நாமல் ராஜபக்ஷ

நாமல் ராஜபக்ஷ

சகாக்கள் மீதான பிரித்தானியாவின் தடை நாமல் ராஜபக்ச கொந்தளிப்பு! 

சகாக்கள் மீதான பிரித்தானியாவின் தடை நாமல் ராஜபக்ச கொந்தளிப்பு!

 

இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகோடா மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூர்யா ஆகியோர் மீது பிரித்தானியா விதித்த தடை தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தனது X தளத்தில் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

குறித்த பதிவில், ஐக்கிய இராச்சியத்தின் இந்த தடைகள் மனித உரிமைகள் பற்றியவை அல்ல, மாறாக LTTE ஆதரவாளர்களின் தொடர்ச்சியான செல்வாக்கின் விளைவாகும்.

இது நீதியல்ல, சில மேற்கத்திய அரசியல்வாதிகள் பணத்தின் மூலம் செல்வாக்கு செலுத்தியும் சலுகைகளை அனுபவித்தும் நமது தேசத்தின் நல்லிணக்கத்தை கண்காணிப்பதாக குறிப்பிட்டுள்ளார். இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரம் கடினமான முடிவுகளால் பெறப்பட்டது என்பதை வடக்கு மற்றும் தெற்கு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இசைப்பிரியாவிற்காக சாணக்கியன் நியாயம் கேட்க வளர்த்த காடா மார்பில் பாயுது என்று திடுக்கிட்ட நாமல் !

இசைப்பிரியாவிற்காக சாணக்கியன் நியாயம் கேட்க வளர்த்த காடா மார்பில் பாயுது என்று திடுக்கிட்ட நாமல் !

இசைப்பிரியா ஒரு பெண் இல்லையா..? பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட இசைப்பிரியாவிற்கு இந்த நாட்டில் நீதி தேவையில்லையா? என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பியுள்ளார்.

அனுராதபுரத்திலே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் ஏன் இந்த அரசாங்கமும் சரி, நாட்டு மக்களும் சரி எத்தனையோ தமிழ் பெண்கள் பாதுகாப்பு படையினரால் பாலியல் வன்னொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கின்றார்கள். இவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கு எதிராக ஏன் இந்த அரசாங்கம் கொந்தளிக்கவில்லை என பாராளுமன்றத்தில் கொந்தளித்த சாணக்கியன் இசைப்பிரியாவின் படுகொலைக்கும் நீதி கேட்டார்.

பட்டலந்த அறிக்கையை உணர்வுபூர்வமாக பார்க்கும் தற்போதைய அரசாங்கம், இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழர்கள் தொடர்பான அறிக்கையை ஏன் உணர்வுபூர்வமாக பார்க்கவில்லை எனக் கேள்விப் எழுப்பினார்.

போர்க்குற்றங்கள் தொடர்பான வெளிவிகார அமைச்சரின் உள்ளக பொறிமுறை விசாரணையை வெட்கக் கேடானது எனவும் சாணக்கியன் குறிப்பிட்டார். என்பிபி அரசாங்கத்தை எதிர்க்கட்சியாக இருந்து கேள்வி கேட்கும் இரா. சாணக்கியன் நல்லாட்சி அரசாங்கத்தில் பங்காளிகளாக இருந்த போது ஏன் இதே கேள்விகளை கேட்கவில்லை என சாணக்கியனின் அரசியல் எதிரிகள் கேட்கின்றனர். மேலும் சாணக்கியனின் ஆசானான சுமந்திரன் போர்க் குற்றத்தை உள்ளகப் பொறிமுறையூடாக விசாரிக்க பச்சைக் கொடி காட்டியதாலே தான் அவர் தமிழ்மக்களின் வெறுப்புக்குமுள்ளானார்.

எல்லாவற்றுக்கும் மேலாக சிறிலங்கா சுதந்திர கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளராக இருந்த சாணக்கியன், இராஜபக்சவின் முகவரியிலேயே அரசியலுக்கு வந்தவர். இசைப்பிரியா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது இராஜபக்ச ஆட்சியிலேயே நடந்தது. அப்போதெல்லாம் வாயைப் பொத்திக்கொண்டு இருந்த சாணக்கியனின் இசைப்பிரியா மீதான திடீர் பாசம் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசுக்கட்சியின் வாக்கு வங்கியைக் காப்பாற்றவேயாகும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

என்னடா வளர்த்த கடா மார்பில் பாயுது என திடுக்கிட்ட நாமல் ராஜபக்ச பாராளுமன்றத்தில் சாணக்கியனை செல்லமாக கண்டித்தார். யுத்தம் முடிந்து நீண்டகாலம் ஆகிவிட்டது. ஆறின புண்ணை பூதக் கண்ணாடி வைத்து பார்க்கக் கூடாது. இப்படியே போனால் இனக்குரோதம் வளரும். ஒரு அரசாக நாங்கள் எல்லாம் ஒன்றாக நிற்போம். மறப்போம் மன்னிப்போம் என்றார் நாமல் ராஜபக்ச.

