இலங்கை தமிழர்

இலங்கை தமிழர்

உச்சத்தை தொடும் சுற்றுலாப் பொருளாதாரம் – இணைந்து கொள்ளுமா வடக்கு ?

உச்சத்தை தொடும் சுற்றுலாப் பொருளாதாரம் – இணைந்து கொள்ளுமா வடக்கு ?

சுற்றுலாத்துறை வருமானம் 53.2% அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. 2024 இல் வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இருபது லட்சமாகTk; 3,168.6 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தைப் பதிவு செய்துள்ளது.

சுற்றுலாப் பயணிகள் தென்னிலங்கை மற்றும் கிழக்கு இலங்கையை மையப்படுத்தியே நகரும் நிலையில் mg;பகுதிகளில் இன்னமும் பயணிகளை கவரும் நிலையில் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதேவேளை வடக்கு மாகாணத்திலும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடிய பறவைகள் சரணாலயங்கள், போர்த்துக்கேயர் கால கோட்டைகள், நெடுந்தீவு சுற்றுலா மையம், பழங்கால கோயில்கள் , வடக்கு நிலத்துக்கே உரித்தான கைத்தொழில் நடவடிக்கைகள் என பல்வேறுபட்ட அம்சங்கள் காணப்படுகின்றது. எனினும் கூட வடக்கு மாகாணசபை இயங்கு நிலையில் இருந்த போது வடக்கின் சுற்றுலாத்துறையை முன்னேற்ற எடுத்த நடவடிக்கைகள் அனைத்துமே ஊழல் அமைச்சர்களால் புஸ்வாணமாகிப்போனது. கிளிநொச்சியில் பறவைகள் திடல் என்ற பெயரில் பொன். ஐங்கரநேசன் அமைத்த திட்டம் கூட இன்று கவனிப்பாரற்று கிடக்கின்றது.

இது போலவே யாழ் மாநகரசபைதானும் ஏதேனும் ஆக்கப்பூர்வமான திட்டங்களை முன்னெடுத்து சுற்றுலா பயணிகளை கவர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என பலர் எதிர்பார்த்த போதும் அதிலும் ஏமாற்றமே மிஞ்சியது. யாழ் மாநகர சபையின் முதல்வராக வி. மணிவண்ணன் ஆரம்பித்த ஆரியகுளம் புதுப்பிப்பு திட்டம், வரலாற்று இடங்களை பாதுகாக்கும் திட்டங்கள் கூட உட்கட்சி கோளாறுகளாலும் – சுயநல அரசியலாலும் வீணே போனதுதான் வரலாறு.

இலங்கை ஓர் சுற்றுலாத்துறை நாடு என்ற அடிப்படையில் தேசிய பொருளாதார நீரோட்டத்தில் வடக்கு மாகாணமும் தன்னை இணைக்காதவரை அபிவிருத்தி திட்டங்கள் இந்த பகுதிகளை வந்தடைவதும் சிரமமானது தான். சுற்றுலாத்துறை நோக்கி வடக்கு பொருளாதாரம் கட்டமைக்கப்படுவது காலத்தின் கட்டாயமாகவுள்ளது. நீண்ட கடல்வளமும் – வரலாற்று பாரம்பரியமும் – தனித்துவமான வாழ்க்கை கோலமும் – பிரமாண்டமான நீர்ப்பாசன கட்டமைப்புக்களையும் – இயற்கை கொடைகளையும் கொண்ட வடக்கு மாகாணம் தேசிய பொருளாதார நீரோட்டத்துடன் தன்னை இணைக்க மறுக்கிறது. இதன் விளைவே இன்றும் வடக்கு புலம்பெயர் தமிழர்களின் கைகளை நம்பியிருக்கவும் காரணம்.

இலங்கை தமிழர்கள் என எங்களை அடையாளப்படுத்தாதீர்கள் – இந்திய மக்களவைத் தேர்தலில் வாக்களித்த இலங்கை தமிழ்ப்பெண்!

இந்தியாவின் தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள, நளினி என்ற இலங்கை பெண் இந்திய மக்களவைத் தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கை அகதி என்ற பெருமையைப் பெற்றுள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நளினி என்ற பெண்ணுக்கு, இம்முறை திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் வாக்களிக்க வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது.

