ஜனாதிபதி ஜோ பைடன்

ஜனாதிபதி ஜோ பைடன்

சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கிய ஹன்டா் பைடன் – மகனுக்கு பொதுமன்னிப்பு இல்லை என்கிறார் ஜனாதிபதி ஜோ பைடன் !

சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கியதாக மகன் ஹன்டா் பைடன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பொதுமன்னிப்பு வழங்கப்போவதில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளாா்.

போதைப் பொருள் பழக்கத்தை மறைத்து, கடந்த 2018-ஆம் ஆண்டில் ஹன்டா் பைடன் துப்பாக்கி வாங்கியதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

அமெரிக்காவில் பொதுமக்கள் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு தாராள அனுமதி இருந்தாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக குற்ற வழக்குகளில் தொடா்புடையவா்கள், போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருப்பவா்களால் அதை வாங்க முடியாது.

இந்த நிலையில், துப்பாக்கி வாங்குவதற்கான படிவத்தில் ‘போதைப் பொருள் பழக்கம் கிடையாது’ என்று ஹன்டா் பைடன் பொய்யாகக் கூறியதாக அவா் மீது கடந்த சில நாள்களாக வழக்கு நடைபெற்றுவருகிறது.

இது குறித்து ‘ஏபிசி’ தொலைக்காட்சிக்கு ஜோ பைடன் அளித்த பேட்டியில், ‘சட்டவிரோத துப்பாக்கி கொள்முதல் வழக்கில் அளிக்கப்படும் எந்தத் தீா்ப்பையும் ஏற்றுக்கொள்வேன். அந்த வழக்கில் ஹன்டா் பைடன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டால் என் ஜனாதிபதி அதிகாரத்தைப் பயன்படுத்தி அவருக்கு பொதுமன்னிப்பு அளிக்கமாட்டேன்’ என்றாா்.

இந்த வழக்கு விவகாரத்தில் அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஹன்டா் பைடனுக்கு சலுகைகள் அளிக்கப்படாது என்று வெள்ளை மாளிகை ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹமாஸ் அல் கொய்தாவை விட பயங்கரமான அமைப்பு என்பதில் சந்தேகமே இல்லை – அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலானது அல் கொய்தாவை விட பயங்கரமானது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

கடந்த 8 நாட்களாக ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலிற்கும் கடுமையான போர் நடைபெற்று வருகின்ற நிலையில் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து உட்பட பல நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்கின்றன.

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆதரவாக தனது பெரிய போர் கப்பலை இஸ்ரேல் கடற்பகுதியில் நிறுத்தியுள்ளது. இந்தநிலையில், இஸ்ரேல் மீதான ஹமாசின் தாக்குதல் குறித்த முழு விவரங்களை கேட்க கேட்க, அல் கொய்தாவை விட ஹமாஸ் பயங்கரமான அமைப்பு என்பதில் சந்தேகமே இல்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது,

“நாங்கள் இஸ்ரேலுடன் துணை நிற்கிறோம் என்பதிலும் சந்தேகமே வேண்டாம். அமெரிக்க உள்துறை செயலாளர் ஆன்டனி பிளிங்கன் மற்றும் இராணுவ செயலர் லாயிட் ஆஸ்டின் இஸ்ரேலுக்கு நேரில் சென்றுள்ளனர். அதேவேளை, பதில் தாக்குதலுக்கு இஸ்ரேலுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய அமெரிக்க தயாராக உள்ளது. பாலஸ்தீனத்தின் பெரும் பகுதி மக்கள் ஹமாஸிற்கு ஆதரவு அளிக்கவில்லை என்பதை மறுக்க முடியாது.

இப்போரில் காணாமல் போயிருக்கும் அமெரிக்கர்களை குறித்து அவர்களின் குடும்பங்களுடன் தொடர்பு கொண்டு நான் ஆறுதல் கூறியுள்ளேன். அத்தோடு, அவர்களை மீட்க அமெரிக்கா அனைத்தையும் செய்ய தயாராக உள்ளது என நம்பிக்கை தெரிவித்துள்ளேன்” என்றார்.