வடக்கில் நான்கு பொருளாதார மத்திய நிலையங்கள் விரைவில் – தொழில்துறையை வளர்ப்பதன் மூலம் இளைஞர்கள் வெளியேற்றத்தை தடுப்போம் என்கிறார் பா.உ இளங்குமரன்!
வடக்கில் நான்கு பொருளாதார மத்திய நிலையங்கள் விரைவில் உருவாக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன். நிகழ்வொன்றில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட போது தெரிவித்துள்ளார்.
குறித்த நிகழ்வில் உரையாற்றிய பா.உ இளங்குமரன், “கடந்த அரசாங்கத்தை விட எமது அரசாங்கத்தில் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் கல்விக்கு மேலும் அதிக நிதியை ஒதுக்கி கல்வித் துறையை மேம்படுத்துவோம். நாட்டை விட்டு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றது.தற்போது பாடசாலையை விட்டு விலகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகின்றது. இதற்கு காரணம் நாட்டின் பொருளாதார பின்னடைவும் கிராமிய வறுமையுமே காரணம். நாங்கள் எமது நாட்டினுள்ளேயே தொழிற் துறைகளை உருவாக்கும் போது மாணவர்களும் இங்கே கல்வி கற்க கூடிய சூழ்நிலை ஏற்படும். என தெரிவித்தார்.
மேலும் பேசிய பா.உ இளங்குமரன், தங்கத் தீவாக இருந்த தீவகம், கடந்த ஆட்சியாளர்களின் திறனற்ற ஆட்சி காரணமாக தகரத் தீவாக மாற்றம் பெற்றுள்ளது. சுற்றுலாத்துறையை தீவகத்தில் அபிவிருத்தி செய்வதனூடாக வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் இடமாக மாற்றுவதனூடாக தீவகம் மீண்டும் செந்தளிப்பு பெறும். தீவகத்தை மீண்டும் தங்கத் தீவாக மிளிர வைப்போம்.
எதிர்காலத்தில் வடக்கில் மூன்று மத்திய பொருளாதார நிலையங்களை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளோம். ஒரு பொருளாதார மத்திய நிலையத்தை மாங்குளத்திலும், பரந்தன் – ஆனையிறவை மையப்படுத்திய இடத்தில் ஒரு பொருளாதார மத்திய நிலையத்தையும், பலாலியில் ஒரு பொருளாதார மத்திய நிலையத்தையும் உருவாக்க திட்டமிட்டுள்ளோம். இங்கேயே தொழில்துறையை உருவாக்கி, இங்கேயே உழைத்து உண்ணக்கூடிய ஒரு நிலையை உருவாக்குவோம். கடந்த காலத்தில் மனித வளம் சிறந்த முகாமைத்துவம் இல்லாமையால் வீணடிக்கப்பட்டது. ஆனால் இனி நாங்கள் மனித வளத்தை சிறந்த முறையில் திட்டமிட்டு நிர்வகித்து நாட்டை கட்டியெழுப்புவோம்” என குறிப்பிட்டுள்ளார்.