 

ராஜபக்ஷ கோ ஹோம் (go home)’ அன்று ‘யூலி ஜங் கோ ஹோம் (go home)’ இன்று – நாமல் ராஜபக்சவை சந்திக்கின்றார் அமெரிக்க தூதுவர் !

ராஜபக்ஷ கோ ஹோம் (go home)’ அன்று ‘யூலி ஜங் கோ ஹோம் (go home)’ இன்று – நாமல் ராஜபக்சவை சந்திக்கின்றார் அமெரிக்க தூதுவர் !

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அலுவலகத்தில் பொதுஜன பெரமுன இ கட்சியின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கும் அமெரிக்க தூதர் ஜூலி சங் ஆகியோருக்கு இடையே ஒரு சந்திப்பும் நடைபெற்றது. சீன சார்பு ராஜபக்ஷ குடும்பத்தை ஆட்சியிலிருந்து அப்புறப்படுத்தி ரணில் விக்கிரமசிங்கவை ஆட்சியில் அமர்த்தியதில் யூலி ஜங்கின் ஈடுபாடு கணிசமானது எனத் அன்று செய்திகள் வெளிவந்திருந்தது.

இதன் பின்னணியில் யூஎஸ்எய்ட் ஓரினச்சேர்க்கையாளர்களை பாதுகாக்கும் அமைப்புகளுக்கு நிதி வழங்கியதை கலாச்சாரச் சீரழிவாகக் காட்டி தீவிர சிங்கள தேசியவாதிகள் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தற்போதைய டொனால் ட்ரம்மின் அரசு இலங்கைக்கான அமெரிக்க தூதுவரை திருப்பி அழைக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் ‘யூலி ஜங் கோஹோம்’ என்ற பதாகைகளையும் தாங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்தோடு, கோட்டபாய ராஜபக்ச பதவியிறக்கப்பட்டதற்குப் பின்னால் அமெரிகத் தூதுவர் யூலி ஜங் நின்றார் என்றும் குற்றச்சாட்டுக்களை போராட்டகாரர்கள் முன்வைத்தனர். இந்தப் பின்னணியிலேயே அமெரிக்க தூதுவர் யூலி ஜங் நாமல் ராஜபக்சவை நேற்றுச் சந்தித்துள்ளார். அனுர அரசின் கரங்கள் ராஜபக்சக்களை நெருக்குவதுடன் அவரை தற்போது குடியிருக்கும் வீட்டிலிருந்து கிளப்பவும் அனுர முயற்சி எடுக்கின்ற நிலையிலேயே இந்தச் சந்திப்பும் நிகழ்ந்துள்ளது.

இந்த நாட்களில் சர்ச்சைக்குரிய விஷயமாக மாறியுள்ள USAID நிதியுதவி தொடர்பாகவே இருவரும் நீண்ட நேரம் விவாதித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இவ்விடயம் பற்றி பேசுவதற்கு இவர்கள் இருவருக்குமே ஒன்றும் இருக்கவில்லை. ஆனால் இவர்கள் வேறு விடயங்களையே பேசியிருக்க வேண்டும் என அவதானிகள் கருதுகின்றனர்.

அத்துடன்இ தங்களுடைய ஆட்சியை கலைத்ததை மனதில் இருத்தி, இச்சந்திப்பில்இ அமெரிக்கா தலையிடாத வெளிநோக்குக் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும்இ அமெரிக்க வரி செலுத்துவோர் பணம் பயன்படுத்தப்படும் விதத்தில் அதிக வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதையும் நாமல ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக இலங்கையின் உள்நாட்டு அரசியல் நடவடிக்கைகளில் USAIDஉள்ளிட்ட அமெரிக்க தனியார் நிறுவனங்கள் பாரிய தலையீடு செய்ததாகவும் , அவற்றினுடைய கணக்கு வழக்குகளை இலங்கை அரசாங்கம் முறையான விசாரணைகளுக்குட்படுத்த வேண்டும் என நாமல் ராஜபக்ஷ கோரியிருந்த நிலையில், அமெரிக்க தூதுவரின் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, இலங்கையில் நாட்டின் கலாச்சாரத்தை அழித்து மக்கள் தொகையைக் குறைக்கும் திட்டங்களுக்கு USAID 7.9 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியிருந்தமையும் கவனிக்கத்தக்கது.

