சிவபூமி அறக்கட்டளை

சிவபூமி அறக்கட்டளை

ஆறு திருமுருகனின் துர்க்காபுரத்தில் யுவதி தற்கொலை ! ஆனால் எதுவுமே நடக்காதது போல் தெல்லிப்பளையில் நூல் வெளியிடுகின்றார் – காவி மாபியா !

ஆறு திருமுருகனின் துர்க்காபுரத்தில் யுவதி தற்கொலை ! ஆனால் எதுவுமே நடக்காதது போல் தெல்லிப்பளையில் நூல் வெளியிடுகின்றார் – காவி மாபியா !

சிவபூமி அறக்கட்டளையின் தலைவரான ஆறு திருமுருகனால் நடத்தப்படும் துர்க்காபுரம் மகளிர் இல்லத்தில் மாணவியொருவர் கடந்த வியாழக்கிழமை ஏப்பிரல் 24 ஆம் திகதி தற்கொலை செய்துள்ளார். இறந்த யுவதியின் சடலம் யாழ்ப்பாண போதானா வைத்தியசாலையில் ஊடற் கூற்று பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. தெல்லிப்பளையிலுள்ள மகளிர் விடுதியில் 22 வயதான யுவதி தவறான முடிவு எடுத்து உயிரை மாய்த்ததாகவே பெரும்பாலான ஊடகங்களில் செய்திகள் கசிய விடப்பட்டுள்ளன. ஆனால் இச்சம்பவம் ஆறு திருமுருகனின் அறக்கட்டளையான சிவபூமியால் நிர்வகிக்கப்படும் துர்க்காபுரத்தில் இடம்பெற்றது என்ற தகவலை ஊடகங்கள் வெளியிடவில்லை.

இறந்த யுவதியின் சகோதரியும் தெல்லிப்பளை துர்க்காபுரம் மகளிர் இல்லத்திலேயே தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆறு திருமுருகனைக் காப்பாற்ற விடுதியின் பெயர் உட்பட ஏனைய விடயங்கள் இருட்டடிப்புச் செய்யப்படுவதாக தெல்லிப்பளைப் பிரதேச மக்கள் தேசம்நெற்க்கு தெரிவிக்கின்றனர். ஆனால் அவ்வாறானதொரு சம்பவம் இடம்பெறாதது போல் மறுநாள் முன்னாள் யாழ் பல்கலையின் துணைவேந்தர் சண்முகலிங்கனின் நூலை ஆறு திருமுருகன் வெளியிட்டு வைத்தார். இந்நிகழ்வு யுவதி தற்கொலை செய்து கொண்ட துர்க்கா இல்லத்திற்கு அருகாமையிலேயே நடந்தது. பேராசிரியர் சண்முகலிங்கன் துர்க்கை அம்மன் ஆலயத்தின் மலரில் ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டு பேராசிரியரானது தனிக்கதை. யாழ் பல்கலைக்கழகம் தரம்தாழ ஆரம்பித்தன் ஆரம்பப் புள்ளி பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை ஆறு திருமுருகன் சண்முகலிங்கன் கூட்டே.

மலையக இளம்பெண்களை அழைத்து வந்து அவர்களை கண்ணியமாக வளர்க்கின்றோம் எனக் கூறி பெரும் தொகையான நிதியை வெளிநாடுகளில் தனிப்பட்டவர்களிடம் இருந்தும் ஆலயங்களில் இருந்தும் பெற்று வருகின்றார் ஆறு திருமுருகன். ஆனால் அண்மையில் இவருடைய துர்க்காபுரத்தில் மலையக மாணவிகளை இரண்டாம் தரப் பிரஜைகளாக நடத்தியது வெளிவந்தது. இது பற்றி தேசம்நெற் விரிவான செய்திகளை வெளியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்கொலை செய்யுமளவிற்கு துர்க்கா புரம் மகளிர் விடுதியில் என்ன பிரச்சினையுள்ளது. இறந்த யுவதியின் குடும்பப் பின்னணி குறித்தும் எந்தவிதமான உத்தியோக பூர்வ தகவல்களையோ விளக்கத்தையோ துர்க்காபுரம் மகளிர் இல்ல நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இதுவரை தெரிவிக்கவில்லை. பொறுப்புக் கூறும் ஆறு திருமுருகன் இந்த விடயத்திலும் வழமை போலவே மௌனம் சாதிக்கிறார்.

