இளங்குமரனுக்கு கறன்ட் கம்பம் தான் தெரியும் ஆனால் நாங்கள் கறன்ட் அடித்தோம் என்றால் தாங்கமாட்டார் ! பா உ சிறிதரன் – “கறன்ட் கம்பம் இல்லாம கறன்ட் வராதில்லா” பா உ இளங்குமரன்
பா உ சிவஞானம் சிறிதரன் பா உ இளங்குமரனின் தொழிலை நையாண்டி செய்து கிளிநொச்சியில் உரையாற்றினார். தனக்கு கட்சிக்குள் நடக்கின்ற சொந்தக் கதை சோகக் கதைகளை எல்லாம் கொட்டித் தீர்த்து கிளிநொச்சியில் உள்ள நான்கு பிரதேச சபைகளைக் கைப்பற்றப் பெரும் பிரயத்தனம் எடுத்துவருகின்றார். கிளி கனிஸ்டா மகாவித்தியாலயத்தில் அதிபராக இருந்தவர். இன்றும் அப்பாடசாலையின் செயற்பாடுகளில் கட்டுப்பாடுகளை வைத்துள்ளார். கிளிநொச்சி பா உ சிறிதரனின் கோட்டை என்றால் மிகையல்ல. சிறிதரன் ஏன் எனக்கு இவ்வளவு பயப்படுகின்றார் என்று சமூகம் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் கேள்வி எழுப்பினார். அவருடைய பிரச்சாரப் பீரங்கி அலனைக் காப்பாற்ற அவர் எடுத்த முயற்சியை நாங்கள் முறியடித்தோம். அது தான் அவருக்குக் கோபம் என்றார் பா உ இளங்குமரன்.
கிளிநொச்சிக் கூட்டத்தில் அண்மையில் உரையாற்றுகின்ற போது பா உ இளங்குமரன் மின்சார சபையில் ஊழியராகப் பணியாற்றியதை கிண்டலடித்து: “இளங்குமரனுக்கு கறன்ட் கம்பம் தான் தெரியும் ஆனால் நாங்கள் கறன்ட் அடித்தோம் என்றால் தாங்கமாட்டார்” எனத் தனது தொழில் மேலாண்மையை வெளிப்படுத்தினார். இதே போல் பா உ இளங்குமரனின் தொழிலைக் கிண்டலடித்து ‘நாயைப் பிடியுங்கோ என்று வீடுவீடாய் மீற்றர் ரீடிங் எடுத்தவர், தன்னைப் போல் எம்பிபிஎஸ் படிக்காதவர்’ என்ற தொனியில் கருத்து வெளியிட்டு இருந்தார்.
மற்றுமொரு சந்தர்ப்பத்தில் கிளி ஊடகவியலாளர் தமிழ்செல்வனை ‘வடக்கத்தையான்’ என்று பா உ சிறிதரன் திட்டிய ஒளிப்பதிவு வெளியாகி இருந்தது. அதுபோல் பா உ அர்ச்சுனா அமைச்சர் சந்திரசேகரை மலையகத் தமிழர்கள் பற்றிய பொதுப்புத்தியில் இருந்து கைநாட்டு எழுத வாசிக்கத் தெரியாதவர் என நையாண்டி பண்ணியதோடு தான் கப்பல் விட்ட பரம்பரையிலிருந்து வந்ததாகவும் மலையக மக்களை கள்ளத் தோணிகள் கப்பலில் வந்தவர்கள் எனவும் தெரிவித்திருந்தார். பா உ இரா சாணக்கியனும் அமைச்சர் சந்திரசேகரனது நாசியில் உள்ள ஒவ்வாமைப் பிரச்சினையை வைத்து நளினம் செய்திருந்தார். தமிழ தமிழ் தேசியத் தலைமைகளுக்கு தேசிய மக்கள் சக்தியின் அரசியலை எதிர்கொள்ளும் அரசியல் வலிமை இல்லாததால் அவர்கள் தங்களது சாதி, பிரதேச, மதவாத அரசியலையும் எதிரணியினரின் தொழிலையும் வைத்து அரசியல் செய்யும் மூன்றாம்தர நிலைக்கு கீழிறங்கி உள்ளனர்.
இதே மூன்றாம் தர அரசியலைஇ தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தொகுதி மக்களுக்கு எதிராகவும் இந்த தமிழ் தேசியத்தை முன்னிறுத்தும் அரசியல்வாதிகள் செய்கின்றனர். இவர்கள் விளிம்புநிலை மக்களை சமூகத்தில் பல்வேறு வகையிலும் ஒடுக்கப்படும் மக்களை, தொழிலாளர்களை, ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அதிபர்கள், மருத்துவர்கள் என மேட்டுக்குடியைச் சேர்ந்த பரம்பரை மேல் தட்டினரையே பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர் என்பதாலேயே தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தியின் பக்கம் திரும்பியுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தியில் பா உ இளங்குமரன் என்ற சாதாரண மின்சாரசபை ஊழியரும் உள்ளார். சிறிபவானந்தரா மருத்துவ கலாநிதி இவ்வாறு பல தரப்பட்ட சமூக தொழில் பிரிவுகளில் உள்ளவர்களும் தோழமை அடிப்படையில் மக்களோடு மக்களாக இணைந்து செயற்படுகின்றனர்.
சிறிதரனின் கருத்துக்களுக்கு பதிலளிப்பது போல் அமைச்சர் சந்திரசேகர் கருத்துத் தெரிவிக்கையில் நீங்கள் தமிழ் தமிழ் என்று சொல்லிக்கொண்டு பிரிந்து நின்று குழாயடிச் சண்டை பிடிக்கின்றீர்கள் என்று குற்றம்சாட்டினார்.