துரைராசா ரவிகரன்

துரைராசா ரவிகரன்

போதைப்பொருள் பாவனையில் இருந்து எம் மக்களை காப்பாற்றுங்கள் – சபையில் பா.உ ரவிகரன் !

போதைப்பொருள் பாவனையில் இருந்து எம் மக்களை காப்பாற்றுங்கள் – சபையில் பா.உ ரவிகரன் !

 

வடபகுதியில் அதிகரிந்துள்ள போதைப்பொருள் ஊடுருவல்களாலும், போதைப்பொருள் பாவனைகளாலும் ஒருதொகுதி எதிர்கால சந்ததியினர் அழிவடைத் தொடங்கியுள்ளதாகவும் எனவே சட்டம் ஒழுங்கைச் சீர்ப்படுத்தி எதிர்கால தலைமுறையினரையும், பொதுமக்களையும் பாதுகாக்க விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மார்ச் 4 பாராளுமன்ற அமர்வின் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ் மாவட்ட தேசிய மக்கள் சக்தி பா உ ரஜீவன் வடக்கில் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தும் தனிநபர் பிரேரணையை நேற்று கொண்டு வருவதை முன்மொழிவது போன்று தமிழரசுக் கட்சியின் வன்னிப் பா உ துரைராசா ரவிகரனின் உரை அமைந்தது.

அங்கு மேலும் பேசிய பா.உ ரவிகரன், போதையால் நாடுமட்டுமல்ல எங்களுடைய மாவட்டங்களும் தள்ளாடிக்கொண்டுதான் இருக்கின்றது. இதுதொடர்பில் ஏற்கனவே நான் பாதுகாப்பு அமைச்சின் குழுநிலை விவாதத்தில்கூட போதைப்பொருட்களின் ஊடுருவல்கள் தொடர்பிலும், அவற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பிலும் பேசியிருந்தேன். இந்த விடயத்தில் கூடிய கரிசனைசெலுத்தி போதைப் பொருட்களிடமிருந்து எமது மக்களைக் காப்பாற்றுங்கள். அதற்குரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுங்கள் என்றார் பா உ துரைராசா ரவிகரன்.

இதற்கிடையே முல்லைத்தீவில் பள்ளி மாணவி கொண்டு சென்ற நீரை அருந்திய பள்ளி மாணவிகள் வாந்தி எடுத்து நோய்வாய்ப்பட்ட சம்பவம் மார்ச் 4ம் திகதி நடைபெற்றுள்ளது. இதனை விசாரிப்பதை விடுத்து மாணவி கசிப்பு கொண்டுவந்துவிட்டார் என்று எண்ணி ஆசிரியர் பள்ளி மாணவியைத் அடித்துள்ளார். தன்னுடைய மகளைத் தாக்கிய ஆசிரியரை அம்மாணவியின் தந்தை போய்த் தாக்கியுள்ளார். இப்பொதுழுது இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முல்லைத்தீவில் இரண்டு லட்சம் ஏக்கர் காணிகளை சுவீகரிப்பு செய்துள்ள வன இலாகா !

முல்லைத்தீவில் இரண்டு லட்சம் ஏக்கர் காணிகளை சுவீகரிப்பு செய்துள்ள வன இலாகா !

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள படையினர், வன இலாகா, வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட அரச கட்டமைப்புக்கள் மக்களுக்குரிய காணிகளை தொடர்ந்தும் அத்துமீறி அபகரிப்புச் செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர், மக்களின் காணிகளை ஆக்கிரமிப்புச் செய்கின்ற திணைக்களங்களைச் சார்ந்தவர்கள் இவ்வாறான பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களுக்கு வருவதில்லை. இந்த அபகரிப்பாளர்கள் இந்த கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறானவர்களின் செயற்பாடுளை மிக வன்மையாகக் கண்டிக்கின்றேன். ஏன் எனில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2009இற்கு முன்னர் வனவளத் திணைக்களத்திடம் 2,22,006 ஏக்கர், 2009ஆம் ஆண்டிற்குப் பின்னர் அடாவடித்தனமாக எமது மக்களின் காணிகளுக்கும் எல்லைக்கல்லிட்டு 4,35,000 ஏக்கர் காணிகள் வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ளது. அந்த வகையில் 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் எமது மக்களின் காணிகளை விடுதலைப் புலிகள் பாதுகாத்தனர். நிலம்தான் எமது உரிமை, நிலம் இல்லையேல் எதுவுமில்லை. அவ்வாறிருக்க எமது மக்களின் காணிகள் அனைத்தையும் அபகரிப்புச்செய்தால்> எமது மக்கள் காணியின்றி தெருவிலா இருப்பது? என்றார்.

