ஜுலி சங்

ஜுலி சங்

யூலி சங் உடன் ஜிங்கு ஜிங்கு என்று ஆடுகிறார் சைக்கிள் கஜா. !

யூலி சங் உடன் ஜிங்கு ஜிங்கு என்று ஆடுகிறார் சைக்கிள் கஜா.
அத்தானி குமுமத்துக்கு அமெரிக்கா பிடிவிறாந்து… இஸ்ரேல் பிரதமருக்கு ஐசிசி பிடிவிறாந்து…
“இன்றைய தினம் இலங்கைப் பாராளுமன்றத்தின் வரலாற்றில் மிக முக்கியமான தினம்…” என்று 10வது புதிய பாராளுமன்றத்தில் நேற்றுத் தனது உரையை ஆரம்பித்தார் ஜனாதிபதி அனுரா. குழந்தைகளின் நாளாந்த பட்டினிப் போராட்டம் முதல் நாட்டின் பொருளாதாரத் தீர்வு வரை தனது நீண்ட உரையில் இலங்கையின் ஒவ்வொரு குடிமக்களிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற விடயங்களை அவர் தொட்டுச்சென்றுள்ளார். தேர்தல் மூலம் மக்கள் எங்களோடு ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி இருக்கின்றார்கள் அதற்கு உண்மையானவர்களாக நாங்கள் செயற்படுவோம் என ஜனாதிபதி உறுதிஅளித்தார். வெறும் ஆசன எண்ணிக்கை என்றில்லாமல் அனைத்து மாகாண மக்களும் இணைந்து உண்மையான ஆணையை எமக்கு தந்துள்ளார்கள் எனக்குறிப்பிட்ட ஜனாதிபதி, இனவாதம் மதவாதம் இல்லாத நாடாக நாம் உருவாவோம், பாராளுமன்றம் இழந்த நம்பிக்கையை, மக்கள் பாராளுமன்றமாக்கி நாங்கள் அந்த நம்பிக்கையை மீளப்பெறுவோம் எனவும் தெரிவித்தார். சட்டத்திற்கு மேற்பட்டவர்கள் யாரும் கிடையாது என்பதை உறுதிப்படுத்துவோம் குற்றமிழைத்தவர்கள் தப்பிக்க முடியாது என்ற நிலையை உருவாக்குவோம் எனவும் அவ்வுரையில் தெரிவித்தார்.
ஜனாதிபதியுடைய உரையின் பெரும்பகுதி நாட்டைப் பாதித்துள்ள பொருளாதாரம் பற்றியதாகவே இருந்தது. ஐஎம்எப் உடைய உடன்பாடு தாங்கள் ஆட்சிக்கு வருமுன்னரேயே முடிவை நெருங்கியதால் அதுதொடர்பில் பேச்சுவார்த்தைகள் மீள ஆரம்பிப்பது சாத்தியமானதாக இருக்கவில்லை என்றும் ஐஎம்எப் விதித்துள்ள கட்டுப்பாடுகளை தாங்கள் அமுல்படுத்துவோம் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி அது மிகவும் சவாலானது எனவும் சுட்டிக்காட்டினார். நாளை ஐஎம்எப் உடன் கொள்கைரீதியான உடன்பாட்டில் கையெழுத்திடப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். நாட்டின் பொருளாதார முன்னேற்றம் தொடர்பில் உற்பத்தியை அதிகரித்து நாட்டின் வளர்ச்சியை முன்னெடுப்பது, பொருளாதார வளர்ச்சியை மக்களோடு இணைப்பது அதாவது மேற்கு மாகாணத்தில் மட்டும் தங்கியில்லாமல் ஏனைய மாகாணங்களையும் மக்களையும் பொருளாதார வளர்ச்சியில் பங்காளிகளாக்குவது, அதன் மூலம் செல்வத்தை சிலருடைய கைகளில் இல்லாமல் அனைவரும் அனுபவிக்கச் செய்வதும் என்ற மூன்று பொருளாதாரத் தூண்களை ஜனாதிபதி அனுரா சுட்டிக்காட்டினார். பொருளாதாரக் கொள்கைகள் பற்றிக்குறிப்பிடும் போது தற்சமயம் சந்தைகள் பொருளாதாரத்தை சில நிறுவனங்களின் ஏகபோகமாக்கியுள்ளதால் அரசு அதில் கணிசமான தலையீடுகளை மேற்கொள்வதன் அவசியத்தை ஜனாதிபதி அங்கு சுட்டிக்காட்டினார். இவ்விடத்திலேயே என்பிபிக்கு பின்னாலுள்ள ஜேவிபியின் சிவப்பு நிறத்தில் உள்ள அரிவாளும் சுத்தியலும் வெளிப்பட்டது.
என்பிபி இன் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அருண் ஹேமச்சந்திரா வெளிவிவகாரம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சராக நேற்று சத்தியப்பிரமாணம் செய்து பதவியைப் பொறுப்பேற்றுக்கொண்டார். தேசிய மக்கள் சக்திக்குள் வேகமாக வளர்ந்துவருகின்ற ஒரு சமூகப்போராளியாக தேசம்நெற் இவரைக் குறிப்பிட்டிருந்தமை தெரிந்ததே. பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு, சம்பூர் அனல் மின்னிலைய எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்து சம்பூரைக் காப்பாற்றியவர்களில் அருண் முக்கியமானவர். தன்னை அரசியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் வளர்த்துவரும் இவருக்கு இப்பதவி வழங்கப்பட்டமை அனைத்து சமூகங்களாலும் வரவேற்கப்படுகின்றது. மும்மொழியையும் சரளமாகப் பேசும் ஆற்றல் கொண்ட அருண் ஹேமச்சந்திரா ராஜதந்திரிகளுக்குரிய கோட்சூட் அணிந்து தமிழில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
