எரிபொருள்

எரிபொருள்

ராஜபக்சாக்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்!

யாரும் விரும்பியோ விரும்பாமலோ இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த பெருமை ராஜபக்சக்களுக்குரியது. இந்தப் பெருமையை எவரும் சிங்கள மக்கள் மத்தியில் இருந்து அகற்றிவிட முடியாது. புலிகளின் தமிழ் தேசியம் சிங்கள தேசியமும் ஒன்றையொன்று வளர்த்துக்கொண்டேயிருக்கும். சிங்கள தேசியத்தின் தலைவராக ராஜபக்சாக்கள் இருப்பார்கள். அது வரலாறாகின்போன உண்மை. சிறிலங்கா சுதந்திரக் கட்சி இலங்கையின் வரலாற்றில் இரு பெரும் போராட்டங்களை முற்றிலுமாக அழித்துள்ளது. இது உலக போராட்ட வரலாற்றிலேயே முக்கியமானது. அப்படி இருந்தும் இலங்கை இராணுவம் அரசியலில் தலையீடு செய்யவும் இல்லை. ஆட்சியைக் கைப்பற்றவும் இல்லை. இன்னமும் அரசியல் தலைவர்களுக்கு கட்டுப்பட்டே செயற்படுகின்றது. ராஜபக்சாக்களைக் காப்பாற்றியது கூட இராணுவத் தலைமையே.

அரகலியாக்களின் போராட்டத்தை தடுக்க கோட்டபாயா ராஜபக்ச கட்டளை வழங்கி இருந்தால் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தி இருந்தால் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்கும். ஆட்சியை சிலவேளை தக்க வைத்திருக்க முடியும் ஆனால் அவர்களுக்கு இருக்கும் சிங்கள தேசியத்தின் மீதான பிடி தளர்ந்த்து இருக்கும். தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் தலைமைக்கு ஆபத்து வருகின்ற போது தங்கள் மக்களுக்கு எதிராகவே தங்கள் ஆயதங்களை திருப்பினர். மக்களையே மண்மூட்டையாகப் பாவித்தனர். ஆனால் கோட்டபாய ராஜபக்ச தான் தப்பி ஓடுகின்ற போது கூட அரகலியாக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யவில்லை. வலிந்து படைபலத்தினூடாக ஆட்சியைத் தக்க வைக்கவும் முயற்சிக்கவில்லை. மீண்டும் தேர்தல் மேடைக்கு வரும் நம்பிக்கையோடு தான் அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

எண்பதுகளுக்கு பிற்பாடு இலங்கையில் அபிவிருத்திக் கட்டுமானங்கள் ஏற்படுத்தப்பட்டது ராஜபக்சக்களின் காலத்திலேயே. வறுமை ஆறு வீதத்திற்கு குறைக்கப்பட்டு இருந்தது. கொழும்பு நகர்ப்புறம் அழகுபடுத்தப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்டது. நாடு பூராவும் குறிப்பாக வடக்கு கிழக்கில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. இன்று வடக்கில் மண் வீடுகள் கொட்டில்கள் இல்லை என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

விலை வீக்கத்தை குறைக்க வரியைக் கூட்ட வேண்டும் என்பது பொருளியலாளர்களின் ஒரு எடுகோள். பிரித்தானியாவிலும் விலைவீக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆனால் பிரித்தானிய ஆளும்கட்சியின் தலைமைப் பதவியை வெல்லப் போவவராகக் கருதப்படும் லிஸ் ரஸ்ட் வரியைக் குறைப்பேன் என்று உறுதியாக அறிவித்து பலத்த ஆதரவையும் பெற்றுள்ளார். ஆனால் பிரித்தானியாவுக்கு அந்நியச் செலாவணி கையிருப்பு நெருக்கடி இல்லை. ஆனால் கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற கோட்டபாய ராஜபக்சவும் வரியைக் குறைத்துக் கொண்டார். அவர் வரிக்குறைப்புச் செய்தது கோவிட்டுக்கு முன்னைய காலப்பகுதியில். வரியைக் குறைத்தால் நாட்டில் முதலீடுகள் அதிகரிக்கும் உற்பத்தி அதிகரிக்கும் என்பது அவருடைய கணக்கு. ஆனால் துரதிஸ்ட வசமாக வரிக்குறைப்பைத் தொடர்ந்து கோவிட் பரவியது. நாடு முடக்கப்பட்டது. முதலீடுகள் உற்பத்திகள் அனைத்தும் ஸ்தம்பித்தது. வரிமூலம் திறைசேரிக்கு வரவேண்டிய வருமானம் ஸ்தம்பித்தது. நாடு பொருளாதார நெருக்கடிக்குள் சென்றது.

