வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்

வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்

7 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது! திருப்பி அனுப்பாமல் அபிவிருத்தி நிதியை பயன்படுத்தவும் !

7 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது! திருப்பி அனுப்பாமல் அபிவிருத்தி நிதியை பயன்படுத்தவும் !

 

வடக்கிற்கான அபிவிருத்தி நிதியை வினைத்திறனாக பயன்படுத்துங்கள் என அரசாங்க அதிகாரிகளிடம் ஆளுநரும், கடற்தொழில் அமைச்சரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடக்கு மாகாணத்திற்கு 7,328 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறித்த நிதி பல்வேறு வேலைத்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவற்றை வினைத்திறனாகவும், ஒருங்கிணைந்தும், விரைவாகவும் நிறைவேற்றுவது தொடர்பாக கடற்றொழில் நீரியல்வளத்துறை கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகரன் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோர் இணைத் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்றையதினம் இடம்பெற்றது.

கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், வனவளத்திணைக்களம், வன உயிரிகள் திணைக்களத்தால் நாட்டின் பல்வேறு பிரதேசங்களுக்கும் பாதிப்பு இருந்தாலும் வடக்கு மாகாணத்தில் அதிகூடிய பாதிப்பு இருப்பதாகக் குறிப்பிட்டார். மக்களின் மீள்குடியமர்வு, விவசாயம், அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு இடையூறாக இந்த இரு திணைக்களங்களின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன எனத் தெரிவித்தார்.

இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த அமைச்சர் சந்திரசேகரன், மாகாணசபைக்கு அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்துத் திணைக்களங்களும் ஒருங்கிணைந்து இதைச் செலவு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் வெளிநாடுகளிலிருந்து முதலீட்டாளர்கள் அதிகளவில் வருகைதரும் நிலையில் அவர்களுக்கு ஒத்துழைப்புக்களை அதிகாரிகள் வழங்கவேண்டும் எனவும் ஆலோசனை வழங்கினார்.

அபிவிருத்தி நிதியை சமமாகப் பகிரத் தேவையில்லை – யாழில் இருந்து ஆரம்பிக்காது வன்னியில் இருந்து ஆரம்பியுங்கள் – ஆளுநர் வேதநாயகன் !

அபிவிருத்தி நிதியை சமமாகப் பகிரத் தேவையில்லை – யாழில் இருந்து ஆரம்பிக்காது வன்னியில் இருந்து ஆரம்பியுங்கள் – ஆளுநர் வேதநாயகன் !

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாக்குறுதியளித்தவாறு வடக்கு மாகாணத்துக்கு பல்வேறு திட்டங்களுக்கு பெருமளவு நிதி ஒதுக்கியுள்ளார் என்றும் அவருக்கு எமது வடக்கு மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் திட்டமீளாய்வு கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஆளுநர், எமக்கு ஒதுக்கப்பட்ட நிதியை நாம் முழுமையாகச் செலவு செய்ய வேண்டும். எவ்வளவு விரைவாக அந்த நிதியை செலவு செய்து முடித்து மேலதிக நிதியை நாம் கோரவேண்டும். இது எமக்கு சவாலானதுதான். நாம் நிதியை திருப்பி அனுப்பாமலே நிதியை திருப்பி அனுப்பியதான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன் ஜனாதிபதி வீதி அபிவிருத்திக்காக விசேட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியை வடக்கின் அனைத்து மாவட்டங்களுக்கு சமமாகப் பகிரத் தேவையில்லை. தேவைப்பாடுகள் எங்கு அதிகமோ அங்கு அதிகளவு நிதியை ஒதுக்குங்கள்.

மேலும் இந்தத் திட்டத்துக்கு யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டு தெரிவுகளை முன்னெடுக்காமல் வன்னிப் பிராந்தியத்தின் ஒவ்வொரு இடத்துக்கும் சென்று நேரடியாகப் பார்த்து தெரிவு செய்யுங்கள். அப்போதுதான் அந்த மக்கள் அனுபவிக்கின்ற வலி உங்களுக்குத் தெரியும்” என்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் குறிப்பிட்டுள்ளார்.