மேலும் பாராளுமன்றத்திலும் இந்த விவகாரம் பாரிய பேசுபொருளாக நேற்று மாறியிருந்த நிலையில் , அமெரிக்காவின் யு.எஸ்.எய்ட். நிறுவனம் விவகாரம் குறித்து பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைக்க உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன சபையில் குறிப்பிட்டுள்ளார்.

 

10.9: அண்மையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் வலைத்தளத்தில் ‘இலங்கை, பங்களாதேஸ்,உக்ரைன், பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட 09 நாடுகளின் அரசாங்கத்தை மாற்றியமைப்பதற்காக யு. எஸ். எய்ட் என்ற அரச சார்பற்ற நிறுவனம் 260 மில்லியன் டொலரை செலவு செய்துள்ளதாக’ பதிவேற்றம் செய்துள்ளார் என்ற தகவல் உலக நாடுகளிடையே பாரிய பேசுபொருளாக மாறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இவ்விடயத்தை தேசம்நெற் அரகலய போராட்டத்தின் ஆரம்பம் தொடக்கம் சுட்டிக்காட்டி வந்தமை குறிப்பிடத்தக்கது

தம்பியை அடுத்து அண்ணன் நாமலுக்கும் அழைப்பாணை !

தம்பியை அடுத்து அண்ணன் நாமலுக்கும் அழைப்பாணை !

ரக்பி விளையாட்டை ஊக்குவிப்பதற்காக இந்திய நிறுவனமான கிரிஷிடமிருந்து 70 மில்லியன் ரூபா பெற்று முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச் சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 18 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகளைப் பரிசீலித்த பின்னர்இ கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இந்த அறிவிப்பை வெளியிட உத்தரவிட்டார்.

முன்னதாக குறித்த வழக்கில் நாமல் ராஜபக்ஷ ஒரு சந்தேக நபராகக் கைது செய்யப்பட்டுஇ கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்ததும் கவனிக்கத்தக்கது.

இதேவேளை நாமல் ராஜபக்சவின் சகோதரரான யோஷித ராஜபக்ஷஇ ரத்மலானை சிறிமல் பிரதேசத்தில் 34 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் காணியை வாங்கிய தொடர்பில்இ அண்மையில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

புலிகளை அழித்ததால் நழுவிய மகிந்த ராஜபக்சவின் நோபல் பரிசு கனவு – மகன் நாமல் கவலை !

புலிகளை அழித்ததால் நழுவிய மகிந்த ராஜபக்சவின் நோபல் பரிசு கனவு – மகன் நாமல் கவலை !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுதலைப் புலிகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தால் அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருப்பார், ஆனால் அவர் செய்ய வேண்டியதைச் செய்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். .

“விடுதலைப் புலிகளை நசுக்கியதற்காக நாமும் எங்கள் பரம்பரையும் கூட கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்ற உண்மையை நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே அறிந்திருந்தோம். எத்தகைய சவால்களை எதிர்கொண்டாலும் நாங்கள் எமது அரசியலைத் தொடர்வோம் எனவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இரண்டு வாரங்களில் நாமல் கைது ! – யோஷிதவுக்கு பிணை !

இரண்டு வாரங்களில் நாமல் கைது ! – யோஷிதவுக்கு பிணை !

2029 ஆம் ஆண்டு நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தற்போதைய அரசாங்கம் அஞ்சுவதானால் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்வதற்கான அரசாங்கத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகச் செயலாளரும் சட்டத்தரணியுமான மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை அண்மைய கைதுகள் பற்றி கருத்து தெரிவித்த பா.உ நாமல் ராஜபக்ச, “ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்று என்னிடம் கேட்காதீர்கள். பிரதிப் பாதுகாப்பு அமைச்சர், காவல்துறை அமைச்சர் மற்றும் நாட்டின் ஜனாதிபதியிடம் கேளுங்கள். ஆனால் அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக அரசியல்வாதிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் வேட்டையாடுவதில் நேரத்தைச் செலவிடுகிறது.” நாட்டின் பாராளுமன்றத்தில் நான்தான் கூச்சலிடுகிறேன். என் சகோதரன் சிறைக்குச் சென்றார் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவை பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

அரசியல் பழிவாங்கலின் அடிப்படையில் யோஷித ராஜபக்ஷ கைதுசெய்யப்படவில்லை என தெரிவித்திருந்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, குற்றச்செயல்கள் ஊழலுடன் தொடர்புடைய அனைவருக்கு எதிராகவும் நடவடிக்கைகள் தொடரும் என தெரிவித்திருந்தார்.