இதேவேளை அண்மையில் யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மக்களின் காணி தொடர்பான உரிமைகள் மீறப்பட கூடாது என தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

புலிகள் காலத்தில் இல்லாத போதைப்பொருட்கள் தற்போது எங்கிருந்து வருகின்றன ..? – ரவிகரன் எம்.பி கேள்வி

புலிகள் காலத்தில் இல்லாத போதைப்பொருட்கள் தற்போது எங்கிருந்து வருகின்றன ..? – ரவிகரன் எம்.பி கேள்வி

வட பகுதி எங்கும் விடுதலைப்புலிகளின் காலத்தில் இல்லாத போதைப்பொருள் பாவனை தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது. போதைப்பொருள் அதிகரிப்பை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் தேவை என முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது முல்லைத்தீவு மாவட்டம் உட்பட வடபகுதி எங்கும் புதுவிதமான பல போதைப்பொருட்கள் பெருகிவருவதாக மக்கள் எம்மிடம் முறையிடுகின்றனர். யுத்தம் மௌனிக்கப்பட்ட பிறகு, கடந்தகால அரசாங்கங்கள் எமது தமிழ் மக்களை அழிக்கும் நோக்கில் இந்த போதைப்பொருள் பாவனையை எமது பகுதிகளில் ஊடுருவச் செய்து வேடிக்கை பார்த்தனர் .

தற்போதும் பெரியவர்கள் முதல் இளையோர் வரை பெருமளவானோர் போதைப்பொருள் பாவனைகளால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அரசிடம் போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

“தமிழர்களுக்கு எதிராக நடக்கும் அடாவடிகளை பொறுத்து வேடிக்கை பார்ப்பதுதான் ஐநாவின், மனித உரிமை ஆணைக்குழுவின் வேலை.” – துரைராசா ரவிகரன் 

மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால், முதலில் வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு தீர்வை கூறுங்கள் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு நேற்று(10) வடக்கு, கிழக்கில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன, இந்நிலையில் அவ்விடயம் குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் குறித்து மேலதிகமாக அவர் கருத்து தெரிவிக்கையில்,

“காணாமலாக்கப்பட்ட உறவுகள் 2500 நாட்களுக்கு மேலாக தொடர்ச்சியாக வீதிகளில் நின்று தம் உறவுகளுக்காக போராடிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் முடிவுகள் எதுவுமில்லை. இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம். மனித உரிமை ஆணையக்குழு சம்பந்தமாக அல்லது ஐ.நா சம்பந்தமாகவோ எமக்கு எந்த தீர்வும் தரவில்லை.

எங்கள் நிலங்கள் பறிக்கப்படுகின்றன, மதங்கள் அழிக்கப்படுகின்றன, கடலிலே மீன்பிடிக்க முடியவில்லை, வயலிலே பயிர்கள் , விவசாயம், தோட்டங்கள் செய்ய முடியவில்லை, காணாமலாக்கப்பட்ட உறவுகளை தேடி கிடைக்கவில்லை, சிறையிலிருப்பவர்களை விடுவிக்கவில்லை. இவ்வாறு இலங்கை அரசாங்கம் செய்யும் போது அதனை பொறுத்து வேடிக்கை பார்ப்பதுதான் ஐநாவின், மனித உரிமை ஆணைக்குழுவின் வேலை.

இவ்வாறான சூழ்நிலையில், சர்வதேச மனித உரிமைகள் தினத்தை அனுஷ்டிப்பது பிழை என்பதை சுட்டிக்காட்டுகிறேன்.” என்றார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் மூடி மறைக்கப்படும் அபாயம்..?

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் மூடி மறைக்கப்படுமா என்ற சந்தேகம் தற்போது எழுகின்றது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியினை நேற்று நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இதனைத் தெரிவித்துள்ளார்.

