மாவீரர் நாள்

மாவீரர் நாள்

அரசியல் பழிவாங்கல்களுக்காக மாவீரர்களின் பெயரால் புறக்கணிக்கப்பட்ட தாய் !

அரசியல் பழிவாங்கல்களுக்காக மாவீரர்களின் பெயரால் புறக்கணிக்க்பட்ட தாய்: “என்னை விளக்கேற்ற வருமாறு அழைத்துவிட்டு திருப்பி அனுப்பிவிட்டார் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன்” எனக் குற்றம்சாட்டுகின்றார் மூன்று மாவீரர்களின் தாய் நடராசா சீலாவதி. பூநகரியைச் சேர்ந்த இவர் கப்டன் சிவரூபன், வீரவேங்கை சிவரூபன், வீரவேங்கை இளமயில் ஆகியோரின் தாயார். 26.11.2024 அன்று மாலை 6.55 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தொடர்பு கொண்டு: “நீங்கள் மூன்று மாவீரர்களின் தாயா?” என வினவி மூன்று பிள்ளைகளின் விபரங்களையும் கேட்டு அறிந்து கொண்டார். அதன் பின்னர் “நாளை (27) கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நீங்கள் பொதுச் சுடரேற்ற வேண்டும் வருகை தாருங்கள்” என்று கேட்கத் தாயாரும் மழைகாற்றையும் தூரத்தையும் பொருட்படுத்தாமல் சம்மதித்துள்ளார்.

மாவீரர் நாளன்று மாலை 6.05 மணிக்கு விளக்கேற்றும் நேரம் இவர் சரியாக 5 மணிக்கே கனகபுரம் துயிலுமில்லத்திற்குச் சென்றுள்ளார். ஆனால் அங்கு நின்றவர்கள் தங்களை ஏற்பாட்டுக் குழு எனத் தெரிவித்து “நாங்கள் வேறொருவரை ஏற்பாடு செய்துவிட்டோம்” எனத் தெரிவித்து அந்த மாவீரர்களின் தாயைத் திருப்பி அனுப்பிவிட்டனர். இவரை சிறிதரனின் நிகழ்வுக்கு ஏற்பாடுசெய்தவர். காக்கா என அறியப்பட்ட முன்னாள் தளபதி. அவர் குமரன் பாலனோடு பேசி சீலாவதியை விளக்கேற்ற ஏற்பாடு செய்தார். குமரன் பாலன் தமிழரசுக் கட்சியில் நின்ற இன்னுமொரு போளாளி. தற்போது சமத்துவக் கட்சியுடன் நிற்கின்றார். இத்தாயார் குமரன் பாலன் மூலமாக வந்த தொடர்பு என்பது தெரியவந்ததுமே சிறிதரன் மாவீரர் விளக்கையேற்ற மூன்று மாவீரர்களின் தாயை கிள்ளுக் கீரையாக தூக்கி எறிந்துவிட்டு மூன்று மாவீரர்களை இழந்த தந்தையொருவரை கொண்டுவந்து விளக்கேற்றினார். ஏவ்வாறு சிறிதரன் போன்ற அரசியல் வாதிகளால் மாவீரர்களின் குடும்பங்கள் தேவைக் கேற்ப பயன்படுத்துப்படுகின்றது என்பதற்கு இதுவொரு சிறந்த உதாரணம்.

சீலாவதி ஒரு சிங்களப் பெண். நடராசாவைத் திருமணம் செய்து 5 பிள்ளைகளைப் பெற்று ஐவருமே போராட்டத்தில் இணைந்தனர். “எனது குடும்பத்தில் 5 பிள்ளைகள் இயக்கத்தில் இணைந்தார்கள் இதில் மூன்று பேர் வீரச்சாவு. ஏனைய இருவரில் ஒரு மகளை இயக்கமே, இயக்கத்திலிருந்து விடுவித்து வீட்டுக்கு அனுப்பியிருந்தனர். அவர் 2009 ஆம ஆண்டு கிபிர் தாக்குதலில் இறந்துவிட்டார். மற்றயவர் திருமணம் செய்து வாழ்ந்து வரகின்றார். நானும் எனது கணவரும் பேரப்பிள்ளை ஒன்றை வளர்த்து வருகின்றோம். கணவர் கள்ளு கடைக்கு முன்னாள் வடை விற்று வருகின்ற பணத்தில்தான் மிகுந்த வறுமைக்குட்பட்டு வாழ்ந்து வருகின்றோம்” எனக் கூறுகின்றார் சீலாவதி.

