சவேந்திர சில்வா

சவேந்திர சில்வா

விமல் வீரவங்சவிடம் இழப்பீடு கோரி மேன்முறையீடு !

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவிடம் இருந்து பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, இழப்பீடு கோரி மேன்முறையீடு செய்த்துள்ளார்.

 

அண்மையில் விமல் வீரவன்சவினால் எழுதி வெளியிடப்பட்ட புத்தகம் தனக்கும் இராணுவத்திற்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்து அவர் இவ்வாறு செயற்பட நடவடிக்கை எடுத்துள்ளார்.

 

“9 மறைக்கப்பட்ட கதை” என்ற நூலை விமல் வீரவன்ச வெளியிட்டிருந்தார்.

குறித்த புத்தகம் , காலிமுகத்திடல் போராட்டத்தின் பின்னணியில் உள்ள இரகசியங்களை அம்பலப்படுத்த எழுதப்பட்டது என அவர் தெரிவித்திருந்தார்.

காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டங்களின் பின்னணியில் உள்ள இரகசியங்களை வெளிப்படுத்தத் தவறினால் எதிர்காலத்தில் மிகவும் பாரதூரமான நிலைமைக்கு நாடு செல்ல வழிவகுக்கும் எனவும் வீரவன்ச தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாவற்குழி பௌத்த விகாரைக்கு சவேந்திர சில்வா வருகை – தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் கவனயீர்ப்பு போராட்டம் !

யாழ். நாவற்குழி பௌத்த விகாரைக்கு சவேந்திர சில்வா வருகை தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் இன்று மதியம் 2 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று விகாரைக்கு வருகை தரும் வீதியில்  முன்னெடுக்கப்பட்டது.

இதன் பொழுது தமிழர் தேசத்தில் பௌத்த விகாரை எதற்கு!இனப்படுகொலையாளி சவேந்திர சில்வாவே  வெளியேறு! நிறுத்து நிறுத்து பௌத்த மயமாக்கலை நிறுத்து! வெளியேறு வெளியேறு இராணுவமே வெளியேறு! நாவற்குழி  விகாரை சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பின் அடையாளம்! திட்டமிட்ட  பௌத்த மயமாக்கலை நிறுத்து! நாவற்குழி தமிழர் தேசம் !தமிழர் தேசத்தில் புத்த கோயில் எதற்கு! ஆகிய பதாகைகளை ஏந்திய  வண்ணம் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்பொழுது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்  செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய  செல்வராசா கஜேந்திரன்,தமிழ் தேசிய உட்பட்ட கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

“மக்களுக்கு எதிராக ஒரு தோட்டாவை கூட பயன்படுத்தாதவர் சவேந்திர சில்வா” – அநுரகுமார திஸாநாயக்க

இலங்கை முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிற்கு தண்டனை வழங்க முற்பட்டால் நாம் சவேந்திர சில்வா பக்கமே நிற்போம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சவேந்திர சில்வாவுடன் எமக்கு சில விடயங்களில் பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால், மக்கள் எழுச்சியைக் கட்டுப்படுத்துவதற்கு அவர் தோட்டாக்களைப் பயன்படுத்தாமல் இருந்ததை மதிக்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இலத்திரனியல் ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

“மக்கள் எழுச்சியின் போது அதனை ஒடுக்குவதற்குத் தோட்டாக்களைப் பயன்படுத்தாமல் மக்கள் பக்கம் நின்ற முன்னாள் இராணுவத் தளபதியும் பாதுகாப்புப் பதவி நிலை தலைமை அதிகாரியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்குத் தேவையான நடவடிக்கையை முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மேற்கொள்ளவில்லை என அவருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

சவேந்திர சில்வா நடவடிக்கை எடுக்காததால் தான், அவர் விசாரணைக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. எனவே நீங்களும் அவ்வாறு இருக்க வேண்டாம் என மற்றைய தரப்புகளுக்கு எச்சரிக்கை விடுக்கவே அவருக்கு எதிராக நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.

மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்குத் தோட்டாக்கள் பயன்படுத்தாமை தொடர்பில் சவேந்திர சில்வாவுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு, அவருக்குத் தண்டனை வழங்கப்பட முயற்சி எடுக்கப்படுமானால் நாம் சவேந்திர சில்வாவின் பக்கம் நிற்போம்.

ஏனெனில் அன்று அவர் மக்கள் பக்கமே நின்றுள்ளார். இரத்த ஆறு ஓடுவதைத் தடுத்துள்ளார்” எனவும் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பதவி விலகுகிறார் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா !

தற்போதைய இராணுவ பதவிநிலை பிரதானி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே எதிர்வரும் 1 ஆம் திகதி முதல் புதிய இராணுவத் தளபதியாக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் இராணுவ தளபதி பதவியில் இருந்து விடுகை பெறவுள்ளார்.