 

கொக்குதொடுவாய் புதைகுழி தொடர்பான விடயத்தை பார்க்கும் போது ஏற்கனவே இறுதி நாளன்று 17 உடலங்கள் புதைகுழியின் ஊடாக கண்டுபிடிக்கப்பட்டதாகவும், நிறுத்தப்பட்ட தினத்தின் போது ஒக்டோபர் மாதம் நடுப்பகுதி அல்லது பிற்பகுதி அடுத்த அகழ்வு ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

ஆனால் அண்மையில் நிதி போதாத நிலமையை சுட்டிக்காட்டி காலதாமதம் ஆகலாம் என்று ஒரு தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

 

எங்களுக்கு இதில் ஒரு ஐயம் ஏற்படுகின்றது என்னவென்றால் காலதாமதங்கள் , நிதி இல்லை என்று கூறுவதும், ஒக்டோபர் மாதத்திற்கு பிற்போடப்பட்டதும், குறித்த காலப்பகுதி மழை காலமாக இருப்பதாலும் இப்படியே மூடி மறைக்கப்பட்டு விடுமோ என்ற சந்தேகம் ஒன்று ஏற்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த நிலையில், சட்டத்தின் ஆட்சியை நடத்துமாறும் வெளிப்படைத்தன்மையை மக்களோடு பேணுமாறு மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

 

“சனல் – 4 வீடியோவினை தொடர்ந்து 300 பேர் இறந்ததற்கே அறிக்கை விடுபவர்கள் இரண்டு லட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் பேசுகிறார்கள் இல்லை.” – துரைராசா ரவிகரன் விசனம் !

“சனல் – 4 வீடியோவினை தொடர்ந்து 300 பேர் இறந்ததற்கே அறிக்கை விடுபவர்கள் இரண்டு லட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் பேசுகிறார்கள் இல்லை.” என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கவலை வெளியிட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ,

இன்றைய தினம் உலக சமாதான தினமாகும். ஆனால் இலங்கையை பொறுத்தவரை சமாதானம் என்பது எட்டாக்கனியாகவே உள்ளது.

 

கொக்குதொடுவாய் மனித புதைகுழி விடயத்திலே அநீதி இழைக்கப்படுமோ என்ற அச்சம் காணப்படுகின்றது. அதேபோன்று ஐ.நாவின் ஆணையாளர் நாயகம் இலங்கையிலே போர்க்குற்றம் மீறப்பட்டுள்ளது, மனித உரிமை மீறப்பட்டுள்ளது, வறுமையில் இலங்கை 25%ஆக இருக்கின்றது, சர்வதேச நாடுகள் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற கருத்துக்கள் அடங்கிய அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

 

எங்களுடைய கதறல்கள், கூக்குரல்கள் வீதிகளில் நின்று போராடுகின்ற போராட்டங்கள் என அத்தனை போராட்டங்களாலும் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு பரிசீலிக்கப்பட்டு இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற கருத்து குறிப்பிடப்பட்டும் சர்வதேச நாடுகள் ஏன் இதுவரை தலையிடவில்லை. இப்படி ஒரு கொடுமையான அரசுக்கு கீழ் தான் நாம் வாழ்கின்றோம்.

 

வடக்கு கிழக்கு மக்களின் நிலங்களை எடுக்கின்றார்கள், சிறுக சிறுக மதங்களை அழிக்கின்றார்கள் பௌத்த மயமாக்குகின்றார்கள். கடலும் பறிபோய் கொண்டிருக்கின்றது. இப்படி எமது வாழ்வாதாரம் உட்பட நிலங்களையும் அபகரித்து எங்களை பூர்வீகமற்றவர்களாக்குகின்றார்கள் இந்நிலை மாற வேண்டும்.

 

சனல் 4 ஊடகத்தில் ஈஸ்டர் குண்டு தாக்குதல் காணொளி வெளியானதன் பிற்பாடு 300க்கு மேற்பட்ட மக்கள் இறந்ததற்காக எல்லோரும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதை நாம் மறுக்கவில்லை. கொலைகார கும்பல் தான் ஆட்சியில் இருக்கின்றது. ஆண்டாண்டு காலமாக ஆட்சி செய்து வந்திருக்கின்றது. என்பதற்கு மறுப்பதற்கில்லை ஆனால் இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இறந்து பல ஆண்டு காலமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் கொடுமை இந்த அரசாங்கத்திற்கு ஏன் எங்கள் நிலமை அவர்களது பார்வையில் படவில்லை.

 

சர்வதேசம் நேரடியாக இதற்கு துணைநிற்க வேண்டும் அல்லது சர்வதேச ஆணையாளர் அறிக்கைகேற்ப கருணை காட்டி இலங்கை அரசாங்கத்தை சர்வதேச பொறிமுறைகுள் விசாரணைக்குட்படுத்தி நீதியினை பெற்றுதர வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இராணுவத்திடம் சரணடைந்த நம் பிள்ளைகளின் சடலங்களே கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் – துரைராசா ரவிகரன்

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் சரணடைந்த பிள்ளைகளையே புதைத்திருக்கிறார்கள் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

 

இரண்டாம் நாளான நேற்றைய தினம் (07.09.2023) அகழ்வு பணி நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வானது நேற்று முந்தினம் ஆரம்பிக்கப்பட்டு நேற்றும் தொடர்ந்து நடைபெற்றிருந்தது.

