மது

மது

குட்டியின் கடைசி நிமிடங்கள் – நட்பு என்பது எதுவரை…

என்னுடைய அண்ணன் 1989 இல் தமிழீழ விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த மோதலில் கொல்லப்பட்ட போது அவனுக்கு வயது வெறும் 23. மரணத்தின் வலியை உணத்திய மரணம். அவனது உடல் கூடக் கிடைக்கவில்லை. போராடப் போனவர்கள் முட்டாள்களா? போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் முட்டாள்களா? அல்லது எமது போராட்டமே முட்டாள்தனமானதா? இதற்கு விடை கிடைக்கவில்லையா அல்லது விடையை அறியத் தயாரில்லையா தெரியவில்லை. ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொடுத்துவிட்டும், அதிமுட்டாள்தனமான அரசியலை இன்றும் முன்னெடுக்கின்றோம்.

2003இல் என் தந்தையார் தனது அறுபதுக்களில் மாரடைப்பால் மரணித்த போது, நான் லண்டனில். மரணச் செய்தி எனக்கு கிடைத்த போது தகனக் கிரியைகள் கூட முடிந்துவிட்டது. என்னிரு உறவுகளினதும் மரணத்திற்கு அருகில் நான் நிற்கவில்லை. பார்க்கவில்லை.

2001 செப்ரம்பரில் இரட்டைக் கோபுரங்களில் இருந்து மனிதர்கள் இறந்து கொண்டிருந்ததை நேரடியாக லைப்பாக பார்த்துக்கொண்டிருந்தேன். உலகமே பார்த்துக்கொண்டிருந்தது. உயிரைக் காக்க மாடிகளில் இருந்து குதித்து மரணத்தை தழுவிக்கொண்டிருந்தனர். விமானம் மோதி அதன் எரிபொருள் எரிந்து மக்கள் கருகிச் செத்துக்கொண்டிருந்ததை பாரத்தோம். அவர்களுக்கும் எனக்கும் இடையே மனிதம் என்பதைத் தவிர எந்த உறவும் இருக்கவில்லை. இந்த மரணங்களுக்கும் எனக்கும் பல்லாயிரம் மைல் இடைவெளி.

இப்போது கடந்த 12 மாத காலத்திற்குள் என்னோடு எவ்வித இரத்த சம்பந்தமுமற்ற நெருக்கமான இரு நட்புகளை முற்றிலும் மாறுபட்ட சூழலில் இழந்துள்ளேன். இந்த இரு நட்புகளோடும் இரு தசாப்தங்களுக்கு மேலான ஒரு உறவு இருந்தது. வண்ணத்துப் பூச்சிவிளைவு – butterfly effect என்பார்கள் அது போல் தான் இதுவும். உலகின் ஒரு மூலையில் வண்ணத்துப் பூச்சி பறக்க அந்த வண்ணத்துப் பூச்சியின் அசைவு மலரை அசைக்க மலரின் அசைவு கிளையை அசைக்க கிளையின் அசைவால் … என்று போய் உலகின் இன்னொரு மூலையில் புவிநடுக்கம் ஏற்பட்டது போல்தான்.

1954 நவம்பர் 26இல் வண்ணத்துப்பூச்சி ஏதும் செய்திருந்தால் 1987இல் இந்திய அமைதிப்படை இலங்கை வந்திருக்காது. நான் யாழ் வட்டு இந்துக் கல்லூரியிலேயே படித்துக் கொண்டிருந்திருப்பேன். சிவஜோதியையோ மற்றும் யாழ் விக்ரோரியாக் கல்லூரி நண்பர்களையோ சந்தித்திருக்க வாய்ப்பில்லை. அவன் எனக்கு ஒரு முகவரியற்ற மனிதனாக இருந்திருப்பான். ஆனால் எங்கோ பறந்த வண்ணத்துப் பூச்சியின் விளைவால் நண்பர்களானோம். மரணப் படுக்கையில் இருந்தபடியும் லிற்றில் எய்டைப் பற்றி பேசினான். இன்று அவன் துணைவிக்கு நான் உடன் பிறவா சகோதரன். லிற்றில் எய்ட் னை அவன் விட்டுச் சென்ற இடத்தில் இருந்து சுமக்கின்றார்.