ஏற்கனவே மலையகத்திலிருந்து அழைத்து வரப்பட்டு துர்க்காபுரம் மகளிர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த இளம் பெண்கள் குளிக்கும் இடத்தில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டிருந்தமை தொடர்பில் பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்தது. மகளிர் இல்லத்தில் பெண்பிள்ளைகள் குளிக்கும் இடத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்புக் கமராக்களால் சிறுமிகள் குளிப்பதும், உடைமாற்றுவதும் பதிவுசெய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. அத்துடன் அவ்வாறான பதிவான காட்சிகளும் இணையத்தில் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த விடயத்தில் அப்போதைய ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் விசாரணைகளுக்கு உத்தரவிட்டதாக முதலில் செய்திகள் வெளியாகியிருந்தன. பின்னர் ஆறு திருமுருகனின் அரசியல் செல்வாக்கினால் இந்த விடயம் நீர்த்துப்போக வைக்கப்பட்டது. ஆளுநர் சாள்ஸ்சும் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்.

கடந்த வருடம் கண்காணிப்பு கமரா விடயம் ஒழுங்காக கையாளப்பட்டிருந்தால் இந்த உயிரிழப்பைத் தவிர்த்திருக்கலாம். தெல்லிப்பளை துர்க்காபுரம் அப்பாக்குட்டி தங்கம்மா பராமரிப்பில் இருந்த போது உள்ள நிலமை தற்போது இல்லை எனக் கூறப்படுகிறது.

ஆறுதிருமுருகன் போன்ற யாழ் வேளாள இந்து ஆண்மையவாத தலைமைத்துவத்தின் கீழ் ஒரு மகளிர் இல்லம் இயங்குவது துரதிர்ஷ்டவசமானது என்கின்றனர் பெண்ணுரிமைவாதிகள். வேலியை உயர்த்திக் கட்டி பெண்களை அடுப்படியில் இருத்தி யாழ்ப்பாணக் கலாச்சாரத்தை எப்படி பாதுகாக்கலாம் என கட்டுரை எழுதியவர் ஆறு திருமுருகன் என்ற பிற்போக்குவாதியாவார்.

புலம்பெயர் தமிழர்களிடமிருந்து கோடிக்கணக்கான நன்கொடைகளை ஆறுதிருமுருகன் வசூலிக்கின்றார். பல அறக்கட்டளைகளை நடத்தி வரும் ஆறுதிருமுருகனிடம் குவியும் நிதி நன்கொடைகளுக்கு எந்தவிதமான கண்காணிப்புக்களும் மேற்பார்வையும் கிடையாது.

ஆறுதிருமுருகனால் திரட்டப்படும் பணத்தை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வன்னி மாவட்டத்திற்கு செலவு செய்வதைக்காட்டிலும் சிவபூமி மற்றும் திருக்குறள் வளாகம் என பகட்டுக்கு விரையமாக்கப்படுகிறது. கலாச்சாரம், பண்பாடு மற்றும் சமயத்தை வளர்க்கிறோம் என மக்கள் பசிபோக்க வேண்டிய பணம் விரையமாக்கப்படுகிறது.

யார் ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் அவர்களுடன் நெருக்கத்தை ஆறு திருமுருகன் ஏற்படுத்திக் கொள்வார். அதன் மூலம் தன்னுடைய ஊழலை மறைத்துக் கொண்டு காரியத்தைச் சாதித்துக் கொள்வார். அந்த வகையில் தற்போதைய வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகத்துடனும் ஆறுதிருமுருகன் நெருக்கம் காட்டுகிறார். கடந்த வருடம் மாவிட்டபுரத்தில் திருக்குறள் வளாகம் திறப்பு விழாவில் ஆளுநரும் வடக்கு மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் விரிவுரையாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. அரச அதிகாரத்தில் உயர்மட்டங்களில் உள்ளவர்கள் இவ்வாறான சந்தேகநபர்களை வளர்த்துவிடுவதில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். தேசிய மக்கள் சக்திப் பிரதிநிதிகள் ஆறுதிருமுருகன், சிவபூமி அறக்கட்டளை விடயங்களில் விலத்திச் செயற்படுவது மிக அவசியம்.

துர்க்காபுரம் மகளிர் இல்லத்தில் இளம் யுவதி தற்கொலை செய்துகொண்டுள்ளமையை சந்தேக மரணமாக உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தற்கொலை விவகாரத்தில் சுயாதீனமான விசாரணைகள் எந்தவிதமான அரசியல் அழுத்தங்களுக்கும் இடம் கொடுக்காமல் முன்னெடுக்கப்பட வேண்டும். துர்க்காபுரம் மகளிர் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதத்தை அரசாங்கத்திடமிருந்து பெற வேண்டும் .

