கோட்டாபய ராஜபக்ச.

கோட்டாபய ராஜபக்ச.

கோட்டாபய ராஜபக்சவை அதிகாரத்தில் இருந்து வெளியேற்றியதில் சதித்திட்டம் எதுவுமில்லை – அரகலய செயற்பாட்டாளர் வசந்த முதலிகே

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை அதிகாரத்தில் இருந்து வெளியேற்றியதில் சதித்திட்டம் இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ள அரகலய என்ற காலிமுகத்திடல் செயற்பாட்டாளர் வசந்த முதலிகே, பொதுமக்களே அவரை வீட்டுக்கு அனுப்பினர் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டபோது, ராஜபக்சவை பதவியில் இருந்து அகற்றுவதற்கு மக்களுக்கு அதிகாரம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, “என்னை ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கான சதி” என்ற நூலை அண்மையில் வெளியிட்டுள்ளார்.

குறித்த நூலில் தன்னை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றுவதற்கான அரசியல் காரணங்களை விளக்கியுள்ளார். அதில் “2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெற்றதில் இருந்து வெளிநாட்டுத் தலையீடுகள் இலங்கையின் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

2019 நவம்பரில் நான் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்திலிருந்து, சில வெளிநாட்டு மற்றும் உள்ளூர் கட்சிகள் என்னை ஆட்சியில் இருந்து அகற்றும் நோக்கத்தில் இருந்துள்ளன.

மேலும், இந்த நாடு சுதந்திரமடைந்த முதல் அறுபது வருடங்களில் ஒருபோதும் அனுபவித்திராத வகையில் வெளிநாட்டுத் தலையீடும், உள்ளக அரசியலின் சூழ்ச்சியும் இன்று இலங்கையின் வாழ்க்கையில் கலந்துள்ளது“ என்று கோட்டாபய தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளை தமிழர்களும் – முஸ்லீம்களும் தனக்கு எதிரான சதியை செய்ததாக கோட்டாபாய ராஜபக்ச தனது நூலில் குறிப்பிட்டுள்ள நிலையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்களில் பெரும்பான்மையானோர் ‘அரகலய’ போராட்டத்தில் பங்கேற்கவில்லை எனவும் மாறாக சிங்களவர்களே அப்போராட்டத்தின் முக்கிய பங்காளிகளாக செயற்பட்டனர் எனவும் மக்கள் பேரவையின் செயற்பாட்டாளரான ராஜ்குமார் ரஜீவ்காந்த் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

“ஒரு வழக்கறிஞராக கோட்டாபய ராஜபக்சவை பாதுகாத்ததே எனது வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய சாதனை.” – அமைச்சர் அலி சப்ரி

“ஒரு வழக்கறிஞராக கோட்டாபய ராஜபக்சவை பாதுகாத்ததே எனது வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய சாதனை எனவும் கோட்டாபாய  பிரிவினைவாதத்தை தோற்கடித்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்திய தளபதி எனவும்  வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் அவரிடம் கேள்வி கேட்கப்பட்ட போது கோட்டாபய ராஜபக்ச தொடர்பில் தனது கருத்தை தீர்க்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச 2019 அதிபர்த் தேர்தலுக்குத் தயாராகிக்கொண்டிருந்தபோது, அவருடைய சட்ட விவகாரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர் நீங்கள். அப்போது செய்தது தப்பு என்று இப்போது நினைக்கவில்லையா?

இதற்கு பதிலளித்த அவர், “நிச்சயமாக இல்லை. ஒரு வழக்கறிஞராக, நான் யாரைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று யாரும் என்னிடம் சொல்லக்கூடாது. அது என் கடமை. கோட்டாபய ராஜபக்ச பொருளாதார ரீதியாக தோல்வியடைந்தார். ஆனால், இந்த நாட்டின் தேசிய பாதுகாப்பையும் இறையாண்மையையும் பாதுகாக்க அவர் செய்த பணியை புதிதாக வந்துள்ள மக்களுக்கு நினைவில் இல்லை. ஆனால் அது மக்களின் நினைவில் நீங்காத ஒன்று. அவரைப் பாதுகாத்ததே எனது வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகக் கருதுகிறேன்.”என்றார்.

