யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை

யாழில் தொடரும் போதைப்பொருள் பாவனை – அதிகரிக்கும் இளைஞர் மரணங்கள் !

யாழில் தொடரும் போதைப்பொருள் பாவனை – அதிகரிக்கும் இளைஞர் மரணங்கள் !

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 29 வயதுடைய இளைஞன் ஒருவர் அதீத போதை காரணமாக சுகவீனமுற்று யாழ்.போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். இளைஞனின் உடற்கூற்று பரிசோதனையில் அதீத போதை பாவனை காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் சிறு குற்ற செயல்களில் ஈடுபட்ட நிலையில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு ஓரிரு நாட்களுக்கு முன்னரே விடுவிக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் நண்பர்களுடன் இணைந்து போதையை நுகர்ந்த நிலையிலையே, அதீத போதை காரணமாக சுகவீனமேற்பட்டுள்ளது என பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் ஆண்கள் பெண்கள் இருவரிடமும் போதைப்பொருள் பாவனை மலிந்து போயுள்ளதை வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தார். மேலும் அண்மையில் ஜனாதிபதி அனுர குமார தலைமையில் இடம்பெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பா.உ இளங்குமரன் போதைப்பொருளை கட்டுப்படுத்துவதில் யாழ்ப்பாண பொலிஸார் அசமந்தமாக காணப்படுவதாக குற்றஞ்சாட்டியிருந்ததும் கவனிக்கத்தக்கது.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் 2022ஆம் ஆண்டின் பின்னர் ஊசி போதைப்பொருள் பாவனை அதிகரித்திருப்பதுடன் சுமார் இருபதுக்கும் அதிகமான மரணங்கள் நிகழ்ந்திருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

தூர இடங்களில் இருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளின் உறவினர்களுக்காக விசேட இலவச தங்குமிட வசதிகள்!

யாழ்.போதனா வைத்தியசாலையில், நோயாளர்களுடன் வரும் உறவினர்கள் மற்றும் உதவியாளர்கள் நலம் கருதி சிவசி இல்லம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சிவசி இல்லம் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகம் தெரிவிக்கையில்,.தூர இடங்களில் இருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களுடன் வரும் உறவினர்கள் மற்றும் உதவியாளர்கள் பல சிரமங்களை எதிர்கொள்ளுகின்றார்கள்.

இவ்வாறானவர்கள் நோயாளிகளை யாழ் போதனா வைத்தியசாலை விடுதிகளில் வைத்திருக்கும் நாட்களில் ஓய்வெடுப்பதற்கும், குளித்து உடை மாற்றிக் கொள்வதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

சிவசி இல்லம். நோயாளிகளின் உறவினர்களுக்கான சேவை மையம் என்ற பெயரில் குறித்த இல்லம் இல.76, வைத்தியசாலை வீதியில் (சத்திரச் சந்திக்கு அப்பால்) கடந்த திங்கட்கிழமை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது.

மேற்படி சேவைக்காக படுக்கை அறைகள், குளிப்பறைகள் உள்ளடங்கலாக வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த இலவச சேவையை யாழ் போதனா வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. ”The Saivite Tamil Foundation, USA அமைப்பு” இதற்கான நிதி அனுசரணையை வழங்கி செயல்படுத்துகின்றது.

சேவை தேவைபபநலன்புரிச் சங்க நோயாளர் பராமரிப்பு காரியாலயத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருக்கும் விடுதிகளுக்கு பொறுப்பானவர்களிடம் சிபாரிசுப் படிவத்தை கையளிக்க வேண்டும். தகுதியானவர்கள் இந்த இலவச சேவையை பெற்றுக்கொள்ளலாம்” இவ்வாறு வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் சிறுமியின் கை துண்டிக்கப்பட்ட விவாகரம் – நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!

யாழ்ப்பாணத்தில் கை துண்டிக்கப்பட்ட சிறுமியின் கையை கொழும்புக்கு அனுப்பி மேலதிக பரிசோதனைகளை மேற்கொள்ள யாழ்.நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

 

காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு கையில் பொருத்தப்பட்ட “கானுலா” உரிய முறையில் பொருத்தப்படாததால், சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டுள்ளது.

 

குறித்த சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம் , மத்திய சுகாதார அமைச்சு என்பன விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், சிறுமியின் பெற்றோரால் யாழ்ப்பாண காவல் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய , காவல்துறையினர் யாழ்.நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து, வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று(13) குறித்த வழக்கு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நீதிமன்றினால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு விசாரணைகள் முடிவடையவில்லை எனவும், அதற்கு தமக்கு மேலதிகமாக 10 நாட்கள் தேவை எனவும் நீதிமன்றில் தெரிவித்தனர்.

 

அதனை அடுத்து, துண்டிக்கப்பட்ட கையின் பாகத்தை காவல்துறையினர் ஊடாக கொழும்புக்கு அனுப்பி மேலதிக பரிசோதனைகளை மேற்கொண்டு, அது தொடர்பிலான அறிக்கையை பெறவும் மன்று உத்தரவிட்டுள்ளது.

மேலும், வழக்கினை எதிர்வரும் 23ஆம் திகதிக்கு திகதிக்கு ஒத்திவைத்தது.

இரத்த தானம் செய்வதற்கு பொதுமக்கள் முன்வர வேண்டும் – யாழ் போதனா வைத்தியசாலை வேண்டுகோள் !

யாழ் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் குருதி வழங்கல் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்ற நிலையில், அந்த அதிகரிப்பிற்கு ஏற்ப குருதிக்கொடையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

இதனால் இரத்த வங்கியில் அடிக்கடி இரத்தத்திற்கு தட்டுப்பாடு ஏற்படுகின்றது.

இவ்வாறான நிலையில், நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்க முடியவில்லை என இரத்த வங்கி அறிவித்துள்ளது.

கடந்த மாதம் 28ஆம் திகதி 49 சேகரிப்பும், 49 வழங்கலும் இடம்பெற்றுள்ளது.

இம்மாதம் 1ஆம் திகதி 17 சேகரிப்பும் 48 வழங்கலும் இடம்பெற்றுள்ளது.

2ஆம் திகதி 33 சேகரிப்பும் 39 வழங்கலும் இடம்பெற்றுள்ளது.

குறித்த புள்ளி விபரத்தின்படி, சேகரிப்பை விட வழங்கல் கூடுதலாக காணப்படுகின்றது. இதனால் நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், இரத்த தானம் செய்வதற்கு பொதுமக்கள் முன்வர வேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம்.

இரத்த தானம் செய்பவர்கள் மற்றும் இரத்த தான முகாம்களை ஒழுங்கமைப்பவர்கள் தமது 0772105375 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுள்ளனர்.