இலங்கை பொருளாதாரம்

இலங்கை பொருளாதாரம்

கிராமிய மக்களின் வறுமையை இல்லாதொழிப்பதே எமது நோக்கம் – அனுர குமார திசாநாயக்க

அடுத்த ஐந்து வருடங்களில் கிராமிய மக்களின் வறுமையை இல்லாதொழித்து கிராமிய மக்களின் பொருளாதாரம் மற்றும் சமூக அந்தஸ்தை உயர்த்துவது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

 

இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்துடன் இன்று செவ்வாய்க்கிழமை (05) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

 

அரசாங்கத்தின் அந்த வேலைத்திட்டம் வெற்றியடைவதற்கு அரச அதிகாரிகளின் ஆதரவு மிகவும் அவசியமானது எனத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அரச அதிகாரிகளின் அனுபவமானது அதற்கு பெரும் உறுதுணையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

 

அரசாங்கத்தின் நோக்கத்திற்கும் அரச சேவைகள் செயற்படும் விதத்திற்கும் இடையில் சில இடைவெளி காணப்படுவதாகவும், நாட்டை அபிவிருத்தி செய்யும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு இதுவரையில் அரச நிர்வாகம் செயற்பட்டு வந்த விதத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

 

நாட்டில் மோசடி மற்றும் ஊழலை நிறுத்துவது அரசாங்கத்தின் முக்கிய பணி எனவும், மோசடி மற்றும் ஊழல் காரணமாக நாட்டின் திட்டங்களை நடைமுறைப்படுத்தி பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

 

அத்துடன், அரச சேவையில் அரசியல் ரீதியிலான தலையீடுகள் மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும், அரச உத்தியோகத்தர்களுக்கு சுதந்திரமாகச் செயற்படுவதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

 

நாட்டின் பிரதேச அபிவிருத்திக்காக அரச அதிகாரிகளுக்கு விசேட பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மக்கள் சேவைகளைக் குறைக்காமல் அரச சேவையில் மேற்கொள்ளப்படும் தேவையற்ற செலவுகளைக் குறைக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

 

இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்தின் தலைவர் மகேஷ் கம்மன்பில, செயலாளர் ஜயவீர பெர்னாண்டோ உட்பட குழு உறுப்பினர்கள் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

“உலகச் சந்தையில் போட்டிபோடக்கூடியவாறு உள்ளூர் தனியார் துறையினர் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.” – நந்தலால் வீரசிங்க

உலகச் சந்தையில் போட்டிபோடக்கூடியவாறு உள்ளூர் தனியார் துறையினர் தங்களை மாற்றிக் கொள்ளாது விட்டால் சவால்களுக்கு மத்தியில் நீடித்திருக்க முடியாதென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

உலகளாவிய பிரதம நிறைவேற்று அதிகாரிகள் மாநாடு அண்மையில் ‘கொந்தளிப்பான தருணத்தில் தலைமைத்துவம்’ எனும் தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்றது.

இம்மாநாட்டில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்நாட்டில் உள்ள தனியார் துறையினருக்கு நீண்ட வரலாறுகள் காணப்படுகின்றன. அவர்கள் அரசாங்கத்திடத்தில் தமது வணிகத்துறை நிலைத்திருப்பதற்கான கோரிக்கையை முன்வைக்கின்றார்கள்.

குறிப்பாக, தமது துறையைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்துகின்றார்கள். இறக்குமதி வரிச்சலுகைகளை வழங்குமாறு கோருகின்றார்கள்.

உண்மையில் உள்நாட்டின் தனியார் துறையினர் நிலைத்திருப்பதாக இருந்தால் அவர்களுக்கான சந்தை வாய்ப்பு விரிவுபடுத்தப்பட்டதாக அமைய வேண்டும்.

குறிப்பாக, உலகளாவிய ரீதியில் உள்ள சந்தை வாய்ப்புக்களை நன்கு பயன்படுத்துவதற்கான ஏதுவான நிலைமைகளை அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுப்பதையே நோக்காக கொண்டிருக்கின்றது.

அந்த வகையில் உலக சந்தையை அணுகும்போது அதில் காணப்படுகின்ற சவால்களுக்கு முகம்கொடுத்து போட்டித்தன்மையான களத்தின் ஊடாக முன்னேறுவதன் ஊடாகவே தனியார் துறையினர் தொடர்ச்சியாக நீடித்து நிலைத்திருக்க முடியும்.

குறிப்பாக, இந்தியா, தென்கொரியா, சீனா போன்ற நாடுகள் அவ்விதமான முறைமைகளையே பின்பற்றுகின்றன. ஆகவே, இலங்கையின் தனியார் துறையினரும், இந்தியா உள்ளிட்ட சர்வதேச சந்தை வாய்ப்புக்களை திட்டமிடல்களுடன் பயன்படுத்துவதன் ஊடாக எதிர்காலத்தில் வெற்றிகளை அடையாலம் என்றார்.