 

அனுர அரசாங்கம் வடக்கு அபிவிருத்தியில் அக்கறை கொண்டுள்ளது – ஆளுநர் வேதநாயகன் !

அனுர அரசாங்கம் வடக்கு அபிவிருத்தியில் அக்கறை கொண்டுள்ளது – ஆளுநர் வேதநாயகன் !

 

மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் சாதகமான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் எமது மாகாணத்தை நாம் துரிதமாக அபிவிருத்தி செய்துகொள்ள வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் யாழ்ப்பாணம், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவுக்கான palliative care கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் உரையாற்றிய ஆளுநர், “ மாகாண அபிவிருத்திக்கான இது போன்றதொரு சந்தர்ப்பத்தை நாம் இழக்கக் கூடாது.சுயநலம் மலிந்த இந்தக் காலத்தில் மற்றையவர்களுக்கு உதவி செய்பவர்கள் அருகிச் செல்கின்றனர்.

அவ்வாறானதொரு நிலைமையில் மருத்துவமனைக்கு உதவியைச் செய்வதற்கு முன்வந்தவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்களே. புலம்பெயர்ந்து சென்றாலும் எமது மண்ணுக்கும் மக்களுக்கும் சேவை செய்ய விரும்பும் அவர்களது எண்ணம் மிகப்பெரியது. தெல்லிப்பழை புற்றுநோய் மருத்துவமனைக்கான தேவைகள் இன்னமும் நிறைய இருக்கின்றன. அவையும் விரைவில் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.” என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக அகதிகள் பற்றி தமிழ் தேசிய அரசியல்வாதிகள் தொடர்ந்தும் மௌனம்! ஆளுநர் அவர்களைக் அழைத்துவர தீவிர முயற்சி!

