எம்.கே.சிவாஜிலிங்கம்

எம்.கே.சிவாஜிலிங்கம்

சிவாஜிலிங்கத்துக்கு எதிரான பயங்கரவாத தடைச்சட்ட வழக்கை நிராகரித்தது கொழும்பு மேல் நீதிமன்றம் !

 

சிவாஜிலிங்கத்துக்கு எதிரான பயங்கரவாத தடைச்சட்ட வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதோடு அவ்வழக்கினை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு மன்றுக்கு நியாயாதிக்கம் கிடையாதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

2020 வருடம் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் அங்கத்தவரான திலீபன் எனப்படும் ராசையா பார்த்தீபன் என்பவரின் 33ஆம் நினைவு தினத்தை நினைவுகூருமுகமாக கோண்டாவிலைச் சேர்ந்த கோகுல வீதியில் சிவாஜிலிங்கம் நினைவு தீபத்தை ஏற்றி நினைவுகூர்ந்தார்.

 

அதனூடாக அவர், இனங்களுக்கிடையே முரண்பாட்டை தோற்றுவிக்க முயற்சித்ததாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் 27ஆம் பிரிவின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்ட 29.08.2011ஆம் திகதி 1721/2 என்ற வர்த்தமானியின் கீழ் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளின் 3(ஊ) பிரிவின் கீழ் குற்றம் ஒன்றை புரிந்ததன் விளைவாக, அவ்வொழுங்கு விதிகளின் நான்காம் பிரிவின் கீழ் தண்டிக்கப்படக்கூடிய குற்றமொன்றை செய்ததாக ம.க.சிவாஜிலிங்கத்தின் மீது மேல் மாகாணத்தின் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

 

கடந்த பெப்ரவரி 5ஆம் திகதி இவ்வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருக்கும் குற்றப்பத்திரிகை சட்ட விரோதமானது எனவும் இவ்வழக்கினை விசாரிப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு நியாயாதிக்கம் இல்லை எனவும் பூர்வாங்க ஆட்சேபனை குற்றம் சாட்டப்பட்டவரின் சார்பில் நீதிமன்றத்தின் முன்னிலையாகிய சட்டத்தரணிகளால் வாதம் முன்னெடுக்கப்பட்டது.

 

இலங்கை அரசியல் யாப்பின் 154 P (3) பிரிவின் பிரகாரம், குற்றங்கள் நடந்ததாக கூறப்படும் பிரதேச எல்லைக்குள் நியாயாதிக்கம் கொண்ட மாகாண நீதிமன்றம் மட்டுமே மேற்குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என்ற ஏற்பாடுகள் சுட்டிக்காட்டப்பட்டன.

 

எனவே, குற்றம் புரியப்பட்டதாக கூறப்படும் நியாயாதிக்க எல்லைக்குள் அமைந்திருக்காத கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இவ்வழக்கினை தாக்கல் செய்வதற்கும் விசாரணை செய்வதற்கும் சட்ட ஏற்பாடுகள் அமைவாக இல்லை என்றும் சட்டத்தரணியினால் சமர்ப்பணம் மேற்கொள்ளப்பட்டது.

 

அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான வழக்குகள் நியாயாதிக்கம் எவ்வாறு இருப்பினும் மேல் மாகாண மேல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யமுடியும் என்ற வகையில் அமைந்துள்ள 27ஆம் பிரிவின் கீழ் பாதுகாப்பு அமைச்சரினால் பிரகடனப்படுத்தப்பட்ட ஒழுங்குவிதிகள் செல்லுபடியற்றன என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது. ஏனென்றால், வியாக்கியானங்கள் சட்டத்தின் 17(1) (சி)இன் பிரகாரம், எச்சட்டத்தின் கீழும் மேற்கொள்ளப்படும் ஒழுங்குவிதிகள் மூலச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு முரண்பாடாக அமையக்கூடாது என்று விதந்துரைக்கப்பட்டிருக்கிறது.

 

எனினும், இவ்வழக்கில் குறிப்பிடப்பட்ட ஒழுங்கு விதிகள் மூலச்சட்டமான பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு முரண்பாடாக மேல் மாகாண மேல் நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்யும் அதிகாரத்தினை சட்டவிரோதமாக சட்டமா அதிபருக்கு கொடுத்திருக்கிறது.

 

எனவே குறித்த ஒழுங்குவிதிகள் சட்டவலு அற்றவை என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது.

 

அத்துடன் இவ்வுலகை நீற்றுச்சென்ற சக மனிதர்களின் அல்லது உறவினர்களின் நினைவு தினத்தை அனுஷ்டிப்பதை எந்த சட்டமும் தடைசெய்யலாகாது என்றும் இது தனிமனித சுதந்திரத்தையும் கலாசார மரபுகளையும் சமய மற்றும் பண்பாட்டு மரபுகளையும் சிதைக்கும் ஒரு செயல்.