 

குறித்த முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் முதல் முறையாக இவருக்கு வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாக்களித்த பின்னர் கருத்து தெரிவித்துள்ள நளினி, “இலங்கைத் தமிழர்களுக்கான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை, மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள், ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் கண்காணிப்புடன் வைத்திருப்பார்கள். அதனால் இங்குள்ள மக்கள் மன உளைச்சலில் காணப்படுகின்றனர்.

எங்களை இலங்கைத் தமிழர் என்று தெரிவிப்பதை விட, இந்திய வம்சாவளியினர் என்று அதிகாரிகள் அடையாளப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்” என கண்ணீர் மல்க குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளரொருவரை நிறுத்துவது இன முரண்பாட்டிற்கு வழிவகுக்கும் – வே. ராதாகிருஷ்ணன்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளரொருவரை நிறுத்துவது இன முரண்பாட்டிற்கு வழிவகுக்குமென மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வே. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 

ஹட்டனில் இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

 

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், “ஜனாதிபதி  தேர்தலில் தமிழர் ஒருவரை நிறுத்தினால் அவர் வெற்றி பெறுவாரா இல்லையா என்பது ஒரு புறம் இருக்க, நாட்டு மக்களிடையே இனமுரண்பாடு ஏற்படும்.

எனவே ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து ஒருவருக்கு ஆதரவளிக்க வேண்டும்.

 

அதே நேரத்தில் சிறுபான்மை மக்களும் வாக்குகளை சிதறடிக்காமல் தமக்கு பிடித்தமான இலங்கை ஜனாதிபதியை தெரிவு செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

“இலங்கை தமிழரிடையே பல குழுக்கள் உள்ளன. அவர்களுள் சிலரே தனிநாட்டை உருவாக்க விரும்பினர்.” – கோவாவில் முத்தையா முரளிதரன் !

உள்நாட்டுப் போரின் போது ஏற்பட்ட இன நெருக்கடியை தமிழக அரசு சரியாகப் புரிந்துகொள்ளத் தவறியதன் காரணமாகவே தேசத் துரோகம் இழைத்ததாக தன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக முத்தையா முரளிதரன் தெரிவித்தார்.

இந்திய சர்வதேச திரைப்பட விழாவுடன் இணைந்து நேற்று (26) கோவாவில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அன்றைய இலங்கையின் உண்மை நிலவரத்தை தமிழக அரசு புரிந்து கொள்ளத் தவறிவிட்டது என்று கூற தாம் அஞ்சப்போவதில்லை என்று கூறிய முத்தையா முரளிதரன், அதற்குக் காரணம் தமிழகத்திற்கும் இலங்கைக்கும் பல்வேறு வேறுபாடுகள் உள்ளன என குறிப்பிட்டார்.

இலங்கை தமிழ் சமூகத்தில் பல்வேறு துணைகுழுக்கள் உள்ளன. எல்லா குழுக்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை ஆனால் அவை அரசியல் ரீதியாக பிளவுபட்டுள்ளன என்று முரளிதரன் கூறினார்.

அந்தக் குழுக்களில் உள்ள சிலர் இலங்கையின் ஒரு பகுதியை பிரித்து தனி நாட்டை உருவாக்க விரும்புவதாகவும், ஆனால் பலர் அவ்வாறு செய்ய விரும்பவில்லை எனவும் முரளிதரன் தெரிவித்தார்.

“இந்திய வம்சாவளி தமிழ் மக்களை, ‘இலங்கை தமிழர்’ என அடையாளப்படுத்த முற்படுவது அம்மக்களின் அடையாளத்தை மறைக்கும்  ஒரு செயல்பாடாகும்.” – செந்தில் தொண்டமான் அதிருப்தி !

பிறப்பு, இறப்பு சான்றிதழில் இனத்தினை குறிப்பிடுவது குறித்து பதிவாளர் நாயக திணைக்களம் வெளியிட்டுள்ள சுற்றுநிரூபத்தை வன்மையாக கண்டிப்பதாக கிழக்கு மாகாண ஆளுனரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பிறப்பு, இறப்பு சான்றிதழ்களில் தமது இனத்தை குறிப்பிடுவது தொடர்பாக பதிவாளர் நாயக திணைக்களத்திற்கு சுற்றுரூபம் வெளியிட எவ்வித உரிமையும் இல்லை.

