உலக சுகாதார அமைப்பு

உலக சுகாதார அமைப்பு

வேகமெடுக்கும் குரங்கு அம்மை – சர்வதேச சுகாதார அவசரகால நிலை அறிவிப்பு!

உலகில் 13 நாடுகளில் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு குரங்கம்மை நோய் தீவிரமடைத்து வருவது கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆபிரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில் குரங்கம்மை காய்ச்சல் பொதுச் சுகாதார அவசரகால நிலையாக உருவாகி உள்ளது.

ஐநூறுக்கும் மேற்பட்டோர் இதனால் உயிரிழந்துள்ளனர். இதனை தடுத்து நிறுத்த சர்வதேச உதவி வேண்டுமென கேட்கப்பட்டுள்ளது. இதன்படி நடப்பு ஆண்டில் குழந்தைகள் மற்றும் முதியவர்களென 13 நாடுகளில் குரங்கம்மை கண்டறியப்பட்டுள்ளது.

இவற்றில் கொங்கோ நாட்டில் 96 சதவீத அளவு பாதிப்புகளும் மற்றும் மரணங்களும் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது, கொங்கோவில் பாதிப்புகள் 160 சதவீதமும், மரணங்கள் 19 சதவீதமும் உயர்ந்துள்ளன.

இதுவரை 524 பேர் பலியாகியுள்ளனர். 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆபிரிக்க நாடுகளில் புது வடிவிலான வைரசாக இது பரவி வருகிறது.

கொங்கோவிலிருந்து புரூண்டி, கென்யா, ருவாண்டா மற்றும் உகாண்டா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் இது பரவியுள்ளது. எனினும், ஆபிரிக்காவில் குறைந்த தடுப்பூசி டோஸ்களே கையிருப்பில் உள்ளன.

இது பற்றி உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானம் கெப்ரியேசஸ் கூறும் போது, நாம் அனைவரும் கவலைப்பட வேண்டிய விடயம். இந்த வைரஸ், ஆபிரிக்காவை கடந்து பரவக்கூடிய ஆற்றல் படைத்துள்ளது என்பது அதிக வருத்தத்திற்குரியது என்று கூறியுள்ளார்.

இந்த சூழலில் உலக சுகாதார அமைப்பு, குரங்கம்மையை சர்வதேச சுகாதார அவசரகால நிலையாக அறிவித்துள்ளது.

விரைவில் நீக்கப்படுகிறது உலகலாவிய கொரோனா அவசரநிலை – உலக சுகாதார அமைப்பு

சீனாவின் வூகான் மாகாணத்தில் 2019-ம் ஆண்டின் இறுதியில் முதன் முதலாக கொரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டது.

தற்போது அந்த பாதிப்புகளில் இருந்து சர்வதேச நாடுகள் படிப்படியாக மீண்டு வருகின்றன. இதுவரை உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் சுமார் 66 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலுக்கு இன்னும் சர்வதேச சுகாதார அவசரநிலை தேவைப்படுகிறதா..? என்பதை தீர்மானிக்க உலக சுகாதார அமைப்பு சார்பில் சில மாதங்களுக்கு ஒருமுறை ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது.

அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் எதனோம் பேசுகையில்,

2023-ம் ஆண்டில் நாம் சந்திக்க வேண்டிய சவால்கள் நிறைய இருப்பதாகவும், எதிர்காலத்தில் கொரோனா போன்ற நோய்த்தொற்று பரவல்களை எதிர்கொள்ள தயார்நிலையில் இருக்கவேண்டும் என்பதே நாம் கற்க வேண்டிய பாடம் என்றும் கூறினார்.

கடந்த வாரம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகியுள்ள நிலையில், வரும் 2023-ம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் பரவலை உலகளாவிய அவசரநிலையாக கருதவேண்டிய அவசியம் இருக்காது என டெட்ரோஸ் அதனோம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதேசமயம், கொரோனா வைரசின் தோற்றத்தை நன்கு புரிந்துகொள்வதற்காக, நாங்கள் கேட்டுள்ள தரவுகளை பகிர்ந்துகொள்ளவும், ஆய்வுகளை மேற்கொள்ளவும் சீனாவிடம் தொடர்ந்து கூறிவருவதாக டெட்ரோஸ் கூறினார்.

ஐரோப்பாவில் அதிகரிக்கும் கொரோனா – 7 இலட்சம் பேர் வரை இறக்க வாய்ப்பு !

கொரோனா அதிகரிப்பால் ஐரோப்பாவில் மேலும் 7 இலட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா பகுதிகளில் கொரோனாவின் தற்போதைய நிலவரம் மிகவும் மோசமாக உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

எனவே நோய் எதிர்ப்பு திறன் குறைந்தவர்கள், வயோதிபர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் போன்ற பாதுகாப்பு அச்சுறுத்தல் மிகுந்தவர்களுக்கு பூஸ்டர் டோஸ் போட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.