தமிழக அகதிகள் பற்றி தமிழ் தேசிய அரசியல்வாதிகள் தொடர்ந்தும் மௌனம்! ஆளுநர் அவர்களைக் அழைத்துவர தீவிர முயற்சி!
வடக்கு கிழக்கிலிருந்து தமிழர்கள் வெளியேறுவதற்கு கடிதம் கொடுக்கும், காரணம் கண்டுபிடிக்கும் தமிழ் தேசிய அரசியல்வாதிகள் தமிழக முகாம்களில் அடிப்படை வசதிகள் உரிமைகள் இல்லாமல் வாழ்ந்துவரும் அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அழைத்துவரும் விடயம் தொடர்பில் மௌனமாகவே உள்ளனர். மாறாக இந்தியாவில் தொடர்ந்து தங்கியுள்ளவர்களை அவர்கள் விரும்பும் பட்சத்தில் அழைத்து வர அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும்படி வடமாகாண ஆளுநர் வேதநாயகன் யுஎன்எச்சிஆர் ருNர்ஊசு ரிடம் கேட்டுக் கொண்டுள்ளார். அவர்களை இலங்கைக்கு மீண்டும் அழைத்து வருவது தொடர்பாக வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேவதநாயகன் ஐக்கிய நாடுகளின் அகதிகள் முகவரகத்தின் தலைவரான சஞ்சித்த சத்தியமூர்த்தியோடு டிசம்பர் 22 இல் கலந்துரையாடினார்.
தமிழகத்தின் பல்வேறு முகாம்களிலும் முகாம்களிற்கு வெளியேயும் 3 இலட்சத்திற்கும் அதிகமான இலங்கைத் தமிழ் அகதிகள் வாழ்கிறார்கள். 1992 ஆம் ஆண்டளவிலேயே பெருந்தொகையானவர்கள் யுத்தத்திலிருந்து தம்மை காப்பாற்றும் பொருட்டு தமிழகத்திற்கு அகதியாக சென்றனர். இவர்களில் ஒரு தொகுதியினரே நாடு திரும்பியுள்ளனர். தமிழக அகதி முகாம்களில் இரண்டு தலைமுறையாக வாழும் இலங்கை அகதிகளில் பெரும்பாலானோர் இலங்கை திரும்ப விரும்பவில்லை. இவர்களின் பிள்ளைகள் இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்து, கல்வி கற்று, தொழில் புரிவதோடு அங்கேயே திருமணம் முடித்து அங்கேயே அவர்களது வாழ்க்கையை அமைத்துக் கொண்டுவிட்டார்கள்.
அவ்வாறே மேற்கு நாடுகளுக்கும் அகதிகளாக சென்றுள்ளனர். மேற்கு நாடுகளுக்கு அகதிகளாக சென்றவர்களின் இரண்டாவது தலைமுறையினரும் தங்களுடைய வாழ்க்கையை தங்கள் பெற்றோர் அகதியாக வந்த நாடுகளிலேயே அமைத்துக் கொண்டுவிட்டார்கள். அத்துடன் அவர்கள் வாழும் நாடுகளின் குடியுரிமையும் அவர்களுக்கு கிடைத்திருக்கின்றது. அவர்களும் பெரும்பாலும் இலங்கைக்கு திரும்பி வர விரும்பவில்லை.
மாறாக இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இதுவரை குடியுரிமை வழங்கப்படவில்லை. தமிழக முகாம்களில் வாழும் இலங்கை அகதிகள் நீண்டகாலமாக தமக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும்படி கோருகின்றனர். அவர்களும் கூட இந்தியப் பொருளாதாரத்திற்கு தங்களுடைய பங்களிப்பை செய்து வருகின்றனர்.
எவ்வாறெனினும் சுயவிருப்பின் பேரில் இலங்கை அகதிகள் நாடு திரும்ப விரும்பினால் அவர்களை அழைத்து வருவதற்கான திட்டங்களை ஆலோசிப்பதும் அவசியமானதேயாகும். மேலும் தாயகம் திரும்ப விரும்பும் அகதிகளுக்கு இலங்கையில் நிரந்தர வாழ்விடமோ, தொழிலோ இல்லாமையால் அவர்களில் பெரும்பாலானோர் நாடு திரும்ப விரும்பவில்லை.
ஒரு வேளை தமிழகத்திலிருந்து அவர்கள் அழைத்து வரப்படும் பட்சத்தில் இலங்கையில் அவர்களுக்கான மறுவாழ்த்திட்டம் ஒன்றை உருவாக்கி அவர்களது எதிர்கால வாழ்க்கைக்கு உத்தரவாதத்தை வழங்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் புலம்பெயர்தலுக்கான அமைப்பானது உலகெங்கிலும் புலம்பெயர்ந்து அகதிகளாக வாழும் மக்கள் தமது சுயவிருப்புடன் சொந்த நாட்டுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்தால் அதற்கான ஏற்பாடுகளை இலவசமாக செய்து கொடுக்கும். ஐக்கிய நாடுகள் சபையின் புலம்பெயர்தலுக்கான
அமைப்பானது 100 மேற்பட்ட நாடுகளில் தனது அலுவலகத்தை கொண்டுள்ளது. சொந்த நாட்டிற்கு சுய விருப்புடன் மீள் திரும்பல் மற்றும் மீள் ஒருங்கிணைப்பு திட்டத்தின் அகதிகள் நாடு திருப்புவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கும். இத்திட்டத்தின் கீழ் நூற்றுக்கணக்கான ஐரோப்பாவில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்ட்ட பலர் தங்கள் சொந்த விருப்பில் நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்தின் கீழ் அரச சார்பற்ற முறையில் பாதுகாப்பாக தாயகம் திரும்புவதற்கான ஆலோசனைகளை வழங்குவதோடு, சட்டப்பூர்வமாக நாடு திரும்புவதற்கான ஆவணங்களையும் ஏற்பாடு செய்வதோடு விமானப் பயண ஒழுங்குகள் மற்றும் பயணப் பொதி தொடக்கம் ஒழுங்குகளையும் செய்து கொடுக்கும். மேலும் நாடு திரும்பியவர்களுக்கு தமது சொந்த இடங்களில் குடியமரவும் மற்றும் அவர்கள் தமது வாழ்வை தொடங்குவதற்கு உதவியாக ஆரம்ப கொடுப்பனவாக அவர்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்குகின்றது. இதனை ஸ்ராற் கெல்ப் என அழைக்கின்றனர்.
ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்து அகதிகளாக வாழ்பவர்கள் சுய விருப்பத்தின் பேரில் நாடு திரும்ப விரும்பினால் அவர்களுக்கு சம்பந்தப்பட்ட நாட்டு அரசாங்கங்கள் ஊக்கத்தொகை வழங்குகின்றனர். ஜேர்மனியைப் பொறுத்தவரை 18 வயதிற்கு மேற்பட்டபவர்களுக்கு ஆயிரம் யூரோவும் குடும்பங்களுக்கு 4,000 யூரோக்களுக்கும் குறையாமலும் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு 500 யூரோவும் வழங்கப்படுகின்றன. இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பும் அகதிகளுக்கு தலைக்கு ஒரு இலட்சம் ரூபாயும் விமானச் சீட்டும் வழங்க முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் சனத்தொகை அடர்த்தி குறைந்த 5 மாவட்டங்களில் 4 மாவட்டங்கள் வடமாகாணத்திலேயே உள்ளது. யாழ்ப்பாணம் தவிர்ந்த கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களே சனத்தொகை அடர்த்தி குறைந்த மாவட்டங்கள். இம்மாவட்டங்களில் சகல வசதிகளோடுமான புதிய குடியிருப்புக்களை உருவாக்கி, நாடு திரும்பும் அகதிகளைக் குடியேற்ற முடியும். புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள ஆலயங்கள், பழைய மாணவர்சங்கங்கள் தாங்கள் சேகரிக்கும் பெரும்தொகைப் பணத்தை வினைத்திறனில்லாமல் செலவழிக்கின்றனர். வடமாகாண அளுநர் இதற்கான நிதியம் ஒன்றை உருவாக்கி இந்நிதியை இந்த மக்களின் மீள் குடியிருப்புக்கு பயன்படுத்தப்பட முடியும்.