நாட்டின் எப்பாகத்திலும் இயங்கும் சிறுவர், பெண்கள் மற்றும் முதியோர் விடுதிகள் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய அரசாங்கத்தின் நேரடியான கண்காணிப்பு முகாமைத்துவம் உருவாக்கப்பட வேண்டும். தான்தோன்றித்தனமாக பராமரிப்பு விடுதிகளை யாரும் விதிமுறைகளுக்குட்படாமல் நடத்த அனுமதிக்க கூடாது. அந்த வகையில் தெல்லிப்பளை துர்க்காபுரம் இல்ல இளம்யுவதியின் தற்கொலையின் பின்னணி மற்றும் காரணம் குறித்து முழுமையான விசாரணை அறிக்கை வெளிப்படுத்தப்பட வேண்டும்.

மேலும் சிவபூமி அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படும் வயோதிபர்கள் சரியான முறையில் கவனிக்கப்படுவதில்லை, அவர்கள் கண்ணியமாக நடத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்களும் தேசம்நெற்க்கு தெரிவிக்கப்படுகின்றது. மேலும் அங்கு பராமரிக்கப்படுபவர்கள் இலவசமாக சேவைகளைப் பெறவில்லை. அவர்களிடமிருந்து அவர்களுடைய ஓய்வூதியப் பணம் மற்றும் புலத்திலிருந்து அவர்களுடைய உறவினர்களிடமிருந்தும் பணம் பெற்றே இந்த வயோதிபர்கள் பராமரிக்கப்படுகின்றனர். மேலும் அவர்களுடைய சொத்துக்களையும் ஆறு திருமுருகன் அவர்களுக்கு அழுத்தங்களைக் கொடுத்து உரிமைமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டுக்கள் உள்ளது.

சிவபூமி அறக்கட்டளை ஆறு திருமுருகனின் நெருங்கிய குடும்பத்தவர்களின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. கல்லாநிதியான இவர் ஸ்கந்வரோதயாக் கல்லூரி அதிபரானதும் கலாநிதிப் பட்டம் பெற்றதும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அணைவினாலேயே. அதன் பின் அதிபர் பதிவியிலிருந்தும் வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டு வெளியேறினார். அவருடைய தற்போதைய சொத்து மதிப்புப் பற்றிய கேள்விகளும் தற்போது எழுப்பப்டுகின்றது. காவி மாபியா ஆறு திருமுருகனின் சிவபூமி துப்பரவு செய்யப்பட வேண்டும்.

தன்னுடைய கால் ஏக்கர் காணிக்காக செஞ்சோலையை நடத்தும் குமரன்பத்மநாதனுக்கு எதிராகவும் அங்குள்ள குழந்தைகளுக்கு எதிராகவும் அபாண்டமான பழியை ஒரு பெண் வெளியிட்ட போது அனைத்து ஊடகங்களும் அதனைப் பிரசுரித்தன. செஞ்சோலையை நித்தியானந்தாவின் கைலாஸ்க்கு ஒப்பிட்டு அங்கு தங்கியுள்ள குழந்தைகளைக் கொச்சைப்படுத்தினார் அக்காணிச் சொந்தக்காரி. ஆனால் குளியல் அறையில் குளிக்க விடாமல் வெட்டவெளியில் நீராடவிட்டு சிசிரிவி இல் அதனைப் பதிவு செய்தது பற்றியோ இளம் யுவதி தற்கொலை செய்தது பற்றியோ யாழ் ஊடகங்கள் சமூக வலைத்தளங்கள் செய்தி வெளியிடவில்லை. யாழ் உதயன் பத்திரிகை மட்டும் ஒரு சிறு பதிவைப் வெளியிட்டு இருந்தது. ஆறு திருமுருகனையும் துர்க்கா புரத்தையும் சிவபூமி அறக்கட்டளையையும் தொடர்ந்தும் குற்றங்களை இழைக்க இந்த ஊடகச்செயற்பாடுகளும் துணை போகின்றன.

 

“வடக்கின் கல்வியை அடிமட்டத்திலிருந்து கட்டியெழுப்ப தாயக உறவுகள் ஒன்றிணைய வேண்டும்.”- EDFSL தலைவர் திரு. சச்சிதானந்தம் வலியுறுத்தல் !

