ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்

“இம்முறை எமது நாடு மீது புதிய பிரேரணை கொண்டுவரப்பட்டாலும் அதையும் வலுவிழக்கச் செய்வோம்” – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

ஜெனீவாவில் எதிர்வரும் 2021 மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில்  இலங்கை மீது புதிய பிரேரணை கொண்டுவருவதற்காக தமிழ்தேசிய கட்சிகள் வரைவு ஒன்றை உருவாக்குவது தொடர்பாக கலந்துரையாடலில் ஈடுபட்டு வருகின்றன. முன்னதாக பல அரசியல்கட்சிகளும் ராஜபக்ஷக்கள் அரசை எச்சரித்திருந்தனர். இந்நிலையில் “இம்முறை எமது நாடு மீது புதிய பிரேரணை கொண்டுவரப்பட்டாலும் அதையும் வலுவிழக்கச் செய்வோம்” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கருத்து வெளியிட்டுள்ளார்.

ஆளும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

கொரோனாவை ஒழிப்பதில் நாம் நியமித்த கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தினர் முழுமூச்சுடன் செயற்பட்டு வருகின்றனர். முழுநாட்டையும் முடக்காமல் நாட்டு மக்களின் வயிற்றில் அடிக்காமல் கொரோனா பரவும் இடங்களை அடையாளம் கண்டு அந்தப் பகுதிகளைத் தனிமைப்படுத்தித் தொற்றுப் பரவலைப் படிப்படியாகக் குறைத்து வருகின்றனர். இதற்கு ஒத்துழைத்துவரும் மருத்துவத்துறையினர், சுகாதாரத்துறையினர், முப்படையினர், பொதுமக்கள் ஆகியோருக்கு எமது நன்றிகளும், பாராட்டுக்களும் எப்போதும் இருக்கும்.

பிரிட்டனில் கொரோனாவின் புதிய வகை வைரஸ் உருவெடுத்துள்ளது. அது இலங்கையிலும் பரவக்கூடாது என்பதற்காகவே அந்த நாட்டிலிருந்து இங்கு பயணிகள் வருவதை இன்று முதல் தற்காலிமாகத் தடை செய்துள்ளோம். இதேவேளை, வெளிநாடுகளிலிருந்து கொரோனாத் தடுப்புக்கான தடுப்பூசியை விரைவில் இலங்கைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, 2021இன் ஆரம்பத்திலேயே இலங்கையில் கொரோனாவுக்கு முடிவுகட்டி விடலாம் என்பதில் நாம் உறுதியாக இருக்கவேண்டும். இதனிடையே எதிர்வரும் மார்ச்சில் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அமர்வை முன்னிலைப்படுத்தி இங்கு எதிர்க்கட்சியினர் தமது சுயலாப அரசியல் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த நல்லாட்சி அரசின் காலத்தில் இலங்கை மீது நிறைவேற்றப்பட்ட ஜெனிவாத் தீர்மானங்களுக்கான இணை அனுசரணையிலிருந்து எமது அரசு வெளியேறிவிட்டது. எனவே, இம்முறை எமது நாடு மீது புதிய பிரேரணை கொண்டுவரப்பட்டாலும் அதையும் வலுவிழக்கச் செய்வோம். எதிர்க்கட்சியினரின் ஜெனிவாப் பரப்புரைகள் தொடர்பில் நாம் எவரும் அலட்டிக்கொள்ளக்கூடாது தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சுக்கள் ஜனாதிபதியின் கீழ் !

பாதுகாப்பு மற்றும் தொழிநுட்ப அமைச்சு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 20 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அமைச்சுக்களின் விடயதான மாற்றங்களுக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவிக்கின்றது.

தமது சுபீட்சத்திற்கான நோக்கு கொள்கைத் திட்டத்தில் தொழில்நுட்பம் தொடர்பான விடயங்களை நிதர்சனமாக்குவதே ஜனாதிபதியின் பிரதான நோக்காகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அத்துடன் இந்த நூற்றாண்டு தொழில்நுட்பத்துடனான பொருளாதார அபிவிருத்தியில் பயணிப்பதனால் அதனை நோக்கி இலங்கையின் அபிவிருத்தியை வழிநடத்துவதும் ஜனாதிபதியின் எதிர்ப்பார்ப்பாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

“கிராமப்புற மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதே என்னுடைய குறிக்கோள். அதற்காக எங்களுக்கு உதவுங்கள்” – சீன தூதுரிடம் ஜனாதிபதி வேண்டுகோள்

இலங்கைக்கான சீன மக்கள் குடியரசின் புதிய தூதுவர் கியி சென்ஹோங் (Qi Zhenhong) கடந்த 19.11.2020 அன்று ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் தனது நற்சான்றுப் பத்திரத்தை கையளித்தார்.