நாட்டை விட்டு வெளியேறும் இளைஞர்கள். உள்ளூராட்சி சபைகளை பலப்படுத்துங்கள் என்கின்றார் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்!

நாட்டை விட்டு வெளியேறும் இளைஞர்கள். உள்ளூராட்சி சபைகளை பலப்படுத்துங்கள் என்கின்றார் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்!

வடக்கு மாகாணத்தை அபிவிருத்தியடைய செய்யும் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் எமது உள்ளூராட்சி மன்றங்களும் மாற்றமடையவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

பருத்தித்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில் 11.12.2024 இடம்பெற்ற பண்பாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“எமது மாகாணத்தின் இளையோர் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கான வேலை வாய்ப்புக்களை நாம் எமது மாகாணத்தில் உருவாக்கிக் கொடுக்கவேண்டும். அதற்கு முதலீடுகளை இங்கு ஊக்குவிக்கவேண்டும். நான் யாழ். மாவட்டச் செயலராகப் பணியாற்றிய காலத்தில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு சிலர் வந்தார்கள். ஆனால் அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டார்கள். அவர்களிடம் கேட்டபோது, முதலீடுகளை மேற்கொள்வதற்கு அதிகாரிகள் கையூட்டு எதிர்பார்க்கின்றார்கள் என்று சொன்னார்கள். அது அன்றைய நிலைமை. ஆனால் தற்போதைய அரசாங்கம் அவற்றுக்கு முற்றிலும் எதிரானது. பல முதலீட்டாளர்கள் இங்கு வருவதற்கு விரும்புகின்றார்கள். அவர்களை நாங்கள் வரவேற்க வேண்டும். எமது உள்ளூராட்சி மன்றங்கள் முதலீட்டாளர்களுக்கு உதவும் வகையில் செயற்படவேண்டும். அவர்களை அலைக்கழிக்கக்கூடாது. எமது மாகாணத்தை நாம் அபிவிருத்தியடைந்த மாகாணமாக மாற்றும் இலக்கை நோக்கிப் பயணிக்க அனைவரும் ஒத்துழைத்து செயற்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது மாகாண சபை முறைமைக்கு அப்பால் ஒவ்வோர் பிரதேசங்களும் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற தொனிப்பொருளில் இயங்குவதை அவதானிக்க முடிகிறது. ஏற்கனவே இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட மாகாண சபை முறைகள் அரசியல் கட்சிகளின் கெடுபிடிகளாலும், ஊழல்களாலும் நிறைந்துள்ளதாக பலத்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக வடக்கு மாகாண சபை ஊழலால் கவிழ்க்கப்பட்டதும் கடந்த கால வரலாறு. இந்த நிலையில் தேசிய மக்கள் சக்தியின் அபிவிருத்திக்கான கட்டமைப்பானது நாட்டின் அடிமட்டத்தில் இருந்து கட்டியெழுப்ப வேண்டும் என்ற நிலைப்பாட்டை கடந்த காலங்களிலும் வெளிப்படுத்தியிருந்தது. இந்த அடிப்படையிலேயே அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இதே போன்றதான ஓர் கருத்தையே ஆளுநர் வேதநாயகன் வெளிப்படுத்தியுள்ளமை கவனிக்கத்தக்கது.

