நுவரெலியா நானுஓயா எடின்பரோ

நுவரெலியா நானுஓயா எடின்பரோ

தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட கோதுமை மாவில் பூச்சிகள், வண்டுகள் மற்றும் எலிகளின் கழிவுகள் – தொழிலாளிகள் போராட்டத்தில்!

நுவரெலியா நானுஓயா எடின்பரோ தோட்டத்தைச் சார்ந்த 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று காலை முதல் தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இத்தோட்ட தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகத்தால் அண்மையில் வழங்கப்பட்ட கோதுமை மாவில் பூச்சிகள், வண்டுகள் மற்றும் எலிகளின் கழிவுகள் காணப்பட்டதாகவும் அதே கோதுமை மாவினை மீண்டும் வழங்குவதற்காக மேலும் 300 கிலோ கோதுமை மாவை தேயிலை தொழிற்சாலையில் களஞ்சியப்படுத்தி வைத்திருப்பதாகவும் தெரிவிக்கும் தோட்ட தொழிலாளர்கள் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்தோடு தொடர்ச்சியாக தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகள் வழங்காமல் கொழுந்து பறிப்பதில் மாத்திரம் தொழிலார்களிடம் கடுமையாக நடந்து கொள்வதாகவும் சுகாதார வசதி மற்றும் ஏனைய வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என இம்மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறான செயல்பாடுகளில் ஈடுபடாமல் தோட்ட நிர்வாகம் தொழிலாளர் நலன்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என இம்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.