வேகமெடுக்கும் குரங்கு அம்மை – சர்வதேச சுகாதார அவசரகால நிலை அறிவிப்பு!

உலகில் 13 நாடுகளில் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு குரங்கம்மை நோய் தீவிரமடைத்து வருவது கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆபிரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில் குரங்கம்மை காய்ச்சல் பொதுச் சுகாதார அவசரகால நிலையாக உருவாகி உள்ளது.

ஐநூறுக்கும் மேற்பட்டோர் இதனால் உயிரிழந்துள்ளனர். இதனை தடுத்து நிறுத்த சர்வதேச உதவி வேண்டுமென கேட்கப்பட்டுள்ளது. இதன்படி நடப்பு ஆண்டில் குழந்தைகள் மற்றும் முதியவர்களென 13 நாடுகளில் குரங்கம்மை கண்டறியப்பட்டுள்ளது.

இவற்றில் கொங்கோ நாட்டில் 96 சதவீத அளவு பாதிப்புகளும் மற்றும் மரணங்களும் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது, கொங்கோவில் பாதிப்புகள் 160 சதவீதமும், மரணங்கள் 19 சதவீதமும் உயர்ந்துள்ளன.

இதுவரை 524 பேர் பலியாகியுள்ளனர். 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆபிரிக்க நாடுகளில் புது வடிவிலான வைரசாக இது பரவி வருகிறது.

கொங்கோவிலிருந்து புரூண்டி, கென்யா, ருவாண்டா மற்றும் உகாண்டா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் இது பரவியுள்ளது. எனினும், ஆபிரிக்காவில் குறைந்த தடுப்பூசி டோஸ்களே கையிருப்பில் உள்ளன.

இது பற்றி உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானம் கெப்ரியேசஸ் கூறும் போது, நாம் அனைவரும் கவலைப்பட வேண்டிய விடயம். இந்த வைரஸ், ஆபிரிக்காவை கடந்து பரவக்கூடிய ஆற்றல் படைத்துள்ளது என்பது அதிக வருத்தத்திற்குரியது என்று கூறியுள்ளார்.

இந்த சூழலில் உலக சுகாதார அமைப்பு, குரங்கம்மையை சர்வதேச சுகாதார அவசரகால நிலையாக அறிவித்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *