ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடர்

ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடர்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை தொடர்ந்தும் நிராகரிப்போம் – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46 கீழ் ஒன்று மற்றும் 51 கீழ் ஒன்று ஆகிய தீர்மானங்களை தொடர்ந்தும் நிராகரிக்கும் நிலைப்பாட்டில் அரசாங்கம் உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

 

ஐ.நா மனித உரிமை பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடர் கடந்த 26 ஆம் திகதி ஆரம்பமாகியது.

 

இந்த நிலையில், நேற்றைய தினம் (28) நடைபெற்ற கூட்டத்தொடரில் காணொளி வாயிலாக உரையாற்றும் போதே, அலி சப்ரி இதனை தெரிவித்துள்ளார்.

இந்த ஆதாரங்களை சேகரிப்பதற்கான வழிமுறைகள் மனித உரிமைப் பேரவையின் கொள்கைகளிற்கு எதிரானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இலங்கை தற்போது பொருளாதாரம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க செயல்முறை ஆகியவற்றில் பாரிய முன்னேற்றங்களை எட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பேரவையின் செயற்பாடுகள் குறுகிய அரசியல் நோக்கங்களைக் கொண்டதாக அமையக்கூடாது என அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.

 

மேலும், இலங்கை மக்களுக்கு பயனளிக்ககூடிய ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையுடன் இணைந்து அரசாங்கம் செயற்படுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மனித உரிமைகள் பேரவை இம்முறையாவது எமது பிரச்சினைக்கு நீதியை வழங்கவேண்டும் – யாழில் உறவுகள் போராட்டம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இம்முறையாவது எமது பிரச்சினைக்கு நீதியை வழங்கவேண்டும் என்று காணமலாக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை விடுத்தனர்.

யாழ்ப்பாண மாவட்ட வலிந்து காணமலாக்கப்பட்டோரின் உறவுகள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் நல்லை ஆதீனம் முன்பாக இடம்பெற்றது.

குறித்த போராட்டத்தின்போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் புகைப்படங்களையும் போராட்டகாரர்கள் ஏந்தியிருந்தனர்.

போராட்டகாரர்களை கண்காணிப்பதற்காக அப்பகுதியில் இராணுவ புலனாய்வாளர்கள் மற்றும் காவல்துறை புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டு இருந்தனர்.

ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரின் தீர்மானங்கள் இலங்கை அரசியலமைப்பிற்குப் புறம்பானதாக இருப்பின் ஏற்க தயாரில்லை – அரசாங்கம் அறிவிப்பு !

“ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரின் தீர்மானங்கள் இலங்கை அரசியலமைப்பிற்குப் புறம்பானதாக இருப்பின் ஏற்க தயாரில்லை.” என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 12 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இதுகுறித்த இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பில் கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் திங்கட்கிழமை (5) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் அலி சப்ரி தெளிவுபடுத்தினார்.

அதன்போது அவர் கூறிய முக்கிய விடயங்கள் வருமாறு:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரின்போது சர்வதேச நாடுகளுடன் இருதரப்பு மற்றும் பல்தரப்புத்தொடர்புகளைப் பேணுவதற்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களுக்கு எமது நாட்டின் அரசியலமைப்பிற்கு உட்பட்டு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கும் தயாராக இருக்கின்றோம்.

அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு எம்மால் எந்தவொரு தீர்வையும் பெற்றுக்கொடுக்கமுடியாது என்பதுடன் அதற்கான அதிகாரங்களும் வழங்கப்படவில்லை. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கடந்த கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்ட ஆதாரங்களைத் திரட்டுவதற்கான வெளியகப்பொறிமுறை குறித்து நாம் ஏற்கனவே எமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்ததுடன் எமது அந்த நிலைப்பாடு இப்போதும் தொடர்கின்றது.

அந்தவகையில் எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கூட்டத்தொடரின்போது இலங்கை தொடர்பில் இணையனுசரணை நாடுகளால் புதிய தீர்மானமொன்று சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில், அதில் எமது அரசியலமைப்பிற்குப் புறம்பான விடயங்கள் காணப்படுமாயின் அதனை நாம் முழுமையாக எதிர்ப்பதுடன் அதற்கு ஏனைய சர்வதேச நாடுகளின் ஆதரவை நாடுவோம்.

கடந்த காலத்தில் நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதை முன்னிறுத்தி காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஆகியன ஸ்தாபிக்கப்பட்டிருப்பதுடன் அவற்றின் செயற்பாடுகளில் குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றம் அடையப்பட்டிருக்கின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் நீண்டகாலமாகத் தொடரும் இப்பிரச்சினைக்கு உரியவாறு தீர்வுகாணும் நோக்கில் உண்மையைக் கண்டறிவதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியிருக்கின்றார். போரின் விளைவாக தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

எனவே இந்த உண்மையைக் கண்டறிவதற்கான பொறிமுறை என்பது அனைத்துத்தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதும் உரியவாறான தீர்வைப்பெற்றுத்தரக்கூடியதுமான பொறிமுறையாக அமையவேண்டும். அதேபோன்று இது ஒரு முடிவைக் கண்டடைவதை நோக்காகக்கொண்டதே தவிர, யார்மீதும் பழிசுமத்துவதை நோக்காகக்கொண்டதல்ல.

ஆகவே சுமார் 13 வருடகாலமாகத் தீர்வின்றித் தொடரும் பிரச்சினைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைவாக அனைத்துத்தரப்பினரும் ஏற்கக்கூடிய உண்மையைக் கண்டறிவதற்கான பொறிமுறையை உருவாக்கி, அதனைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன என்று தெரிவித்தார்.