கிருஷ்ணபுரம் கிராம சேவகரைத் தாக்கிய பாலியல் தொழிலாளி !
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கிருஷ்ணபுரம் கிராம சேவகர் மீது பெண்ணொருவர் படுமோசமாக கெட்டவார்த்ததைகளால் பேசித் தாக்கிய சம்பவம் மகளீர் தினமான மார்ச் 8இல் நடைபெற்றுள்ளது. தாக்கிய சம்பவத்தில் ஈடுபட்ட பெண் விநாயகபுரம் பகுதியில் நன்கு அறியப்பட்ட வசந்தா என்றும் இவர் பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுபவர் என்றும் தெரியவருகின்றது. அண்மையில் கிளிநொச்சியில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 15 வயதுச் சிறுமியையும் இவரே இத்தொழிலில் ஈடுபடுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது, கிருஷ்ணபுரம் கிராம சேவகர் அண்மையிலேயே பணிக்கு பொறுப்பேற்று வந்துள்ளார். அன்றைய தினம் வசந்தாவின் மகள் கிராம சேவகரிடம் நற்சான்றிதழ் பத்திரம் பெற வந்துள்ளார். ஆனால் காலை முதல் பலமணி நேரம்வரை கிராம சேவகர் அப்பெண் பற்றிய தகவல்களைக் கேட்டதாகவும் அதனால் ஆத்திரமடைந்த வசந்தா பாலியல் வார்த்தைப் பிரயோகங்களை அள்ளி எறிந்து கிராம சேவகரை தாக்கினார்.
தாயுடைய தொழிலை வைத்து மகளுக்கு நற்சான்றிதழ் கொடுக்க மறுத்ததையடுத்தே இப்பிரச்சினை இந்நிலைக்குச் சென்றது. நற்சான்றிதழ் பெறவந்த பெண் கொழும்பில் ஒரு கூட்டத்திற்குச் செல்வதற்கே மாலை மூன்று மணிக்கு முன் நற்சான்றிதழ் பெற வேண்டி வந்துள்ளார். அதனை வழங்க மறுத்தாலும் பரவாயில்லை ஆனால் தாயின் தொழிலை வைத்து அவருக்கு நற்சான்றிதழ் குறித்த நேரத்தில் வழங்க மறுக்கப்பட்டதே பிரச்சினையானது.
பாலியல் தொழிலில் பயன்பெறும் ஆண்கள் பொதுவாக எவ்வித பிரச்சினைக்கும் உள்ளாவதில்லை. ஆனால் அத்தொழிலில் ஈடுபடும் பெண்கள் அனைத்துப் பழியையும் சுமக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இவ்விடயத்தில் சம்பந்தப்பட்ட ஆண்களைப் பாதுகாக்கும் சமூகம் பெண்களை போட்டு மிதிக்கின்ற நிலையே தொடர்கின்றது. இந்தப் பெண்கள் இத்தொழிலில் ஈடுபடாவிட்டால் நாட்டில் பாலியல் வன்முறைகள் மிக மோசமாகிச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இதற்கிடையே பா உ அர்ச்சுனா தன்னுடைய அதிகப் பிரசங்கித் தனத்தால் ரிக்ரொக்கில் பொழுதுபோக்காக இரட்டை அர்த்தத்தில் பதிவுகளையிடும் கிளிநொச்சிப் பெண்ணை பாலியல் தொழிலாளி என்று முத்திரைகுத்தி அவருடைய பெயரையும் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்துள்ளார். பா உ அர்சுனாவே பாலியல் வக்கிரம் கொண்ட பதிவுகளை வெளியிட்டுள்ளார். தன்னுடைய தங்கை என்று சொல்லும் பெண் தொடர்பிலும் இவர் முறையாகப் பேசவில்லை. அர்ச்சுனாவின் ரிக்ரொக் நண்பர்கள் பலரும் கூட மிக மோசமான பாலியல் வக்கிரம் கொண்ட சொல்லாடல்களை பயன்படுத்துகின்றனர். அது பற்றி எந்தவொரு ஆணும் பாராளுமன்றத்தில் அல்ல வெளியேயும் வாய் திறப்பதில்லை. குரலற்ற பெண்கள் என்றதும் தூக்கித் தூக்கி அடிக்கிறார்கள்.