பண வீக்கம்

பண வீக்கம்

பிரித்தானியாவின் பணவீக்கம் இரட்டிப்பானாது! விலைகள் எகுறுகின்றது!! கந்தையானாலும் கசக்கிக் கட்டுங்கள்!!!

பிரித்தானியாவின் பண வீக்கம் இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. யூலையில் 2 வீதமாக இருந்த பணவீக்கம் ஓகஸ்ட்டில் 3.2 வீதமாக உயர்ந்துள்ளது. தொடர்ச்சியாக பொருட்களுக்கு உள்ள தட்டுப்பாடு அது கோவிட்-19 இனால் ஏற்பட்ட முடக்கத்தை அடுத்து எழுந்த தாக்கம். அதைவிடவும் நீண்ட முடக்கத்தின் பின் பொருளாதாரம் விரைந்து நகர ஆரம்பித்ததும் பொருட்களுக்கான தேவையும் கேள்வியும் அதிகரிக்க மூலப்பொருட்களின் விலை சந்தையில் அதிகரித்துள்ளது. அது மட்டுமல்லாமல் பொருளாதாரம் இயங்க ஆரம்பித்ததும் எரிபொருளுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. அதனால் எரிபொருளின் விலை உயர ஆரம்பித்துள்ளது. அதனால் விநியோகச் செலவு அதிகரிக்கும். மூலப்பொருட்களினதும் எரிபொருட்களினதும் விலை உயர்ந்தால் அது பொருட்களின் உற்பத்திச் செலவை அதிகரிக்கும்.

மூன்று குழந்தைகளின் தாயார் தேசம்நெற் க்கு தெரிவிக்கையில் தான் வாராவாரம் சொப்பிங் செய்வதாகவும் இன்று ஐஸ்லண்ட் சுப்பர் மார்க்ற்றில் சொப்பிங் செய்யச் சென்ற போது பொருட்களின் விலை வித்தியாசத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகத் தெரிவித்தார். ஐந்து மாஸ்க் ஒரு பவுண்டுக்கு விற்றவர்கள் இப்போது ஒரு மாஸ்க் இரு பவுண்டுக்கும் மூன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்றும் விற்பதாகத் தெரிவித்தார். இவ்வாறு பல பொருட்கள் விலையேற்றப்பட்டுள்ளது அல்லது பொருட்களின் அளவு குறைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

பிரித்தானியாவில் பண வீக்கத்தை 2 வீதத்திற்குள் வைத்திருப்பதே அரசின் செயற்திட்டமாக இருந்த போதிலும் அண்மைய நாட்களில் ஏற்பட்டுள்ள எரிசகத்தியின் விலையதிகரிப்புகள் பொருட்களின் விலையை மேலும் உயர்த்தும் என எதிர்பார்க்கலாம். மேலும் நீண்ட விநியோக லொறிகளின் சாரதிகளுக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டினால் விநியோக வலைப்பின்னலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறியதை அடுத்து கிழக்கு ஐரோப்பிய தொழிலாளர்கள் பெருமளவிலானோர் பிரித்தானியாவை விட்டு வெளியேறிவிட்டனர். அதனாலும் சாரதிகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. சில பெற்றோல் நிலையங்களே இன்று விநியோக நெருக்கடி காரணமாக பெற்றோல் முடிந்த நிலையில் மூடப்பட்டு உள்ளது. பிரித்தானியாவில் பழம் பிடுங்குவதற்னே ரூமேனியாவில் இருந்து ஆட்கள் தருவிக்கப்பட்டனர். மேலும் உணவகங்கள் ஹொட்டல்கள் போன்ற வரவேற்புச் சேவை வேண்டிய இடங்களில் வேலையாட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கணணித் தொழில்நுட்பத்துறையில் துறைசார்ந்த அறிவுடையவர்களுக்கு பற்றாக்குறை நிலவுகின்றது. இதன் காரணமாக சம்பளத்தை உயர்த்தியே வேலைக்கு பணியாளர்களைத் தேட வேண்டியேற்பட்டுள்ளது.

இவற்றின் பின்னணியிலேயே பாங்க் ஒப் இங்லண்ட் இன் தலைவர் அன்ரூ பெய்லி பிரித்தானியாவின் நிதியமைச்சர் ரிஸ்சி சுனாக்கிற்கு கொள்வனவாளர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட விலை அதிகரிப்பைச் சுட்டிக்காட்டி இருந்தார். வழமைக்கு மாறாக அதற்குப் பதிலளித்த நிதியமைச்சர் அரசின் நிலைப்பாட்டை சுட்டிக்காட்டி அரசு தற்போது பண வீக்கத்தை 2 வீதத்திற்குள் வைத்திருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளதையும் சுட்டிக்காட்டி இருந்தார்.

பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் நுகர்வோர் கலாச்சாரத்தை வளர்த்து தேவையற்ற பொருட்களை பெரும் நிறுவனங்கள் எம்மை வாங்க வைக்கின்றன. தேவையும் கேள்வியும் இல்லாதவிடத்து தேவையை உருவாக்கி கேள்வியை அதிகரிக்க வைப்பதே நவீன சந்தைப்படுத்தல் முறையாக வந்துகொண்டுள்ளது. இந்த உற்பத்திக்காக வளங்கள் விரயமாக்கப்பட்டு சுற்றாடல் மாசுபடுத்தப்படுகின்றது. மக்கள் இந்த பெரும் நிறுவனங்களின் வலையில் வீழ்ந்து நுகர்வோர் கலாச்சாரத்தின் அடிமைகளாகாமல் ஒரு பொருளை வாங்கினால் அதிலிருந்து உச்சபட்ச பலனை பெறவேண்டும். நமது முன்னோர் குறிப்பிட்டது போல் கந்தையானாலும் கசக்கிக் கட்டவும். தூக்கி எறிந்துவிட்டு புதிது புதிதாக வாங்கிக் குவிப்பது கொழுத்த நிறுவனங்கள் லாபமீட்டுவதற்கே வழிவகுக்கும்.