 

 

 

“இராணுவத்தை காட்டிக்கொடுத்து விட்டு ராஜபக்சக்கள் விடுதலை புலிகள் அமைப்பின் அங்கத்தவர்களை பாதுகாத்தனர்.” – பாட்டலி சம்பிக்க ரணவக்க

தேசிய பாதுகாவலனாக கோட்டாபய ராஜபக்ஷவை தெரிவு செய்த சிங்கள பௌத்தர்கள், கத்தோலிக்கர்கள் பெறும் ஏமாற்றமடைந்துள்ளார்கள். இனியும் நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது.அரசியல் அழுத்தத்துடனான விசாரணை கட்டமைப்பு காணப்படும் வரை ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலின் உண்மை நோக்கம் வெளிவராது. காலம் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும், 43 ஆவது படையணியின் தலைவருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

நாரஹேன்பிட்டிய பகுதியில் உள்ள 43 ஆவது படையணியின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தை பிரதான தேர்தல் பிரசாரமாக்கி ராஜபக்ஷர்கள் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றினார்கள்.

இஸ்லாமிய அடிப்படைவாதம், கருத்தடை உள்ளிட்ட பல விடயங்கள் பொதுஜன பெரமுனவின் மேடை பேச்சுகளாக காணப்பட்டன.தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தியது.

நாட்டு மக்கள் குறிப்பாக சிங்கள பௌத்தர்கள்,கத்தோலிக்கர்கள் கோட்டாபய ராஜபக்ஷவை தேசிய பாதுகாவலனாக தெரிவு செய்தார்கள்.

இறுதியில் ஏமாற்றமடைந்தார்கள்.ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் அரசியல் நோக்கத்துக்காக இடம்பெற்றதா..? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் காணப்படுகிறது. குண்டுத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்று நான்கு ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் நான்கு பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப்பெறவில்லை.

1.யங்கரவாதி சஹ்ரான் உட்பட அகில இலங்கை தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்கள் பயங்கரவாத தாக்குதலுக்கு தங்களின் உயிரை ஏன் தியாகம் செய்தார்கள்.

பொதுபல சேனா அமைப்பு உட்பட பௌத்த அமைப்புக்கள் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக முன்னெடுத்த செயற்பாடுகளுக்கு எதிராக தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது. இல்லாவிடின் உலகளாவிய ரீதியில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு எதிராக தாக்குதல் இடம்பெற்றது.

21 குண்டுத் தாக்குதலுக்கு பின்னர் கருத்து வெளியிட்ட சஹ்ரானின் தரப்பினர் நியூசிலாந்து நாட்டில் முஸ்லிம் பள்ளிவாசலில் இடம்பெற்ற தாக்குதலுக்கு பலிவாங்குவதற்காகவே தேவஸ்தானங்களில் தாக்குதலை நடத்தினோம் என குறிப்பிட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது.

2.பயங்கரவாதி சஹ்ரான் யார்? குண்டுத்தாக்குதல் ஒரு குழுவின் நோக்கமா அல்லது சர்வதேச நோக்கமா?

2010 ஆம் ஆண்டு பூனே வெதுப்பக வெடிப்பு சம்பவம்,2016 ஆம் ஆண்டு டாகா கெபே தாக்குதல் ஆகியவற்றுக்கும் 2019 ஏப்ரல் 21 சங்ரில்லா ஹோட்டல் குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கும் இடையில் நெருங்கி தொடர்பு காணப்படுகிறது.வலய மட்டத்தில் இடம்பெற்ற இந்த தாக்குதல் தொடர்பில் இலங்கையில் தேசிய பாதுகாப்பு பிரிவினர் அவதானம் செலுத்தவில்லையா? தென்னிந்தியாவில் இருந்து செயற்பட்ட அபுஹிந்த் மௌலவி யார்?அடிப்படைவாத பிரசாரகரா?இல்லாவிடின் அடிப்படைவாத தரப்பினரது ஆதரவாளரா ?

பயங்கரவாதி சஹ்ரானின் குண்டுத்தாக்குதலை வெளிநாட்டு புலனாய்வு பிரிவு எவ்வாறு முன்கூட்டியே அறிந்துக் கொண்டது ? இறந்து விட்டதாக குறிப்பிடப்படும் சாராவுக்கும்,அபுஹிந்த் மௌலவிக்கும் இடையிலான தொடர்பு என்ன?

3.இலங்கை புலனாய்வு பிரிவு தகவல் அறிந்தும் ஏன் செயற்படவில்லை?

