இலங்கை மின்சார சபை

இலங்கை மின்சார சபை

நிறுத்தப்பட்டது இலங்கை மின்சார சபையை தனியார் மயமாக்கும் நடவடிக்கை!

இலங்கை மின்சார சபையை தனியார் மயமாக்குவதை நிறுத்திவிட்டு அதன் அத்தியாவசிய மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளது.

 

கடந்த மாதம் 23 ஆம் திகதி தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை நடத்திய கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இலங்கை மின்சார சபை வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி, சேவையின் தரத்தை உயர்த்துவதற்கும், வாடிக்கையாளர் திருப்திக்கான உயர் மதிப்பைப் பேணுவதற்கும், நிறுவனத்திற்கு நியாயமான லாபத்தைப் பெறுவதற்கும், அதில் சமூகப் பொருளாதாரத்திற்கு உயர் நன்மைகளைப் பெறுவதற்கும், ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக அவ்வப்போது மதிப்பீடுகளை மேற்கொள்வதன் மூலம் நிறுவன சீர்திருத்தங்களை மேற்கொள்வது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 

அதேபோல், மின்சாரச் சட்டத்தில் திருத்தம் செய்யவும், அரசுக்குச் சொந்தமான மின் உற்பத்தி நிலையங்கள், பரிமாற்றம் மற்றும் விநியோக வலையமைப்பை தனியார்மயமாக்காமல் முழுவதுமாக அரசாங்கத்திற்கு சொந்தமான சுயாதீன அமைப்பில் செயற்படுத்தவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், ஒற்றை வாங்குபவர் மாதிரியில் உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகத் துறைகளின் நிதி மற்றும் செயல்பாட்டு நிர்வாகத்தின் அடிப்படையில் ஒரு சுயாதீனமான பொறிமுறையை நிறுவவும் முன்மொழியப்பட்டது.

 

அதேபோல், அடுத்த ஐந்து வருடங்களில் இலங்கையை பிராந்தியத்தில் மிகக் குறைந்த மின்சாரச் செலவைக் கொண்ட நாடாக மாற்றுவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

தனியார் மயமாகும் இலங்கை மின்சார சபை!

இலங்கை மின்சார சபை (CEB) மின்சார சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களின் கீழ் 14 தனியாருக்கு சொந்தமான நிறுவனங்களாக உடைக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.

நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையம், மகாவலி மற்றும் லக்ஸபான நீர்மின் நிலையங்கள் உட்பட அனைத்து நீர்மின் நிலையங்களும் தனியார் மயமாக்கப்படவுள்ள அரச நிறுவனங்களில் அடங்கும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையின் ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF), ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) மற்றும் ஓய்வூதிய நிதிகளை நிர்வகிப்பதற்கு புதிய நிறுவனம் ஒன்று ஸ்தாபிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சினால் நிர்வகிக்கப்படும் புதிய மின்சார ஆணைக்குழுவானது ”PUCSL”க்கு பதிலாக மாற்றப்படும் எனவும் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.