மேலும் பெரும் தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சராக சுந்தரலிங்கம் பிரதீப் நியமிக்கப்பட்டுள்ளார். இவரும் தமிழில் பதவிப் பிரமாணம் செய்திருந்தார். தேசிய மக்கள் சக்தியின் இப்பாராளுமன்றத்தில் இரு அமைச்சர்களும் இரு பிரதி அமைச்சர்களும் தமிழ் மக்கள் மத்தியிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் சமூகப் போராளிகளாகவும் இருந்ததால் அவர்கள் ஜனாதிபதி அனுராவுடனும் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளனர்.
10 ஆவது நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவ கலாநிதி முஹம்மத் ரிஸ்வி சாலி தெரிவு செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ அவரின் பெயரை முன்மொழிய அமைச்சர் சரோஜா போல்ராஜ் அதனை வழிமொழிந்தார். என்.பி.பி அரசு திட்டமிட்டு முஸ்லீம்களை புறக்கணித்தது என பலரும் கூறிவந்த நிலையில் பிரதி சபாநாயகராக ஓர் முஸ்லிம் இனத்தவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். என்.பி.பி முஸ்லீம்களை நிராகரித்ததாக கூறிய இனவாத தரப்பின் பாஷையில் சொல்வதாயின் ஓர் முஸ்லீம் இனத்தவரை முன்மொழிந்தவர் ஓர் சிங்களவர் – அதனை வழிமொழிந்தவர் ஓர் தமிழர் என கூறலாம்.
இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்களை உடனடியாக நிறுத்த கோரி கையெழுத்திடப்பட்ட தபாலட்டைகளை சர்வதேச மீனவர் தினத்தன்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு அனுப்பி வைத்துள்ளனர் முல்லைத்தீவு மீனவர்கள். நேற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் தமிழ் அரசுக்கட்சிக்குழு சந்திப்பொன்றை நடத்தியுள்ளது. மேலும் இந்தியாவுக்கும் அடிக்கடி பயணம் செய்து தங்களின் இருப்புக்கான அரசியலை செய்யும் தமிழ்தேசிய அரசியல்வாதிகள் மறந்தும் வடக்கு மீனவர் பிரச்சனை தொடர்பில் இந்தியாவுடன் பேசியது கிடையாது. இவர்கள் செய்யும் தமிழ்தேசிய அரசியல் மீது நம்பிக்கை இழந்த நிலையிலேயே இந்த தேர்தலில் வடக்கு மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு தமது ஆதரவை வழங்கினர். இதை உணர்ந்து தேசிய மக்கள் சக்தி மீனவர் பிரச்சனைகளை தீர்க்க முன்வர வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் தெற்காசியாவின் இரண்டாவது பெரும் செல்வந்தரான கௌதம் அத்தானி இந்திய அரசுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்து பொய்யான ஆவணங்களைத் தயாரித்து அமெரிக்க முதலீட்டளார்களை ஏமாற்றினார், மற்றும் அமெரிக்க வங்கிகளிலிருந்து பெரும்தொகை கடன்களைப் பெற்றார் என்று அமெரிக்க நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது. அத்தோடு கௌதம் அத்தானியையும் அவருடைய மருமகனையும் கைது செய்து நீதிமன்றத்துக்குக் கொண்டுவரவும் பிடியானையைப் பிறப்பித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கென்ய அரசு அத்தானி குழுமத்திடம் வழங்கிய விமானநிலைய விஸ்தரிப்புத் திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளது. இச்செய்தி உலகப்பொருளாதாரச் சந்தைகளில் காட்டுத்தீயாகப் பரவ அத்தானி குழுமத்தின் பங்குகளின் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு அத்தானி குழமம் 265 மில்லியன் அமெரிக்க டொலர்களை லஞ்சமாகக் கொடுத்து 20 வருடங்களில் 2 பில்லியன் லாபத்தை ஈட்டத் திட்டமிட்டிருந்தாக அதில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சூரியக் கதிர் மூலம் சக்தியை