மரியதாஸ் பொஸ்கோ

மரியதாஸ் பொஸ்கோ

தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்படும் தமிழ் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ! 

தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்படும் தமிழ் மனித உரிமை செயற்பாட்டாளர்கள்

 

இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பணிபுரியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தொடர் வன்முறைகள் மற்றும் கண்காணிப்புக்கு உள்ளாவதுடன் தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்படுவதாக மனித உரிமைகள் பாதுகாவலர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் விசேட அறிக்கையாளர் மேரி லோலரின் சுட்டிக்காட்டியுள்ளார். அதேநேரம் சுவிஸ் அரசாங்கம் மனத் உரிமைச் செயற்பாட்டாளர் மரியதாஸ் பொஸ்கோவை ஆள்கடத்தல் முகவர் என முத்திரை குத்துகிறது.

மேலும், பல பெண் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் அரசுக்கு எதிரானவர்கள் என முத்திரை குத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், அவர்கள் அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுக்கும்போது தாக்குதலுக்கு உள்ளாவதாகவும், சமூகத்திலிருந்து ஒதுக்கப்படுவதாகவும் விசனம் வெளியிட்டுள்ளார்.

உலகளாவிய ரீதியில் மனித உரிமைகள் பாதுகாவலர்களுக்கு எதிராகப் பிரயோகிக்கப்பட்டுவரும் ஒடுக்குமுறைகள் மற்றும் மீறல்கள் பற்றிய விபரங்களை உள்ளடக்கிய மனித உரிமைகள் பாதுகாவலர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் விசேட அறிக்கையாளர் மேரி லோலரின் அறிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. திறந்த வெளிச் சிறச்சாலையான ஹாசாவில் நாற்பதினாயிரத்துக்கு மேற்பட்ட சிறுவர்கள், குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் உட்பட்ட பாலஸ்தீனமக்கள் இனப்படுகொலை செய்யப்படுகின்ற போது அதனை தடுக்க முடியாத காலாவதியாகிப் போன அமைப்பு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமைப்பு. ஈழத்தமிழர்கள் இனியும் இந்த அமைப்பை நம்புவதில் கால விரயமே. உபாயங்களை மாற்றிக் கொண்டு உருப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அம்பலமாகிய ஜெனிவாவின் மனித உரிமை அரசியல்: மனித உரிமைச் செயற்பாட்டாளர் மரியதாஸ் பொஸ்கோ கைது !

அம்பலமாகிய ஜெனிவாவின் மனித உரிமை அரசியல்: மனித உரிமைச் செயற்பாட்டாளர் மரியதாஸ் பொஸ்கோ ஜெனிவாவில் சட்டத்துக்குப் புறம்பாக கைது செய்யப்பட்டார் !

 

ஜெனிவாவில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு ஒப்பான சட்டத்தின் மூலம் பொஸ்கோ மரியதாஸ் சட்டத்துக்குப் புறம்பாகக் கைது செய்யப்பட்டுள்ளதாக இவருடன் பயணித்த சக மனித உரிமைச்செயற்பாட்டாளரும் உறவினருமானவர் தேசம்நெற்க்கு நேற்றுத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்பது தெரிவிக்கப்படவில்லை, மூன்று வாரங்களாகியும் அவரது கைது பற்றிய முழுமையான விடயங்கள் அறிவிக்கப்படவில்லை. அவருடைய ஒன்றுவிட்ட சகேகாதரர் ஒருவர் மரியதாஸ் பொஸ்கோவை தடுப்புக் காவலில் வைத்து சந்தித்து வந்துள்ளார். அவரது தகவல்படி 47 வயதான பொஸ்கோ மங்கலான ஒளியுள்ள அறையில் தடுத்து வைக்கப்பட்டு முறைமைப் படுத்தப்பட்ட உளவியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மரியதாஸ் பொஸ்கோவை சிவில் உடையில் வந்தவர்களே கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டு 48 மணிநேரங்களுக்குப் பின்னரே அவரது உறவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் யார் பொஸ்கோவை கைது செய்துள்ளனர் என்ற ஆவணரிதியான விபரம் இன்னமும் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. சுவிஸ் புலனாய்வுப் பிரிவினர் அவரைக் கைது செய்திருக்கலாம் இல்லையே இன்ரபோல் அவரைக் கைது செய்திருக்கலாம் என முரண்பட்ட தகவல்கள் வெளியாகின்றது.

அவரது கைதுக்கு என்ன காரணம் என்பதும் தெளிவாக இன்னமும் தெரியவரவில்லை. பொஸ்கோ ஒடுக்கப்படும் சிறுபான்மை இனங்களுக்கெல்லாம் ஐநாவில் குரல் எழுப்ப வாய்ப்பை ஏற்படுத்தி வருவதால் அவரது செயற்பாடுகளை முடக்குவதற்காக இக்கைது இடம்பெற்றதாகவும் இலங்கை அரசும் தன்மீதான மனித உரிமை மீறல்குற்றச்சாட்டுக்களை மழுங்கடிக்க முற்பட்டிருக்கலாம் என்றும் பொஸ்கோவின் நட்புவட்டாரங்கள் தேசம்நெற்க்குத் தெரிவிக்கின்றன. இவருடைய அழைப்பில் மனிதி உரிமை விடயங்களைப் பேச ஜெனிவா அழைக்கப்பட்டவர்களில் ஓரிருவர் மீண்டும் நாட்டுக்குத் திரும்பிச் செல்லவில்லை என்றும், நிதி தொடர்பான சர்ச்சைகள் எழுப்பப்பட்டதாகவும் சில குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றது.