 

மேலும் 33 வருடங்களுக்கு முன் மரணித்த அகிம்சை வழிப் போராளிகளை நினைவுகூரும் ஒரு செயல் எவ்வாறு பயங்கரவாத செயலாக அமையும்? அது எவ்வாறு இனங்களுக்கிடையே முரண்பாட்டினை தோற்றுவிக்கக்கூடும் என்கிற வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

 

இந்நிலையில் குறித்த வழக்கு நீதிமன்றத்தின் கட்டளைக்காக நேற்றைய தினம் நியமிக்கப்பட்டிருந்தது.

 

இத்தீர்ப்பின் பகுதிகளை வாசித்த மேல் நீதிமன்ற நீதிபதி இலங்கை அரசியல் யாப்பின் சட்ட ஏற்பாடுகளுக்கும் மற்றும் குற்றவியல் சட்டங்களுக்கும் அத்துடன் மாகாணங்களின் மேல் நீதிமன்ற விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழும் குறித்த நியாயாதிக்கம் குற்றங்கள் இழைக்கப்பட்டதாக கூறப்படும் மாகாணத்தின் மேல் நீதிமன்றத்துக்குத்தான் நியாயாதிக்கம் உள்ளது என்று வியாக்கியானம் செய்யப்பட்டது.

 

எனவே, இவ்வழக்கினை விசாரிப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு நியாயாதிக்கம் இல்லை என்று குறிப்பிட்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, மேற்குறித்த வழக்கினை நியாயாதிக்கம் உள்ள ஒரு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு அறிவுறுத்தினார்.

 

அத்துடன் ம.க. சிவாஜிலிங்கத்தை வழக்கிலிருந்து முற்றாக விடுதலை செய்தார்.

 

குற்றம் சாட்டப்பட்டவரான ம.க. சிவாஜிலிங்கத்தின் சார்பாக சட்டத்தரணிகள் சுரங்க பண்டார, லக்ஷ்மன் அபேவர்தன ஆகியோருடன் சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.இரத்தினவேல் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“நீங்கள் சமஷ்டிதரவில்லை என்று கனவு காண்பீர்கள் என்றால் நாங்கள் சுதந்திர தமிழீழத்தை எடுக்கப்போகின்றோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். ” – எம்.கே. சிவாஜிலிங்கம்

“நீங்கள் சமஷ்டிதரவில்லை என்று கனவு காண்பீர்கள் என்றால் நாங்கள் சுதந்திர தமிழீழத்தை எடுக்கப்போகின்றோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். ”  என தமிழ்தேசிய கட்சியின் செயலாளர் நாயகமும்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர மற்றும் சுரேன் இராகவன் போன்றோரின் அண்மைக்கால கருத்துகள் தொடர்பில் கேட்டபோதே அவர் இதனை தெரிவித்தார் .

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சரத் வீரசேகர கடற்படை அதிகாரியாக இருந்து ஒய்வு பெற்றவர்.  இன்று நேற்று அல்ல தொடர்சியாக ஜெனிவா கூட்டத் தொடர்வரை வந்து இனவாதத்தை கக்குவது மட்டுமன்றி  தமிழ்மக்களின் போராட்டத்தைப் பற்றி குற்றச்சாட்டு முன்வைப்பவர். அதுமட்டுமன்றி தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக பல சோடிக்கப்பட்ட  பொய்களை ஜெனிவாகூட்டத் தொடரில் முன்வைக்கின்ற  வேலைகளை செய்தது மாத்திரமல்ல, ஜெனிவா கூட்டத்தொடரில் எங்களுடன் மோதுகின்ற வேலைகள் மற்றும் வாக்குவாத்தத்தில் ஈடுபட்டவர். அதுமட்டிமன்றி தமிழ் நாட்டில் இருந்து வந்த வைக்கோ போன்ற தலைவர்களுடனும் வாக்குவாத்தத்தில் ஈடுபட்ட நபராவார்.

தற்போது இவர் அமைச்சரில்லை. பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு கடந்த காலங்களில் குறிப்பாக  காலகாலமாக இனவாத கருத்துக்களை கூறிவருபவர்கள் போல்  முன்பிருந்தவர்களை விட மிக மோசமாக இனவாத கருத்துக்களை கக்கிவருகிற செயற்பாட்டில் சரத்வீரசேகர ஈடுபட்டு வருகிறார்.

இவர் சிங்கள பெளத்த இனவாத மக்களின் உண்மையான முகத்தை காட்டி வருகிறார். ஏனையவர்கள் மெழுகு புசியவர்கள் போல் எங்களை ஏமாற்றப்பார்கிறார்கள். இவ்வாறானவர்களை வைத்துக் கொண்டு நாங்கள் ஒரு நாட்டுக்குள் வாழவேண்டும் என்று எங்களுடைய கட்சிகள் அல்லது  தலைவர்கள் நினைப்பது எவ்வாறு?

இனப்படுகொலைகள்  படுமோசமாக இடம் பெற்ற பின்னரும் கூட அதற்கான நீதி கிடைக்குமாயின் அதற்காக  பொதுசன வாக்கேடுப்பு நடாத்தி அதற்காக செல்லமுடியும் என்பது அவர்களுக்கு தெரியும். இதனை விடுத்து அவர்களிடமிருந்து மயிலே மயிலே இறகுபோடு என்று கேட்டுக் கொண்டிருந்தால் பிரயோசனம் எதுவும்  இல்லை.

இதனைபோல்தான் தற்போது சுரேன் இராகவன் வடக்கு மாகாணத்தின் ஆளுநராக . மலையகத்தைச் சேர்ந்தவர். அவரும் வெளிநாடுகளில் வாழ்ந்து இன்று ஒன்றுமில்லாமல்  தேசியப்பட்டியல் எம்.பியாக வந்துவிட்டு  அவர் பேசும் பேச்சுக்கள், வீராப்புகளை ஏற்கமுடியாதுள்ளது. அதிலும் சமஷ்டி பெறலாம் என கனவுகாண வேண்டாம் என்றால் நீங்கள் சமஷ்டிதரவில்லை என்று கனவு காண்பீர்கள் என்றால் நாங்கள் சுதந்திர தமிழீழத்தை எடுக்கப்போகின்றோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

இதனை தவிர இதற்குவேறு வார்த்தைக்ள் எம்மிடம் இல்லை. மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக் கொண்டு அவலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்களுக்கு உதவி செய்யவில்லை.  தமிழனாக இருந்து கொண்டு பெளத்தத்தில் ஆராட்சி கெளரவ பட்டத்தை பெற்றுவிட்டு அதில் பிழையில்லை ஆனால் எமது மக்களின் அல்லது தான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் வீழ்ச்சியைப் பற்றி கதைக்காது சிங்கள பெளத்த பேரினவாத்தத்திற்கு ஓத்துதுகின்றவராக  சுரேன் இராகவனும் இணைந்துள்ளார். அதுமட்டுமன்றி சரத்வீரசேகரவின் அணியில் இணைந்து கொள்ளட்டும். இவற்றையேல்லாம் கண்டு ஈழத்தமிழர்கள் அச்சப்பட போவதில்லை. பயப்படபோவதில்லை  இவர்களுடைய இனவாத கருத்துகள் எங்களுடயை இறுதி இலட்சியத்தை அடைவதற்கு உரமூட்டும் என்பதை நம்புகின்றோம் என்றார்.

“எந்த முடிவுகளை எடுப்பதானாலும் மக்களுடைய அனுமதிக்காக  பொதுஜன வாக்ககெடுப்பிற்கு விடப்பட வேண்டும்.”- எம்.கே.சிவாஜிலிங்கம்

தமிழர் தாயகத்தில் மிகப்பெரிய இனப்படுகொலை நடைபெற்றுள்ள நிலையில் எந்த முடிவுகளை எடுப்பதானாலும் மக்களுடைய அனுமதிக்காக  பொதுஜன வாக்ககெடுப்பிற்கு விடப்பட வேண்டும் என தமிழ்த்தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தள்ளார்.

நேற்றைய தினம் வல்வெட்டித்துறையில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“தமிழருக்கான தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தையின் போது இந்தியா அமெரிக்க போன்ற நாடுகள் இருக்க வேண்டும். இவை தான் எமது கோரிக்கையும். இவ்வாறான நிலையில் மிகப்பெரிய இனப்படுகொலை இ்ம்பெற்றுள்ள நிலையில் மக்களுக்கு என்ன தேவை என்பதை நாம் யாரும் தீர்மானிக்க கூடாது, மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

மேலும் இந்தியாவின் மத்தியஸ்தம் வேண்டும் என்று நாம் கேட்டால் பெரும்பான்மையினர் குழம்பிவிடுவார்கள் என்றால் எதற்கு? தமிழர் அடிமை வாழ்க்கை வாழ்வதா?  ஆகவே பொதுஜன வாக்கெடுப்பின்றி எதாவது ஒரு தீர்மானத்தை தமிழ்த்தரப்பு ஏற்றுக்கொள்ளுமானால் அது தமிழருக்கான அடிமை சாசனம்.

அதேவேளை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும் சர்வதேசத்தை சமாளிக்கக்கூடியதுமான மிகப்பெரிய உத்தியாகவே அடுத்த சுதந்திர தினத்திற்குள் தீர்வு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அடுத்த சுதந்திர தினத்திற்கு முன்னர் தீர்வு கிடைக்காது என்ற சந்தர்ப்பத்தில் தமிழ்க் கட்சிகள் அடுத்து என்ன செய்யப் போகின்றன? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

எவ்வாறாயினும் சிவாஜிலிங்கம் அங்கம் வகிக்கும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் சார்பில் அதன் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் அதிபருடனான சந்திப்பில் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

“இளைஞர்களின் சிந்தனைகளை திசைதிருப்பும் நோக்குடன் வடக்கில் போதைப்பொருள் விற்பனை.”- எம்.கே.சிவாஜிலிங்கம்

“போதை பொருள் பயன்பாட்டை தடுத்து நிறுத்த துரித நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசாங்கமும்  நீதித்துறை கூடிய கவனம் எடுத்து இதை நிறுத்துவதற்கு நடவடிக்கைகளை  துரிதபடுத்தவேண்டும்.” என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்

வடக்கு அதிகரித்து வருகின்ற போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக கேட்டபோது அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

வடக்கில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்து வருகிறது.இது இளைஞர்களை இலக்கு வைத்து அவர்கள் எண்ணங்கள் சிந்தனைகளை திசைதிருப்புவதற்காக இந்த வியாபார நடவடிக்கைகள் இடம்பெறுகிறது. அரசாங்கத்தின் பல்வேறு அமைப்புகளால் இவை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது இதனை நாங்கள் உறுதியாகவே தெரிவித்துக் கொள்கின்றோம்.

தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் காலத்திலேயே குறிப்பாக வன்னி கட்டுபாட்டில் இருந்த போது யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் புழக்கத்தில் இருந்துள்ளது. பாதை பூட்டப்பட்டிருந்த போது கப்பல் வழியாகவும்  கொண்டு வந்து புழக்கத்தில் விட்டிருந்தார்கள் . தற்போதைய சூழலில் கஞ்சா போதை பொருள் புழக்கத்தில் அதிகமாக இருந்தது. தற்போது  அதற்கு அதிகமாக ஹரோயின் அதிகமாக புழக்கத்துக்கு வரத்தொடங்கியுள்ளது.

இலங்கையின் பல பாகத்திலும் போதை பயன்பாடு உள்ள நிலையில் நிலையில் வடக்கில் அதிகமான விநியோகங்களும் அதனை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் இழவயதினரிடையே  அதிகரித்து செல்கின்றது.

இளைஞர் யுவதிகளை திசை திருப்புவதற்காகவே இந்த செயற்பாடு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு அனைத்து தரப்பினருக்கும் உண்டு. எங்கள் செல்வங்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இவர்களுக்கு என்று பொறுப்பை தட்டிக்கழிக்காது அனைவருமே ஒன்றிணைந்து தடுத்து நிறுத்த வேண்டும்.

அரசியல்வாதிகள், மதங்கள், பொது அமைப்புகள், கிராமிய  அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் என அனைத்துதூறை  சார்ந்தவர்களும் இதனை தடுத்து நிறுத்த முன்வர வேண்டும் ஒவ்வொரு கிராமங்கள் தோறும் விழிப்பு விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் அச்சுவேலியில் சிறுவர் சீர்திருத்தப் பாடசாலை உள்ளது. அதற்கருகாமையிலும் காணிகளும் காணப்படுகின்றது. அங்கு மறுவாழ்வு நிலையம் ஒன்றினை அமைத்து இதில் பாதிக்கப்பட்டவர்களை சீர் செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

தென்பகுதிக்கு பாதிக்கப்பட்டவர்களை கொண்டு செல்வதை தவிர்த்து அந்தந்த மாவட்டங்களிலேயே மறுவாழ்வு இல்லங்கள் அமைத்து அதற்கான சிகிச்சை முறைகளை பின்பற்றுவதே சிறந்த தீர்வாகும். அவர்கள் தென்பகுதிக்கு கொண்டு சென்றால் அவர்கள்  மேலும் அதில் விற்பனையளர்களாக வரக்குடிய நிலைதான் ஏற்படக்கூடியதாக இருக்கும்.

போதை பொருள் பயன்பாட்டை தடுத்து நிறுத்த துரித நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசாங்கமும்  நீதித்துறை கூடிய கவனம் எடுத்து இதை நிறுத்துவதற்கு நடவடிக்கைகளை  துரிதபடுதவேண்டும் என்றார்.

“தமிழர்களுக்கு இலங்கைக்குள் அரசியல் தீர்வு ஒருபோதும் கிடையாது. ” – எம்.கே.சிவாஜிலிங்கம்

தமிழ் மக்களது முழுமையான நிலைப்பாட்டை கட்சிகள் வெளிப்படுத்தாத காரணத்தால் நாங்கள் ஜெனீவாவுக்கு தனியாக கடிதம் எழுதவேண்டிய தேவை ஏற்பட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

கட்சிகள் ஒவ்வொன்றும் தனியாக ஜெனிவாவிற்கு கடிதம் எழுதியமை தொடர்பாக வல்வெட்டித்துறையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இம்முறை ஜெனிவாவிற்கு தமிழ் மக்கள் கூட்டணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி,தமிழ்த் தேசியக் கட்சி ஆகிய 5 கட்சிகள் கூட்டாக தமிழர் பிரச்சினையை தீர்க்க வடக்கு கிழக்கில் பொதுஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என வலியுறுத்தி கடிதத்தை எழுதியுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி இலங்கை தமிழரசுக் கட்சி போன்றவை இதுவரை சர்வதேச சமூகத்திடம் பொதுசன வாக்கெடுப்பு தேவை என்ற விடயத்தை வலியுறுத்தவில்லை. இந்நிலையில் தமிழ் மக்களது முழுமையான நிலைப்பாட்டை கட்சிகள் வெளிப்படுத்தாத காரணத்தால் நாங்கள் தனியாக ஜெனிவாவுக்கு கடிதத்தினை அனுப்பியுள்ளோம். ஒரே நிலைப்பாட்டில் கட்சிகள் இருக்குமானால் ஜெனீவாவுக்கு பல்வேறு கடிதங்கள் போக வேண்டிய தேவையிருக்காது.

இலங்கைக்குள் அரசியல் தீர்வு ஒருபோதும் கிடையாது. ஒற்றையாட்சியை விட்டு ஒரு அங்குலமும் அரசாங்கம் வழங்காது. அரசியல் தீர்வு வழங்கப்படும் ஆனால் கூட ஒற்றையாட்சியை மலினப்படுத்துவதாக அந்த தீர்வு இருக்காது.

சர்வதேச நாடுகள் மற்றும் சர்வதேச சமூகம் இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஒரு பொதுசன வாக்கெடுப்பை நடத்த வேண்டும். அதுவே அரசியல் தீர்வுக்கான வழி என்பதை நாங்கள் இறுக்கமாக வலியுறுத்தி இருக்கின்றோம் என்றார்.

“அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பண்பு தெரியாத வகையில் விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பில் வசைபாடுகிறார்.” – எம்.கே. சிவாஜிலிங்கம் காட்டம் !

“டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியான ஈ.பி.டி.பி பற்றி பொது மக்களுக்கு நன்றாகத் தெரியும். எவ்வளவு படுகொலைகள் அட்டூழியங்கள் புரிந்தார் என்பது தெரியும்.” என  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறப்புத் தொடர்பில் அரசாங்கமும் அரசாங்கத்தில் உள்ளவர்களும் மாறுபட்ட கருத்துக்களையே கூறிவருகின்றார்கள். இதன்மூலம் போர்க்குற்றம் நடந்தது என்பதை அவர் ஏற்றுக்கொள்கின்றார்கள். இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பண்பு தெரியாத வகையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி வசைபாடியுள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியான ஈ.பி.டி.பி பற்றி பொது மக்களுக்கு நன்றாகத் தெரியும். எவ்வளவு படுகொலைகள் அட்டூழியங்கள் புரிந்தார் என்பது தெரியும். 2001 ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரசாரத்திற்காக ஊர்காவற்றுறை சென்றபோது ஈ.பி.டி.பி குண்டர்களினால் சுட்டும் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மூவருக்கு இரட்டை மரண தண்டனை தீர்ப்பு நீதி மன்றத்தினால் வழங்கப்பட்டது.

பிரபாகரன் உயிருடன் சரணடைந்தார் என்று டக்ளஸ் தேவானந்தா கூறுகிறார். இது முதல் தடவை அல்ல. அப்படி என்றால் சரணடைந்தவர்களை நீங்கள் படுகொலை செய்தீர்களா என்பதற்கு பதில் கூறவேண்டும். இறுதியுத்தத்தின் போது பிரபாகரனின் படம் என காண்பிக்கப்பட்ட படத்தில் நெற்றியில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்கள் இருந்தமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

பிரபாகரன் சரணடைந்திருந்தால் விசாரணை செய்திருப்பீர்கள் இலங்கை பூராகவும் பவனியாக கொண்டு சென்றிருப்பீர்கள். ஆனால் தற்போது குறித்த விடயங்கள் தொடர்பில் ஒன்றுக்கொன்று முரணாகவே கூறிவருகின்றீர்கள். சரணடைந்த பின்னர் கொல்லப்பட்டார் என்பது உங்கள் கருத்து அவ்வாறு என்றால் இந்தப் போர்க்குற்றத்திற்கு யார் பொறுப்பு? இதற்கு யார் பதில் கூறுவது? அன்று இராணுவத் தளபதியாக இருந்த சரத்பென்சேகா, பிரபாகரன் ஒரு வீரன் கடைசி வரை போராடியே மறைந்தார் என்பதை கூறுகின்றார்.