உருவாக்கும் திட்டத்திலேயே அத்தானி குழமம் தற்போது மாட்டுப்பட்டுள்ளது. அத்தானி குழுமம் இலங்கையிலும் கடந்த கால அரசுகளுக்கு லஞ்சம்ககொடுத்து ஒப்பந்தங்களை எழுதியுள்ளது. இவற்றை அமூல்படுத்துவதற்கு முன் இவை பற்றி தாங்கள்மீள் பார்வை செய்ய வேண்டும் என பிரதமர் ஹருனி அமரசூரிய முன்னர் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி அனுராவின் இந்திய விஜயத்தின் போது இதுவும் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களும் பேசுபொருளாக அமையலாம் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
இஸ்ரேல் நாட்டின் ஆட்சியாளர் பென்ஜமின் நெத்தன்யாகுவிற்கும் அவரது முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவவ் கலனற்க்கும் சர்வதேச நீதிமன்றம் பிடிவிறாந்து அனுப்பியுள்ளது. சர்வேதேச கிரிமினல் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டுள்ள ஐரோப்பிய நாடுகள் உட்பட 124 நாடுகள் தங்கள் நாடுகளுக்குள் இவர்கள் நுழைந்தால் சட்டப்படி கைது செய்ய கடமைப்பட்டுள்ளனர். ஐரோப்பிய நாடுகள் தாங்கள் இந்த உத்தரவை மதிப்பதாக அறிவித்துள்ளன. மாறாக அமெரிக்கா இந்த நீதிமன்ற உத்தரவைக் கண்டு கொதித்தெழுந்துள்ளது. சர்வதேச நீதிமன்றம் தனது எல்லைகளை மீறுவதாகவும் இந்நீதிமன்றம் இல்லாமலாக்கப்பட வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. பாலஸ்தீனத்தில், லெபனானில் இஸ்ரேலிய ராணுவம் முஸ்லீம்களைப் படுகொலை செய்வதற்கு முழு ஆயுத மற்றும் அரசியல் போர்வையை வழங்கிவரும் அமெரிக்கா, யுத்த நிறுத்தம், படுகொலை நிறுத்தம் ஆகியவை தொடர்பான தீர்மானங்கள் வருகின்றபோது அவற்றை தனது வீற்ரொ அதிகாரத்தின் மூலம் அவற்றை நிறைவேற்ற முடியாது செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலிய ஆட்சியாளர் ஒரு கிரிமினல் மோசடியாளர் என்று இஸ்ரேலிய நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது. ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றில் தென்னாபிரிக்க கொண்டுவந்த வழக்கில், இஸ்ரேலிய இராணுவம் இனப்படுகொலைகளில் ஈடுபடுவதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்ற தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. தற்போது நெத்தன்யாகுவிற்கு பிடியானையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொடர்ந்தும் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தினமும் பெண்களையும் குழந்தைகளையும் படுகொலை செய்வதற்கு கடந்த ஓராண்டுக்கு மேலாக இஸ்ரேலுக்கு உதவி வரும் இந்த அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் இலங்கையில் 15 வருடங்களுக்கு முன் நடந்த படுகொலைகளை விசாரிக்க வேண்டும் என யூலி சங் உடன் ஜிங்கு ஜிங்கு என்று ஆடுகிறார் சைக்கிள் கஜா.
மன்னார் மருத்துவமனையில் மரணத்தை தழுவிய இளம்தாய் வனுஜா என்ற ஜெ ராஜசிறியும் அவருடைய கருவும் மகப்பேற்றின் போது நவம்பர் 19இல் இறந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணைகளுக்கு சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ உத்தரவிட்டுள்ளார். இரு உயிர்களதும் உடல்கள் மரண விசாரணைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதற்கு சில மாதங்களுக்கு முன்பாக சிந்துஜா என்ற பட்டதாரி மனைவி மகப்பேற்றின் பின் ஏற்பட்ட இரத்தப் போக்கிற்கு அதே மன்னார் வைத்தியசாலையில் மருத்துவ அசட்டையீனம் காரணமாக உயிரிழந்தார். அவர் இறந்து அடுத்த நான்கு வாரங்களில் ஓகஸ்ட் 24இல் அவருடைய கணவர் எஸ் சுதன் தற்கொலை செய்து கொண்டார். ஊசி அர்ச்சுனா இவ்விடயத்தில் நியாயம் பெற்றுக் கொடுப்பேன் என்று ஸ்ரண்ட் அடித்தாலும் அதன்பின் அந்த விசாரணைகளில் எவ்வித முன்னேற்றமும் இருக்கவில்லை. அந்த வழக்கு சாதாரண வகைப்பட்ட வழக்காகவே பொலிஸாரால் பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது இவ்வழக்கை துரிதமாக விசாரிக்க நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிந்துஜா சார்பில் சட்டத்தரணி டெனீஸ்வரன் மற்றும் சர்மிலன் டயசின் ஆகியோர் இவ்விடயத்தை துரிதமாக நகர்த்த நீதிமன்றத்தில் கோரியதையடுத்து அடுத்த இரு வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரிவிட்டுள்ளார்.
இலங்கையை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வோம், ஏக்கிய ராஜ்ஜிய கொள்கையை ஒரு போதும் ஏற்கமாட்டோம் என்று ழுழங்கிய தமிழ் தேசிய மக்கள் முன்னணித் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் பாராளுமன்ற சத்தியப் பிரமாணத்தை காணொலியாக வெளியிட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். என்பிபி இன் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் முன்மாதிரியோடு சேட்டும் வேட்டியும் அணிந்து வடக்கு – கிழக்கு தமிழ் தேசியவாதத்தை முண்டுகொடுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழில் சத்தியப் பிரமாணம் செய்து அக்கானொலிகளை வாக்களித்த மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என தமிழ் தேசிய ஆர்வலர்கள் பலரும் எதிர்பார்க்கின்றனர்.
லண்டனில் வருமானம் கூடிய ஈலிங் ஆலயம், தாயகத்தில் பல்கலைக்கழக மாணவர்களின் உயர்கல்விக்கு வழங்கி வந்த நிதியை கடந்த ஏப்ரல் மாதம் முதல் இடைநிறுத்தியுள்ளதாக பயன்பெற்று வந்த மாணவர்கள் தேசம்நெற்க்குத் தெரிவிக்கின்றனர். இதனால் 240 மாணவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆலயத்திலிருந்து இது தொடர்பில் எவ்வித விளக்கங்களும் அளிக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டப்படுகின்றது. ஆனால் இந்த மாணவர்களின் உயர்கல்விக்குரிய நிதி சேகரிக்கப்பட்டு வைப்பிலிடப்பட்டுள்ளதாக ஆலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆலயத்திற்கு சேருகின்ற வருமானத்தில் செலவீனங்கள் போக மீதியுள்ள நிதியில் மூன்றில் இரண்டு தாயக மக்களின் மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்படுவதாக ஆலயத்தின் செயற்குழுவின் தீர்மானம் குறிப்பிடுகின்றது. ஆனால் அண்மைக்காலமாக தாயக மேம்பாட்டு நடவடிக்கைகளை ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயமும் ஏனைய ஆலயங்களைப் போல் கைவிட்டு வருகின்றது என அம்பாள் அடியார்கள் குற்றம்சாட்டுகின்றனர். உயர்கல்வி மற்றும் மாணவர்களுக்கான உதவித் திட்டங்களுக்கான நிதி ஆலயத்தின் நிதியிலிருந்து வருவதில்லை. அவை மக்களிடமிருந்து பிறம்பாக சேகரிக்கப்படுகின்ற நிதி என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நிதியையும் வழங்காமல் ஆலய செயற்குழு தாயக மக்களின் கல்வி வளர்ச்சியில் தடையைப் போடுகின்றது. இது தொடர்பில் ஆலயத்தின் செயற்குழு உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்ட போதும் அவர்களிடமிருந்து எவ்வித பதிலும் வரவில்லை. இது தொடர்பில் ஆலயத்தின் செயற்குழு விளக்கம் தந்தால் அதனை நிச்சயம் வெளியிடுவோம். வயதான ஆண்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயங்கள் பெயரளவில் சில விடயங்களைச் செய்துவிட்டு பெருமளவான நிதியை மது, மாது என்றே செலவழிக்கின்றனர். அதற்கு லாக்கூர்னே சிவன் ஆலயம் நல்ல உதாரணம். மக்கள் சாமிக்கு லஞ்சம் கொடுத்து ஆசீர்வாதம் பெறமுடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார் பாரிஸில் வாழும் தில்லைநாதன் சிவகுரு.
