பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

மாணவர்களைப் பற்றி சிந்தித்து கல்விசாரா ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க

கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக இலங்கையில் பல்கலைக்கழக அமைப்பு பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும், கல்விசாரா ஊழியர்கள் அனைவரும் மாணவர்களைப் பற்றி சிந்தித்து பணிக்கு சமூகமளிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க இன்று (14) தெரிவித்துள்ளார். .

கொழும்பு 7 இல் உள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் விசேட ஊடகவியலாளர் மாநாட்டை நடத்திய ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனைத் தெரிவித்தார்.

கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக கல்வி நடவடிக்கைகளில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக தற்போது பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் இணையவழியில் நடத்தப்பட்டு வருவதாகவும் ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் கற்கும் சுமார் 3500 மாணவர்கள் விடுதிகளை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அமரதுங்க தெரிவித்தார்.

கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பல்கலைக்கழக நுழைவுக்கான மாணவர் கையேடு தயாரிக்கும் பணி ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும், மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு அனுமதிப்பதும் தாமதமடைந்துள்ளதாகவும் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக போரட்டம் !

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக வியாழக்கிழமை (12) மதியம் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனம் மற்றும் தொழிற்சங்க கூட்டுக்குழு ஆகியவற்றின் 01.10.2023 தீர்மானத்திற்கமைவாக வியாழக்கிழமை (12) அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அந்தவகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பல்கலைக்கழக பணியாளர்களை பாதிக்கும் பிரச்சனைகளில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் அரசாங்கத்தின் காலம் தாழ்த்தும் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தீர்வினை வேண்டியுமே அடையாள ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

மதியம் 12.00 மணியளவில் பல்கலைக்கழக முன்றலில் இடம்பெற்ற இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் “மொழித் தேர்ச்சி கொடுப்பனவை மீள் வழங்கு, பல்கலைக்கழக ஊழியர்களின் இல்லாமல் ஆக்கப்பட்ட சம்பள உயர்வை உடனடியாக வழங்கு, பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் வெற்றிடங்களை உடனடியாக நிரப்பு, ஊழியர்களின் சேமலாப, நம்பிக்கை ஓய்வூதிய நிதிகளை கொள்ளையடிக்காதே, அரசே அரச பல்கலைக்கழக முறைமையை காப்பாற்று, வாழ்க்கை செலவு அதிகரிப்புக்கு ஏற்றாற்போல் சம்பள அதிகரிப்பை வழங்கு” உள்ளிட்ட வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தி, கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரச பல்கலைக்கழகங்களின் கலைப்பீட மாணவர்களுக்கு இரண்டு பட்டங்கள் – வெளியாகியுள்ள முக்கியமான அறிவிப்பு !

பல்கலைக்கழகங்களில் கலைப் பீடங்களில் சேரும் மாணவர்களுக்கு எதிர்வரும் வருடம் முதல் 02 பட்டங்கள் வழங்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கலைப் பட்டப்படிப்புக்கு மேலதிகமாக தொழில்நுட்பம் மற்றும் கணனி விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் பட்டம் பெறுவதற்கான வாய்ப்பும் மாணவர்களுக்கு கிடைக்கும் என அதன் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இதன் முலமாக கலைப் பீட மாணவர்களுக்கு இரண்டு பட்டங்களைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்ப்பட்டுள்ளது.

 

பல்கலைக்கழகங்களில் பகிடிவதை சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு !

சில பல்கலைக்கழகங்களில் பகிடிவதை சம்பவங்கள் இடம்பெறுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது குறித்து பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார்.

பகிடிவதையை தடை செய்யும் சட்டத்தின் கீழ், அவ்வாறான நடவடிக்கைகளுடன் தொடர்புபடும் மாணவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பேராசிரியர் தெரிவித்தார்.

இதேவேளை, பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பகிடிவதைக்கு எதிரான மற்றும் பகிடிவதைக்கு ஆதரவான மாணவர்களுக்கு இடையிலும் மோதல்கள் இடம்பெற்றுள்ளமை குறித்து பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் நான்கு மாணவர்கள் காயமடைந்துள்ளதாக பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார்.

மோதல் குறித்து மூன்று மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க மேலும் தெரிவித்தார்.