கடந்த 08.01. 2023 அன்று இலங்கை கல்வி அபிவிருத்தி குழுமத்தை ஆரம்பிப்பது தொடர்பான அங்குரார்பண ஆலோசனைக் கூட்டம் இணுவில் மத்திய கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. இலங்கைக்கான கல்வி மேம்பாட்டு மன்றம் (பிரித்தானியா ) ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் வடக்கின் முக்கியமான கல்வித்துறை மற்றும் நிர்வாகத் துறையில் செயல்பட்டுக் கொண்டிருப்போர் – ஓய்வு பெற்றோர் – அரச சார்பற்ற நிறுவன அங்கத்தினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வுக்கான ஆசியுரையை வழங்கிய சிவபூமி அறக்கட்டளை தலைவர் ஆறுதிருமுகன் பேசிய போது “வடக்கின் கல்வி நிலை இன்று தனியார் டியூசன் சென்டர்களை மையப்படுத்தி நகர்வதாகவும் – மாணவர்களுக்கு ஆன்மீக கல்வியின் தேவை இல்லாது போய்விட்டது எனவும் விசனம் வெளியிட்டார். மேலும் போதைப்பொருள் கலாச்சாரத்தினுள் உள்நுழைய ஆரம்பித்துள்ள இளைஞர் சமூகத்தை மீட்டெடுக்க வேண்டும் என கூறியதுடன் யாழ்ப்பாண பல்ககைழகமானது முற்றாக சிங்கள- முஸ்லீம் வசமாவமாவதாகவும் அவர் சுட்டிக்காட்டியழிருந்தார்.

இந்த கூட்டம் தொடர்பில் பேசியிருந்த EDFSL ன் தலைவர் திரு. சச்சிதானந்தம் அவர்கள்  “இலங்கை கல்வி அபிவிருத்தி குழுமம்” ஆரம்பிக்கப்பட வேண்டியதன் தேவையை வலியுறுத்தி இருந்தார். இதன் போது மேலும்  கருத்துரையாற்றியிருந்த அவர்,

வடக்கின் கல்வி வீழ்ச்சி தொடர்பிலும் அதனை அதன் அடிக்கட்டுமானத்திலிருந்து வளர்த்தெடுக்க வேண்டியதன் தேவை தொடர்பிலும் – இதற்கு கல்வி நிர்வாகத்தில்  செயற்படக்கூடிய அனைவருடைய ஒத்துழைப்பின் தேவை  தொடர்பிலும் திரு. சச்சிதானந்தம் வலியுறுத்தி இருந்தார். அத்துடன் புலம்பெயர் தேசங்களில் உள்ள உறவுகளிடம் இருந்து இன்னும் சில வருடங்களுக்கு பின்பு எந்த ஒரு உதவிகளையும் எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் புலம்பெயர் தேசங்களில் வாழக்கூடிய முதலாம் இரண்டாம் தலைமுறையினரே இன்று தாயக பகுதிக்கு கிடைக்கக்கூடிய உதவிகளை செய்பவோராக உள்ளனர். ஆனால் புலம்பெயர் தேசங்களில் உள்ள மூன்றாம்,  நான்காம் தலைமுறையினரிடமிருந்து இந்த உதவிகளை எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் அவர்கள் என்னைப்போல தாயகத்தில் பிறந்து – தாயக வாழ்வியலை அறிந்து கொண்டவர்கள் அல்ல. எனவே புலம்பெயர் தேசங்களில் இருந்து பெறக்கூடிய உதவிகளை விரைந்து பெறுவதும் அதனை ஆக்கப்பூர்வமான வகையில்  தாயக கல்வி மேம்பாட்டுக்கு பயன்படுத்துவதும் இன்றியமையாதது என வலியுறுத்தி இருந்தார்.  மேலும் கல்விச் சுடர் வெளியீடு தொடர்பான முக்கியமான விடயங்கள் பற்றியும் அவர் தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து திருமதி செல்வரூபி ஸ்கந்த ராஜா அவர்கள் முன்பள்ளி கல்வியின் தேவை தொடர்பிலும் அதனை வடக்கிலிருந்து வலுப்படுத்த வேண்டியதனுடைய தேவை தொடர்பாகவும் விழிப்புணர்வு கலந்துரையாடல்  ஒன்றை  மேற்கொண்டிருந்தார்.