அரச உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக தமிழரான ஏ விமலேந்திரராஜா நியமிக்கப்பட்டுள்ளார். என்.பி.பி அரசாங்கம் நாட்டின் அனைத்து இனக்குழுக்களில் இருந்தும் திறமையானவர்களை தெரிவு செய்து அரசின் பொறுப்பான பதவிகளுக்கு நியமித்து வருகின்றது. பனை அபிவிருத்திச்சபைக்கு நியமிக்கப்பட்டவரின் நியமனம் அவருடைய முன்னைய ஊழல்கள் தொடர்பில் சர்ச்சைக்குரியதாக அமைந்துள்ளது. ஆனாலும் வடக்கு மாகாண ஆளுநராக, பெரும் தெருக்கள் திணைக்களத்தின் அதிகாரியாக, யூனிவேர்சிற்றி கிராண்ட் கொமிஸனின் அதிகாரியாக, அமைச்சர்களாக என்று இதுவரை தமிழர்களுக்கு வழங்கப்படாதிருந்த பொறுப்புக்களில் பிரதான பதவிகளில் தமிழர்களை நியமித்துள்ளது என்.பி.பி அரசு. இதன் மூலம் என்.பி.பி அரசு பற்றி தமிழ்தேசிய கட்சிகள் முன்வைத்த போலிப் பிரச்சாரங்களை ஒவ்வொன்றாக அனுர அரசு தகர்த்து வருகிறது.
புதிதாக பொறுப்பேற்றுள்ள பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, பொலிஸ் துறையில் உள்ள ஊழல் மற்றும் அரசியல் தலையீடுகள் முழுமையாக இல்லாதாக்கப்பட்டு, இலங்கை பொலிஸார் பக்கச்சார்பற்ற, நியாயமான மற்றும் பொதுமக்களுக்கு பொறுப்புக்கூறும் வகையில் செயற்படுவதை உறுதி செய்வதில் தனது உறுதியான நிலைப்பாடு இருக்கும் என தெரிவித்தார். வடக்கில் பொலிஸாரின் அசமந்தப் போக்குக் காரணமாக ஆவா போன்ற வன்முறைக் குழக்களின் செயற்பாடுகள் மிக மோசமானதாகக் காணப்படுகின்றது. இதனால் மக்கள் பெரும்பாலும் அச்சத்தில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். வடக்கில் உள்ள ரவுடிக்கும்பல்களின் தலைவர்கள் மத்திய கிழக்கு நாடொன்றில் இருப்பதாகவும் அவர்கள் பணத்தைப் பெற்றுவிட்டு வடக்கில் உள்ள தங்கள் ஆட்களுக்கு வீட்டை உடைப்பது, கொழுத்துவது, வாகனங்களை அடித்து நொருக்குவது, ஆட்களின் கையைக் காலை முடிறிப்பது, கொலையும் செய்வது என ரேட்பேசி இந்த வன்முறைகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதாக சமத்துவக் கட்சியின் செயலாளர் முருகேசு சந்திரகுமார் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். பாராளுமன்றத் தேர்தலுக்கு முதல்நாள் 5 பேர் கொண்ட மண் மாபியாக் கும்பல் கரைச்சி பிரதேசசபை தொழில்நுட்ப உத்தியோகத்தரை கிளிநொச்சி அம்பாள்குளத்தில் கடமையிலிருந்த போது தாக்கியுள்ளது.
34 ஆண்டுகள் மூட்டப்பட்டுக் கிடந்த பலாலி ராஜேஸ்வரி அம்மன் ஆலயம் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் இன்னும் பல இராணுவ முகாம்களை அகற்றி மக்களின் காணிகளை அவர்களிடமே மீளவும் ஒப்படைக்க தேசிய மக்கள் சக்தி அரசு வேகமாக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அத்தோடு தற்போது பயங்கரவாதத் தடைச்சட்த்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள மீதமுள்ள அரசியல் கைதிகளுக்குப் பொதுமன்னிப்பு அளித்து, தேசிய மக்கள் சக்தி அரசு அவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனத் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர். புதிய பாராளுமன்றம் கூடியதும் இதற்கான நடவடிக்கைகளுக்கு அனைத்து சமூகங்களையும் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் தேசிய மக்கள் சக்தியின் வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்விடயத்திற்கு அழுத்தம் கொடுத்து அவர்களை விடுதலை செய்ய வேண்டும். அது நிகழுவதற்கான காலம் நெருங்கிவிட்டதாகவே தேசிய மக்கள் சக்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது நிகழும்பட்சத்தில் நாம் தமிழர் நாம் இலங்கையர் என்ற கோசம் வடக்கு கிழக்கில் இன்னமும் கூடுதலாக ஓங்கி ஒலிக்கும்.