குறித்த இடத்திற்குள் செல்ல முடியாது. இருந்தாலும் ஒரு தடவை அருகிலே நின்று பார்க்க சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. நாங்கள் அவதானித்த வகையில் பெண்ணினுடைய சடலங்கள் உறுதிபடுத்த கூடியதாக தென்படுகின்றது.

அதே நேரம் சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவ கூறியது போல் துப்பாக்கி குண்டு உடையில் துளைத்திருப்பதனை காணக்கூடியதாக இருந்தது. ரொபி கடதாசி ஒன்றும் அதில் பகுப்பாய்விற்கு எடுத்து வைக்கப்பட்டிருந்தது.

 

இதனை விட நாங்கள் அவதானித்த வகையில் கண்ணுக்கு கட்டும் துணி கூட எடுத்ததை காணமுடிந்தது.

இதிலிருந்து யோசிக்க கூடியதாக உள்ளது என்னவெனில் பல சடலங்கள் இதில் தென்படலாம் என்பது இதில் இருக்கும் அனைவருக்குமே தெரியும்.

ஏற்கனவே நான் கூறியது போல் 2009 ஆம் ஆண்டு இறுதி பகுதியில் சரணடைந்த விடுதலை புலிகளை கொண்டுவந்து கண்ணை கட்டி துப்பாக்கியால் சுட்டு அல்லது சித்திரவதை செய்து இவ்வாறு புதைத்திருக்கிறார்கள் என்பது நான் அறிந்த வகையில் காணக்கூடியதாக உள்ளது என மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

“முல்லைத்தீவில் மக்கள் குடியிருக்க நிலமில்லை. ஆனால் 74.24 சதவீதபான நிலப்பரப்பு வனவள திணைக்களத்தின் ஆளுகைக்குள் உள்ளது.” – துரைராசா ரவிகரன் விசனம் !

“முல்லைத்தீவில் மக்கள் குடியிருக்க நிலமில்லை. ஆனால் 74.24 சதவீதபான நிலப்பரப்பு வனவள திணைக்களத்தின் ஆளுகைக்குள் உள்ளது.” என  முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் 3389 குடும்பங்களுக்கு குடியிருப்பதற்கு நிலம் இல்லை. தொழில் முயற்சிக்கென 28,626 இளைஞர், யுவதிகள் ஒரு ஏக்கர் வீதம் தமக்குக் காணி தருமாறு மாவட்ட செயலகத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ள போதிலும் அதற்கு சாதகமான பதில்கள் இல்லை.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் 2022ஆம் ஆண்டுக்கான புள்ளிவிபரத்தின் அடிப்படையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பானது 2415 சதுர கிலோ மீற்றர் தரையாகவும், 202 சதுர கிலோ மீற்றர் உள்ளக நீர்ப் பிரதேசமாகவும் காணப்படுகிறது.

இதில் கடந்த 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் 222006 ஏக்கர், 36.72 சதவீதமான நிலம் வனவள திணைக்களத்தின் ஆளுகைக்குட்பட்டு காணப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் 167484 ஏக்கர் 30.37 நிலப்பரப்பை வனவள திணைக்களம் மேலதிகமாக தனது ஆளுகையின் கீழ் கொண்டுவந்துள்ளது.

தற்போது காடு பேணல் சட்டத்தின் கீழ் ஒதுக்கக்காடுகளாக மீண்டும் 42,631 ஏக்கர் 7.15 சதவீதமான நிலப்பரப்பை வனவள திணைக்களம் கோரியுள்ளது. அவ்வாறு குறித்த நிலப்பரப்பும் வனவள திணைக்களத்தினால் உள்வாங்கப்பட்டால் மொத்தமாக உள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் நிலப்பரப்பில் 74.24 சதவீதபான நிலப்பரப்பு வனவள திணைக்களத்தின் ஆளுகைக்குள் உள்வாங்கப்பட்டுவிடும்.

மிகுதி நிலப்பரப்பில் பெரும்பகுதியை மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, தொல்லியல் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், கனியமணல் திணைக்களம், படையினர் உள்ளிட்ட தரப்பினர் ஆளுகை செய்கின்றனர்.