இதை அடுத்து எதிர்வரும் ஜுன் மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் ஜெனரல் ஷவேந்திர சில்வா பாதுகாப்பு படைகளின் புதிய பதவிநிலை பிரதானியாக கடமைகளைப் பொறுப்பேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தற்போது பாதுகாப்பு படைகளின் பதில் பதவிநிலை பிரதானியாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

“இலங்கைக்கான அந்நியச் செலாவணியை இராணுவ வீரர்கள் கொண்டு வருவார்கள்.”- சவேந்திர சில்வா

மாலியில் (MINUSMA) ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் பணிக்காக நன்கு பயிற்றுவிக்கப்பட்ட 243 பேர் உள்ளடக்கிய இலங்கை இராணுவ குழுவின் 100 பேரை உள்ளடக்கிய முதற்கட்ட குழுவினர் நேற்று (23) மாலை மாலி நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றனர்.

மேற்படி குழுவினரை வழியனுப்பி வைக்கும் முகமாக, பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்திற்கு சென்று அக்குழுவினருடன் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டு அவர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா,

நாடு பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள இவ்வேளையில் நாட்டு மக்களுக்கு அவசியமான பாதுகாப்பை வழங்கும் இலங்கை இராணுவம் நாட்டிற்கு அவசியமான அந்நியச் செலாவணியைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது எனத் தெரிவித்தார்.

“மாலியில் உள்ள எமது படையினர், களநிலவரத்தை பொருட்படுத்தாமல், கடினமான பணியைச் செய்கிறார்கள். இவ்வாறு எங்கள் படையினரின் தொழில்முறை தரம் மற்றும் அவர்களின் சிறந்த பணிகளின் மூலம் ஈர்க்கப்பட்ட ஐ.நா அமைதி காக்கும் பிராந்திய தளபதிகள் தங்களது பாராட்டுகளை எமது படையினருக்கு தெரிவித்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்கும் பொறுப்பில் இருந்து எக்காரணம் கொண்டும் நாங்கள் விலக மாட்டோம். மே 9 ஆம் திகதி 24 மணி நேரத்துக்குள் வெடித்த அமைதியின்மையை பொலிஸாரின் ஒத்துழைப்புடன் இராணுவத்தினர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். அதற்காக பொதுமக்கள் எமக்கு வழங்கிய ஒத்துழைப்பு அளப்பரியது எனத் தெரிவித்த அவர் இவ்வாறான ஒத்துழைப்புகளை தொடர்ந்தும் வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

“ இலங்கையில் தொடரும் சித்திரவதைகளிற்கு இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவே காரணம்.” – பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் சர்மா

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க் குற்றவாளிகளை தடை செய்வதற்கு பிரித்தானிய அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் விரேந்திர சர்மா வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் மற்றும் தற்போது இலங்கையில் தொடரும் சித்திரவதைகளிற்கும் இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவே காரணம் என்றும் அவர் கூறினார்.

சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கடந்த வருடம் அமெரிக்கா பயணத்தடை விதித்தது போன்று பிரித்தானியாவும் தங்கள் மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகார சபையின் கீழ் தடை செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

மேலும் இந்த நடவடிக்கை பொறுப்புக்கூறல் தொடர்பாக மேற்கொள்ளப்படும் முக்கிய நடவடிக்கையாகவும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை வழங்குவதற்கான பிரித்தானிய அரசாங்கத்தின் கடப்பாட்டினை உறுதிப்படுத்துவதாகவும் இருக்கும் என்றும் தெரிவித்தார்.

சவேந்திர சில்வா தொடர்பான யுத்தகுற்ற ஆதாரங்கள் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு தடை விதிப்பது குறித்து பிரித்தானியா தொடர்ந்தும் அவதானம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

“முன்னரைப் போல இனியும் பிழையான வழியில் செல்லாது சரியான பாதை நோக்கி நல்வழியில் பயணியுங்கள்.” – முன்னாள் போராளிகளுக்கு இராணுவத்தளபதி அட்வைஸ் !

“முன்னரைப் போல இனியும் பிழையான  வழியில்  செல்லாது சரியான  பாதை நோக்கி நல்வழியில் பயணியுங்கள்.” என முன்னாள் போராளிகளுக்கு இராணுவத்தளபதி சவேந்திர சில்வா அறிவுரை கூறியுள்ளார்.

இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் முன்னாள் போராளிகளுக்கு உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பின் முன்னாள் போராளிகளை சந்தித்து கலந்துரையாடும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் பேசிய அவர்,

அண்மையில் அரசாங்கத்தினால் பொது மன்னிப்பின் அடிப்படையில் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த   முன்னாள் போராளிகள் சிலர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.  அவர்கள் இன்று சமூகத்தில் நல்லவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் சிறையில் இருக்கும் ஏனையோரையும் விடுவிக்க கூடியதாக இருக்கும். உங்கள் விடுதலையைப் பற்றி  பார்க்கிறார்கள், அவதானிக்கிறார்கள் எனவே நீங்கள் சமூகத்தில் நல்ல பிரஜையாக செயற்பட வேண்டும். அதாவது முன்னரைப் போல பிழையான வழிகளில் செல்லாது  சரியான பாதை நோக்கி  செல்லுங்கள் பழையவற்றை மறைந்து நல்லதை சிந்தித்து சமூகத்தில் உள்ளோர் உங்களை நல்லவர்கள் என்று சொல்லும் அளவுக்கு உங்களது வாழ்க்கையை கொண்டு செல்லுங்கள்

இராணுவம் என்ற ரீதியில் நாங்கள் முன்னாள் போராளிகளாகிய உங்களுக்கு எங்களாலான உதவிகளை செய்ய தயாராக இருக்கின்றோம். அதாவது வீடு கட்டித் தருவது என்றாலும் சரி  வேறு ஏதாவது உதவி என்றாலும்  நாங்கள் அதை செய்யத் தயாராக உள்ளோம் ஏனென்றால் அது எமது கடமையாகும் .

குறிப்பாக நீங்கள் முன்னாள் போராளிகள், நீங்கள் எமக்கு எதிராகத்தான் சண்டையிட்டீர்கள். நாங்கள் அதையெல்லாம் மறந்து இராணுவத்தினர் ஆகிய நாம் உங்களுக்கு உதவி செய்ய தயாராக இருக்கின்றோம். அதாவது உங்களை எமது  சகோதரர்களாக   பார்க்கின்றோம். எனவே நீங்களும் அதேபோல்  நேரான பாதையில் பயணியுங்கள் உங்களது விடுதலை அனைவராலும் பார்க்கப்படுகின்ற விடயம் ஆகும். எனவே நீங்கள் சமூகத்தில் நல்ல பிரஜையாக இருந்து செயற்படுவதன் மூலம் ஏனைய உங்களைப் போன்றவர்களையும் விடுவிப்பதற்கு ஏற்ற சூழ்நிலை உருவாகும் எனவும் தெரிவித்தார்.

“இலங்கை இராணுவமானது ஒரு மனிதாபிமான ஒரு இராணுவம் என்பதை யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள்.”  – யாழில் இராணுவத்தளபதி சில்வா !

“இலங்கை இராணுவமானது ஒரு மனிதாபிமான ஒரு இராணுவம் என்பதை யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள்.”  என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

யாழில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீட்டினை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

“புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் யுத்த காலத்தில் இடம்பெற்ற சண்டையின்போது கொல்லப்பட்ட ஒருவரின் குடும்பத்துக்கே இன்று இராணுவத்தினரால் வீடு அமைத்துக் கொடுத்திருக்கிறோம். இலங்கை இராணுவமானது ஒரு மனிதாபிமான ஒரு இராணுவம் என்பதை யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். ஏனைய தமிழ் மக்களுக்கும் அது நன்றாக புரியும்.

ஆனால் வெளிநாட்டில் இருப்பவர்கள் இங்கு குழப்பத்தை ஏற்படுத்தும் முகமாக இங்குள்ளவர்களுக்கு பணத்தை அனுப்பி அல்லது வெளிநாட்டு தொடர்பு கொண்டுள்ளவர்கள் இங்கே இராணுவத்துக்கு எதிராக பொய் பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த இராணுவம் கொடுமையான இராணுவம். இங்கே தேவையற்றது என பிரசாரம் செய்கிறார்கள். ஆனால் இங்கு உள்ள இராணுவத்தினரால் தமிழ் மக்களுக்கு நன்மை செய்யப்படுகின்றது என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள்.

அத்தோடு தமிழ் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் நாங்கள் முப்படையினரும் புரிவோம். அத்தோடு இன்றைய தினம் புத்தாண்டை முன்னிட்டு தமிழ் குடிமகன் ஒருவருக்கு இந்த வீட்டை அமைத்துக்கொடுத்ததையிட்டு இலங்கை இராணுவத்தினராகிய நாங்கள் பெருமைப்படுகிறோம்.

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று நாம் விஜயத்தினை மேற்கொண்டு யாழ்ப்பாணத்தில் தற்போது உள்ள பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து உள்ளேன்.

அத்தோடு கொரோனா நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளேன். அத்தோடு தற்போதுள்ள கொரோனா நிலையினை எவ்வாறு நிர்வகிப்பது போன்ற விடயங்கள் தொடர்பில் நான் இன்று ஆராய்ந்து இருந்தேன்.

எதிர்வரும் நாட்களில் சிங்கள தமிழ் புத்தாண்டு வர இருக்கின்றது. எனவே பொதுமக்கள் தமது புத்தாண்டை மிகவும் அமைதியான முறையில் கொண்டாடுவது மிகவும் சிறந்தது” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.