யாழ் விஜயத்தை மேற்கொண்ட சீனத்தூதுவர் கீ சென்ஹொங், இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக தெற்கை மையப்படுத்திய ஒரு தேசியக் கட்சிக்கு யாழ்ப்பாணத்திலும் மிகப் பெரும்பான்மையான ஆதரவு வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார். அவர், மேலும் குறிப்பிடுகையில் தமிழ்ச் சமூகம் ஒரு சரியான முடிவை எடுத்திருக்கின்றது என்றே நான் நம்புகின்றேன். இந்தத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றிருப்பதானது தமிழ் மக்கள் பரந்த சிந்தனையோடு விடயங்களை இப்போது நோக்க ஆரம்பித்திருக்கின்றார்கள் என்றே தோன்றுகின்றது எனவும் அவர் தெரிவித்தார். சீனப் பல்கைலைக்கழகத்தில் கற்க யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்கியிருந்தமை தெரிந்ததே. இந்திய சார்பு யாழ் ஊடகங்கள் இதற்கெதிராக கிளர்ந்து இந்தியாவுக்கு வாலையாட்டி தங்கள் விசுவாசத்தைக் காட்டி வந்தது. தற்போது சீனா வடக்கு மக்களின் வாழ்வாதாரத்துக்கு 12 மில்லியன் ரூபாய் பெறுமதியான காசோலையை வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனிடம் கையளித்துள்ளார். தாங்கள் வடமாகாணத்துக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்குவோம் எனவும் சீனத் தூதுவர் குறிப்பிட்டிருந்தார்.
இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார முன்னெடுப்புகள் நாட்டின் நிதி நிலைமைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளதுடன் 200 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடனைக் கொள்கை அடிப்படையில் அங்கீகரித்து இருப்பதாகவும் அறிவித்துள்ளது. ஐஎம்எவ் குழுவினருடன் நவம்பர் 18இல் இடம்பெற்ற உரையாடலில் மக்கள் மீது கடுமையான அழுத்தங்களைக் கொண்டும் வரும் வரிசுமைகள் பொருட்களின் மானியங்களை நீக்குவது, பொதுச்சேவைகளுக்கு வழங்கும் நிதியை கணிசமான அளவுக்கு குறைப்பது போன்ற விடயங்களில் அரசு ஐஎம்எப் க்கு முழுமையாக உடன்பட மறுத்து வருகின்றது. நீங்கள் ஒரு சமநிலையைப் பேண வேண்டும் என ஜனாதிபதி அனுரா ஐஎம்எப் க்குத் தெரிவிதிருந்தார். இந்தப் பின்னணியிலேயே ஆசிய அபிவிருத்தி வங்கி கடன் வழங்க முன்வந்திருப்பதுடன், சுற்றுலாத்துறை வருமானத்திலும் அரசு கணிசமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.
முன்னைய ஆட்சிக்காலங்களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக எதிர்காலம் பற்றிய நம்பிக்கையில்லாததால் முன்னாள் இராணுவவீரர்கள் ஆயுதக் குழக்களாக இஸ்ரேலிய, ரஷ்ய இராணுவத்தில் இணைந்து யுத்தப் பிரதேசங்களில் பணிக்குச் சென்றனர். இவர்களில் சிலர் யுத்தத்தில் கொல்லப்பட்டும் உள்ளனர். தற்போது ரஷ்ய இராணுவத்தோடு போரிட்ட ஒரு சிங்கள இராணுவ வீரர் உக்ரைன் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
“நானும் சிறிதரனும் கீரியும் பாம்பும் இல்லை. இதெல்லாம் ஜனநாயகத்தின் பண்புகள்” எனத் தெரிவிக்கின்றார் எம் ஏ சுமந்திரன். ஜனாதிபதி அனுரா பாராளுமன்ற உறுப்பினரில்லை. நானும் பாராளுமன்ற உறுப்பினரில்லை என நளினமாகத் தெரிவித்த சுமந்திரன், நாங்கள் புதிய அரசியலமைப்பு தொடர்பாக ஏற்கனவே இணைந்து செயற்பட்டு இருக்கின்றோம் என்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்றால் நாங்கள் முகம் பார்த்துப் பேசுகின்ற உறவு இருக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டார். அதனால் தமிழர்களுக்கான தீர்வுகளை நான் பாராளுமன்றம் செல்லாமலும் முன்னெடுக்க முடியும் எனவும் தெரிவித்தார். இந்தத் தோல்வி தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேசினார். அதற்கு நான் சொன்னேன் இந்த அனுபவம் உங்களுக்கு நிறையவே இருக்கின்றது என்றும் குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ஜனாதிபதி அனுரா தேர்தலுக்குப் பிறகு அழைத்து, என்ன நடந்தது? என்று கேட்டார். “நீ தான் சுனாமி மாதிரி வந்து எல்லாத்தையும் அள்ளிக்கொண்டு போய்விட்டாய். பிறகென்ன கேள்வி” என்று தான் பதிலளித்ததாகவும் சுமந்திரன் குறிப்பிட்டடார்.