படைத்தளபதியின் கீழ் இருந்த ஓய்வுநிலை ஜெனரல் கமால் குணரட்ண என்பவர் கழுத்தில் இருந்த இலக்கம் ஒன்று என்ற இலக்கத்தகட்டையும் பிஸ்ரலையும் கைப்பற்றினோம் எனக் கூறியுள்ளார். அவ்வாறு என்றால் பிஸ்ரலுடனா அவர் சரணடைந்தார். சரணடைவது என்றால் ஆயுதங்கள் இல்லாமல் தான் சரணடைவது. அவருடைய உடலை நாங்கள் புதைத்துவிட்டோமென ஒரு சிலர் கூறினார்கள். எங்கு புதைத்தோம், யார் புதைத்தது என்பது கூறப்படவில்லை. இன்னுமொரு பகுதியினர் எரித்துவிட்டு சாம்பலை கரைத்துவிட்டோம் எறிந்துவிட்டோம் என்றார்கள். ஒரு போர் வீரனது உடலுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்பது மரபு.

பிரபாகரனது இறப்புத் தொடர்பில் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துக்களையே அரசாங்கங்கள் கூறிவருகின்றது. பிரபாகரனின் உடலை அடையாளம் காண்பதற்காக கருணாவையும் தயா மாஸ்ரரையும் கூட்டிச் சென்றீர்கள். ஒருவர் கொல்லப்பட்டால் குறித்தநபர் இந்தியாவாலும் தேடப்படுகின்றார் என்றால் ஏன் அவரின் மரண விசாரணை நடைபெறவில்லை.

உலங்கு வானூர்தி மூலம் கருணாவை கூட்டிச் செல்ல முடியும் என்றால் ஏன் சட்ட வைத்திய அதிகாரியை கூட்டிச்சென்று மரண சான்றிதழை வழங்கவில்லை. இந்தியாவிற்கு ஒரு நீதிமன்ற சான்றிதழை வழங்கியுள்ளீர்கள் இதனைவிட ஏன் டி.என்.ஏ. பரிசோதனை செய்யவில்லை. அன்றைய காலத்தில் பிரபாகரனின் தாயும் தந்தையாரும் பனாகொட இராணுவ முகாமில் தான் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள்.

பிரபாகரன் எனக் காண்பிக்கப்பட்ட உடலை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒன்றில் அவர் தன்னைத்தானே மாய்த்திருக்கவேண்டும் அல்லது அவர் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்பதை வரலாறு கூறும். அதனை விடுத்து சரணடைந்தார் சடலத்தை எடுத்தோம் புதைத்தோம் என்று கூறுவதில் அர்த்தம் இல்லை. பிரபாகரன் கொல்லப்பட்டிருந்தால் எதற்காக பிரபாகரனின் தாயாரிடன் பிரபாகரன் எங்கு இருக்கின்றார் என விசாரணை செய்தீர்கள் என்பதற்கான பதிலையும் கூறவேண்டும். அல்ஜசீரா தொலைக்காட்சிக்கும் தாயார் இதனைக் கூறியுள்ளார்.

பிரபாகரனின் இறப்புத் தொடர்பில் அரசாங்கத்தின் அமைச்சர்களின் மாறுபட்ட கருத்துக்களானது பித்தலாட்டங்களும் பொய் பிரட்டுக்களுமே இருப்பதாகவே நாங்கள் உணருகின்றோம் என்றார்.

“மீனவர் பிரச்சினையில் அவன் செத்தாலும் இவன் செத்தாலும் தமிழர்கள் என்ற நிலமை தான் இருக்கிறது.” – எம்.கே.சிவாஜிலிங்கம்

எல்லை தாண்டும் இந்திய மீனவர்களால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தி தீர்வு காண்பதற்கு தமிழ்நாடு வருமாறு தமிழ் நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சியின் பொது செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

நேற்று சுப்பர்மடம் பகுதியில் மீனவரகள் போராட்டத்தில் கலந்து கொண்டபின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

அண்மைக் காலமாக வட பகுதி கடலிலே எங்களுடைய கடற்றொழிலாளர்கள் தங்களுடைய இலட்சக்கணக்கான, கோடிக்கணக்கான கடற்றொழில் உபகரணங்களை மாத்திரமல்ல தங்களுடைய இன்னுயிர்களையும் திறக்கின்ற நிலமை ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக இந்தியாவிலிருந்து எல்லை தாண்டி வருகின்ற ரோளர் பாரிய இழுவை மடி படகுகள் மோதி பாரிய சேதம் ஏற்பட்டுருக்கிறது.

இதே போல இலங்கை கடற்படையினரது படகுகளாலும் வேண்டுமென்றும் விபத்தினாலும் கொல்லப்பட்டு கரை ஒதுங்குகின்ற கடற்றொழிலாளர்களது சடலங்களால் ஒரு பதட்டமான சூழல் அதிகரித்திருக்கிறது.

வடமராட்சி மருதங்கேணி வத்திராயன் பகுதியில் இரண்டு கடற்றொழிலாளர்களது உடல்கள் கரை ஒதுங்கியிருக்கின்றன. இதே போன்று பருத்தித்துறை பொன்னாலை வீதியிலே சுப்பர்மடம் பகுதியிலே வீதியை மறித்து நேற்று முன்தினம் காலை 8:00 மணியிலிருந்து அவர்கள் மறியல் போராட்டத்தை நடாத்திக் கொண்டிருக்கின்றனர்.

பொலிகண்டி வரை வீதி போக்குவரத்து முடக்கப்பட்டிருக்கிறது. இலங்கை அரசாங்கம் இதை பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இலங்கை இந்திய அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈழ மீனவர்களும், தமிழக மீனவர்களும், நடுக்கடலிலே மோதுவதை இல்லாமல் செய்ய வேண்டும்.

தமிழக அரசும் வட மாகாணத்திலே இருக்கக் கூடிய சங்கங்கள், உட்பட மக்கள் பிரதிநிதிகளும் பேச வேண்டும். இப்பொழுது கூட இரண்டு தினங்களுக்கு முன்னர் மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உடனடியாக பேச்சுவார்த்தை நடாத்தி இந்தமாதிரியான பதட்டங்களை குறைக்க முன்வருமாறு கேட்டிருப்பதாக எனக்கு செய்தி அனுப்பியிருக்கிறார்கள்.

இப்பொழுது கூட அவரது உதவியாளர் வழக்கறிஞர் ராதா கிருஷ்ணன் அவர்கள் இன்றிரவு தமிழக முதலமைச்சருடன் பேசிவிட்டு செய்தி தருவதாக சொல்லியிருக்கிறார்.  உடனடியாக ஒரு போர் நிறுத்தம் போல அந்த எல்லையில் இருப்பவர்கள் எல்லை தாண்டக் கூடாது. இல்லாவிட்டால் எங்களுடைய மக்கள் பட்டிணியாலும் பசியாலும் தான் பாதிக்கப்படுவார்கள். மீதி விடயங்களை பேசி ஒரு இணக்கத்தின் அடிப்படையில் தீர்வு காணப்ட வேண்டும். இலங்கை அரசு இதில் அக்கறை காட்டும் என நாங்கள் எதிர்பார்க்க முடியாது. இந்திய மத்திய அரசுக்கும் ஏனோ தானோ நிலவரம்தான். இதிலே அவன் செத்தாலும் இவன் செத்தாலும் தமிழர்கள் என்ற நிலமை இருக்கிறது.

அவர்கள் மிகப்பெரிய எண்ணிக்கையில் இருக்கிறார்கள். பொருளாதாரத்தில் பலமாக இருக்கிறார்கள். தற்போது விலை வாசி அதிகரித்திருக்கும் நிலையில் பனையால் விழுந்தவனை யானை மிரிப்பதாக உள்ளதாகவும் உடனடியாக இந்த பிரச்சினை தீர்க்க வேண்டும். அதற்க்கான முழு முயற்சிகளை உடனடியாக எடுப்போம் என்றார்

“ஒரு போதும் இலங்கை அரசை நம்பத் தயாரில்லை.”- எம். கே.சிவாஜிலிங்கம்

ஒரு போதும் நாம் உள்நாட்டு பொறிமுறையை ஏற்கத் தயாரில்லை என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலருமான எம். கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இன்று (24) காலை 10:30 மணிக்கு அவரது அலுவலகத்தில் இடம் பெற்ற உடக சந்திப்பின் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கை அரசுடன் பேசுவதால் இருந்தால் சர்வதேச மத்தியஸ்துடன் தான் பேச வேண்டும் என்றும் ஒரு போதும் இலங்கை அரசை நம்பத் தயாரில்லை. இலங்கை அரசுடன் பேச செல்வது என்பது தற்கொலைக்கு சமம் என்றும் நடந்த இனப் படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

“கைதுகள் மூலம் தமிழ் மக்களுடைய தேசிய உணர்வுகளை விடுதலைப் போராட்ட உணர்வுகளை அடக்க முடியாது.” – எம்.கே.சிவாஜிலிங்கம்

“கைதுகள் மூலம் தமிழ் மக்களுடைய தேசிய உணர்வுகளை விடுதலைப் போராட்ட உணர்வுகளை அடக்க முடியாது.” என  தமிழ் தேசிய கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கைது தொடர்பாக கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்று   திலீபனுடைய நினைவுத்தூபி அமைந்திருந்த இடத்தில் அஞ்சலி செலுத்த சென்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனுடன் மேலும் இருவரையும் கைது செய்ததுடன் சில பெண்களையும் தாக்கி மிகக் கீழ்த்தரமாக காட்டுமிராண்டித்தனமாக பொலிசார் நடந்துகொண்ட காணொளி காட்சிகளை மக்கள் பார்த்திருக்கிறார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களுக்கு என்ன நடக்கும் என்பது தெரியாது. உலகத்திலே நினைவேந்தல் உரிமையை மறுப்பது என்பது ஐ.நாவின் மனித உரிமை சாசனத்தை மீறுகின்ற நடவடிக்கையாகும்.

