தமிழ்ச்செல்வன்

தமிழ்ச்செல்வன்

20 ஆண்டுகளாக ஊடகப் பணியாற்றிவரும் தமிழ்ச்செல்வன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் எதிர்காலத்தின் மீதான அச்சுறுத்தலாகும் – கிளிநொச்சி ஊடக அமையம்

20 ஆண்டுகளாக ஊடகப் பணியாற்றிவரும் தமிழ்ச்செல்வன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் எதிர்காலத்தின் மீதான அச்சுறுத்தலாகும் – கிளிநொச்சி ஊடக அமையம்

கிளிநொச்சியில் சுயாதீன  ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வனை  இனந்தெரியாதோரால்  கடத்த முற்பட்டதையும்  தாக்கப்பட்டமையையும் கிளிநொச்சி ஊடக அமையம் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இது குறித்து அமையம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், எமது ஊடக அமையத்தின் செயலாளரும் சுயாதீன ஊடகவியலாளருமான முருகையா தமிழ்ச்செல்வன், நேற்று மாலை தனது பணியை முடித்துக்கொண்டு வீடு திரும்பும் வழியில் வாகனத்தில் வந்தோர் அவரை இடைமறித்து தமது வாகனத்தில் பலவந்தமாக ஏற்ற முற்பட்டுள்ளனர். இதை எதிர்த்துத் தமிழ்ச்செல்வன்  போராடியபோது, கடத்தற்காரர்கள் தமிழ்ச்செல்வனைத் தாக்கி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து தமிழ்ச்செல்வன்  கிளிநொச்சி மாவட்ட மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அரசியல் குறைபாடுகள், மக்கள் எதிர்நோக்குகின்ற சமூகப் பிரச்சினைகள், நிர்வாக முறைகேடுகள், ஊழல், சுற்றுச் சூழல் சிதைப்பு, சட்டவிரோதச் செயற்பாடுகள், போதைப்பொருள்பாவனை போன்றவற்றுக்கு எதிராக மிகவும் துணிச்சலான முறையில் செய்திகளையும் செய்திக் கட்டுரைகளையும் அளித்து வரும் தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதலானது, அவருடைய பணிகளை முடக்குவதற்கான உள்நோக்கைக் கொண்டதாக சந்தேகம் கொள்ள வைக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாக ஊடகப் பணியாற்றிவரும் தமிழ்ச்செல்வன், யுத்த காலத்திலும் யுத்தத்திற்குப் பிந்திய காலத்திலும் துணிச்சலாவவும் நேர்மையாகவும் பணியாற்றியவர். இத்தகைய சிறப்பு மிக்க ஊடகவியலாளர் ஒருவரின் மீதான தாக்குதலானது,  மக்களுடைய நல் வாழ்வுக்கான எதிர்காலத்தின் மீதான அச்சுறுத்தலாகவே கொள்ளப்பட வேண்டும்.  ஊடகவிலாளர் மீதான இந்தக் கடத்தல் முயற்சியும் தாக்குதலும் ஊடகத்துறையின் சுயாதீனத்துக்கும் ஊடகவியலாளரின் சுதந்திரமான செயற்பாட்டுக்கும் விடப்பட்டுள்ள அச்சுறுத்தலாகும். நாடு புதிய பாதையில் பயணிக்கவுள்ளதாக  அறிவிக்கப்பட்டிருக்கும் சூழலில் இத்தகைய சம்பவங்கள் மக்களிடையே பதட்டத்தை உருவாக்குவதோடு ஊடகத்துறைக்கும் பாரிய சவாலை ஏற்படுத்துகிறது. இந்தச் சம்பவம் குறித்து உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

இதேபோன்று அண்மையில் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஊடகவியலாளர்களின் வீடுகள் எரிக்கப்பட்டு வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு தாக்கப்பட்டமைக்கான சரியான தீர்வுகளை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில்  தொடர்வதால்தான் தொடர்ந்தும் இவ்வாறான தவறுகள் இடம்பெறுகின்றன. எனவே இனியும் கால தாமதம் செய்யாமல் உறுதிய முறையில் உரிய நடவடிக்கையை அரசும் காவல்துறையினரும் மேற்கொள்ள வேண்டும் எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

கிளி. பிரபல சூழலியல், புலனாய்வு ஊடகவியலாளர் தமிழ் கடத்தப்பட்டு தாக்கப்பட்டார் ! வேடிக்கை பார்த்த மக்கள் !