குறிப்பாக வனவள திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலப்பரப்பில், மாவட்டத்தின் அபிவிருத்தி தேவைக்காக சுமார் 50,000 ஏக்கர் காணி தேவை எனவும், அவற்றை விடுவித்து தருமாறு மாவட்ட செயலகம் கோரிக்கை விடுத்துள்ளபோதிலும் முறையான பதில்கள் இதுவரையில் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால், வேறு திணைக்களங்கள் காணிக் கோரிக்கை முன்வைக்கும்போதும், குடியேற்றங்களுக்காக காணிக் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றபோதும் காணிகளை விடுவிக்கின்ற நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 3389 குடும்பங்களுக்கு இதுவரை குடியிருக்க காணி இல்லாத நிலை காணப்படுகிறது.

இதுதவிர முல்லைத்தீவு மாவட்டத்தில் 89 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ள நிலையில், கால்நடைகளுக்குரிய மேய்ச்சல் தரைகளும் இதுவரையில் வழங்கப்படவில்லை.

நீண்ட காலமாக இவ்வாறு மேய்ச்சல் தரைக்கான கோரிக்கை முன்வைக்கப்படுகின்றபோதிலும் இதுவரை மேய்ச்சல் தரைக்குரிய காணிகள் வழங்கப்படவில்லை.

அந்த வகையில், தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்கள் குடியிருக்க காணி இல்லாததோடு, கால்நடைகளுக்கும் மேய்ச்சல் தரைக்கான காணிகள் இல்லை என்கிற நிலைமையே ஏற்பட்டுள்ளது என்றார்.

“மீண்டும் ஓர் ஆயுதக் கலாசாரத்துக்கு தமிழர்களை தள்ளுவதற்கு  சிங்கள இனவாதிகள் முயற்சிக்கின்றனர்.” – துரைராசா ரவிகரன்

“மீண்டும் ஓர் ஆயுதக் கலாசாரத்துக்கு தமிழர்களை தள்ளுவதற்கு  சிங்கள இனவாதிகள் முயற்சிக்கின்றனர்.” என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜயந்த சமரவீர மற்றும் சரத் வீரசேகர ஆகியோர் தெற்கில் உள்ள பெரும்பான்மையின மக்களின் மன நிலையைக் குழப்பி, இனவாதத்தைத் தூண்டி அரசியலில் ஈடுபடும் அரசியல் நோயாளிகள் எனவும் இவ்வாறான அரசியல் நோயாளிகளை பெரும்பான்மையின மக்கள் அரசியலில் இருந்து ஓரங்கட்ட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே ரவிகரன் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:

முல்லைத்தீவு குருந்தூர் மலையை பௌத்த தொல்பொருள் சின்னமாக பிரகடனப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்திருப்பது மிகவும் வேடிக்கையானது.  குருந்தூர் மலையும், குருந்தூர் மலை அமைந்துள்ள தண்ணிமுறிப்பு கிராமமும் தமிழ் மக்களுக்கு உரியவையாகும்.  முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு பகுதியானது சைவத் தமிழ் மக்களின் பூர்வீக கிராமமாகும். அங்கு பரம்பரை பரம்பரையாக சைவத் தமிழ் மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.

தண்ணிமுறிப்பில் வாழ்ந்த பூர்வீகத் தமிழ் மக்கள் பாரியளவில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு போன்ற தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதுமாத்திரமின்றி தேன் எடுத்தல், மிருகங்களை வேட்டையாடுதல் உள்ளிட்ட செயற்பாடுகளிலும் அங்கு வாழ்ந்த பூர்வீக தமிழர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். இவ்வாறாக, தண்ணிமுறிப்பில் வாழ்ந்த பூர்வீகத் தமிழர்கள் நெல் மற்றும் சிறுதானியங்களுடனும், பால், தயிர், நெய், தேன், இறைச்சி என்பவற்றோடு பாலை, வீரை, முரளி உள்ளிட்ட காட்டுப் பழங்களை உணவுகளாக உட்கொண்டு தன்னிறைவாக வாழ்ந்துவந்துள்ளனர்.

தண்ணிமுறிப்பு கிராமத்தை தழுவி ‘நிலக்கிளி’ எனும் நாவல் இலக்கியமொன்று எழுதப்பட்டுள்ளது. அந்த நாவலை எழுத்தாளர் அண்ணாமலை பாலமனோகரன் எழுதியுள்ளார். தண்ணிமுறிப்பு பகுதியில் வாழ்ந்த பூர்வீகத் தமிழ் மக்களின் வாழ்வியலை இந்நாவல் தெளிவாகக் கூறுகிறது. அந்த நாவலில் கூட எமது தமிழ் மக்கள் குருந்தூர் மலையில் சைவ வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. சைவ வழிபாட்டு அடையாளமான சூலம் இருந்ததாகவும் குறித்த நாவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 1984ஆம் ஆண்டு இந்த தண்ணிமுறிப்பு பகுதியில் வாழ்ந்த சைவத் தமிழ் மக்கள், அப்போது நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக அங்கிருந்து இடம்பெயர்ந்திருந்தனர். குறிப்பாக, 1984இல் முல்லைத்தீவு மாவட்டத்தில் தண்ணிமுறிப்பின் பக்கத்து கிராமங்களான ஆண்டான் குளம், கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, ஒதியமலை உள்ளிட்ட பகுதிகளில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்கள் கூட இடப்பெயர்வைச் சந்தித்திருந்தனர்.