தொடர்ந்து திரு . சிவசிதம்பரம் கிருஷ்ணாணந்தன் அவர்களால் இலங்கை கல்வி அபிவிருத்தி குழுமத்தின் அங்குரார்ப்பணம் தொடர்பான தெளிவூட்டல் ஒன்று  இடம்பெற்றது. இதில் கருத்துரையாற்றியிருந்த சிவசிதம்பரம் கிருஷ்ணாணந்தன் அவர்கள் இலங்கை கல்வி அபிவிருத்தி குழுமம் உருவாக்கப்படுவதன் நோக்கத்தை பின்வரும்  தலைப்புக்களில் வலியுறுத்தியிருந்தார்.

01. முன்பள்ளிகள் தொடர்பான கரிசனையை அதிகரித்து முன் பள்ளிகளை தரமானதாகவும் – ஆக்கபூர்வமான செயற்பாடுகளை மேற்கொள்ள கூடியதுமான  ஒரு களமாக மாற்றுவதற்காக செயற்படுதல். (முன் பள்ளி ஆசிரியர்களுக்கான மேலதிக நிதி வழங்குதல், மாணவர்களுக்கான ஊட்டச்சத்துள்ள உணவுகளை வழங்குதல், முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கற்பித்தல் தொடர்பான பயிற்சிகளை வழங்குதல்)

02. ஆங்கில கல்வியை வழங்குதல். தொழில்துறையில் மிக முக்கியமான மொழியாக இருக்கக்கூடிய ஆங்கிலத்தை சிறுவயது முதலே வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல். இதற்காக முன் பள்ளி ஆசிரியர்களுக்கான ஆங்கில பயிற்சி தொடர்பான வகுப்புக்களை மேற்கொள்ளுதல் – இதற்காக British Council  உதவியை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

03. கல்வி தொடர்பான செய்திகளை பரிமாற்றிக் கொள்ளும் ஒரு தளமாக கல்விச் சுடர் சஞ்சிகையை வளர்த்தெடுத்தல்.

04. தாயகப் பகுதிகளில் வாழும் மக்களிடையே கல்விச்சிந்தனை தொடர்பான மாற்றங்களை ஏற்படுத்துதல்.

போன்ற விடயங்களை கல்வி அபிவிருத்தி குழுமம் தனது நோக்கங்களாக கொண்டுள்ளதாக திரு. சிவசிதம்பரம் கிருஷ்ணாணந்தன் அவர்கள் தெரிவித்திருந்தார். மேலும் கல்வி அபிவிருத்தி குழுமத்திற்கான அலுவலகம் தொடர்பிலும் அதன் நிர்வாக நடவடிக்கைகள் அவற்றுக்கான நிதி திரட்டுதல் போன்ற பல விடயங்களையும் அவர் முன் வைத்திருந்தார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த அகில இலங்கை கம்பன் கழக தலைவர் கம்பவாரிதி இ.  ஜெயராஜ் அவர்கள் ” வெளிநாட்டவர்களின் நிதியை பெறுவதற்கான ஒரு கழகம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் எனவும் – வெளிநாட்டில் இருக்கக்கூடிய புலம்பெயர் சொந்தங்களின் எண்ணிக்கை 15லட்சமாகும். இவர்கள் ஒவ்வொருவரும் ஒரு பவுன்ஸ் வீதம் வழங்கினாலே வடக்கின் பின்தங்கிய நிலையை மாற்றி விடலாம். இதற்கு அரசியல்வாதிகள் முன் வந்து இந்த செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் யாழ்ப்பாண தமிழர்கள் இன்று தன்மானம் இழந்து கையேந்தி வாழ்கின்ற வாழ்க்கைக்கு பழக்கப்பட்டு விட்டார்கள் எனவும் அவர் கருத்துரையாற்றினார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த வைத்தியகலாநிதி t.சத்தியமூர்த்தி அவர்கள் கருத்துரையாற்றிய போது  “இன்றைய கல்விமுறையானது அகம் சார்ந்ததாக இல்லாது மிகப் பெரிய கட்டடங்களையும் – உபகரணங்களையும்  பதக்கச் சான்றிதழ்களையும் மையப்படுத்தி நகர்கின்றது. போட்டி பரீட்சைகளூடாக பல மாணவர்கள் கல்வி நிலையில் பின்தங்கியவர்களாக அடையாளம் காணப்பட்டு அவர்கள் ஒதுக்கப்படுகின்ற போக்கு நீடிக்கின்றது. இது இன்று நாம் எதிர் கொள்ளக்கூடிய போதைப் பொருள் கலாச்சாரம் உள்ளிட்ட மிகப்பெரிய சமூக சீர்கேடுகளுக்கு அடித்தளம் இட்டு விடுகிறது. இந்தக் கல்வி முறையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும். இலங்கையின் கல்வியும் சுகாதாரமும் மிகப்பெரிய சொத்து. ஆனால் இன்று இவை பொது நலனுக்காக பயன்படுவதை காட்டிலும் இன்று  தனி நபர் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படுகின்ற போக்கு மேலோங்குகின்றது. இந்த நிலையை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். 

