சுரேன் இராகவன்

சுரேன் இராகவன்

“13ஆவது திருத்தம் நீக்கப்பட்டால் 1987ற்கு முன்பு காணப்பட்ட நிலை மீண்டும் ஏற்படும்.” -உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன்

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் பிரேரணையொன்றின் ஊடாக நீக்கப்பட்டால், 1987ஆம் ஆண்டுக்கு முன்னர் காணப்பட்ட நிலைமை மீண்டும் இலங்கையில் ஏற்படும். எனவே 13 நீக்கப்பட்டால் இலங்கையின் எதிர்காலம் என்னவாகும் என்பதை இறைவனே அறிவார் என்று உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.

 

எனவே இனியும் தாமதிக்காது சகல கட்சிகளும் இணைந்து 13 தொடர்பில் ஸ்திரமான ஒரு நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் வலியுறுத்தினார்.

 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சி தலைவர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை (28) ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்றது.

 

இதன் போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

 

1987ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் காணப்பட்ட பதற்ற நிலைமையை தணிப்பதற்காக இந்தியாவின் தலையீட்டுடன் மேற்கொள்ளப்பட்ட இந்து – லங்கா ஒப்பந்தத்தின் மூலம் 13ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

 

இதனை முழுமையாக நடைமுறைப்படுத்தும் விவகாரத்தில் முந்தை ஜனாதிபதிகள் எவரும் தலையிடவில்லை என்று தெரிவிக்கப்படுவது கற்பனை கதையாகும்.

 

ரணசிங்க பிரேமதாச, சந்திரிகா பண்டாநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அனைவரும் இவ்விடயத்தில் அவதானம் செலுத்தியிருக்கின்றனர்.

 

எனினும் அவர்களால் இறுதி தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை. ஆனால் தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இது மக்களால் விரும்பப்படாத ஒரு விடயமாகக் காணப்பட்டாலும், ஜனநாயகத்தை ஸ்திரப்படுத்தும் நோக்கில் இதற்கொரு தீர்வு காண்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

 

அதற்கமைய கடந்த புதனன்று கட்சி தலைவர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது 13 ஐ நடைமுறைப்படுத்துவதா? அல்லது நீக்குவதா என்பதை நீங்களே தெரிவு செய்யுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தினால் அதற்கமைய மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியும். 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இணங்க முடியாதெனில் , பாராளுமன்றத்தில் பிரேரணையொன்றை முன்வைத்து அதனை நீக்க வேண்டும் என்று ஜனாதிபதி இதன் போது தெரிவித்தார்.

 

ஜனநாயக தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானிக்கும் உரிமையை சகல கட்சிகளுக்கும் வழங்கியுள்ளார்.

 

எனவே இனியும் தாமதிக்காது எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் சகல கட்சிகளும் ஒருங்கிணைந்த ஸ்திரமான நிலைப்பாடொன்றை அறிவிக்க வேண்டும்.

அதனை விடுத்து 13 பிளஸ் உள்ளிட்ட புதிய கருப்பொருட்களை முன்வைத்தால் , இந்த சிக்கல் தொடர்ந்தும் நீடிக்குமே தவிர இறுதி தீர்வினை எட்டாது என்றார்.

இதன்போது , ஜனாதிபதியின் டில்லி விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி , ’13ஐ முழுமையாக அமுல்படுத்தி தமிழ் மக்களின் அபிலாஷைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றும் என்று நம்புகின்றோம்.’ எனத் தெரிவித்திருந்தார்.

அவ்வாறிருக்கையில் பாராளுமன்றத்தினால் 13 நீக்கப்பட்டால் இந்தியாவின் அழுத்தங்களை எதிர்கொள்ள நேருமல்லவா? இதற்கு இந்தியாவுக்கு எவ்வாறு இலங்கை அரசாங்கம் பதிலளிக்கும்? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் ,அதை என்னால் கூற முடியாது.

13 நீக்கப்பட்டால் இலங்கையின் எதிர்காலம் என்னவாகும் என்பதை இறைவன் மாத்திரமே அறிவார். அல்லது 1987 கால கட்டங்களில் காணப்பட்ட நிலைமைக்கு இலங்கை மீண்டும் செல்லக்கூடும் எனக் குறிப்பிட்டார்.

“நீங்கள் சமஷ்டிதரவில்லை என்று கனவு காண்பீர்கள் என்றால் நாங்கள் சுதந்திர தமிழீழத்தை எடுக்கப்போகின்றோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். ” – எம்.கே. சிவாஜிலிங்கம்

“நீங்கள் சமஷ்டிதரவில்லை என்று கனவு காண்பீர்கள் என்றால் நாங்கள் சுதந்திர தமிழீழத்தை எடுக்கப்போகின்றோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். ”  என தமிழ்தேசிய கட்சியின் செயலாளர் நாயகமும்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர மற்றும் சுரேன் இராகவன் போன்றோரின் அண்மைக்கால கருத்துகள் தொடர்பில் கேட்டபோதே அவர் இதனை தெரிவித்தார் .

