குமார வெல்கம

குமார வெல்கம

“எதிர்த்தரப்பை ஒன்றிணைத்து அரசாங்கத்தை நிச்சயம் கவிழ்ப்போம்.” – லங்கா சுதந்திர கட்சி

“எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, டலஸ் அழகபெரும, விமல் வீரவன்ச ஆகியோரை ஒன்றிணைத்து அரசாங்கத்தை நிச்சயம் கவிழ்ப்போம்.” என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

புதிய லங்கா சுதந்திர கட்சி காரியாலயத்தில் அரசியல்,சிவில் தரப்புடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டுமாயின் அரசியல் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுடன் ஒன்றிணைய வேண்டும். பொதுஜன பெரமுனவை நாட்டு மக்கள் முழுமையாக வெறுக்கிறார்கள்.

ஆகவே அவ்வாறான நிலையில் பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைய பிரதான எதிர்க்கட்சிகள் இணக்கம் தெரிவிக்கவில்லை. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை வீழ்த்த வேண்டுமாயின் பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளும் முதலில் ஒன்றுப்பட வேண்டும். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ,டலஸ் அழகபெரும,விமல் வீரவன்ச ஆகியோரை ஒன்றிணைத்து அரசாங்கத்தை நிச்சயம் கவிழ்ப்போம்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டு,நாட்டு மக்களின் நன்மதிப்பை ஜனாதிபதி பெற பொதுஜன பெரமுனவினர் ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள்.

அத்துடன் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்துக்கு நாட்டு மக்கள் அங்கிகாரம் வழங்க போவதுமில்லை,ஆகவே ஜனாதிபதி எதிர்வரும் மார்ச் மாதத்துக்கு பிறகு பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தை அவர் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவுடன் எதிர்வரும் நாட்களில் பேச்சுவார்த்தையில் ஈடுப்படவுள்ளோம்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை விரைவாக நடத்தாவிடின் அவரது அரசியல் எதிர்காலமும் கேள்விக்குள்ளாகும்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது சகோதர பாசத்துக்கு முன்னுரிமை வழங்காமல்,அரசியல் ரீதியில் சிரேஷ்டத்துவத்துக்கு முன்னுரிமை வழங்கியிருந்தால் இன்று நாடு அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் மோசமான நெருக்கடியை எதிர்கொண்டிருக்காது என்றார்.