ஆனால் ஐரோப்பிய தமிழ் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களாக அறியப்பட்ட கிருபாகரன், கஜன் மற்றும் பிரித்தானிய தமிழ் போறத்தை சேர்ந்தவர்கள் மரியதாஸ் பொஸ்கோவுக்கு எதிராகச் செயற்பட்டு பொய்க் குற்றச்சாட்டுக்களை வைத்து அவர் கைது செய்யப்பட்டதாகவும் அரசியல் சமூகச் செயற்பாட்டாளர் முல்லைமதி மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர் நிசா பீரிஸ் ஆகியோர் குற்றம்சாட்டுகின்றனர்.

தனது 9வது வயதில் யாழ் நாவாந்துறையில் இருந்து பிரான்ஸ்க்குப் புலம்பெயர்ந்து பிரான்ஸில் வாழும் மரியதாஸ் பொஸ்கோ ஜெனிவாவின் மனித உரிமை அரசியலை நன்கு அறிந்து வைத்திருந்தவர். கடந்த 27 ஆண்டுகளாக ஜெனிவாவில் மனித உரிமைச் செயற்பாடுகளை தனது பதின்ப வயது முதல் மேற்கொண்டுவரும் இவர், அதன் நெளிவு சுளிவுகளை எல்லாம் அறிந்து அதற்கேற்ற வகையில் காய்களை நகர்த்தி ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு ஜெனிவாவில் குரல் எழுப்புவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு வந்துள்ளார். அதனால் தமிழ் மக்கள் தவிர்ந்த ஒடுக்கபட்ட சமூகங்களின் மத்தியிலும் இவர் நன்கு அறியப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகங்களின் நண்பராகச் செயற்பட்டு வந்துள்ளார்.

மனித உரிமைச் செயற்பாட்டாளர் பொஸ்கோ மரியதாசின் சட்டத்துக்கு முரணான கைதினை வன்மையாகக் கண்டிப்பதோடுஇ அவரை உடனே விடுதலை செய்யவும் வலியுறுத்துகிறோம் என உலகத் தமிழர் இயக்கம் அறிவித்துள்ளது.

மனித உரிமைச் செயற்பாட்டாளரும் உலகத் தமிழர் இயக்கத்தின் பன்னாட்டு இணைப்பாளருமான பொஸ்கோ மரியதாஸ் அவர்கள் கடந்த 16.01.2025 அன்று சுவிற்சர்லாந்து நாட்டில் சட்டத்துக்கு முரணான வகையில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 15 மற்றும் 16 திகதிகளில் யெனீவாவில் இடம்பெற்ற சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான மாநாட்டில் கலந்துகொண்டிருந்த போது மாநாட்டின் இரண்டாம் நாளான யனவரி 16 அன்று மதியம் 13:30 இற்கு மாநாட்டு மண்டபத்தில் வைத்து விசாரணைக்கு என அழைத்துச் செல்லப்பட்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர் சட்டத்துக்கு முரணான வகையில் கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

பொஸ்கோ மரியதாஸ் அவர்கள் கைதுசெய்யப்படுவதற்கு முதல்நாள் அவர் கலந்துகொண்டிருந்த குறித்த மாநாட்டில் சுவிற்சர்லாந்து நாட்டின் தமிழர் விரோதச் செயற்பாட்டினை வன்மையாக கண்டித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்துகொள்ளவதற்காக உள்நுழைவு ( விசா ) அனுமதிக்கு விண்ணப்பிக்கும் தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்புகள் உள்ளிட்ட பெரும்பாலான தமிழர்களுக்கு உள்நுழைவு அனுமதியினை கூடுதலாக மறுத்துவரும் சிறீலங்காவில் அமைந்துள்ள சுவிஸ் தூதுவராலயம் சிங்களவர்களுக்கு குறிப்பாக முன்னாள் சிறீலங்கா இராணுவத்தினருக்கு உள்நுழைவு அனுமதியினை தொடர்ந்து வழங்கிவருகிறது. இது குறித்து பல்வேறு ஐ.நா அங்கீகாரம்பெற்ற அமைப்புகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர்களில் கேள்விகளை எழுப்பிய போதும் சுவிஸ் அரசானது உப்புச்சப்பற்ற பதில்களையே வழங்கியது.

மேலும் கடந்த மாதம் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் இடம்பெற்ற சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான மாநாட்டிற்கு சிறீலங்காவில் இயங்கும் சுவிஸ் தூதுவராலயத்தின் ஒருங்கிணைப்பிலேயே மூன்று தமிழர்களும் மூன்று சிங்களர்களும் பங்கெடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. அதில் லீலாவதி நடராஜா தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் உள்ள பிரச்சினையை பொதுப் பிரச்சினையாக்கி விட்டார் என தமிழ் தரப்பில் கடுமையான குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டது.

மனித உரிமை என்பது அரசியலாக்கப்பட்டதன் விளைவு காஸாவில் அம்பலமாகியது. தற்போது பொஸ்கோ சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டதும் அவருடைய கைது தொடர்பில் தமிழ் மனித உரிமைச்செயற்பாட்டாளர்கள் மௌனமாக இருப்பதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றது. இலங்கையில் இருந்து ஜெனிவா மனித உரிமைக் கூட்டங்களில் கலந்துகொள்ள வந்த பொன்னம்பலம் கஜேந்திரகுமார், எம் ஏ சுமந்திரன், சிவஞானம் சிறிதரன், அனந்தி சசிதரன் ஆகியோருக்கு அதற்கான அனுமதிகளைப் பெற்றுக்கொடுத்தர் மரியதாஸ் பொஸ்கோவே. ஆனால் அவர் தற்போது அனாதரவாக சிறை வைக்கப்பட்டுள்ளார். அவருக்காக குரல்கொடுக்க யாரும் முன்வருவதாக இல்லை.