 

அன்று காலை சமத்துவக் கட்சியின் அலுவலகத்தில் நடந்த மாவீரர் நிகழ்வில் சிங்களப் பெண்ணாக தமிழனைத் திருமணம் செய்து தனது ஐந்து பிள்ளைகளையும் தமிழீழத்திற்காக போராட அனுப்பியவர், விளக்கேற்றினார்.

இரக்கமற்ற வகையில் பயங்கரவாதத்தை கட்டமைத்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை போற்றுவது முன்னோக்கி பயணிக்க வழிசெய்யாது – முன்னாள் அமைச்சர் அலி சப்ரி அறிவுரை!

இரக்கமற்ற வகையில் பயங்கரவாதத்தை கட்டமைத்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையோ அல்லது அதன் தலைவரையோ போற்றுவது, நாம் முன்நோக்கிப் பயணிப்பதற்கு ஏதுவான வழிமுறையாக அமையாது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

 

இனவாதத்தைப் பரப்புவதற்கு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தெற்கின் கடும்போக்கு சக்திகளுக்கு அந்த வாய்ப்பை வழங்குவதைத் தவிர்த்துக்கொள்ளவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

மாவீரர் தினத்தை முன்னிட்டு கடும் மழைக்கு மத்தியிலும் வட, கிழக்கு மக்கள் மாவீரர் துயிலும் இல்லங்களுக்குச்சென்று பெரும் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களை நினைவுகூர்ந்தனர்.

 

இந்நிலையில் நினைவுகூரல் தொடர்பில் அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

 

நாமனைவரும் ஒற்றுமையானதும், அமைதியானதுமான இலங்கையைக் கட்டியெழுப்புவதை முன்னிறுத்திப் பணியாற்றும்போது, பல வருடங்களாக நீடித்த மிகமோசமான யுத்தத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் சார்ந்த நினைவுகளுக்கு மதிப்பளிக்கவேண்டியது மிக முக்கியமானதாகும்.

 

அதற்கமைய கடந்தகால கருத்தியலின் விளைவாக சிலரது பாதை திசை மாறியிருந்தாலும், அவர்கள் உட்பட சகல அன்புக்குரியவர்களையும் நினைவுகூருவதற்கு குடும்பங்களுக்கு இடமளிக்கப்படவேண்டும்.

 

இதுவோர் மனித உரிமை என்பதுடன், கடந்தகால காயங்களை ஆற்றுவதற்குரிய மிக முக்கிய நகர்வாகும்.

 

இருப்பினும் இரக்கமற்ற வகையில் பயங்கரவாதத்தைக் கட்டமைத்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையோ அல்லது அதன் தலைவரையோ போற்றுவது நாம் முன்நோக்கிப் பயணிப்பதற்கு ஏதுவான வழிமுறையாக அமையாது.

 

மாறாக அத்தகைய நடவடிக்கைகள் கடந்தகால வலிகளையும், தேவையற்ற பதற்றங்களையும் தோற்றுவிப்பதுடன், நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளை நலிவடையச்செய்யக்கூடிய அச்சுறுத்தலைக் கொண்டிருக்கின்றன.

 

வன்முறையைக் கொண்டாடுவதன் மூலம் அதன் காயங்களிலிருந்து மீளமுடியாது.

 

மாறாக புரிந்துணர்வு, சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் ஊடாகவே அதனை அடைந்துகொள்ளமுடியும். என தெரிவித்துள்ளார்.

முன்னாள் போராளிகள் அடிப்படை தேவைகளுக்கே திண்டாடிக் கொண்டிருக்க – அவர்களின் பெயரால் வயிறு வளர்க்கும் அரசியல்வாதிகள்!

மாவீரர் தின வாரம் கடந்த 21ஆம் திகதி தமிழர் பகுதிகளில் ஆரம்பித்திருந்த நிலையில் இன்று கார்த்திகை 27 மாவீரர் தின இறுதி நாளாகும். உண்மையிலேயே மாவீரர் தினம் என்பது யுத்தம் முடிவடைந்த பின்னர் அதனுடைய வெற்றி தோல்வி என்பவற்றுக்கு அப்பால் வெறுமனே அரசியல் லாபமீட்டும் ஓர் தொழிலாக அல்லது செயலாக மாறிப்போன சோகம் தான் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து வீரச்சாவு அடைந்தவர்களின் நினைவாக தமிழர்கள் மத்தியில் தன்னியக்கமாக நடைபெற்று வரும் இந்த நிகழ்வு தமிழ்தேசிய அரசியல்வாதிகளால் தமது சொந்த நலன்களுக்காகவும் – சொகுசு வாழ்க்கைக்காகவும் பயன்படுத்தப்படுவது வேதனையாகும்.

மாவீரர்களின் பெயரை சொல்லி அரசியல் செய்யும் சிறீதரன் எம்பி தொடங்கி சாணக்கியன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எல்லோருமே ஆடம்பரமான செல்வந்த வாழ்க்கை வாழ்கிறார்கள். ஆனால் போர்க்காலத்தில் மாவீரர்கள் ஆனவர்களின் குடும்பங்களோ, போர்க்காலத்தில் அங்கவீனர்களானவர்களோ இன்று வாழும் வாழ்க்கை அத்தனை வறுமையானதாகிப்போயுள்ளது. இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த புலம்பெயர் தேசத்து நிதியை சேர்த்து அதனை வழங்க ஓர் நிதியத்தை கூட இன்று வரை தமிழ்தேசிய அரசியல்வாதிகள் உருவாக்கவில்லை. மாறாக ஒவ்வொரு ஆண்டும் லண்டன், பாரிஸ், கனடா என சென்று இந்த தமிழ்தேசியம் பேசிய அரசியல்வாதிகள் தங்களது கட்சிக்காக நிதி சேர்த்து  கொள்கின்றனர். மாறாக இந்த யுத்ததத்துக்காக தன் குடும்பத்தை இழந்தவர்களுக்காகவோ – போரினால் அங்கவீனர்ளாக்கப்பட்டோருக்காகவோ நிலையை பார்த்தால் படு மோசமாக உள்ளது. அண்மையில் ஊசி அர்ச்சுனா வெளிநாட்டு மக்களிடம் தமிழ்தேசியம் என்ற பெயரில் காசு புடுங்கி வயிறு வளர்ப்பது இதற்கான அண்மைய கால ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு. அரசியல்வாதிகளுக்கு போட்டியாக அண்மைய காலங்களில் யூடியுப்பர்களும் மாவீரர்களின் பெயரால் வயிறு வளர்க்க ஆரம்பித்துள்ளனர். முன்னாள் மாவீரர் குடும்பம் வறுமையால் வாடுகிறது என வீடியோ செய்து அதில் பெரும் தொகையை களவெடுத்து விட்டு சிறுதொகையை பாதிக்கப்பட்டோருக்கு கொடுக்கிறார்கள். வெளிநாட்டு பணம்படைத்த வித்துவான்களும் ஏதோ உயிர் மீட்க உதவி செய்து விட்டதாக பெருமைப்பட்டு கொள்கிறார்கள். உண்மையிலேயே வெளிநாட்டில் ஈழத்தின் பொருளாதார உதவிகளுக்காக பணம் அனுப்புவோர் இன்று வரை ஓர் பொதுவான நிதியத்தை உருவாக்கி பணத்தை ஆக்கப்பூர்வமான வகையில் பாதிக்கப்பட்ட மாவீரர்களின் குடும்பங்களுக்கு அல்லது மாவீரர்களுக்கும் வழங்குவதற்கு இதுவரையும் சிறிய அளவிலான நடவடிக்கையை கூட அவர்கள் எடுத்தது கிடையாது. புலம்பெயர் தேசங்களில் இருந்து வருகின்ற உதவிகள் கூட கடந்த 15 ஆண்டுகளாக கண்துடைப்புக்கான அல்லது தங்களுடைய பகட்டு ஆடம்பரத்தை காட்டுவதற்கான உதவிகளாகவே அமைந்திருக்கின்றன.

அண்மையில் லைக்கா குழுவினரால் உருவாக்கப்பட்ட ஒருவன் பத்திரிகை, ஐ பி சி பாஸ்கரனுடைய இணைய பக்கங்கள் எல்லாமே மாவீரர் வாரத்தில் தமிழர்களை மீள ஒரு ஆயுதப் போராட்டத்திற்கு தள்ளுவது போல வெடித்து சிதறுகின்றன. நடைமுறையில் லைக்கா குழுவினர் அரசியல்வாதிகளின் ஆடம்பர வாழ்க்கைக்காக செலவழிக்கின்ற காசுகளை கூட முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற செலவழித்தது கிடையாது. ஐ பி சி பாஸ்கரன் ரீச்சா  என்கின்ற பெயரில் விடுதி வருகிறாரே தவிர இந்த நிலத்தில் முன்னாள் போராளிகள் வாழ்வாதாரத்தை புனரமைக்க நிலையான அபிவிருத்தி திட்டங்கள் எதயுமே இதுவரை முன்னெடுக்கவில்லை.

