முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் கார்னிவல் அலுவலகத்தில் நீண்ட நேரம் பேச்சு வார்த்தை நடத்தியபின்னர் 20 க்கு ஆதரவாக வாக்களிக்குமாறு எமக்கு கூறிய ரவூப் ஹக்கீம், இப்போது என்னை கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாக இரட்டை வேடம் போடுவதாக அமைச்சர் ஹாபிஸ் நஸீர் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன அரசில் சுற்றாடல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் ஹாபிஸ் நஸீரை, கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அறிவித்துள்ளார். இதனையடுத்தே, ஹக்கீமின் இரட்டை வேடம் என்ற தலைப்பில் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அவசரக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். அந்த கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எந்த விசாரணையுமின்றி என்னை உடனடியாக கட்சியை விட்டு நீக்கியதாக கூறப்படும் எந்தத் தகவலும் இதுவரை எனக்கு வரவில்லை, அவ்வாறு கிடைத்தால் அதற்குத் தகுந்த பதிலளிப்பேன் என்றும் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் தெரிவித்துள்ளார்.
அவர் தனது கடிதத்தில் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது,
2020 ஆகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன வெற்றி பெற்று இரண்டு மாதங்களுக்கு பின், 2020 ஒக்டோபர் மாதமளவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்புமனுவினூடாக தற்போதைய பாராளுமன்றத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினர் நான். தற்போது அதிகாரத்தில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்துடன் இணைந்து நான்,செயற்படுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமின் தீர்மானமே காரணமாகும்.
அவ்வாறிருக்கையில், முறையான விசாரணைகள் எதுவுமின்றி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து என்னை திடீரென நீக்கிவிட்டதாகக் கூறி அவர் எவ்வாறு இந்த நாட்டைத் தவறாக வழிநடத்த முடியும்?
தற்போது, நமது அயல் நாடொன்றில் இலங்கையின் தூதுவராக இருக்கும் அவரது நண்பருடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினதோ அல்லது ஐக்கிய மக்கள் சக்தியினதோ அனுமதி இன்றி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியுடன் உறுதியான புரிந்துணர்வுக்கும் ரவூப் ஹக்கீம் வந்ததை அவரால் மறுக்க முடியுமா?
அதனை தொடர்ந்து, 2020 ஒக்டோபர் 18 ஆம் திகதி ரவூப் ஹக்கீமின் கார்னிவல் (Carnival) அலுவலகத்தில் ஜனாதிபதியின் சகோதரர் பசில் ராஜபக்ஷவுடன் ஒரு மணி நேரத்துக்கு மேல் சந்திப்பு நடத்தியதை அவர் மறுக்க முடியுமா? இச்சந்திப்பில் ரவூப் ஹக்கீமின் அழைப்பின் பேரில், நான் உட்பட எம்.சி.பைசால் காசிம், எச்.எம்.எம்.ஹரீஸ், தெளபீக் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன் எங்கள் அனைவரையும் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களிக்குமாறும் பொதுஜன பெரமுன அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறும் எங்களை வேண்டிக் கொண்டதால், நான் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற விரும்பினாலும் ஜக்கிய மக்கள் சக்தியின் தலைமைத்துவம் மற்றும் அவரது கண்டி மாவட்ட தேர்தலில் ஜக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு என்பவற்றின் காரணமாக அவரால் அவ்வாறு செய்ய முடியாமல் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
நாட்டு மக்கள் பொதுஜன பெரமுனவை, அத்தேர்தலில் அமோக வெற்றியுடன் பாராளுமன்றத்துக்கு அனுப்பியிருப்பதாலும், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள எனது வாக்காளர்களின் நலன் கருதியும், அதிகாரத்திலுள்ள அரசாங்கத்துடன் இணைந்து வாக்காளர்களுக்கு அத்தியாவசியமான தேவைகளை பெற்றுக்கொடுக்க நான் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவது அவசியமானதாலும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதை உடன்படுகிறேன்.
அதன் பிரகாரம் தெரிவு செய்யப்பட்ட எமது அரசியல் கட்சியின் தலைமையின் வேண்டுகோளுக்கிணங்க, அவரை நம்பி 20ஆவது திருத்தத்துக்கு வாக்களித்தேன். ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியின் அழுத்தத்தின் காரணமாக ரவூப் ஹக்கீம் வாக்களித்தமைக்காக எனது விளக்கத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால் ரவூப் ஹக்கீம்தான், நான் பொது ஜன பெரமுனவுடன் இணைந்து பணியாற்ற வேண்டுமென்று அவர் கட்டாயாப்படுத்தியதற்கேற்ப நான் செயற்பட்டதை ரவூப் ஹக்கீம் நன்றாக அறிந்திருந்ததால், இவ்விடயம் தொடர்பாக ரவூப் ஹக்கீம் என்மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை.
கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 03, அன்று பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக, என்னை கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாக இப்போது திடீரென்று ரவூப் ஹக்கீம் கூறுகிறார், இந் நீக்கமும் கூட ஜனாதிபதி என்னை நாட்டின் அவசர தேசிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அவருக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டு, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியை பெற்றுக் கொண்டதன் பின்னரே இந் நீக்கம் ஊடகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் அங்கம் வகிக்குமாறு ஜனாதிபதி அழைத்ததன் பின்னரே, தேசிய நலன் கருதி அதனை நான் ஏற்றுக்கொண்டேன்.