அதேபோல் 1991இல் ஸ்பெயினில் நாங்கள் தரையிறக்கப்படாவிட்டால் சுவிஸ்லாந்தில் அகதி அந்தஸ்து கோரியிருப்பேன். சஞ்சீவ்ராஜ் என்ற குட்டியை சந்தித்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் எங்கோ பறந்த வண்ணத்துப் பூச்சியின் விளைவால் ஸ்பெயினில் நாங்கள் மாட்டினோம். திருப்பி அனுப்பப்படும் போது லண்டனில் தரையிறங்கினோம். தமிழீழ மக்கள் கட்சியில் வேலை செய்ய ஆரம்பித்தேன். குட்டியைச் சந்தித்தேன். சமூகம், அரசியல் என்று ஓடித் திரிந்த குட்டியுடன் நட்பாகியது. ஏற்ற இறக்கங்கள் எல்லாம் உண்டு. இருந்தாலும் தேசம் சஞ்சிகை, லண்டன் குரல், தேசம்நெற் ஆகியவற்றின் உத்தியோகப்பற்றற்ற செய்தி சேகரிப்பாளன். இறுதியில் அவன் வாழ்க்கையே எங்களுக்கு ஒரு செய்தியாகிவிட்டது.

கடந்த டிசம்பர் 27இல் வீட்டில் தனியாக இருந்தவனோடு நானும் வந்து சேர்ந்தேன். ஊர்த்துலாவரம் எல்லாம் பேசுவோம். கடைசியில் சண்டையும் வரும். ‘உனக்கே வாழத் தெரியவில்லை. உனக்கு என்ன அரசியல் வேண்டிக் கிடக்கு’ என்று சத்தம் போட்டு முடிப்பேன். கொலைவெறியோடு முறைச்சுக்கொண்டு போவான். மறுநாள் பிள்ளைகளுக்கு இறைச்சிக் கறி வைத்து கவனமாக பாத்திரங்களில் போட்டுத் தருவான். எனக்கும் குறைந்தது இரு மரக்கறி வைத்திருப்பான். அவன் ஊரில் சமைப்பதைப் பற்றியெல்லாம் கதையளக்கின்ற போது அந்தச் சுற்றாடலை அப்படியே கண் முன் கொண்டுவந்து நிறுத்துவான். இரு கைகளால் வடைதட்டுவதும் எடுப்பதும் அவன் சொல்கின்ற அழகே தனி. பயிற்றங்காய் பிரட்டல் கறி வைப்தை சொல்லிக்கொண்டு வந்தால் பயிற்றங்காய் பிரட்டல் கறி சாப்பிட்ட திருப்தி வரும். அவ்வளவு சாப்பாட்டில் நுணக்கம். அவனுடைய மஞ்சவனப்பதி முருகன் கோயில் கதைகளும் அரசியல் கதைகளும் என்றால் எவ்வளவு நேரமும் கதைத்துக்கொண்டிருப்பான். சிலவேளை அறுவையாகவும் இருக்கும்.

அவனுடைய வீட்டுக்கு வந்த போது சிவஜோதி எதிர்ப்புசக்தியை தாக்குப்பிடிக்கவல்ல பக்ரீரியா தாக்கத்தினால் யாழ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டிசம்பர் 30இல் எம்மைவிட்டுப் பிரிந்தான். அவனுடைய மரணம் முற்றிலும் எதிர்பாராதது. அவனொரு பன்முக ஆளுமை. மதுவின் வாசத்தையே அறியாதவன். தனது வாழ்வு முழவதும் மதுவை விலத்தி வைத்தவன். குட்டிக்கு சிவஜோதியை யாரென்றே தெரியாது. நான் சொல்லிக் கேள்விப்பட்டதும், நான் சிவஜோதியுடைய மனைவி ஹம்சகௌரியோடு உரையாடுவதை கேட்டு அறிந்ததும் தான். ஆனால் சிவஜோதியுடைய நினைவு நிகழ்வு கிளிநொச்சியில் நடைபெற்ற போது அதற்கு வருபவர்கள் ஒவ்வொருவருக்கும் சிவஜோதியுடைய நினைவாக தென்னங்கன்றுகள் வழங்குவோம் என்று சொல்லி அதற்கான செலவையும் தானே தந்தான்.