சுசுருக்கமாக சொல்வதாயின் இந்த நிலத்துக்காக போராடியவர்கள் , இந்தப் போராட்டத்தினால் அங்கவீனர்கள் ஆக்கப்பட்டவர்கள் ஒரு நேர சோற்றுக்காகவும், பிள்ளைகளின் கல்விக்காகவும், அடிப்படை தேவைகளுக்காகவும் அன்றாடம் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களின் பெயரைச் சொல்லி அரசியல் செய்பவர்களும், ஊடகங்களை நடத்திக் கொண்டிருப்பவர்களும் தமிழ் தேசியம் என்கின்ற தீயை மேலும் வளர்த்து அதில் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

என்றைக்கு முன்னாள் போராளிகளின் வறுமை நிலை இல்லாதாக்கப்படுகிறதோ..? என்றைக்கு போரால் அங்கவீனர்களாக்கப்பட்டவர்களினுடைய அடிப்படை தேவைகள் முறையாக பூர்த்தி செய்யப்படுகிறதோ..? அப்போது தான் இந்த மாவீரர் தின நிகழ்வுகள் அர்த்தமுள்ளவையாக மாற்றமடையும்.

மாவீரர் தின நிகழ்வுகளுக்காக பாராளுமன்ற குழு கூட்டத்தின் திகதியை மாற்றிய அனுர அரசு – நன்றி கூறிய சிறீதரன் எம்.பி !

மாவீரர் நினைவேந்தல்களுக்கு தேசிய மக்கள் சக்தி அரசு இதுவரை எந்த தடங்கல்களும் ஏற்படுத்தாதமை வரவேற்கத்தக்கதென, யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் புதிய அமர்வு குறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது; பொதுவாக ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் மாவீரர் நினைவேந்தல்களுக்கு இடையூறு ஏற்படுத்தியே வந்துள்ளன.ஆனால், தேசிய மக்கள் சக்தி அரசு இடையூறு ஏற்படுத்தாதது மாத்திமன்றி 26ஆம் 27ஆம் திகதிகளில் நடத்தப்படவிருந்த பாராளுமன்ற அலுவல்கள் குழுக் கூட்டத்துக்கான திகதியையும் 25ஆம் திகதி மாற்றியமைத்திருக்கிறது.

26ஆம் 27ஆம் திகதிகளில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் இருப்பதை நான், சுட்டிக்காட்டியதை அடுத்தே அரசு, 25ஆம் திகதிக்கு அக்கூட்டத்தை மாற்றியமைத்தது.

தமிழர்களின் உணர்வுபூர்வமான நிகழ்வுகளில் அரசு கரிசனை கொள்வது திருப்தி தருகின்றது. அந்தக் கரிசனையுடனேயே இராணுவ முகாம்களாக மாறியுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை விட்டு இராணுவத்தினரை வெளியேற்றினால், அது அரசின் முன்னேற்றகரமான, முன்னுதாரணமான நடவடிக்கையாக அமையும். குறிப்பாக முள்ளியவளை, கோப்பாய், கொடிகாமம், ஏறாவில் போன்ற இடங்களில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை விட்டு, இராணுவத்தினரை வெளியேற்றினால், அது நிச்சயம் மக்கள் மனங்களில் அரசு குறித்த சாதகமான நிலைப்பாட்டையே ஏற்படுத்தும். மக்கள் தங்கள் மனக் கவலைகளை ஆற்றுவதற்கான இடமல்லவா அது?

எனவே, இந்தக் காலகட்டங்களில் துயிலும் இல்லங்களில் இருந்து படையினரை அரசு விலக்கிக் கொள்ள வேண்டுமென, வேண்டுகோள் விடுக்கின்றோம். மாவீரர் நினைவேந்தலில் அரசின் செயற்பாடுகள் திருப்தி தருவதாகவே உள்ளன. அதுமாத்திரமல்ல சபாநாயகரின் தெரிவின் பின்னர் அவரை வாழ்த்துவதற்கு கட்சித் தலைவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவது வழமை. நேற்றைய 10 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வில் சபாநாயகரை வாழ்த்துவதற்கு எனக்கு சந்தர்ப்பம் தரப்படவில்லை.