புலனாய்வு பிரிவுக்கும், பொது பாதுகாப்பு தரப்புக்கும் இடையில் காணப்பட்ட இணக்கப்பாடற்ற தன்மை (பயங்கரவாதி சஹ்ரானின் தாக்குதலின் பின்னர் (ஏப்ரல் 22 )இடம்பெற்ற திறந்த பாதுகாப்பு சபை கூட்டத்தில் இவ்விடயம் வெளிப்படுத்தப்பட்டது.

அரசாங்கம் குறிப்பாக இராணுவ புலனாய்வு பிரிவு தௌஹீத் ஜமாதே அமைப்புடன் நெருங்கிய தொடர்பை பேணியதால் அவர்களால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படாது என்ற நம்பிக்கை காணப்பட்டது.புலனாய்வு பிரிவு மற்றும் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பற்ற தன்மையினால் பயங்கரவாதி சஹ்ரான் தனது நோக்கத்தை சரியாக செயற்படுத்திக் கொண்டான்.

4.ராஜபக்ஷர்கள் செயற்படுத்திய முட்டாள்தனமான பாதுகாப்பு நடவடிக்கைகள்

பிரபாகரனுக்கு பின்னர் விடுதலை புலிகள் அமைப்பின் தலைவரான குமரன் பத்மநாதன்,கிழக்கு விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் ராம்,நகுலன் ஆகியோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யாமல் 12000 போராளிகளுடன் அவர்களையும் விடுதலை செய்தமை.

மறுபுறம் பிள்ளையானை ராஜபக்ஷர்கள் தமது அரசியல் தேவைகளுக்காக இணைத்துக் கொண்டமை,  யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் விடுதலைப் புலிகள் அமைப்பின் வங்கி கணக்கு,கப்பல்,தங்க ஆபரணங்கள்,உள்ளிட்ட சொத்துக்களுக்கு நேர்ந்ததை பத்மநாதனும் குறிப்பிடவில்லை,அரசாங்கமும் குறிப்பிடவில்லை.அரசாங்கம் டீல் அரசியல் செய்யாமல் முறையான விசாரணைகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர போராடிய படையினர் யுத்த குற்றவாளிகளாக்கப்பட்டார்கள். விடுதலை புலிகள் அமைப்பின் முக்கிய தரப்பினர்கள் ராஜபக்ஷர்களினால் பாதுகாக்கப்பட்டார்கள். ராஜபக்ஷர்களின் முட்டாள்தனமாக பாதுகாப்பு கொள்கை தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தியது.

நான்கு ஆண்டுகள் நிறைவடைந்தும் இந்த நான்கு பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப் பெறவில்லை. அரசியல் அழுத்தம் பாதுகாப்பு கட்டமைப்பை ஆதிக்கம் செலுத்தும் வரை ஏப்ரல் 21 குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடையாது.காலமே சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

ஜனாதிபதி மாளிகையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் – கோட்டாபாயவிடம் 3 மணி நேர விசாரணை !

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று 3 மணிநேரம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.

ஜனாதிபதி மாளிகையில் போராட்ட காலத்தில் போராட்டக்காரர்களால் கண்டெடுக்கப்பட்ட ஒரு கோடியே எழுபது இலட்சம் பணம் குறித்தே இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது .

நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவின் பிரகாரம் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று கோட்டாபய ராஜபக்சவின் வீட்டிற்குச் சென்று அங்கு இந்த விசாரணைகளை நடத்தியது.

கோட்டாபய ராஜபக்சவின் வீழ்ச்சிக்கு நாமல் ராஜபக்சவே காரணம் என்கிறார் பேராசிரியர் சன்ன ஜயசுமண !

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீழ்ச்சிக்கு நாமல் ராஜபக்சவே காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

“கோட்டாபய ராஜபக்ச நாம் சொன்னபடி செயல்படுவார் என்று நினைத்துத்தான் அவரை நியமித்தோம்.முதல் சில மாதங்கள் நாங்கள் சொன்னபடியே செயல்பட்டார்.ஆனால் சில மாதங்கள் கழித்து அவர் நாங்கள் சொன்னதை கேட்கவில்லை. நாங்கள் சொன்னதை கேட்காததால் தான் இந்த சரிவை சந்திக்க வேண்டி ஏற்பட்டது.

