“வர்த்தகர்களிடம் கையேந்தி விழாக்களை நடத்தும் அரச உத்தியோகத்தர்கள் எவ்வாறு வர்த்தக நிலையங்கள் உணவகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார்கள்..? என கேள்வி எழுப்பியுள்ளதுடன் யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் மாவட்ட அதிகாரி மற்றும் உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை சரிவர ஆற்றுகிறார்களா என்பது தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவ பாலசுந்தரன் கவனம் செலுத்த வேண்டும் அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பிராசா கோரிக்கை முன்வைத்தார்.
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கோரிக்கை முன்வைத்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாண மாவட்டத்தில் இயங்கும் பல உணவகங்களில் விலை பட்டியல் இன்னும் காட்சிப்படுத்தாத நிலை காணப்படுகிறது.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இயங்கும் பாவனையாளர் அலுவலகம் அதிகார சபையின் மாவட்ட அதிகாரி மற்றும் உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை சரிவர செய்கிறார்களா என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது.
நான் கடந்த வாரம் மாவட்ட செயலகத்தில் இயங்கும் பாவனையாளர் அதிகார சபைக்குச் சென்றிருந்தேன் மாவட்ட அதிகாரி எங்கே என கேட்டேன் களச் செயற்பாட்டுக்குச் சென்று இருப்பதாக அங்கு கடமையில் இருந்த பெண் உத்தியோகத்தர் ஒருவர் கூறினார்.
களச் செயபாடு எனக் கூறிக்கொண்டு அதிகாரியும் உத்தியோகத்தர்கள் உண்மையில் கடமைக்கு தான் செல்கிறார்களா என அரசாங்க அதிபர் ஆராய வேண்டும்.
ஏனெனில், யாழ்ப்பாண நகரப் பகுதி மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் உள்ள அனேகமான வியாபார நிலையங்கள் மற்றும் உணவகங்களில் விலை பட்டியல் காட்சிப்படுத்தப்படுவதில்லை.
ஆனால், அலுவலகத்தில் கேட்டால் களச் செயற் பாட்டுக்குச் சென்றிருக்கிறோம் என கூறும் நிலையில் ஒரு வாரத்தில் ஐந்து நாட்கள் காலை 8 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை எத்தனை கடைக்குச் செல்கிறார்கள் என்பது கேள்வியாக உள்ளது.
யாழ்ப்பாண நகர பகுதிகளில் பைகளில் அடைக்கப்பட்ட கறி மிளகாய் தூள் 600 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் ஒரு கிலோ மிளகாய்த்தூளை அரைப்பதற்கு 1,500 ரூபாய் செலவாகிறது.
குறித்த விடயம் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அதிகார சபைக்கு தெரியப்படுத்திய போது மிளகாய் தூள் தரம் தொடர்பில் பொதுச்சுகாதார பரிசோதகர்களே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டது.
மக்களின் வரிப்பணத்தை சம்பளமாகப் பெறும் அரச உத்தியோகத்தர்களான பாவனையாளர் அதிகார உத்தியோர்கள் குறித்த மிளகாய் பை தொடர்பில் இதுவரை அறிந்திருக்கவில்லையா.
அரச உத்தியோகத்தர்களை குறை கூறுவது எனது நோக்கம் அல்ல இதே ஊடக சந்திப்பு போன்ற கடந்த மாதமும் செய்த போது குறித்த மிளகாய் பாக்கெட் தொடர்பில் கருத்துக்களை முன் வைத்தேன் ஆனால் எவரும் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை .
விலைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு மட்டும் பாவணையாளர்கள் அதிகார சபைக்கு மட்டும் சட்டம் இருக்குது என்றால் தரமற்ற பொருள் தொடர்பில் அவதானித்தால் அதை சம்பந்தப்பட்ட பொது சுகாதார பரிசோதர்களுக்கு ஏன் அறிவிக்க முடியாது.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் பிரதேச செயலக மற்றும் மாவட்ட செயலக கலாச்சார விழாக்கள் மற்றும் பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு வர்த்தகர்களிடம் பணம் பொற்று விழாக்களை நடத்துங்கள் எனக் கூறப்பட்டதாக அறிந்தேன்.
வர்த்தகர்களிடம் கையேந்தி விழாக்களை நடத்தும் அரச உத்தியோகத்தர்கள் எவ்வாறு வர்த்தக நிலையங்கள் உணவகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார்கள்.
ஆகவே, மக்கள் வரி பணத்தை பெற்றுக்கொண்டு குளிரூட்டப்பட்ட அறைகளில் இருப்பார் மக்களின் மக்களின் அன்றாட பிரச்சினை தொடர்பில் கவனம் எடுத்து செயல்பட வேண்டும் என கூறிக் கொள்வதோடு அரசாங்க அதிபரும் தனது பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.