உள்நாட்டு பொறிமுறைகளை அரசியலமைப்பிற்குள் கொண்டுவந்து தீர்வு எட்டப்படும் – ஜெனீவாவில் அமைச்சர் விஜித ஹேரத் !
காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம் மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் போன்ற உள்நாட்டு நிறுவனங்கள் பலப்படுத்தப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஜெனீவாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58ஆவது அமர்வில் தெரிவித்துள்ளார்.
இம்மாநாட்டில் இம்முறை தமிழ் தரப்புகளின் மனித உரிமைத் தளம் மிகப் பலவீனப்பட்டுப் போயுள்ளது. தமிழ் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களே நீண்டகாலமாக மனித உரிமைக்காகச் செயற்பட்டு வந்த மரியதாஸ் பொஸ்கோவைக் காட்டிக்கொடுத்து விட்டனர் என்ற குற்றச்சாட்டு பலமாகியுள்ளது. மரியதாஸ் பொஸ்கோ ஜனவரி 16 இல் இடம்பெற்ற கூட்டத்தொடரில் வைத்து சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை ஜெனிவாவின் மனித உரிமைக் கூட்டத்தொடர் ஆரம்பமானபோது மனித உரிமை ஆணையாளர் வோல்கர் டேக் தனது ஆரம்ப உரையில் இலங்கை பற்றி எதனையும் குறிப்பிடவில்லை. மேலும் அமைச்சர் விஜித ஹெரத் தன்னுடைய உரை முடிந்து வெளியே வந்த போது தமிழ் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் சிலர் அவரோடு உரையாட முற்பட்டனர். அது தொடர்பில் தமிழ் மனித உரிமைச்செயற்பாட்டாளர் கூறியது:
அமைச்சர் விஜித ஹேரத் தனது உரையில், தற்போதைய பாராளுமன்றமானது, இலங்கை வரலாற்றில் இரண்டு மலையக சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் ஒரு பார்வைக் குறைபாடுள்ள நபர் ஆகியோரைக் கொண்டதும், அனைத்து தரப்பினரையும் பிரதிநித்துவப்படுத்துவதுமான ஒன்றாகவுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான தேசிய பாதீட்டில், சமூக நலன் மற்றும் பாதுகாப்பிற்கான அதிகரித்த ஒதுக்கீடு உட்பட மக்களுக்கு மிகவும் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கான, தொடர் நடவடிக்கைகளுக்கு உறுதியளித்துள்ளோம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சமூக-பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவதற்கும், மீள்குடியேற்றம், வீடளித்தல், இழப்பீடு மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடு போன்ற முக்கியமான தேவைகளை நிவர்த்தி செய்வதற்குமான சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஜனவரி முதலாம் திகதி ஜனாதிபதியால் தொடங்கப்பட்ட, “தூய்மையான இலங்கை” திட்டத்தின் மூலம், அரசாங்கம் ஒரு புதிய அரசியல் கலாசாரத்தையும் தார்மீக மற்றும் நெறிமுறை நிர்வாகத்திற்கான அர்ப்பணிப்பையும் அறிமுகப்படுத்தியுள்ளது. எசமூகங்களுக்கு இடையிலான இடைவெளிகளைக் குறைப்பதற்கான எமது, தொலைநோக்குக்கு ஏற்ப, இலங்கை தினத்தை அறிவிக்க ஜனாதிபதி முன்மொழிந்துள்ளார்.
முரண்பாடுகள் தவிர்த்த, ஏனைய எஞ்சியுள்ள சவால்களை எதிர்கொள்ள நிறுவப்பட்ட உள்நாட்டு செயன்முறைகள் சுயாதீனமான மற்றும் நம்பகமான முறையில் தங்கள் பணிகளைத் தொடரும் என்பதை நாம் உறுதி செய்வோம். காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம் மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் போன்ற உள்நாட்டு நிறுவனங்கள் மேலும் பலப்படுத்தப்படும். அனைத்து இலங்கையர்களின் நம்பிக்கையையும் பெறும் செயன்முறையொன்றை உறுதி செய்வதற்காக, உண்மை மற்றும் நல்லிணக்கக் கட்டமைப்பின் வரையறைகள், பங்குதாரர்களின் சாத்தியமான மிகப்பரந்த பிரிவினருடன் மேலும் விவாதிக்கப்படும்.
உள்நாட்டு பொறிமுறைகளை அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் நம்பகமானதாகவும், உறுதியானதாகவும் மாற்றுவதே எமது நோக்கமாகும். இலங்கை சமூகத்திற்குள் பதட்டங்களை ஏற்படுத்தும் வன்முறைச் செயற்பாடுகளை விசாரிக்க உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையத்திற்கு அதிகாரம் அளிக்கப்படும் என்றார் அமைச்சர் விஜித ஹேரத்.