கோவிட் பாரிய நோய்ப் பரம்பல் மிகத் தீவிரமாக பரவி வளர்ச்சியடைந்த நாடுகளிலேயே மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது. செல்வந்த நாடான அமெரிக்காவிலேயே இன்றைக்கும் நூற்றுக்கணக்காணவர்கள் மரணித்துக்கொண்டு தான் உள்ளனர். அங்கு இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டிவிட்டது. அயல்நாடான இந்தியாவில் 5 மில்லியன் பேர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது. ஆனால் பொருளாதாரத்தை பற்றி எண்ணாமல் உயிர்களைக் காப்பாற்றிட வேண்டும் என்ற அடிப்படையில் மிகக் கடுமையான முடக்கத்தை கொண்டு வந்தபடியால் இலங்கையில் கோவிட் தொற்றினால் மரணித்தவர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைக்கப்பட்டது. அதற்காக நாடு பொருளாதார ரீதியாக பெரும் விலையைக் கொடுத்தது. நாட்டின் மொத்த உள்ளுர் உற்பத்தியின் 13 வீதத்தை ஈட்டித் தரும் உல்லாசப் பயணத்துறை ஸ்தம்பித்தது.

அந்நியச் செலாவணி கையிருப்பு இன்மையால் அசேதனப் பசளை இறக்குமதியை திடிரென நிறுத்தியதால் சேதனப்பசளைக்கு மாறும்படி அரசு அறிவித்தது. கோட்டபாயாவின் இந்த முடிவு நீண்ட கால நோக்கில் மிகுந்த நன்மையை ஏற்படுத்துவதாக இருந்த போதும் உடனடியாக நாட்டின் உணவு உற்பத்தியில் மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தியது. அந்நியச் செலவாணியை ஈட்டித்தரும் மற்றுமொரு துறையான பெரும்தோட்டத் துறையிலும் பாரிய வீழ்ச்சியைக் கொடுத்தது. அரசு சேதனப் பசளைப் பாவனையை நிரந்தரமான ஒரு மாற்றமாக அறிவிக்காமல் நெருக்கடியைத் திசை திருப்புவதற்கான ஒரு உபாயமாகவே பயன்படுத்தியது. அதனால் சிறந்த ஒரு கொள்கைத் திட்டம் மக்களால் ஏற்றுக்கொள்ளபடாமல் போனது.

கோட்டபாயாவின் எரிபொருள் கொள்கையும் குறிப்பிடத்தக்கது. 2030இல் இலங்கையை 60 வீதம் இயற்கையூடாக பெறக்கூடிய காற்று, சூரிய ஒளி, மற்றும் நீர் மின்சாரம் மூலம் உற்பத்தி செய்து டிசல் நிலக்கரி மூலமான மின்சார உற்பத்தியை குறைக்கத் திட்டமிடப்பட்டு இருந்தது. நாட்டின் உறுதியான பொருளாதாரக் கொள்கைகளைத் திட்டமிட்டு நடத்தக்கூடிய அரசியல் பலம் ராஜபக்சக்களிடம் மட்டுமே இன்றும் உள்ளது.
ஆடுகள் நனைகிறது என்று ஓநாய்கள் கூடி அழுகின்றது:

முற்றிலும் ஜனநாயக அரசியல் அணுகுமுறை என்பது பாராளுமன்ற ஜனநாயகத்தின் பிறப்பிடமான பிரித்தானியாவிலேயே முழுமையான வெற்றியளிக்கவில்லை. பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. கட்சி ஆதரவாளர்களிடையே மிகச் செல்வாக்குப் பெற்றிருந்த ஜெரிமி கோபின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை முன்வைத்த போதும் ஜனநாயகத்தின் பெயரில் அவர் திட்டமிட்டு ஓரம்கட்டப்பட்டார், அன்ரி செமற்றிசம் என்ற புனையப்பட்ட திரிபுபடுத்தப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் அவருடைய கட்சியின் உறுப்புரிமையே பறிக்க முயற்சிக்கப்பட்டது. அன்ரி செமற்றிசம் என்பது நாசிக்களினால் யுதர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை மறுப்பது. ஆனால் பாலஸ்தீனியர்களின் இன்றைய நிலைக்கு ஆதரவாகவும் இஸ்ரேலுக்கு எதிராகவும் பேசினால் அதனை அன்ரி செமற்றிசம் ஆக்கி, ஜனநாயக விரோத மூலாம்பூசி, முதலாளித்துவ சக்திகள் முற்போக்கு சக்திகளை அரசியலில் இருந்தே ஓரம்கட்ட முயற்சிக்கின்றனர். இவ்வாறான செயல்களுக்கு முட்டையில் மயிர்பிடுங்கும் தீவிர இடதுசாரிகளும் ஆதரவளிப்பார்கள். இவர்கள் வலதுசாரிகளுடன் சேர்ந்த பிரிக்ஸிற்றையும் ஆதரித்தனர்.

அமெரிக்கா தன்னை ஜனநாயகத்தின் காவலனாகக் காட்டிக்கொண்டு கறுப்பினத்தவர்களை காலால் நெரித்தும் தெருநாய்களைப் போல் சுட்டும் கொல்கின்றனர். தன்னியக்க துப்பாக்கிகளை விளையாட்டுப் பொருட்களாக விற்கும் அமெரிக்காவில் குழந்தைகள் பாடசாலைகளிலேயே சுட்டுக்கொல்லப்படுகின்றனர். அதற்கு அமெரிக்க ஜனநாயகம் இடமளிக்கின்றது. பெண்கள் கருக்கலைப்பு செய்வதை அமெரிக்க ஜனநாயகம் தடுக்கின்றது. அவர்களைக் கொலைகாரர் என்று முத்திரை குத்துகிறது. இந்த ஜனநாயகத்தை ஈராக்கிற்கு, லிபியாவுக்கு, சிரியாவுக்கு ஏற்றுமதி செய்கிறோம் என்று சொல்லி அந்நாடுகளைச் சீரழித்தனர். தற்போது அமெரிக்க ஜனநாயக ஏற்றுமதி இலங்கையில் மையம் கொண்டுள்ளது.

அமெரிக்க சார்பு ஊடகங்களின் வர்ணிப்பின் படி: இலங்கை மக்களுக்கு ராஜபக்சக்களின் குடும்ப ஆட்சியில் ஜனநாயகம் இல்லையாம். அதனால் ஊழலாம். பொருளாதார நெருக்கடியாம். இலங்கை பொருளாதார நெருக்கடி அமெரிக்க சார்பு ஊடகங்களை கண்கலங்க வைத்தது. மக்கள் வறுமைக்குள் வாடுவதாக, மக்கள் பட்டினிக்குள் தள்ளப்படுவதாக இந்த ஊடகங்கள் முதலைக் கண்ணீர் வடித்தது. இடதுசாரி லிபரல்களையும் நீச்சல்குளத்தோடு வாழும் மனித உரிமைச் சட்டத்தரணிகளையும் கொண்டு வந்து ஐஎம்எப் இலங்கையை காப்பாற்ற வேண்டும் என்று புலம்புகின்றனர். ஆடுகள் நனைகின்றதாம் என்று ஓநாய்கள் கூடி அழுகின்றது. இது தான் சர்வதேசத்தில் இலங்கையின் நிலை.