ஆனால், இதன் பின்னர் எனக்கு அனுமதி கொடுக்கப்படாமைக்கான காரணத்தைக் கூறி அமைச்சர் பிமல் ரணட்நாயக்க எனக்கு வருத்தம் தெரிவித்தார். அந்தவகையில் ஆளுங்கட்சியினரின் செயற்பாடுகள் முன்னனுதாரமாக உள்ளன.

பிறந்தநாளுக்கு கேக் வெட்டியதற்கும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளார்கள் – சாணக்கியன் விசனம் !

நல்லிணக்கம் பேசும் ஜனாதிபதி நல்லிணக்கத்திற்கு மாறாக இறந்தவர்களை நினைவுகூருவோரை கைதுசெய்யும் பொலிஸாரின் செயற்பாடுகளை அவர் கண்டு மௌனமாக இருப்பாரானால் அவரின் செயற்பாடுகளை அவர் ஏற்றுக்கொள்கின்றார் என்றே பார்க்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

 

இன்று (29) மட்டக்களப்பு வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகரை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் அண்மையில் தரவை துயிலும் இல்லத்தில் கைது செய்யப்பட்டவர்கள் குறித்து அவருடன் கலந்துரையாடியுள்ளார்.

 

மாவீரர் துயிலும் இல்லம் என்ற பதாகை வைக்கப்பட்டதன் காரணமாக மாவீரர் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு உறுப்பினர் உட்பட நான்கு பேரை கைது செய்து அவர்கள் மீது பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் பொலிஸார் வழக்கு தொடுத்துள்ளதாகவும் இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

 

குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டு இரண்டு தினங்களை கடந்துள்ள நிலையில் இதுவரையில் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தாமை குறித்து கேள்வியெழுப்பியபோதிலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்துள்ளதன் காரணமாக அவர்களை மூன்று தினங்கள் வைத்து விசாரணை செய்த பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த முடியும் என பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

 

பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்த மாட்டோம் என்று சர்வதேசத்திற்கு கூறிவிட்டு இங்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

இதேபோன்று வவுணதீவு பிரதேசத்தில் பிறந்த நாளுக்கு கேக்வெட்டியவர்களையும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்து வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் இந்த நாட்டில் இவ்வாறான செயற்பாடுகள் ஒருபோதும் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தாது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

 

இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்று அவர் இது தொடர்பான நடவடிக்கையெடுக்காவிட்டால் அவர் நல்லிணக்கம் பேசும் ஜனாதிபதி நல்லிணக்கத்திற்கு மாறாக இறந்தவர்களை நினைவுகூருவோரை கைது செய்யும் பொலிஸாரின் செயற்பாடுகளை அவர் கண்டு மௌனமாக இருப்பாரானால் அவரின் செயற்பாடுகளை அவர் ஏற்றுக் கொள்கின்றார் என்றே பார்க்க வேண்டும்.

 

இராணுவத்துடன் இணைந்து கடந்த காலத்தில் தமிழ் மக்களை கொலைசெய்தவர்கள் வெருகல் பகுதியில் சிவப்ப மஞ்சல் கொடிகளைகட்டி நிகழ்வுகளை செய்யும் போது அவர்களுக்கு எந்த தடையும் விதிக்கப்படுவதில்லை.

 

எதிர்வரும் காலங்களில் ஆலயங்களில் கூட சிவப்பு, மஞ்சள் கொடிகளைக்கட்டி நிகழ்வுகளை செய்யும் போது அதுவும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றமாக சொல்வார்களா என்பது தெரியாது என தெரிவித்தார்.

“இலங்கையில் பொலிஸாரினால் தவறாக வழிநடத்தப்படும் நீதிமன்றங்கள்.” – செல்வராசா கஜேந்திரன்

இலங்கையில் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு கருவியாக பொலிஸ் மற்றும் நீதித்துறை செயற்படுகிறதென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் பேசிய அவர்,

சர்வதேச நாடுகளில் பொலிஸ் மற்றும் நீதித்துறை என்பன ஜனநாயகத்தையும் சட்டம் ஒழுங்கையும் பாதுகாக்கும் கவசமாக இருக்கும் நிலையில், இலங்கையில் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு கருவியாக அவை செயற்படுகின்றன என அவர் குற்றம் சுமத்தினார்.