கிளிநொச்சியில் நன்கு அறியப்பட்ட சூழலியல் மற்றும் புலனாய்வு ஊடகவியலாளர் மு தமிழ்ச்செல்வன் கறுப்பு நிற பிக்கப் வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தமிழ்செல்வனோடு தொடர்பு கொண்ட போது, தான் நீர்திணைக்களத்திலிருந்து மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இச்சம்பவம் ஏ9 வீதியில் உள்ள கிளிநொச்சி ரெலிக்கொம்மிற்கு அருகில் இடம்பெற்றதாகத் தெரிவித்தார்.

இச்சம்பவம் பற்றி விபரித்த தமிழ்செல்வன், “நான் வந்த மோட்டர் சைக்கிளுக்கு குறுக்காக கறுப்பு நிற பிக்கப்பில் வந்தவர்கள் வாகனத்தை நிறுத்தினர். என்னை நோக்கி வந்து என்னை தங்களுடைய பிக்கப்புக்குள் பலவந்தமாக இழுத்துப் போட்டனர். ஆனாலும் என்னுயை கால்கள் வெளியே நீட்டிக்கொண்டிருந்ததால், கடத்த வந்தவர்களுக்கு பிக்அப் கதவை மூடமுடியவில்லை. மீண்டும் என்னை நோக்கி வந்து காலை உள்ளுக்கு விட்டு கதவை மூட முற்பட்டனர். அப்போது அவர்களை உதைத்து உதறித் தப்பிக்க முயன்றேன்” எனத் தெரிவித்தார் தமிழ்ச்செல்வன்.

தேசம்நெற்க்கு தமிழ்ச்செல்வன் மேலும் தெரிவிக்கையில், “உதறித் தள்ளிவிட்டு தப்பி ஓட முயன்றபோது அவர்கள் என்னைக் கலைத்துப் பிடித்து செமையாகத் தாக்கினர். அதனாலேயே மருத்துவமனைக்கு வரும்நிலையேற்பட்டது. ஆனாலும் அவர்களால் என்னை திருப்பி வானுக்குள் தள்ளமுடியவில்லை. அவர்களிடம் இருந்து தப்பிக்க முடிந்தது” எனத் தெரிவித்தார். “இந்த நிலையிலும் எனக்கு ஏற்பட்ட மிகுந்த மனவருத்தம் என்னவென்றால், என்னை வானுக்குள் போட்டு கடத்த முற்பட்ட போதும், என்னைத் தாக்கிய போதும் மக்கள் அதனைப் பார்த்துக்கொண்டே இருந்தனர். இச்சம்பவத்தை மக்கள் கடந்து போய்க்கொண்டே இருந்தனர். யாரும் உதவிக்கு வரவில்லை. யாருக்காக நான் எழுதிக்கொண்டு இருக்கிறேனோ, அவர்கள் வேடிக்கை பார்ப்பவர்களாக இருந்தனர்” எனக் கவலையோடு தெரிவித்தார்.

சூழலியல், மற்றும் புலனாய்வு ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வன் தாக்கப்பட்டதை தேசம்நெற் வன்மையாகக் கண்டிக்கின்றது. “கிளிநொச்சியில் சட்டம், ஒழுங்குகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும், கிளிநொச்சியின் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும், கசிப்பு காய்ச்சுவது, கள்ள மண் கடத்துவது, கள்ள மரம் வெட்டுவது என்பனவற்றுக்;கு எதிராக கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக எழுதி வருபவர் மு தமிழ்ச்செல்வன். அவர் கிளிநொச்சி மாவட்டத்தின் ஒரு சமூகக் காவல்காரன். இவரைத் தாக்கியது ஒட்டுமொத்த ஊடக சமூத்தின் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்” என லண்டனைத் தளமாகக் கொண்டு செயற்படும் தேசம்நெற் ஊடகக் குழுமத்தின் ஆசிரியர் த ஜெயபாலன் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், “வடமாகாணத்தில் வன்முறைச் சம்பவங்கள் தலைவிரித்தாடுகின்றது. ஊடகவியலாளர்களை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டுள்ள இத்தாக்குதல், மக்களின் குரல்களை மழுங்கடிப்பதற்கான ஒரு முயற்சியே” என்றும் வடக்கு ஆளுநர் வேதநாயகன் பொலிஸாருடன் பேசி வடக்கில் இவ்வாறான வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் தமிழ்ச்செல்வனைத் தாக்கிய குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை வடக்கு ஆளுநர் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.