ரி20 உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணியில் இடம்பெற்றிருந்த துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு ரி20 உலகக் கிண்ணத்திற்காக அவுஸ்திரேலியா சென்ற இலங்கை அணியில் தனுஷ்க குணதிலக்க இடம்பெற்றிருந்த போதிலும், அவர் முதல் போட்டியில் மாத்திரமே விளையாடினார்.
துடுப்பாட்ட வீரராக மட்டுமே அணியில் இணைந்த தனுஷ்க, பல போட்டிகளில் தொடர்ந்து தோல்வியடைந்ததால் முதல் போட்டியின் பின்னர் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில், தனுஷ்காவுக்கு உபாதை ஏற்பட்டதாக தகவல் வெளியான போதிலும் அவர் தொடர்ந்து பயிற்சிகளில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
இவ்வாறான சூழலில் நேற்று (05) இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான சுப்பர் 12 போட்டியின் பின்னர் சிட்னியில் இலங்கை அணி தங்கியிருந்த விடுதியில் வைத்து தனுஷ்க குணதிலக்க அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
29 வயதான பெண் ஒருவர் தனுஷ்க குணதிலக்க தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக தாக்கல் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த யுவதி முதலில் தனுஷ்க குணதிலக்கவுடன் ஆன்லைன் டேட்டிங் செயலி மூலம் தொடர்பு கொண்டதாகவும், பின்னர் நவம்பர் 2 ஆம் திகதி சிட்னி ரோஸ் பேயில் உள்ள யுவதியின் வீட்டிற்கு தனுஷ்க சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த யுவதி அவரது வீட்டில் வைத்து அனுமதியின்றி நான்கு முறை உடலுறவிக்கு உட்படுத்தப்பட்டதாக தனுஷ்க குணதிலகவுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட தனுஷ்க குணதிலக்கவிற்கு பொலிஸ் பிணை வழங்க மறுக்கப்பட்ட நிலையில், அவர் நாளை உள்ளூர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
அவர் ஒழுக்கத்தை மீறியதாக குற்றம் சாட்டப்படுவது இது முதல் முறையல்ல, அவர் பல சந்தர்ப்பங்களில் ஒழுக்கத்தை மீறியதாக அதிகார மற்றும் அதிகாரப்பூர்வமற்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளார். இதற்கு முன்னதாக இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுத்தொடரின் போது பொது இடத்தில் வைத்து புகைப்பிடித்த குற்றத்துக்காக குணதிலகவுக்கு 24மாதங்கள் கிரிக்கெட் விளையாட தடை விதித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.