எனது ‘வட்டுக்கோட்டையில் இருந்து முள்ளிவாய்க்கால்வரை’ நூல் வெளியீட்டு விழா பற்றி 2016இல் அவனோடு பேசினேன். ‘டேய் வித்தியாசமா செய்வோம். எங்களுடைய பிள்ளைகளையும் பேச வைப்போம். இரண்டாம் தலைமுறையையும் இறக்குவோம்’ என்றான். அவனொரு ஐடியா திலகம். ஆளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து வேலையைச் செய்ய வேண்டும். எனக்கு அந்த எண்ணம் வரவில்லை. அவன் சொன்னதும் நல்லதாகப்பட்டது. அவனுடைய மூத்தவளை வரவேற்புரைக்கும் என்னுடைய மூத்தவனை நூல் அறிமுகத்திற்கும் போட்டு புத்தகவெளியீடு இனிதே முடிந்தது.

2019இல் அவன் மாடியில் இருந்து வீழ்ந்து உயிருக்காக போராடிக்கொண்டிருந்த போது நானும் தோழர் சிவலிங்கமும் அவனைப் பார்க்கச் சென்றிருந்தோம். அவன் நினைவுகளில் குழப்பம் இருந்தது. அவனுக்கு கொழுவப்பட்டிருந்த ரியூப்கள் எல்லாவற்றையும் பார்த்து நான் மருத்துவமனையில் மயக்கமடைந்து விட்டேன். அதற்குப் பிறகு நானும் நண்பர் ஹரியும் சென்று பார்த்து வந்தோம். அப்படி இருந்தவனுக்கு அவள் மறுஜென்மம் கொடுத்து பார்த்தாள்.

கடைசிக் காலங்களில் பலரைப் பற்றியும் ஆராய்வோம். தோழர் சிவலிங்கம் பற்றி எப்போதும் உயர்வான மதிப்பீட்டோடு பேசுவான். தோழர் ரகுமான் ஜானின் நூல்வெளியீட்டை முன்நின்று நடத்தினான். பின் பாரிஸ் நூல்வெளியீட்டுக்கு நான், குட்டி ரகுமான் ஜான் மூவரும் சென்று சில தினங்கள் தங்கி வந்தோம். அந்தப் பயணத்தின் போது நான் மிகுந்த மனக்கஸ்டத்தில் இருந்தேன். அவர்களோடு பல விடயங்களையும் பகிர்ந்துகொண்டிருந்தேன். எந்தச் சந்தர்ப்பத்திலும் அவன் மற்றையவர்களின் பலவீனத்தை பயன்படுத்தியது கிடையாது. வீட்டுக்கு வெளியே என் போன்ற நண்பர்களுக்கு அவன் உன்னதமான நண்பன்.

ஆனால் அவனுடைய வாழ்க்கையை சின்னா பின்னமாக்கிக் கொண்டிருந்த அந்த கெட்ட பழக்கத்தில் இருந்து அவனால் மீள முடியவில்லை. அவனை மீட்கலாம் என்று எனக்கு இருந்த நம்பிக்கை நாளாக நாளாகத் தேய்ந்து கொண்டே வந்தது. அவனுடைய கடைசி 12 மாதங்களில் அவனுக்கு நெருக்கமான ஒரே உறவு நான்தான். அவன் கொக்குவில் கிராமத்திலும் நான் அனுராதபுரத்திலும் பிறந்து எங்கெங்கோ வளர்ந்து இறுதியில் லண்டன் நியூமோல்டனில் அவனுக்கு நான் என்றாகியது.

