலங்கை தேசத்தை ஏன் கண்டு கொள்ளாமல் இருக்கின்றீர்கள்.

உறவுகள் இனியாவது மனிதர்களாக வாழ வேண்டும். ஏனையவர்களுடன் வாழ்வதற்கு உதவ வேண்டும் என்பதற்காக நடக்க இருக்கின்ற கூட்ட தொடரிலாவது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றங்கள் இழைத்தவர்களை பாரப்படுத்தி மக்களுக்கான நீதியை பெற்றுத்தர வேண்டும் என்பதை நாம் மிகவும் பணிவாக கேட்டு நிற்கின்றோம்.

இனி எங்களால் போராட முடியுமா? என்பது கூட எமக்கு தெரியாமல் இருக்கின்றது. ஏனென்றால் அச்சுறுத்தல்கள், தடை உத்தரவுகள் இருந்தன. தற்போது நீதிமன்ற வழக்குகள் கூட எமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டு கொண்டிருக்கின்றன. எனவே தொடர்ச்சியாக போராட சர்வதேசம் உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

“எமக்கான உரிமைகள் கிடைக்காத நிலையில் இந்த சுதந்திரதினத்தை கொண்டாடுவதற்கு நாம் தயாரில்லை.” – வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்

தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் சுதந்திரதினத்தை கொண்டாடுவதற்கு நாம் தயாரில்லை என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க செயலாளர் சி.ஜெனிற்றா தெரிவித்தார்.

வவுனியா ஊடகஅமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”தமிழ்மக்களின் பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்படாதநிலையில் 37 கோடி ரூபாய்களை செலவளித்து சுதந்திரதினம் கொண்டாடப்படுகின்றது. எமக்கான சுதந்திரம் 75 வருடங்களாக கிடைக்கவில்லை. எமக்கான உரிமைகள் கிடைக்காத நிலையில் இந்த சுதந்திரதினத்தை கொண்டாடுவதற்கு நாம் தயாரில்லை.

எனவே அன்றையதினம் நான்காம் திகதி வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய மாபெரும் பேரணி ஒன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த பேரணிக்கு வலுச்சேர்க்கும் விதமாக அனைத்துதரப்புகளும் ஒன்று திரளவேண்டும் என்று நாம் அறைகூவல் விடுக்கின்றோம்.

குறித்த போராட்டத்திற்கு ஆதரவு நல்கும் விதமாக வவுனியா மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் எதிர்வரும் 5 ஆம் திகதி காலை 7 மணியளவில் வவுனியா தமிழ்மத்திய மகாவித்தியாலத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.

எனவே குறித்த பேரணியில் அரசியல் வேறுபாடுகளை கடந்து அனைத்து தமிழ்தேசிய கட்சிகளும் ஒண்றிணைவதுடன், பொது அமைப்புக்கள், ,நலன்விரும்பிகள்,பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.” என்றார்.