 

இந்த நிகழ்வில் கருத்துரையாற்றியிருந்த Face அமைப்பின் பணிப்பாளர்  A.சத்தியமூர்த்தி அவர்கள் கிழக்கு மாகாணத்தின் கல்வி வளர்ச்சி தொடர்பிலும் – கிழக்கு மாகாணத்தின் கல்வி வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பு பற்றியும் – அவர்களிடமிருந்து வடக்கு தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய விடயங்கள் பற்றியும் விவரித்து இருந்தார். இதன் போது தேசம் நெட்  திரு.த. ஜெயபாலன் அவர்கள் எழுதியிருந்த “கிழக்கில் ஒரு கல்விச் சுனாமி” என்ற கட்டுரையின் விடயங்களை மேற்கோள் காட்டி “கிழக்கின் கல்வி,  ஜெயபாலன் குறிப்பிட்டது போல ஒரு மிகப்பெரிய விஸ்வரூபம் கண்டுள்ளது”  என  தன்னுடைய உரையை நிகழ்த்தியிருந்தார். 

May be an image of 19 people, people standing and indoorஇறுதியாக ஓய்வு பெற்ற பிரதி பரீட்சைகள் ஆணையாளர் செல்வரூபி ஸ்கந்த ராஜா அவர்களுக்கும் – யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை மையப்படுத்தி இயங்கிக்கொண்டிருக்கும் மனிதம்  மாணவர் அமைப்பின் அங்கத்தினர்களுக்குமிடையே முன்பள்ளி கல்வியை முன்னேற்றுவதற்கான நடைமுறைகள் தொடர்பான உரையாடலும் இடம்பெற்றதனை தொடர்ந்து கல்வி அபிவிருத்தி குழுமம் ஆரம்பிப்பதற்கான அங்குரார்ப்பண ஆலோசனை கூட்டம் முடிவுக்கு வந்தது. 

அடிப்படைக் கல்வியில் ஏற்படுத்தப்படுகின்ற மாற்றமே சமூக மாற்றத்துக்கான திறவுகோலாக – கல்வி நோக்கிய பெரும்பாய்ச்சலுக்கு அடிப்படையாக அமையும் என்பதில்  மாற்றுக் கருத்து எதுவும் இல்லை. திரு. சச்சிதானந்தன் அவர்கள் குறிப்பிட்டது போல அடிப்படைக் கல்வியில் ஏற்படுத்தப்படுகின்ற மாற்றமே சமூக வளர்ச்சிக்கு அடிப்படையானது என்ற கருத்து வரவேற்கத்தக்கது. இருந்த போதிலும் அடிப்படைக் கல்வி அதாவது மாணவர்களுக்கான முன்பள்ளி கல்வியானது நேரடியாக அரசாங்கத்தின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டு இயங்க வேண்டும் என்ற கருத்துக்களும் வருகை தந்திருந்தோரால்  வலியுறுத்தப்பட்டிருந்தது. குறிப்பாக முன்பள்ளி ஆசிரியர்களுக்காக மேலதிகமான கொடுப்பனவை EDFSL வழங்குவதாக கூறியது தொடர்பில் இறுதியாக உரையாற்றிய இணுவில் மத்திய கல்லூரி அதிபர் இளைய தம்பி துரை சிங்கம் தன்னுடைய அதிருப்தியை வெளியிட்டிருந்ததுடன் அதற்கு மாற்று வழிகள் தொடர்பில் சிந்திக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். 

 

 

முன்பள்ளிகளில் இருந்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியது இன்றைய திகதிக்கு மிக முக்கியமானது ஆக்கபூர்வமானதுமான ஒரு செயற்பாடாகும். எனவே இந்த மாற்றத்திற்கு கல்விச்சூழலில் இயங்கும் சகல தரப்பினரும் தங்களுடைய வலுவான ஆதரவை கல்வி அபிவிருத்தி குழுமத்திற்கு வழங்க வேண்டியது அவசியமான ஒன்றாகும்.