தூரத்தே இருந்தாலும் கட்டியவள் பாசத்தோடு சாப்பாடு எடுத்து வருவாள். நண்பர்கள் ரமேஸ் உம் பிரபாவும் ஞாயிற்றுக் கிழமைகளில் வந்து எங்களையும் நடக்க அழைத்துச் செல்வார்கள். ரமேஸின் குழு குழவென்ற வெண்நிறப் பஞ்சு போலானா அந்நாய் எங்களிலும் பார்க்க கம்பீரமாகவே நடக்கும். அதன் வழி நாங்கள் நடப்போம். சிவமோகன் அடிக்கடி நிலைமையை மதிப்பீடு செய்து கவனமெடுப்பார். ‘உன் நண்பர்களைப் பற்றிச் சொல். உன்னைப் பற்றிச் சொல்கிறேன்’ என்ற வாசகத்தை குட்டி முற்றிலும் பொய்யாக்கிக் கொண்டான். வண்ணத்துப் பூச்சி விளைவு விளையாட்டாக ஆரம்பித்த பழக்கம் வினையில் வந்து முடிந்தது. சில வேளை முதல் முதல் அருந்தும் போது இன்னுமொரு வண்ணாத்திப் பூச்சியால் க்கிளாஸ் தட்டி ஊத்தி தடங்கல் வந்திருந்தால் அவன் குடிக்காமலேயே இருந்திருக்கலாம். அல்லது அவனுக்கு குறிப்பு வேறு யாருடனாவது பொருந்தியிருந்தால் வந்தவள் பென்ட் எடுத்திருப்பாளோ என்னவோ… இந்த வண்ணத்துப்பூச்சி விளைவு எங்கெங்கெல்லாமோ முடிச்சவிக்கின்றது. முடிச்சுப் போடுகின்றது.

ஒக்ரோபர் ஒன்பது அவனுக்கு இயலாமலாகி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். ஒரிரு நாளிலேயே வந்துவிட்டான். அப்போது தான் ஓரளவு எனக்கும் அவனுக்கும் கூட இனி நிறையக்காலம் இல்லை என்பதை உணர முடிந்தது. எமது உடலுறுப்புக்களில் முக்கிய உறுப்பான ஈரல் செயலிழப்பதாக மருத்துவர்கள் சொல்லி உள்ளனர். அவனுடைய நிலையில் அதற்கான சிகிச்சை அளிப்பதிலும் பலனில்லை என்ற முடிவுக்கு மருத்துவர்கள் வந்திருக்க வேண்டும். அடுத்த ஒரு மாதத்தில் நவம்பர் 12இல் மீண்டும் மருத்துவமனைக்கு. அதுவே அவனது கடைசிப் பயணம் என்பதை என்னால் உணரமுடிந்தது. அதுவே அவனுக்கு இந்த வலி, வேதனையில் இருந்து விடுதலையைக் கொடுக்கும் என்று எண்ணினேன்.

அவனிருந்த வார்டில் சிகிச்சை பெற்றவர்கள் எல்லோருமே எண்பது வயதைத் தாண்டியவர்கள். இவன் மட்டுமே ஐம்பதுக்களில். அவன் வாழ்வதற்கு இன்னும் 30 ஆண்டுகள் இருந்தது. ஆனால் அவனது தவறான முடிவுகள், அவனது முடிவை முன்பதிவு செய்ய காரணமானது. மருத்துவமனையில் இருந்து, கட்டியவளுக்கு தொலைபேசி அழைப்பு இரவு பதினொருமணியளவில். அவளுக்கு எதுவும் புரியவில்லை.

மொழிபெயர்ப்பாளர் தேவை என்றாள். நான் அவளுக்கு நிலைமையை விளக்கினேன். அந்த இடியான செய்தியைச் சொல்லப் போகின்றனர். அவனுடைய கடைசிநாள் இது. அவனது உடல்வலிக்கு இது விடுதலை கொடுக்கும் என்று சமாதானம் சொல்லி தேற்றினேன். உடனடியாக மருத்துவமனைக்கு வருமாறு அழைப்பு வந்தது. அவளையும் குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினோம்.

தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் நிதானமாக விளங்கப்படுத்தினார். “இனிமேல் நாங்கள் செய்வதற்கு எதுவுமில்லை. அவரை நிம்மதியாக கஸ்டமில்லாமல் வழியனுப்பி வைப்பதே ஒரேவழி” என்றார். அவருடைய மருத்துவவியல் மொழியில் நாங்கள் வழியனுப்பி வைப்பதற்காக உயிரைப் பிடித்து வைத்துள்ளனர் என்பது தான் சாரம்சம். ஓரளவு எதிர்பார்த்தது தான். நீங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அவரோடு இருக்கலாம் என்றவர் மெதுவாக திடீரென் எப்பவும் எதுவும் நடக்கலாம், அதனால் தமதிக்காமல் உள்ளே செல்வோம் என தீவிர சத்திரசிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கே வார்ட் எட்டில் எவ்வித சலனமும் இல்லாமல் ரியூப்கள் பொருத்தப்பட்ட நிலையில் அவன். கட்டியவள் அவன் முகத்தை வருடி இதயத்தை வருடி கண்ணீர் விட்டிருக்க பிள்ளைகள் அவன் கையைப் பிடித்துக்கொண்டிருந்தனர். அவர்களோடு நானும் அவன் கையைப் பற்றிக்கொண்டேன். பத்து நிமிடங்களிருக்கும் மருத்துவர் என்னை சைகையால் வரச்சொன்னார். இனி தாமதிக்க முடியாது. சிலவேளை பிள்ளைகளுக்கு முன் ஏதும் ஆகிவிடலாம். ஆதனால் அடுத்த 5 நிமிடங்களுக்குள் அவர்களை கூட்டிச்சென்றுவிடலாம்” என்றார். அவ்வாறே பிள்ளைகள் கண்ணீரோடு அப்பாவை வழியனுப்பி வைத்தனர். அவர்களை இன்னுமொரு மருத்துவ தாதி வேறொரு அறைக்கு அழைத்துச் சென்றார்.
இப்போது அவனைக் கட்டியவளும் நானும்.

“அவரது இதயத்தை இயக்க வழங்கப்படும் மருந்தை நிறுத்துவோம். இதயத்துடிப்பு படிப்படியாகக் குறையும். அதேநேரம் சுவாசத்தையும் நிறுத்துவோம். அவர் எவ்வித வலியும் இன்றி ஆழ்ந்த உறக்கத்திற்குச் செல்வார்” என்று மிவும் இதமாக முடிந்தவரை உணர்வுபூர்வமாகச் சொன்னார். அவள் அவனது இதயத்தையும் முகத்தையும் வருடியவாறு நிற்க அவளது கண்ணீர்த்துளிகள் அவன் மீது வீழ்ந்தது. நான் அவன் கைகளைப் பற்றிக்கொண்டேன். இதயத்துக்கு வழங்கப்பட்ட மருந்து நிறுத்தப்பட்டது. இதயத்துடிப்பு வீழ்ச்சியடையத் தொடங்கியது. உயிரை போகவிடாமல் இழுத்து வைத்திருந்த அந்த மெசின் சிவப்பு விளக்குகளை மின்னி மின்னி அலறியது. அந்தத்தாதி எதையெல்லாமோ அழுத்தி அந்த அலறலை மௌனமாக்கினால். இப்போது சிவப்பு விளக்கு மட்டும் மின்னி மின்னிக் கொண்டிருந்தது. சுவாசத்தை சரி செய்து அவனை அமைதியாக சுவாசிக்கச் செய்தனர். பின் சுவாசத்திலும் வீழ்ச்சி. இறுதியில் அவனது இதயம் கடைசியாக ஒரு தடவை துடித்தது. அவன் மார்பில் கை வைத்திருந்தவள் அதை உணர்ந்தாள். அவன் உயிர் பிரிந்தது. அந்த மெசினும் நிறுத்தப்பட்டது.