இலங்கையின் உள்ளக விடயங்களில் தலையிடும் அமெரிக்க தூதுவர் – சரத்வீரசேகர விசனம் !

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நாட்டின் உள்ளக விவகாரங்கள் தலையிடுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் ஆகவே உரிய நடவடிக்கை எடுங்கள் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் வலியுறுத்தினேன். என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவரும் முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் அரச தரப்பு எம்.பி.யுமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

 

அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கு ஆதரவாக செயற்படுபவர்களுக்காக பொலிஸாரை காட்டிக் கொடுக்க முடியாது என்றும் கூறினார்.

 

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தவறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.குழுவின் அனுமதியுடனேயே 3 முக்கிய பரிந்துரைகளை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் முன்வைத்தேன்.

 

பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் உறுப்பினராக பதவி வகிக்கிறார்.ஆனால் அவர் குழுவின் செயற்பாடுகளுக்கு எதிராக செயற்படுகிறார்.குழுவில் முன்னிலையாகும் அரச அதிகாரிகளை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் செயற்படுகிறார்.

 

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நாட்டின் உள்ளக விவகாரங்கள் தலையிடுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் ஆகவே உரிய நடவடிக்கை எடுங்கள் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் வலியுறுத்தினேன்.

 

அமெரிக்க தூதுவருக்கு சார்பாக செயற்படும் சந்திம வீரக்கொடி போன்றவர்களுக்காக பொலிஸாரை காட்டிக் கொடுக்க முடியாது.தேசிய பாதுகாப்பு தொடர்பில் அடிப்படை அறிவில்லாத சந்திம வீரக்கொடி தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் உறுப்பினராக உள்ளதால் பல முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. எனவே குழு உறுப்பினர் பதவியில் இருந்து அவரை உடனடியாக நீக்குமாறு வலியுறுத்துகிறேன் என்றார்

குருந்தூர் மலை விவகாரத்தை அமெரிக்கா மிகவும் உன்னிப்பாக அவதானிக்கிறது – ஜுலி சங்

குருந்தூர் மலை விவகாரத்தை அமெரிக்கா மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்டிருந்த ஜுலி சங் தனியார் விருந்தினர் விடுதியொன்றில் ஊடகவியலாளர்களைச் சந்தித்து கலந்துரையாடியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”குருந்தூர் மலை விவகாரத்தில், சட்ட பிரச்சனை, காணிப்பிரச்சனை, அரசியல் பிரச்சனை என மூன்று விடயங்கள் உள்ளடங்கியுள்ளன.

 

இதனை இலங்கை அரசாங்கம் எவ்வாறு கையாளுகின்றது என்பதனை உன்னிப்பாக அவதானித்துக்கொண்டு இருக்கிறோம்.

 

இச் சிக்கலுக்கு இலங்கை அரசாங்கம் மிக விரைவில் அமைதியான தீர்வை வழங்க வேண்டும். இல்லாவிடின் இது பாரிய பிரச்சனையாக உருவெடுக்கும். அத்துடன் இப்பிரச்சனையை விரைந்து தீர்ப்பதற்கு, அமெரிக்காவும் அழுத்தங்களை பிரயோகிக்கும்” என ஜுலி சங் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் சர்வதேச தரத்திற்கு முரணாக உள்ளது – அமெரிக்கா

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பான விரிவான, பொது மற்றும் நாடாளுமன்ற விவாதங்களுக்கு அழைப்பு விடுப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற சந்திப்பில் இதனைத் தெரிவித்ததாக அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச தரத்திற்கு, புறம்பாக முன்மொழியப்பட்ட, சட்டமூலத்தின் சில விடயதானங்கள் தொடர்பில், கவலை வெளியிட்டதாகவும் அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக, பொது மற்றும் நாடாளுமன்றம் ஆகிய இரண்டிலும் விரிவான விவாதங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற தங்களது ‘வலுவான விருப்பத்தை’ பகிர்ந்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

சிவில் சமூகம், கல்வியாளர்கள் மற்றும் சட்டம் இயற்றுபவர்கள் உட்பட அனைவரது கருத்துச் சுதந்திரம் அல்லது ஒன்றுகூடலை கட்டுப்படுத்தாமல், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு சிறந்த கருவியாக, குறித்த சட்டமூலம் செயல்படுவதை உறுதிப்படுத்துவது முக்கியமானதாகும் எனவும் அமெரிக்கத் தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.