குறைந்த பட்சம் மகிந்த ராஜபக்ச கூறியதை கூட கோட்டாபய ராஜபக்ச கருத்தில் கொள்ளவில்லை. தன் மீது தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு சில குடும்ப உறுப்பினர்கள் சொன்ன விஷயங்களை மட்டுமே அவர் கேட்டார்.

நாமல் ராஜபக்ஷ சொன்னபடி சென்றபோது இது நடந்தது.நாம் சொன்னபடி செயற்பட்டிருந்தால் இந்த நிலை வந்திருக்காது. நாமல் ராஜபக்ச தனது பாவங்களை எல்லாம் செய்து எம்மை அடிக்கப் பார்க்கின்றார்.

நாமல் ராஜபக்ச, அனைத்து பாவங்களையும் கழுவ முடியாது, நீங்கள் செய்தவற்றின் பலனை முழு நாடும் இப்போது அனுபவிக்கிறது. நம்மை ஏமாற்ற முடியாது. எமது வழிமுறைகளைப் பின்பற்றியிருந்தால், இது நடந்திருக்காது. என அவர் மேலும் தெரிவித்தார்.

“ராஜபக்ஷக்களை மீண்டும் தெரிவுசெய்துவிடாதீர்கள்.”- சரத் பொன்சேகா

.“மக்கள் ராஜபக்சக்களை முழுமையாக நிராகரிக்க வேண்டும்.” என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

பயங்கரவாத விசாரணைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்டோரை பார்வையிடுவதற்காக அங்கு சென்றிருந்த சரத் பொன்சேகா ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு முறையான சுகாதாரமான சூழலை ஏற்படுத்திக் கொடுக்காமையே அவர்கள் நோய்களுக்குட்பட பிரதான காரணமாகும். இது அவர்களின் அடிப்படை உரிமை மீறலாகும்.  எனவே, இதனுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராக நாம் சட்ட நடவடிக்கை எடுப்போம்.

மக்கள் அனுபவிக்கும் துன்பத்தை உணர்ந்துகொள்ள முடியாவிட்டால், அந்த துயரத்துக்கு தாமே காரணம் என்பதை ஏற்றுக்கொள்ளாவிட்டால், இவ்வாறான ராஜபக்ஷக்களை மீண்டும் தெரிவுசெய்துவிட வேண்டாம் என்று மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

ராஜபக்ஷக்களுக்கு இன்றும் அதிகார பேராசை காணப்படுகிறது. இதுவரை கொள்ளையடித்து, அதில் திருப்தியடைய முடியாமலேயே அவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெறுவோம் என்று பேசிக்கொண்டிருக்கின்றனர். எனினும், அவர்கள் முன்னெடுக்கும் இந்த முயற்சி ஒழுக்கமானதல்ல. இவ்வாறான செயற்பாடுகளுக்கு உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் வரவேற்பிருக்காது.

எனவே, ராஜபக்ஷக்களை மக்கள் முற்றாக நிராகரிக்க வேண்டும். மாறாக, அவர்களது ஆட்சியை மீண்டும் ஏற்படுத்தினால் தற்போதுள்ளதை விட பாரதூரமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றார்.

பிரதமராகிறார் கோட்டாபய ராஜபக்ச..? – பிரதமர் தினேஷ் குணவர்த்தன விளக்கம் !

“பிரதமர் பதவி நான் தேடிச் சென்று பெற்ற பதவி அல்ல. இந்தப் பதவியே என்னைத் தேடியே வந்தது.” என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

தன்னை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பிரதமராக்க ஆளும் தரப்புக்குள் சிலர் சூழ்ச்சி செய்கின்றனர் என்று வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் வதந்தி.

அதிபரின் விருப்பத்துடனும் ஆளும் கட்சியின் பெரும்பான்மைப் பலத்துடனும் நான் பிரதமர் பதவியை வகிக்கின்றேன். இது நான் தேடிச் சென்று பெற்ற பதவி அல்ல. இந்தப் பதவி என்னைத் தேடியே வந்தது. பிரதமர் பதவியிலிருந்து என்னை நீக்கத் திரைமறைவில் எந்தச் சூழ்ச்சியும் இல்லை. எவரினதும் அழுத்தமும் எனக்கு வரவும் இல்லை. சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஏகோபித்த ஆதரவுடன் தான் நான் பிரதமர் பதவியை வகிக்கின்றேன்.