“என்ரை பிள்ளைகளை உன்ரை பிள்ளைகளைப் போல் பார்க்க மாட்டியா?” என்று கேட்டது மட்டும் என் காதில் எதிரொலித்துக்கொண்டது.

அவன் மரணத்தை நோக்கிச் செல்கின்றான் என்பது மிக உறுதியாகத் தெரிந்தும் யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. இன்னுமொரு உயிர் இவ்வாறு இழக்கப்படக் கூடாது என்று எண்ணினேன். சஞ்சீவ்ராஜ் என்ற இந்தக் குட்டியின் முடிவை ஒரு வாழ்க்கை அனுபவபாடமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் அவனின் கடைசிக் காலங்களில் எனக்கு ஏற்பட்டது. அவனுக்கும் அதனைத் தெரியப்படுத்தி இருந்தேன். அவன் மறுத்தானா சம்மதித்தானா என்பதை என்னால் உணரமுடியவில்லை. அதனாலேயே இப்பதிவுகள். சேற்றில் கால் வைக்காமல் விதைக்க முடியுமா? ஆகவே குட்டியின் மரணம் யாராவது ஒருவருக்காயினும் படிப்பினையானால் அதுவே அவனது ஆத்மாவை சாந்தியடையச் செய்யும். அவ்வாறானவர்களின் வாழ்கையினூடாக அவன் நிம்மதியாக உறங்குவான்.

ஆகவே எங்கள் நண்பர்கள் நினைவாக அவர்களுடைய ஆத்மாசாந்தியடைய இந்த ஆண்டு முதல் நாங்கள் மதுவை எம் வாழ்விலிருந்து ஒதுக்கி வைப்பதற்கு கற்றுக்கொள்வோம். வரும் புத்தாண்டுச் சபதம் எடுப்பவர்கள் ஜனவரி மாதத்தை மதுவற்ற மாதமாக ஆக்கிக் கொள்ளுங்கள்.

இந்த வாழ்க்கை என்பது ஒரு தடவை மட்டுமே. அது வாழ்வதற்கே. மரணம் என்றோ ஒரு நாள் எம்மை அனைத்துக்கொள்ளும். அது தவிர்க்க முடியாதது. ஆனால் அந்த மரணத்தைத் தேடி நாம் ஏன் செல்ல வேண்டும்? அதற்காக எம் வாழ்வில் மதுவிலக்குச் செய்வோம்.

மதுவைத் தவிர்த்தால் நோய் நொடியிலிருந்து தப்பலாம்!
மதுவைத் தவிர்த்தால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகளை தவிர்க்கலாம்!
மதுவைத் தவிர்த்தால் உறவுகள் நட்புகள் சேரும் நேசிக்கும்!
மதுவைத் தவிர்த்தால் பொருளாதாரம் சிறக்கும்
மதுவை தவிர்த்தால் வாழ்க்கை மணம் கமழும்!

மதுவைத் தவிர்ப்போம் மாண்புள்ள மனிதர்களாக வாழ்வோம்!

அவனது இறுதிக் கிரியைகள்:
தம்பித்துரை சஞ்சீவ்ராஜ் இன் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம்:

நிகழ்வுகள்:
 
பார்வைக்கு
Sunday, 05 Dec 2021 2:00 PM – 5:00 PM
Richard Challoner School Xavier centre School House Richard Challoner, Manor Dr N, New Malden KT3 5PE, United Kingdom
 
கிரியை
Wednesday, 08 Dec 2021 9:00 AM – 12:00 PM
Manor Park Hall 316 b Malden Rd, New Malden KT3 6AU, United Kingdom
 
தகனம்
Wednesday, 08 Dec 2021 12:40 PM
North East Surrey Crematorium Cemetery Lodge, Lower Morden Ln, Morden SM4 4NU, United Kingdom