ஆட்சித் தலைவரான ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை செயலகத்தில் உரையாற்றி விட்டு அங்கிருக்கின்ற நேரத்தில் இவ்வாறான காட்டுமிராண்டித்தனமான மிலேச்சத்தனமான தாக்குதல்கள் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. நீதிமன்றம் தடையுத்தரவு இன்று ஆரம்பிப்பதற்கு முந்தைய தினமே பொலிஸார் தடைபோட ஆரம்பித்து இருக்கிறார்கள். இந்த நடவடிக்கை மூலம் தமிழ் மக்களுடைய தேசிய உணர்வுகளை விடுதலைப் போராட்ட உணர்வுகளை அடக்க முடியாது. எதிர்காலத்தில் நாங்கள் அனைவரும் கட்சி பேதங்களைக் கடந்து நினைவேந்தல்களை பாரியளவில் செய்வதுதான் இவர்களுக்கான சரியான பதிலடியாக இருக்கும் என்றார்.

“மாவை சேனாதிராஜா தொடர்பில் வடக்கு மாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறிய விடயங்கள் வருத்தமளிக்கிறது.” – எம்.கே.சிவாஜிலிங்கம்

“மாவை சேனாதிராஜா தொடர்பில் வடக்கு மாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறிய விடயங்கள் வருத்தமளிக்கிறது.” என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் அரசியல்வாதிகளால் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் தொடர்பில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எம்.கே.சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்……

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுமா? இல்லையா?என்ற நிலைப்பாட்டை இன்னும் அரசு எடுக்கவில்லை. அந்த அடிப்படையில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் பழைய முறையில் நடத்தப் படுமா? அல்லது தொகுதிவாரி அல்லது விகிதாசார முறையில் நடத்தப் படுமா?என்ற கேள்வி கூட காணப்படுகின்றது.

அந்த நிலைமையில் வடக்கு மாகாணத்தில் மாகாண சபைத் தேர்தல் இடம் பெற்றால் அதில் யாரை முதலமைச்சராக நிறுத்துவது என்பது தொடர்பில் பல்வேறுபட்ட கருத்துக்கள் அரசியல்வாதிகளால் முன்வைக்கப்பட்டு வருகின்றது. வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் தேசியத்தின் ஆட்சி இடம் பெற வேண்டும் என மக்கள் மத்தியில் கருத்துக்கள் நிலவி வருகின்றது.

வடக்குக் கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசியத்தின் ஆட்சியினை நிலைநிறுத்துவதற்குரிய நடவடிக்கையை முன்னெடுப்பதை விடுத்து எதிர் மாறான கருத்துக்களை அரசியல்வாதிகள் முன்வைப்பதை நிறுத்தவேண்டும். அண்மையில் கூட முன்னாள் வடக்கு மாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன், மாவை சேனாதிராஜா முதலமைச்சர் வேட்பாளருக்கு தகுதியற்றவர் என்ற கருத்தினை குறிப்பிட்டு இருந்தார் அந்த கருத்தை அவர் தவிர்த்திருக்க வேண்டும்.

அதாவது அந்த அந்த சூழ்நிலையில் சம்பந்தன் ஐயாவினால் மாவை சேனாதிராஜா தகுதியற்றவர் என்று அடிப்படையிலேயே தான் தெரிவு செய்யப்பட்டதாக தெரிவித்திருப்பது மிகவும் வருத்தம் அளிக்கின்றது. குறிப்பாக அந்த சூழ்நிலையின் போது சம்பந்தன் ஐயாவின் முடிவுக்கு கட்டுப்பட்டு நாம் அனைவரும் விக்னேஸ்வரன் அவர்களை ஆதரித்து வெற்றியடைய செய்தோம்.

ஆனால் அதே கருத்தினை இன்று நாங்கள் கொண்டிருக்க முடியாது. அதனால் மாவை சேனாதிராஜா தகுதியற்றவர் என்று கருத முடியாது எனவே எதிர்காலத்திலும் நாம் இவ்வாறான ஏட்டிக்குப் போட்டியான கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்த்து சிறந்த ஒரு ஆட்சியை அமைப்பதற்கு நாம் செயற்பட வேண்டும். எனவே எதிர்வரும் காலத்தில் ஒருவரை ஒருவர் விமர்சித்தல் செயற்பாடுகளை தமிழ் அரசியல்வாதிகள் நிறுத்தவேண்டும் என தெரிவித்துள்ளார்.