அதனைத் தொடர்ந்து சீனதூதுவருடன் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி, இலங்கைக்கும் சீனாவுக்குமிடையில் நீண்ட காலமாக இருந்து வரும் பரஸ்பர நன்மையுடன் கூடிய நிலையான ஒத்துழைப்பு மற்றும் நட்புறவு குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

குறிப்பாக பிரிவினைவாதத்திற்கு எதிரான போரில் வெற்றி பெற்ற பிறகு இலங்கையின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு சீனா பெரிதும் உதவியது. கொழும்பு துறைமுக நகரம், ஹம்பாந்தோட்டை துறைமுகம், தெற்கு அதிவேக நெடுஞ்சாலை ஆகியவை அவற்றில் சிலவாகும். சீனாவுக்கும் இலங்கைக்குமிடையிலான இந்த ஒத்துழைப்பை சிலர் விமர்சித்தனர். இந்த திட்டங்கள் பயனற்றவை என்பது அவர்களின் வாதம். உண்மை அதுவல்ல. சீனாவின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் அதிக வருமானம் மற்றும் தொழில்வாய்ப்பை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளன. எனது பதவிக்காலம் முடிவதற்குள் இந்த திட்டங்களின் மூலம் அதிகபட்ச நன்மைகளை பெற்றுக்கொள்வதே எனது நோக்கம் என்று ஜனாதிபதி கூறினார்.

இலங்கை அதன் அபிவிருத்தி முயற்சிகளில் மேலும் வெளிநாட்டு கடன்களை பெற்றுக்கொள்வதற்கு பதிலாக முதலீட்டை ஈர்ப்பதற்கே முன்னுரிமை அளித்துள்ளது என்று ஜனாதிபதி  தெரிவித்தார்.

எமது நாட்டில் பரந்த முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன. விவசாயம், தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் கல்வித் துறை அவற்றில் முக்கியமானவை.

இலங்கையின் மக்கள் தொகையில் சுமார் 30 வீதமானவர்களின் வாழ்வாதாரம் கிராமிய விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது. கடந்த இரண்டு அல்லது மூன்று தசாப்தங்களாக சீனா அடைந்துள்ள கிராமிய அபிவிருத்தியை இலங்கையில் ஏற்படுத்தி கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே எனது முக்கிய குறிக்கோள். அதைச் செய்ய எங்களுக்கு உதவுங்கள்” என்று ஜனாதிபதி புதிய சீன தூதுவரிடம் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த சீன தூதுவர் கியி சென்ஹோங், இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி முயற்சிகளின் வெற்றிக்கு அதிகபட்ச பங்களிப்பை வழங்க தனது அரசாங்கம் தயாராக உள்ளது எனத் தெரிவித்தார்.

“யதார்த்தத்தை அனைவரும் புரிந்துகொண்டு செயற்படவேண்டும் . நாட்டை மூடிவைப்பதால் மட்டும் நோய்த்தொற்றை ஒழிக்க முடியாது” – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

“யதார்த்தத்தை அனைவரும் புரிந்துகொண்டு செயற்படவேண்டும் . நாட்டை மூடிவைப்பதால் மட்டும் நோய்த்தொற்றை ஒழிக்க முடியாது” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் தினமும் சந்திக்கும் கொவிட் ஒழிப்பு விசேட செயலணி கூடிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

”நோய்த் தொற்றுக்கு மத்தியில் எமக்கு மேற்கொள்ள முடியுமான மாற்று வழிகள் 03 உள்ளன. ஒன்று ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்து முழு நாட்டையும் முடக்குவது. இரண்டாவது எதனையும் செய்யாதிருப்பது, மூன்றாவது நோயை கட்டுப்படுத்தும் அதே நேரம் நாட்டை வழமை போன்று பேணிச் செல்வதாகும். நாம் மூன்றாவது மாற்றுவழியை தெரிவுசெய்திருக்கின்றோம்.

கொவிட் நோயாளிகளை இனம்கண்டு உரிய சிகிச்சையை வழங்கி முதற் கட்டத்திலேயே குணப்படுத்த மருத்துவர்களுக்கும் பணிக்குழாமினருக்கும் முடியுமாக உள்ளது. எனவே தீவிர சிகிச்சை சேவைகள் தேவையில்லை. நோய் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கும் தொற்றுக்குள்ளாவதை தவிர்ந்திருப்பதற்கும் மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதற்காக பின்பற்றப்பட வேண்டிய சுகாதார வழிகாட்டல்களை மருத்துவர்களின் ஊடாக மக்களிடம் கொண்டு செல்வது ஊடகத் துறையின் முக்கிய பொறுப்பும் கடமையுமாகும்.