பொலிஸ் துறையினால் நீதிமன்றங்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.அவர்கள் தவறாக நீதிமன்றங்களை வழிநடத்துகிறார்கள் எனத் தெரிந்தும் அரசாங்கத்தின் இறுக்கம் காரணமாக நீதிமன்றங்கள் செயற்படுவதாக அவர் தெரிவித்தார்.அதற்கமைவாகவே, மாவீரர்கள் தின நிகழ்வுகளை நடத்த தடைவிதிக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

“விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் என்பது முழு உலகக்கும் தெரியும்.” – அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

போரில் உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூர அரசு ஒருபோதும் தடைவிதிக்கவில்லை. ஆனால், போரில் உயிரிழந்த பயங்கரவாதிகளை நினைவேந்த அரசு ஒருபோதும் அனுமதிக்காது. நாட்டில் இன நல்லிணக்கம் ஏற்படவேண்டும் எனில் பயங்கரவாதிகளை நினைவுகூருவது முறையற்ற செயலாகும்.” என்று வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

நல்லாட்சி அரசின் காலத்தில் மாவீரர் வாரம் கடைப்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது ஏன் அனுமதி வழங்கப்படுவதில்லை என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நவம்பர் 27ஆம் திகதி பயங்கரவாதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூரும் நாள் என்று உலகுக்கே தெரிந்த விடயம். இந்தநிலையில் அவர்களை பொதுமக்கள் என்ற ரீதியில் நினைவேந்துவதற்கு தமிழ் அரசியல்வாதிகள் முற்படுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

சட்டத்தின் பிரகாரம் காவற்துறையினர் செயற்படுகின்றனர். அதற்கமைய பயங்கரவாதிகளை நினைவேந்துவதை தடை செய்வதற்காக காவற்துறையினர் நீதிமன்றத்தின் ஊடாக தடையுத்தரவுகளைப் பெற்றுள்ளனர். இது எவரையும் பழிவாங்கும் நோக்கமல்ல. காவற்துறையினர் தமது கடமைகளை உரியவாறு செய்கின்றனர். எனவே, எந்தச் சந்தர்பத்திலும் பயங்கரவாதிகளான விடுதலைப்புலிகளை நினைவுகூர எமது அரசு அனுமதி வழங்காது.

நல்லாட்சி அரசு பயங்கரவாதிகளை நினைவேந்த அனுமதி வழங்கிய காரணத்துக்காக எமது அரசு நாட்டின் சட்டத்தை மீறி செயற்படாது. நல்லாட்சி அரசின் ஏற்றுக்கொள்ள முடியாத சில செயல்களால்தான் நாடு இன்று மோசமான நிலைக்கு வந்துள்ளது. நாட்டை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளில் எமது அரசு ஈடுபட்டு வருகின்றது.

நாட்டில் இன நல்லிணக்கம் ஏற்படவேண்டும் எனில் பயங்கரவாதிகளை நினைவுகூருவது முறையற்ற செயலாகும். இது இனங்களுக்கு இடையே பகைமையையே ஏற்படுத்தும்” – என்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் சமாதான ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த காலத்தில் புலிகள் அமைப்புடனான பேச்சுக்கு அரச குழுவுக்கு தலைமை தாங்கியவர் ஜி.எல்.பீரிஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாவீரர் நிகழ்வுகளுக்கு நீதிமன்றில் தடை உத்தரவு கோரவுள்ள முல்லைத்தீவு காவல்துறையினர் !

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு நீதிமன்றில் தடை உத்தரவு கோர உள்ள முல்லைத்தீவு காவல்துறையினர் எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் வருடம் தோறும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைய 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை மாவீரர் வாரமாகவும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கடந்த வருடம் முதல் நீதிமன்றங்களில் தடை உத்தரவைப் பெற்று இந்த அரசாங்கம் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை தடை செய்து வருகின்றது. இதனிடையே இம்முறையும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக தெரிவித்து அதற்கான தடையுத்தரவை பெறுவதற்காக முல்லைத்தீவு காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அரசியல் பிரமுகர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் உள்ளடக்கி குறித்த தடை உத்தரவுகள் நாளையதினம் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் பெற உள்ளதாக காவல்துறை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு காவல்துறையினரினால் 12 பேர் மற்றும் அவர்களோடு இணைந்த குழுவினருக்கும் ஏனைய பகுதிகளிலும் இவ்வாறு பலதரப்பட்டவர்களுக்கு நீதிமன்ற தடை உத்தரவுகள் பெறப்பட உள்ளதாக அறிய முடிகின்றது.