இவ்வாறு இடப்பெயர்வை சந்தித்த தமிழர்களின் பூர்வீகக் கிராமங்களிலேயே குருந்தூர் மலை அமைந்துள்ள தண்ணிமுறிப்பு, ஆண்டான்குளம் ஆகிய கிராமங்களில் இதுவரையில் மக்கள் மீள்குடியமர்த்தப்படவில்லை. குறித்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பல தடவை தம்மை தமது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்துமாறு கோரியும் இதுவரை மீள்குடியேற்றம் இடம்பெறவில்லை.

இவ்வாறு அங்கு வாழ்ந்த பூர்வீகத் தமிழர்களை மீள்குடியேற்றம் செய்யாமல், திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு வேலைகளை செய்துவருகின்றனர்.  அந்த திட்டத்தின்படி, அங்கு வாழ்ந்த தமிழ் மக்கள் மீள்குடியமர்த்தப்படவில்லை என்பதுடன், தண்ணிமறிப்பு பாடசாலை தற்போது பூதன்வயல் கிராமத்தில் இயங்கிவருகிறது.

இவ்வாறான சூழலில் தொல்லியல் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்து, எம்மை குருந்தூர் மலைப் பகுதிக்குள் போகவிடாமல் தடுத்து, அங்கிருந்த சைவ வழிபாட்டு அடையாளமான திரிசூலத்தையும், முன்னே இருந்த கல்லையும் காணாமல் ஆக்கியுள்ளனர். அத்தோடு, அங்கு புதிதாக பாரியளவில் விகாரையொன்று நிறுவப்பட்டது.

இவ்வாறு தமிழர்களின் பூர்வீக குருந்தூர் மலையில் விகாரையை அடாத்தாக அமைத்துவிட்டு, அதை பௌத்த சின்னமாக அறிவிக்க கோருவது மிகவும் அபத்தமானது.

மேலும், அங்கே அகழ்வாய்வுகளின்போது சிவலிங்கம் ஒன்று வெளிப்பட்டிருந்தது. அவ்வாறு அகழ்வாய்வுகளில் பெறப்பட்ட சிவலிங்கமானது எட்டுப் பட்டை கொண்ட எண்முகத் தாராலிங்கம் என பல ஆய்வாளர்களாலும் சொல்லப்பட்டது. குறித்த சிவலிங்கம் பல்லவர் காலத்துக்குரியதாக இருக்கலாம் எனவும் ஆய்வாளர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில் அவ்வாறு பெறப்பட்ட சிவலிங்கத்தை எடுத்து தற்போது பௌத்த விகாரையின் உச்சிப் பகுதியில் வைத்துள்ளனர். இந்த சிவலிங்கத்தை விகாரையின் ஒரு பாகமாக சித்திரித்துள்ளனர்.

இப்படியாக அங்கு திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட இன அழிப்புச் செயற்பாடுகள் கட்டங்கட்டமாக நகர்த்தப்பட்டு வருகின்றன. கடந்த 2009ஆம் ஆண்டு எமது தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு பாரியதொரு இன அழிப்பை மேற்கொண்டது.

தற்போது எமது தமிழர்களின் பூர்வீகம், இருப்பு, பண்பாடு, பாரம்பரியம் என்பவற்றை கேள்விக்குள்ளாக்குகின்ற விதத்தில் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை இலங்கை அரசாங்கமும் பௌத்த சிங்கள பெருந்தேசியமும் இணைந்து முன்னெடுத்துள்ளது.

குருந்தூர் மலை விவகாரத்தில் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு வேலைகள் கட்டங்கட்டமாக நகர்த்தப்படுவதை எம்மால் உணரமுடிகிறது.

குருந்தூர் மலையில் அகழ்வாய்வு என்ற போர்வையில் அங்கிருந்த தமிழர் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டன. அதேவேளை அங்கு புதிதாக பௌத்த விகாரை அமைக்கப்பட்டு, பௌத்த வழிபாட்டு இடத்தைப் போன்று சித்திரிப்பு வேலைகள் முன்னெடுக்கப்பட்டன.

