நாமல் ராஜபக்

நாமல் ராஜபக்

“கோட்டாபாயவின் எதிர்கால திட்டம் என்ன.?” – நாமல் ராஜபக்ச விளக்கம் !

அரசியலில் ஈடுபடுவதா இல்லையா என்பதை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே தீர்மானிப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதி நாடு திரும்பியது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்

“எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை முன்னாள் ஜனாதிபதி தான் தீர்மானிக்க வேண்டும் எனவும் அரசியலில் ஈடுபடலாமா வேண்டாமா என்பதை அவரே முடிவு செய்ய வேண்டும். மற்றவர்களுக்காக முடிவெடுக்கும் உரிமை எங்களுக்கு இல்லை,” எனவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி தனது முடிவை அறிவித்தவுடன் கட்சியின் நிர்வாக சபைக்கு அறிவிப்போம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக் குறிப்பிட்டுள்ளார்.

பண மோசடிகளுக்கும் ராஜபக்ஷ குடும்பத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.”- நாமல் ராஜபக்ஷ

ஒஸ்பென் மெடிக்கல் மற்றும் அவுஸ்ரேலியாவில் நடந்ததாக தெரிவிக்கப்படும் சந்தேகத்திற்குரிய பணமோசடி குறித்து தமது குடும்பத்திற்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் நிர்மாணப்பணியின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிப் பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்களை சர்வதேச ஊடகமான ஏபிசி நியூஸ் செய்தி நிறுவனமானது அம்பலப்படுத்தியுள்ளது.

குறித்த வைத்தியசாலைக்கு உபகரணங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சேவைகளை வழங்கும் 18.8 மில்லியன் டொலர் திட்டத்திற்கு ஒஸ்பென் மெடிக்கல் நிறுவனம் அவுஸ்ரேலிய அரசாங்கத்திடமிருந்து அனுமதியைப் பெற்றுள்ளது.

இலங்கையில் ஒஸ்பென் மெடிக்கலின் முதல் 2.1 மில்லியன் டொலர் பரிவர்த்தனையானது பிரித்தானிய விர்ஜின் தீவுகளின் பதிவு செய்யப்பட்ட நிறுவனமான சேபர் விஷன் ஹோல்டிங்ஸ் இடையில் இடம்பெற்றுள்ளது. இலங்கையைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் நிமல் பெரேராவுக்குச் சொந்தமான இந்த நிறுவனம் இலங்கையில் உள்ள ராஜபக்ச குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளதாக ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

ராஜபக்ச குடும்பத்துடன் தொடர்பு வைத்திருந்த நிமல் பெரேரா என்ற இடைத்தரகருக்கு இந்த நிறுவனம் இரகசியமாக சொந்தமானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பரிவர்த்தனை காரணமாக கடந்த 2016 ஆம் ஆண்டில், பண தூய்தாக்கல் குற்றச்சாட்டில் நாமல் ராஜபக்சவை கைது செய்ய அது வழிவகுத்ததாகவும் ஏபிசி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் குறித்த இரண்டு நிறுவனங்களுக்கு இடையேயான பரிவர்த்தனையில் எவ்வித சம்பந்தமும் கிடையாது என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கம் முன்வைத்த இந்த குற்றச்சாட்டு தொடர்பாக இன்னும் தான் நீதிமன்றத்திற்கு செல்வதாகவும் இதில் யாருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

30 மில்லியன் ரூபா பணமோசடி – நாமலுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு !

முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஆறு சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி மேலதிக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (28) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். வழக்கின் மேலதிக சாட்சியங்களை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்ட நீதிபதி, அன்றைய தினம் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளார்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது நாமல் ராஜபக்ஷ உட்பட ஆறு சந்தேக நபர்களுக்கு எதிராக 30 மில்லியன் ரூபாவை கவர்ஸ் கூட்டுத்தாபனத்தில் முதலீடு செய்ததன் மூலம் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்

விளையாட்டு சபைக்கு ஆலோசகராக செயற்பட சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்தனவுக்கு நாமல் அழைப்பு!

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்தன ஆகியோரை தேசிய விளையாட்டு சபைக்கு ஆலோசகராக செயற்படுமாறு விளையாட்டுதுறை  அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் விளையாட்டுத்துறையை சிறந்த முறையில் செயற்படுத்துவது தொடர்பாக, விளையாட்டு அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதற்காக  குறித்த இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தேசிய விளையாட்டுச் சபைக்கு புதிய உறுப்பினர்கள் விரைவில் பெயரிடப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளையாட்டு அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர்  இவ்விடயம் தொடர்பாக குறிப்பிட்டுள்ளதாவது, “முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இருவர், 1973 ஆம் ஆண்டின் விளையாட்டுச் சட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகளுக்கு நியமிக்கப்படுவார்கள்.

அவர்கள் விளையாட்டுகளை மேம்படுத்துவது தொடர்பான விடயங்கள் குறித்து அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதே அவர்களின் முக்கிய பணியாக இருக்கும்” எனவும்  குறிப்பிட்டுள்ளார்.

சங்கக்கார மற்றும் ஜெயவர்தன தவிர இலங்கையில் விளையாட்டுகளை மேம்படுத்துவதில் தொடர்ச்சியாக  பங்காற்றிவரும் தொழில் வல்லுநர்களும் இந்த பட்டியலில் ஒரு பகுதியாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.