நாட்டை விட்டு வெளியேறும் இளைஞர்கள். உள்ளூராட்சி சபைகளை பலப்படுத்துங்கள் என்கின்றார் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்!
வடக்கு மாகாணத்தை அபிவிருத்தியடைய செய்யும் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் எமது உள்ளூராட்சி மன்றங்களும் மாற்றமடையவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
பருத்தித்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில் 11.12.2024 இடம்பெற்ற பண்பாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“எமது மாகாணத்தின் இளையோர் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கான வேலை வாய்ப்புக்களை நாம் எமது மாகாணத்தில் உருவாக்கிக் கொடுக்கவேண்டும். அதற்கு முதலீடுகளை இங்கு ஊக்குவிக்கவேண்டும். நான் யாழ். மாவட்டச் செயலராகப் பணியாற்றிய காலத்தில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு சிலர் வந்தார்கள். ஆனால் அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டார்கள். அவர்களிடம் கேட்டபோது, முதலீடுகளை மேற்கொள்வதற்கு அதிகாரிகள் கையூட்டு எதிர்பார்க்கின்றார்கள் என்று சொன்னார்கள். அது அன்றைய நிலைமை. ஆனால் தற்போதைய அரசாங்கம் அவற்றுக்கு முற்றிலும் எதிரானது. பல முதலீட்டாளர்கள் இங்கு வருவதற்கு விரும்புகின்றார்கள். அவர்களை நாங்கள் வரவேற்க வேண்டும். எமது உள்ளூராட்சி மன்றங்கள் முதலீட்டாளர்களுக்கு உதவும் வகையில் செயற்படவேண்டும். அவர்களை அலைக்கழிக்கக்கூடாது. எமது மாகாணத்தை நாம் அபிவிருத்தியடைந்த மாகாணமாக மாற்றும் இலக்கை நோக்கிப் பயணிக்க அனைவரும் ஒத்துழைத்து செயற்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது மாகாண சபை முறைமைக்கு அப்பால் ஒவ்வோர் பிரதேசங்களும் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற தொனிப்பொருளில் இயங்குவதை அவதானிக்க முடிகிறது. ஏற்கனவே இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட மாகாண சபை முறைகள் அரசியல் கட்சிகளின் கெடுபிடிகளாலும், ஊழல்களாலும் நிறைந்துள்ளதாக பலத்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக வடக்கு மாகாண சபை ஊழலால் கவிழ்க்கப்பட்டதும் கடந்த கால வரலாறு. இந்த நிலையில் தேசிய மக்கள் சக்தியின் அபிவிருத்திக்கான கட்டமைப்பானது நாட்டின் அடிமட்டத்தில் இருந்து கட்டியெழுப்ப வேண்டும் என்ற நிலைப்பாட்டை கடந்த காலங்களிலும் வெளிப்படுத்தியிருந்தது. இந்த அடிப்படையிலேயே அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இதே போன்றதான ஓர் கருத்தையே ஆளுநர் வேதநாயகன் வெளிப்படுத்தியுள்ளமை கவனிக்கத்தக்கது.