“தமிழருக்கு தனியான அரசாங்கம் ஒன்றை பெற்றுக்கொடுக்க அமெரிக்கா முயற்சி – கோட்டபாய விரட்டப்பட்டதன் பின்னணி தொடர்பில் வாசுதேவ !

வடக்கு, கிழக்கு மாகாணங்களை தனி இராஜ்ஜியமாக்கி அங்கு அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலை நாட்டுவதே அமெரிக்காவின் நோக்கம் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்றைய தினம் இடைக்கால வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

நாட்டில் போராட்டங்களை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்க தூதுவர் ஜுலி சங்கே ஈடுபட்டுள்ளார். அத்துடன் காலிமுகத்திடல் போராட்டத்திற்கும் இவரே ஒத்துழைப்பு வழங்கினார். அத்துடன் ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்சவை ஜுலி சங்கே பதவியிலிருந்து விரட்டினார்.

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் ஜூலி சங் தலையிடுகின்றார். அவ்வாறு தலையிடுவதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை. அதேவேளை, சர்வதேச நாணய நிதியம் வழங்கும் நிதி முக்கியமானது அல்ல. சர்வதேச நாணய நிதியம் நிபந்தனைகளை முன்வைக்கும். அந்த நிபந்தனைகளே இன்று நடைமுறைப்படுத்தப்பட ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. தேசிய கடனை மறுசீரமைக்கும் வியடத்திற்குள்ளும் நிபந்தனை விதிக்கும் பல காரணங்கள் உள்ளன. அந்த நிபந்தனைகள் மிகவும் மோசமானது என கூறப்படுகின்றது.

வேதனை அளிக்கும் எனவும் கூறப்படுகின்றது. அதேபோன்று அந்த நிபந்தனைகள் மக்களின் எதிர்ப்பிற்கு உள்ளாகும் எனவும் கூறப்படுகின்றது. அவ்வாறெனின் மக்களின் எதிர்ப்புக்கு உள்ளாகும் மக்களுக்கு வேதனை அளிக்கும் நிபந்தனைகளை நடைமுறைப்படுத்தினால், பாரிய மக்கள் எதிர்ப்பை மாத்திரமே அரசாங்கம் எதிர்பார்க்க வேண்டும்.

 

அமெரிக்க தூதுவர் ஜுலி சங் இருக்கின்றார். இன்று அவர் கோர்பச்சோப் தொடர்பில் டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். கோர்பச்சோப் சிறந்த ஒருவர். அவர் கமியூனிஸ்ட் சித்தார்ந்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தார். ரஷ்யாவை உடைத்தார். தாராளவாதத்தை அறிமுகப்படுத்தினார். இலங்கைக்கும் கோர்பச்சோப் போன்ற ஒருவர் வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். ஜுலி சங், சிறிலங்கா நிர்வாகம் குறித்து ஏன் அவர் தலையீடு செய்கின்றார்.

வடக்கு கிழக்கு பகுதிக்கு தனியான அரசாங்கம் ஏற்படுத்தப்பட வேண்டுமாயின் இலங்கையில் கோர்பச்சோப் போன்ற ஒருவர் தேவை என கூறுகின்றார்.

வடக்கு கிழக்கிற்கு தனியான அரசாங்கம் ஒன்றை பெற்றுக்கொடுப்பது அவரின் பிரதான நோக்கமாக மாறியுள்ளது. இலங்கையின் உள்ளக ஆட்சி குறித்து அவருக்கு உரிமை உள்ளதா? இல்லை. இது அமெரிக்காவின் பலவந்தமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.” – ஜுலி சங்

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவராக இருப்பதில் தான் பெருமை கொள்வதாக இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் நேற்று இட்டுள்ள பதிவில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அந்த பதிவில் மேலும்,

“இலங்கை அரசாங்கம், சிவில் சமூகம் மற்றும் பொது மக்கள் ஆகிய தரப்புக்களுடன் இணைந்து பணியாற்ற நான் ஆர்வத்துடன் இருக்கிறேன். கொழும்புக்கு புறப்படுவதற்கு முன்னர், அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டணி ப்ளின்கென்னை  சந்தித்திருந்தேன்.

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவராக இருப்பதில் நான் பெருமை கொள்வதாக, இராஜாங்க செயலாளரிடம் கூறியிருந்தேன். பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும், இரு தரப்புகளுக்கிடையே பகிரப்பட்ட மதிப்புகளை ஆராயவும், உறவுகளை பலப்படுத்தவும் ஆவலாக உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.