தொடர்ந்து தண்ணிமுறிப்பு பூர்வீகத் தமிழ் மக்கள் வாழ்ந்த காணிகள், தமிழ் மக்களின் விவசாயக் காணிகள் உள்ளடங்கலாக சுமார் 632 ஏக்கர் காணிகளை விகாரைக்குரிய காணிகளாக அபகரித்துள்ளனர்.

இவ்வாறு புதிதாக அமைக்கப்பட்ட விகாரைக்கு கல்வெட்டு ஒன்று அமைக்கப்பட்டு, அதில் போலியான வரலாற்றுத் தகவல்கள் எழுதப்பட்டுள்ளன.

இத்தகைய சூழலில், ஜயந்த சமரவீர குருந்தூர் மலையை பௌத்த சின்னமாக அறிவிக்கும்படி கூறுகின்றார்.

இவ்வாறாக எமது தமிழர்களின் பூர்வீக வரலாற்று இடத்தை அத்துமீறி அபகரித்து வைத்துக்கொண்டு, தமிழர்களின் வரலாறுகளை மூடி மறைத்துவிட்டு, அதற்கு மேல் பௌத்த வரலாறுகள் இங்கு புதிதாக எழுதப்படுகின்றன.

இதன் மூலம் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாக்கப்படுகிறது. தமிழர்களான எமக்கு இந்த நாட்டிலே வரலாறுகள் இல்லை. தமிழர்கள் இந்த நாட்டில் ஏதிலிகளாக வந்தவர்கள் என காட்டுவதற்கு சிங்களம் முயற்சிக்கிறது. இந்த நாட்டின் பூர்வீகக்குடிகளான எம்மால் சிங்களத்தின் இத்தகைய செயற்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

குருந்தூர் மலையில் பௌத்த வழிபாட்டுத்தலம் இருந்தது என பொய்களை கூறும் பௌத்த துறவிகள், சிங்கள கடும்போக்காளர்கள், சரத் வீரசேகர மற்றும் இந்த ஜயந்த சமரவீர போன்ற சிங்கள இனவாதிகளாலேயே இங்கு இனங்களுக்கிடையில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

குருந்தூர் மலையை பௌத்த சின்னமாக அறிவித்தால் இங்கு இனங்களுக்கிடையில் பாரிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புக்கள் இருக்கின்றன. இவ்வாறான தான்தோன்றித்தனமான செயற்பாடுகளால்தான் இந்த நாட்டில் கடந்த காலத்தில் தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இந்நிலையில், அந்த ஆயுதப் போராட்டத்தால்  எமது தமிழ் மக்கள் பல உயிர்களை இழந்துள்ளனர். அவர்களின் அன்றாட வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு நலிவடைந்திருக்கின்ற எமது மக்கள் மீது இவ்வாறான அழுத்தங்களை பிரயோகித்து, அவர்களை மீண்டும் ஓர் ஆயுதக் கலாசாரத்துக்கு தள்ளுவதற்கு இந்த சிங்கள இனவாதிகள் முயற்சிக்கின்றனர்.

தெற்கில் இருக்கின்ற பெரும்பான்மையின மக்களுக்கு பொய்யான தகவல்களை இந்த இனவாதிகள் தெரிவிக்கின்றனர்.

நேற்று வெள்ளிக்கிழமை (21) துரைராசா ரவிகரன் உள்ளிட்டவர்கள் குருந்தூர் மலையில் பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ளவுள்ளதாக ஜயந்த சமரவீர என்னும் இனவாதி பாராளுமன்றில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

உண்மையில், நாம் கடந்த 20ஆம் திகதி (வியாழக்கிழமை) குருந்தூர் மலையில் பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்வதாக இருக்கவில்லை. அப்படியிருக்கும்போது தெற்கில் இருக்கின்ற பெரும்பான்மை இன மக்களை வன்முறைக்குத் தூண்டும் விதமாக அவர் இவ்வாறு போலியான தகவல்களை தெரிவித்து வருகிறார்.

குறிப்பாக, சரத் வீரசேகர, ஜயந்த சமரவீர போன்றவர்கள் தெற்கில் தமது வாக்கு வங்கியை பலப்படுத்துவதற்காக போலியான, இனவாதத்தைத் தூண்டும் விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்தும் அவர்கள் பாராளுமன்ற கதிரைகளில் அமர வேண்டுமெனில், இவ்வாறு இனவாதத்தை கக்கவேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கின்றது. இவர்கள் தமது அரசியல் இருப்புக்காக எதையும் செய்யக்கூடிய அரசியல் மனநோயாளிகள் என்றே சொல்லவேண்டும்.