சட்ட விரோத கட்டங்கள் அனைத்தையும் அகற்றுங்கள் – வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு !

வடக்கு மாகாணத்தில் வெள்ளம் வடிந்தோடாமல் வெள்ள வாய்க்கால்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை இடித்து அகற்றுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை விடுத்துள்ளதுடன், இது தொடர்பில் மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இடர் நிலைமை தொடர்பில் ஆராயும், இணையவழி கலந்துரையாடல் இன்று காலை இடம்பெற்ற போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ள இடர் பாதிப்புக்கள் தொடர்பில் அந்தந்த மாவட்டச் செயலர்கள் மற்றும் மேலதிக மாவட்டச் செயலர்களால் ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் வழங்கப்பட்டு வருவது தொடர்பிலும் ஆளுநரின் கவனத்துக்கு அவர்கள் கொண்டு வந்தனர்.

அனலைதீவு, எழுவைதீவு போன்ற பிரதேசங்களுக்கு மின்சாரம் பகலில் துண்டிக்கப்பட்டு இரவில் மாத்திரம் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. மின்சார விநியோகத்துக்கு தேவையான எரிபொருள் குறிகாட்டுவான் இறங்குதுறையில் இருப்பதாகவும், கடல் பயணத்துக்கு ஏதுவான நிலைமை ஏற்பட்டதும் அவற்றை உடனடியாக கடற்படையினரின் உதவியுடன் கொண்டு செல்வதற்கு தயாராக இருப்பதாகவும் இலங்கை மின்சார சபையின் வடக்குப் பிராந்திய முகாமையாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

அதேவேளை, அந்தப் பிரதேசங்களிலுள்ள மருத்துவமனைகள் மின்பிறப்பாக்கி மூலம் மின்சாரத்தை பெற்று இயங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது. தற்போது பல வெள்ள வாய்க்கால்களில் வெள்ளம் நிரம்பிய நிலையில் இருப்பதால் அதனுள் குப்பைகளைக் கொட்டுவதற்கு முயற்சிக்கக் கூடும் எனவும் அது தொடர்பில் அவதானமாக இருக்கவேண்டும் என்றும் யாழ். மாநகர சபை ஆணையாளருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

மேலும், வெள்ளம் வடிந்தோடாமல் இருப்பதற்கு வெள்ளவாய்க்கால்களை ஆக்கிரமித்து சட்டவிரோத கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளமையும் காரணம் எனச் சுட்டிக்காட்டிய ஆளுநர், அவற்றை அகற்ற துரித நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார். அதேபோன்று சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள ஏனைய கட்டடங்களையும் அகற்றுமாறும் ஆளுநர் பணித்ததுடன், திரும்பத் திரும்ப இந்த விடயங்கள் தொடர்பில் பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்றும் குறிப்பிட்டார்.