ஆரம்பத்தில் கொவிட் நோய்த்தொற்றை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியதன் பின்னர் ஊடகங்களும் மக்களும் அனைத்தையும் மறந்துவிட்டதும் பொறுப்பை தவறவிட்டதும் தற்போதைய நிலைமைக்கு காரணமாகும். நோய்த்தொற்று உலகிலிருந்து ஒழிக்கப்படும் வரை நாட்டை மூடி வைக்க முடியாது. யதார்த்தத்தை புரிந்துகொண்டு செயற்படவேண்டும். சுமார் 40 நாட்கள் மூடப்பட்டிருந்த பிரதேசங்களிலும் நாளாந்தம் தொற்றாளர்கள் பதிவாகின்றனர். இதிலிருந்து தெரியவருவது மூடிவைப்பதால் மட்டும் நோய்த்தொற்றை ஒழிக்க முடியாது என்பதாகும்.

இலகுவான விடயம் நாட்டை மூடி வைப்பதாகும். எனினும் மக்கள் வாழ வேண்டும். தொழில்கள், விவசாயம், மீன்பிடி உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைககளிலும் ஈடுபட்டு பொருளாதாரத்தை பாதுகாப்பது எனது பொறுப்பாகும். பி.சி.ஆர் பரிசோதனைக்காக அரசாங்கம் நாளொன்றுக்கு 60மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் செலவிடுகின்றது. தனிமைப்படுத்தல் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளுக்கும் நாளாந்தம் பெருந்தொகை செலவிடப்படுகின்றது. மக்கள் இந்த நிலைமையை புரிந்துகொண்டு நோய்த்தொற்றுக்கு ஆளாவதிலிருந்து தவிர்ந்திருப்பது அவர்களது தனிப்பட்ட பொறுப்பும் கடமையுமாகும்.

கொவிட் நோய்த்தொற்று ஒரு சுகாதார பிரச்சனையாகும். அதிலிருந்து மக்களை பாதுகாத்து நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வது சுகாதார சேவையினதும் அரசாங்கத்தினதும் பொறுப்பாகும். உலகின் உயர்தரம் வாய்ந்த அறிவைக் கொண்டுள்ள எமது நாட்டின் வைத்தியர்களுக்கும் சுகாதாரத் துறையினருக்கும் அதனை செய்ய முடியும் என்று தான் உறுதியாக நம்புவதாகவும்  ஜனாதிபதி தெரிவித்தார்.

அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோரும் கொவிட் விசேட செயலணி உறுப்பினர்களும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

போதைப்பொருள் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளை ஒழிப்பேன் – ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ

போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒழித்து வரலாற்று சிறப்புமிக்க உரிமைகளையும் பெருமைகளையும் பாதுகாக்கக்கூடிய வகையில் களனி நகரத்தை கட்டியெழுப்புவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவில் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் நேற்று [30:07.2020] கம்பஹா மாவட்டத்திற்கு இரண்டாம் தடவையாகவும் சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி, களனி ரஜமகா விகாரை பிரதான நுழைவாயிலுக்கு முன்னால் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.

வேட்பாளர் சட்டத்தரணி சிசிர ஜயக்கொடி இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார். பிரதேசத்தின் அபிவிருத்தியை நோக்கமாகக்கொண்ட “பத்தம்ச களனி பிரகடனம்” சிசிர ஜயக்கொடிவினால் ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டது.

வருகை தந்திருந்த மக்கள் முன்வைத்த பிரச்சினைகள் தொடர்பாக அவதானத்தை செலுத்திய ஜனாதிபதி வரலாற்று சிறப்புமிக்க களனிக்கு உரிய பெருமையை பாதுகாக்கும் வகையிலான அபிவிருத்தி செயற்திட்டத்திற்காக பலமான பாராளுமன்றம் ஒன்றை பெற்றுத் தருமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

பேராசிரியர் சங்கைக்குரிய கும்புறுகமுவே வஜிர தேரர் உட்பட மகாசங்கத்தினர், அமைச்சர்களான தினேஷ் குணவர்தன, பிரசன்ன ரணதுங்க மற்றும் வேட்பாளர் பிரசன்ன ரணவீர, வைத்தியர் சீத்தா அரம்பேபொல ஆகியோர் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர்.

வேட்பாளர் நளின் பெர்ணான்டோ ஜா-எல நகர மத்தியில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி வருகை தந்திருந்த மக்களிடம் பிரதேசத்தின் குறைபாடுகள் பற்றி கேட்டறிந்தார்.

கம்பஹா மாவட்டத்தில் அனைத்து கால்வாய்களையும் புனர்நிர்மாணம் செய்து வெள்ள அனர்த்தத்தை

குறைப்பதற்கும் ஜா-எல நகர அபிவிருத்திக்கும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.