நாடு திரும்பியுள்ள கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்குள் பிரவேசிக்கும் முடிவை இன்னமும் எடுக்கவில்லை. அவர் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகவுள்ளார் எனவும், பிரதமராகப் போகின்றார் எனவும் வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபாய ராஜபக்சவுக்கு மனச்சாட்சி இருந்தால் சலுகைகளை பெறமாட்டார் – லக்ஷ்மன் கிரியெல்ல

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பதவி விலகிய நிலையில் சிறப்புரிமை பெற்று வாழ்வது தார்மீக ரீதியாக சரியானதா என எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி சரியான முறையில் அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெறாமல் ஓடிவிட்டார்.எனவே, நிறைவேற்று அதிகாரம் கொண்ட முன்னாள் அதிபருக்கான சிறப்புரிமைகளை ஏற்றுக்கொள்ளுமாறு கோட்டாபய ராஜபக்ஷ தனது மனச்சாட்சியிடம் கேட்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பிய நிலையில் அவருக்கு முன்னாள் ஜனாதிபதிக்கான சலுகைகள் அனைத்தும் அரசாங்கம் வழங்கும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“கோட்டாபாயவின் எதிர்கால திட்டம் என்ன.?” – நாமல் ராஜபக்ச விளக்கம் !

அரசியலில் ஈடுபடுவதா இல்லையா என்பதை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே தீர்மானிப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதி நாடு திரும்பியது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்

“எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை முன்னாள் ஜனாதிபதி தான் தீர்மானிக்க வேண்டும் எனவும் அரசியலில் ஈடுபடலாமா வேண்டாமா என்பதை அவரே முடிவு செய்ய வேண்டும். மற்றவர்களுக்காக முடிவெடுக்கும் உரிமை எங்களுக்கு இல்லை,” எனவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி தனது முடிவை அறிவித்தவுடன் கட்சியின் நிர்வாக சபைக்கு அறிவிப்போம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவினாலேயே நாட்டுக்கு இந்த நிலை – ஜி.எல். பீரிஸ் அந்தர் பல்டி !

“கோட்டாபய ராஜபக்ச தனிப்பட்ட முடிவுகளை எடுத்ததாலேயே நாட்டில் பெரும் நெருக்கடி ஏற்பட்டது.” என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனிப்பட்ட முடிவுகளை எடுத்ததாலேயே நாட்டில் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. கோட்டாபய ராஜபக்ச தனிப்பட்ட முடிவுகளை எடுத்தார். குழுவாக முடிவு எடுக்கப்படவில்லை.அதில் உர விவகாரம் ஒன்று, விஷயம் தெரிந்தவர்களிடம் ஆலோசனை கேட்கவில்லை. இவ்வாறான அவரின் முடிவுகள் நாட்டுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்லாதது இதேபோன்ற பிரச்சினையாகும்.

இத்தகைய எடுத்துக்காட்டுகள் முடிவற்றவை மற்றும் எண்ணற்றவை. ஆனால் நாட்டுக்கு புதிய அரசியல் கலாசாரம் தேவைப்பட்டது. அதைத்தான் டலஸ் தலைமையில் செய்ய முயற்சித்தோம். கடந்த சில வருடங்களில் அமைச்சரவை முறைமையும் விலக்கப்பட்டிருந்தது.

ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்க கட்சி விவாதம் மூலம் தீர்மானம் எடுக்கவில்லை. பொதுச் செயலாளரால் பதில் சொல்ல முடியவில்லை. கட்சியில் உள்ள ஒருவரின் தனிப்பட்ட கருத்தின்படி அந்த முடிவு எடுக்கப்பட்டது. ஒரு கட்சி அப்படி நடந்து கொள்ள முடியாது எனத் தெரிவித்தார்.

கோட்டாபாய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியிலிருந்த கல்வி அமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர் என பல பதவிகளை வகித்தவர் ஜீ.எல். பீறிஸ். கோட்டாபாய ராஜபக்ச எடுத்த முடிவுகளுக்கு பாராளுமன்றில் ஆதரவு வழங்கி வந்த பீறிஸ் தற்போது கோட்டாபாய ராஜபக்ச பதவி விலகியதும் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். கோட்டாபாயவின் ஆட்சியின் தோல்வியில் அமைச்சர்களாக பொறுப்பேற்ற ஜீ.எல்பீரிஸ் போன்றோரும் பதில் சொல்ல வேண்டியவர்களே !