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சரத் வீரசேகர கடற்படை அதிகாரியாக இருந்து ஒய்வு பெற்றவர்.  இன்று நேற்று அல்ல தொடர்சியாக ஜெனிவா கூட்டத் தொடர்வரை வந்து இனவாதத்தை கக்குவது மட்டுமன்றி  தமிழ்மக்களின் போராட்டத்தைப் பற்றி குற்றச்சாட்டு முன்வைப்பவர். அதுமட்டுமன்றி தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக பல சோடிக்கப்பட்ட  பொய்களை ஜெனிவாகூட்டத் தொடரில் முன்வைக்கின்ற  வேலைகளை செய்தது மாத்திரமல்ல, ஜெனிவா கூட்டத்தொடரில் எங்களுடன் மோதுகின்ற வேலைகள் மற்றும் வாக்குவாத்தத்தில் ஈடுபட்டவர். அதுமட்டிமன்றி தமிழ் நாட்டில் இருந்து வந்த வைக்கோ போன்ற தலைவர்களுடனும் வாக்குவாத்தத்தில் ஈடுபட்ட நபராவார்.

தற்போது இவர் அமைச்சரில்லை. பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு கடந்த காலங்களில் குறிப்பாக  காலகாலமாக இனவாத கருத்துக்களை கூறிவருபவர்கள் போல்  முன்பிருந்தவர்களை விட மிக மோசமாக இனவாத கருத்துக்களை கக்கிவருகிற செயற்பாட்டில் சரத்வீரசேகர ஈடுபட்டு வருகிறார்.

இவர் சிங்கள பெளத்த இனவாத மக்களின் உண்மையான முகத்தை காட்டி வருகிறார். ஏனையவர்கள் மெழுகு புசியவர்கள் போல் எங்களை ஏமாற்றப்பார்கிறார்கள். இவ்வாறானவர்களை வைத்துக் கொண்டு நாங்கள் ஒரு நாட்டுக்குள் வாழவேண்டும் என்று எங்களுடைய கட்சிகள் அல்லது  தலைவர்கள் நினைப்பது எவ்வாறு?

இனப்படுகொலைகள்  படுமோசமாக இடம் பெற்ற பின்னரும் கூட அதற்கான நீதி கிடைக்குமாயின் அதற்காக  பொதுசன வாக்கேடுப்பு நடாத்தி அதற்காக செல்லமுடியும் என்பது அவர்களுக்கு தெரியும். இதனை விடுத்து அவர்களிடமிருந்து மயிலே மயிலே இறகுபோடு என்று கேட்டுக் கொண்டிருந்தால் பிரயோசனம் எதுவும்  இல்லை.

இதனைபோல்தான் தற்போது சுரேன் இராகவன் வடக்கு மாகாணத்தின் ஆளுநராக . மலையகத்தைச் சேர்ந்தவர். அவரும் வெளிநாடுகளில் வாழ்ந்து இன்று ஒன்றுமில்லாமல்  தேசியப்பட்டியல் எம்.பியாக வந்துவிட்டு  அவர் பேசும் பேச்சுக்கள், வீராப்புகளை ஏற்கமுடியாதுள்ளது. அதிலும் சமஷ்டி பெறலாம் என கனவுகாண வேண்டாம் என்றால் நீங்கள் சமஷ்டிதரவில்லை என்று கனவு காண்பீர்கள் என்றால் நாங்கள் சுதந்திர தமிழீழத்தை எடுக்கப்போகின்றோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

இதனை தவிர இதற்குவேறு வார்த்தைக்ள் எம்மிடம் இல்லை. மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக் கொண்டு அவலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்களுக்கு உதவி செய்யவில்லை.  தமிழனாக இருந்து கொண்டு பெளத்தத்தில் ஆராட்சி கெளரவ பட்டத்தை பெற்றுவிட்டு அதில் பிழையில்லை ஆனால் எமது மக்களின் அல்லது தான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் வீழ்ச்சியைப் பற்றி கதைக்காது சிங்கள பெளத்த பேரினவாத்தத்திற்கு ஓத்துதுகின்றவராக  சுரேன் இராகவனும் இணைந்துள்ளார். அதுமட்டுமன்றி சரத்வீரசேகரவின் அணியில் இணைந்து கொள்ளட்டும். இவற்றையேல்லாம் கண்டு ஈழத்தமிழர்கள் அச்சப்பட போவதில்லை. பயப்படபோவதில்லை  இவர்களுடைய இனவாத கருத்துகள் எங்களுடயை இறுதி இலட்சியத்தை அடைவதற்கு உரமூட்டும் என்பதை நம்புகின்றோம் என்றார்.