அனைத்து இனங்களின் கலாசாரத்துடன் செயற்படக்கூடிய ஒரே அரசியல் கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – நாமல் ராஜபக்ஷ

நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் மீண்டும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் முகமாக ஹட்டனில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டின் இராணுவ அதிகாரிகள் மற்றும் சர்வதேச புலனாய்வு அமைப்புகள் மற்றும் அமைப்புக்கள் நாட்டின் முப்படைகள் மற்றும் பொலிஸாருடன் இணைந்து பாதுகாப்பை பலப்படுத்தவும், நாட்டிற்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாக்கவும் வேண்டும்.
அதேவேளை, அனைத்து இனங்களின் கலாசாரத்துடன் செயற்படக்கூடிய ஒரே அரசியல் கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எனவும் நுவரெலியா மாவட்ட மரக்கறி விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் தலையிட வேண்டும் எனவும் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

நாமல் ராஜபக்ச சட்டவிரோதமாக சம்பாதித்த 15 மில்லியன் ரூபா – 2025ஆம் ஆண்டில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினரும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருமான நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த முறைப்பாடு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்று எடுத்துகொள்ளப்பட நிலையில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது நாமல் ராஜபக்ச சட்டவிரோதமாக சம்பாதித்த 15 மில்லியன் ரூபாவை முதலீடு செய்தமை தொடர்பில் இந்த முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது

மேலும் இந்த விசாரணை தொடர்பான அனைத்து ஆலோசனைகளும் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்ட குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

மாகாண சபைகளுக்கு ஒருபோதும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரத்தை வழங்கவே முடியாது – ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச

மாகாண சபைகளுக்கு ஒருபோதும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரத்தை வழங்கவே முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுpன பெரமுவின் முதல் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு அறிவித்துள்ளார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

எங்களுடைய நாடு ஒற்றையாட்சி நாடாகும். கிராமம் மற்றும் நாட்டுள்ள தாய் தந்தையரின் குழந்தைகளும் இந்த ஒருமித்த நாட்டை பாதுகாப்பதற்கே போராடினர். இந்த பௌத்த நாட்டுக்குள் அனைத்து மதத்துக்கு கௌரவத்தை வழங்குவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். அதனை தற்போது செய்கின்றோம்.

அதேபோன்று, மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரத்தை ஒருபோதும் வழங்க முடியாது என்பதையும் நினைவுப்படுத்த விரும்புகின்றோம்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தாய் தந்தை மற்றும் இளையோரை தேர்தரல் காலத்தில் மாத்திரம் ஏமாற்றுவதற்கு விரும்பவில்லை. ஏமாற்றுவதால் எவ்வித பயனுமில்லை.

எங்களுக்கு முடியும் என்பதை முடியும் என்றும் முடியாது என்பதை முடியாது எனவும் கூறிவிட வேண்டும். நாங்கள் தமிழ் கலாசாரத்தை பாதுகாப்போம். மொழி உரிமையையும் பாதுகாப்போம்.

ஆனால், பொலிஸ் மற்றும் காணி அதிகாரத்தை வழங்க முடியாது என்பதுடன், வடக்கு கிழக்கையும் நாங்கள் ஒருபோதும் இணைக்க மாட்டோம் என்பதையும் தெளிவாக அறிவிக்கின்றோம்”

என ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ச – சுமந்திரன் இடையே சந்திப்பு!

ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

 

இதன்போது வடக்கு, கிழக்கில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அந்த மாகாணங்களின் அபிவிருத்தி குறித்து இருவரும் கலந்துரையாடியதாக பொதுஜன பெரமுனவின் மத்திய குழுவில் வட மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்யும் கீதநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.

 

வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து அப்பகுதி மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும் இளைஞர்களுக்கு வாழ்வாதாரம் மற்றும் சிறந்த எதிர்காலத்தை வழங்குவதற்கும் தாம் தயார் என சுமந்திரனிடம் நாமல் ராஜபக்ச தெரிவித்ததாக காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.

 

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியை பொருட்படுத்தாது வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள குடிமக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருப்பதை உறுதி செய்ய விரும்புவதாகவும், இந்த மாவட்டங்களை சர்வதேச வர்த்தக மையங்களாக மேம்படுத்தவும் விரும்புவதாக நாமல் ராஜபக்ச இதன்போது தெரிவித்துள்ளார்.

 

மேலும் அனைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அலுவலகத்தில் சந்தித்து குறைகளை விரிவாக கலந்துரையாடுமாறும் கேட்டுக்கொண்டார்.

 

இந்த விடயங்கள் தொடர்பில் நாளை கூடவுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மத்திய குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்படும் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்” என்றார்.