கனேடிய உயர்ஸ்தானிகரை வெளியேற்றச் சொல்வது, முல்லைத்தீவு தமிழ் நீதிபதியை விமர்சிப்பது, கனேடிய உயர்ஸ்தானிகரை சந்தித்தவர்களை இந்த நாட்டிலிருந்து நீக்கச் சொல்வது உள்ளிட்ட விடயங்களை பார்க்கும்போது, சரத் வீரசேகரவை இந்த அரசியல் மனநோய் எவ்வளவு தூரம் ஆட்கொண்டுள்ளது என்பதை உணர முடிகிறது.

அதேபோல ஜயந்த சமரவீரவும் நடக்காத ஒன்றை நடந்ததாக சொல்லி, தமிழர்களின் தொல்லியல் இடத்தை பௌத்த தொல்லியல் இடமாக அறிவிக்குமாறு கூறி, தெற்கில் உள்ள பெரும்பான்மை இன மக்கள் மீது இனவாதத்தை விதைத்து, அப்பாவி சிங்கள மக்களிடமிருந்து வாக்குகளை அறுவடை செய்வதற்கு முயற்சிக்கின்றார்.

இவ்வாறான அரசியல் மனநோய் உள்ளவர்களை தெற்கிலுள்ள பெரும்பான்மை மக்கள் இனங்கண்டு, இவர்களை அரசியலில் இருந்து ஓரங்கட்டவேண்டும்.

தமிழ் மக்களான நாங்கள் எமது பூர்வீக வாழ்விடங்களில் எமது பூர்வீக, பண்பாட்டு, வாழ்வியல் அம்சங்களுடன் சிறப்பாக வாழ விரும்புகின்றோமே தவிர, இவ்வாறான இனவாதத்தையோ, பிரிவினையையோ, வன்முறையையோ ஒருபோதும் விரும்பவில்லை என்றார்.

வன்னி இராணுவ முகாம்களிலுள்ள விகாரைகளின் கீழ் காணாமலாக்கப்பட்டோர் புதைக்கப்பட்டுள்ளார்கள் !

முல்லைத்தீவு மாவட்டத்தில் இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையினர் நிலைகொண்டுள்ள காணிகள் மற்றும் இராணுவ முகாம்களுக்குள் அமைக்கப்பட்டுள்ள விகாரைகளின் கீழ் மனித புதைகுழிகள் காணப்படலாம் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்ததின் போது இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

கொக்குத்தொடுவாய் பகுதியில் நேற்று இடம்பெற்ற மனித எச்சங்களை அகழும் பணிகளை பார்வையிட்ட பின்னர் அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த ஆராய்ச்சிகளில் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் இங்கு வந்திருக்கின்றதா? என்று எங்களுக்கு தெரியவில்லை. இதனால், சரியான முறையில் இந்த அகழ்வாராய்ச்சி குறித்த அறிக்கை வருமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

ஏனென்றால், இதில் சர்வதேச நிபுணத்துவம் வாய்ந்த நிபுணர்களும் கலந்துகொள்ள வேண்டும். அல்லது இந்தக் குழாமில் இருக்க வேண்டும் என்று மக்களும் நாங்களும் விரும்புகிறோம்.

இவர்கள் சரணடைந்தவர்களை மன்னிப்பு வழங்காமல் தமது எண்ணத்திற்கு கொண்டு வந்து இங்கே புதைத்திருக்கலாம் என்று மக்கள் குமுறுகின்றார்கள்.வட்டுவாகல், கேப்பாபிலவு போன்ற இடங்களில் உள்ள இராணுவ முகாம்களில் புத்த விகாரைகளை பெரிதாக கட்டி இருக்கிறார்கள். இந்த விகாரைகளுக்கு கீழே கூட இவ்வாறாக உடலங்கள் கிடக்கிறதோ என்ற ஊகங்கள் கூட எமது மக்களிடம் உள்ளது.

என்னிடம் இது தொடர்பில் மக்களும் பல தடவைகள் கதைத்திருக்கிறார்கள். இதனை சர்வதேச குழு சரியான முறையில் விசாரணை மேற்கொண்டு தமிழ் மக்களுக்கு உரிய நியாயமான தீர்வுகளை வழங்க வேண்டும்.

இவ்வாறான விகாரைகளின் அடிப்பகுதிகளையும் தோண்டிப் பார்ப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தர வேண்டும்” என அவர் கோரியுள்ளார்.