அர்ச்சுனாவின் முதலமைச்சர் கனவு ! போராட்டங்களுக்குத் தடை ! ஜனாதிபதி யாழ் வருகின்றார் ! – குடி நீர் பிரச்சினை பேசப்படுமா ?
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பொதுமக்கள் சந்திப்பு போன்ற நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நாளை வருகை தரவுள்ளார். இதன்போது யாழ் மாவட்டத்தின் எதிர்காலத்தைப் பாதிக்கின்ற குடி தண்ணீர் பிரச்சினை பேசப்படுமா என யாழ் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். என்பிபி பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் இது தொடர்பில் உறுதியான தீர்வு ஒன்றை முன்வைக்க வேண்டும். மேலும் இந்தக் குடி தண்ணீர் மோசடி மற்றும் யாழ் நகரின் மத்திய கழிவகற்றல் பொறிமுறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி மோசடிகள் பற்றியும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பேசப்பட வேண்டும்.
ஜனாதிபதியின் வருகையின் போது போராட்டம் நடத்துவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் உள்ளிட்டவை அழைப்பு விடுத்திருந்தன.
இந்த நிலையில் போராட்டம் நடத்துவதை தடை செய்யக்கோரி காவல்துறையினர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத் தலைவர், ஆர்ப்பாட்டக் குழுவின் யாழ் மாவட்ட தலைவர், தற்காலிக சுகாதார உத்தியோகத்தர் சங்க தலைவர், குரலற்றவர்களின் குரல் அமைப்பின் தலைவர் ஆகிய ஐவரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்புக் கட்டளை அனுப்புவதற்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே அனுராதபுரம் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக குற்றவியல் வற்புறுத்தல் மற்றும் கடமைக்கு இடையூறு விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டு நேற்று இரவு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த கைதானது அநுராதபுரம் பொலிஸாரால் யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகராட்சி மன்றத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேவேளை தனக்கு எதிரான விடயங்களை முன்நிறுத்தி முதலமைச்சராகிவிடலாம் என்ற எண்ணத்தில் சிறகடித்துப் பறக்கின்றார் பா உ அர்ச்சுனா. தான் முதலமைச்சரானால் முதலாவது வேலையாக கலாச்சார மண்டபத்தின் பெயரை ‘யாழ்ப்பாணத் தமிழர் கலாச்சார மையம்’ எனப் பெயர்மாற்றுவேன் எனச் சூளுரைத்துள்ளார். ரென்ட்டுக்கு ஏற்றமாதிரி கொள்கை விளக்கம் வைக்கின்ற பா உ அர்ச்சுனா முதலமைச்சர் என்பது யாழ் குடாநாட்டுக்குள் என்பது போலவும் யாழ்ப்பாணத் தமிழனுக்கு மட்டும்தான் கலாச்சாரம் இருப்பது போலவும் கருத்துக்களை முன்வைத்த வருகின்றார். மேலும் புலித்தோல் போர்த்திய தமிழ் தேசியவாதிகள் போல் தன்னுடைய வாக்கு வங்கியை நிரப்ப ‘தேசியத் தலைவரையும், மாவீரர்களையும் துணைக்கு அழைக்கின்றார். இதில் எந்தப் புலிக்குட்டி உண்மையான புலிக்குட்டி என்ற குழப்பத்தில் மக்கள் 2009 முதல் இருக்கின்றனர். இப்ப இன்னுமொரு புலிக்குட்டியும் முதலமைச்சர் கனவோடு களமிறங்கி உள்ளது. ‘அப்ப தலைவர் கனவில வந்து எலெக்சனும் மண்ணாங்கட்டியும் எல்லோரும் பகிஸ்கரியுங்கோ என்று சொன்னா கேட்பினமோ?’
ஜனாதிபதி அனுராவின் வருகையைத் தொடர்ந்து, பாதை திறப்புக்கள், காணி விடுவிப்புக்கள், யாழ் குடிநீர்ப் பிரச்சினை, மீனவர்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் நல்ல செய்திகளை யாழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.