இலங்கையர் என்ற வகையில் தனது இனத்தை பிறப்பு இறப்பு சான்றிதழ்களில் குறிப்பிட இந்நாட்டு பிரஜை என்ற வகையில் அனைவருக்கும் உரிமை உள்ளது.

பிரஜா உரிமை இல்லாத சமூகமாக நாம் இருந்த பொழுது, இந்தியா வம்சாவளி தமிழர்கள் என்ற அடையாளமே எமக்கான அங்கீகாரமாக இருந்தது. எம் இனத்தின் அடையாளத்தை தீர்மானிப்பதற்கு மூன்றாம் தரப்பினருக்கு எவ்வித உரிமையும் கிடையாது.

1948 ஆம் ஆண்டுகளில் பிரஜா உரிமை இன்றி இருந்த நம் சமூகம் கிட்டத்தட்ட 40 வருட போராட்டங்களுக்கு பிறகு இந்திய வம்சாவளியினர் என்ற அங்கீகாரத்துடன் பிரஜா உரிமை பெற்றது.

இந்திய வம்சாவளி தமிழ் மக்களை, ‘இலங்கை தமிழர்’ என அடையாளப்படுத்த முற்படுவது அம்மக்களின் அடையாளத்தை மறைக்கும்  ஒரு செயல்பாடாகும். இவ்வாறான சுற்றுநிரூபங்களை வெளியிடுவதை வன்மையாக கண்டிக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

“தன்நாட்டின் சக மக்கள் கொல்லப்பட்டதற்கும் , கடன் வாங்கியதற்கும் பெருமைப்பட்டு பட்டாசு கொளுத்தும் வித்தியாசமான மக்கள் இங்குள்ளனர்.” – இரா.சாணக்கியன்

“தங்களது நாட்டினுடைய சக மக்கள் கொத்து கொத்தாக உயிரிழந்த போது வீதிகளில் வெடி கொளுத்தி, பாற்சோறு காய்ச்சிய மக்களும், சர்வதேச நாணயநிதியத்தின் கடன் ஒப்புதலுக்கு பட்டாசு கொளுத்திய வித்தியாசமான மக்களும் இலங்கையில் மட்டுமே உள்ளனர்.”

இவ்வாறு, தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம், மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர்,

“சர்வதேச நாணயநிதியத்தின் கடன் ஒப்புதலை இலங்கைக்கு கிடைத்த வரப்பிரசாதம் எனக் கூறமுடியாது, எமது நாடு வங்குரோத்து நிலையில் உள்ளதை உறுதி செய்கின்ற விடயத்தையே இந்த கடன் ஒப்புதல் பிரதிபலிக்கிறது.

சர்வதேச நாணயநிதியத்தின் கடன் ஒப்புதலின் மூலம் இலங்கை மீண்டும் கடன் பெறுகின்ற நிலைக்கு மாறியுள்ளது, இது மேலும் கவலையளிக்கின்ற விடயமாகும்.

நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைக்க, பாரிய முதலீடுகளை கொண்டு வருவதற்கு, தமிழருக்கு நிரந்தர தீர்வினை வழங்குமாறு கடந்த இரண்டு ஆண்டுகளாக இலங்கை அரசிற்கு வலியுறுத்தி இருந்தோம்.

முதலீடுகளை கொண்டுவருவதற்கு எங்களுடன் இணைந்து செயல்படுங்கள் எனக் கூறினோம், இருப்பினும் இலங்கை அரசாங்கம் அதற்கு செவிசாய்ப்பதாக இல்லை.

கடனை வாங்கிக்கொண்டு மட்டும் நாட்டை முன்னேற்றலாம் என்பது முட்டாள்தனமான சிந்தனை.

தமிழர் தாயகங்களில் இலங்கை அரசு பெளத்த விகாரைகளை அமைத்து தான்தோன்றித்தனமாக செயற்படுகிறது.

தமிழ் மக்களுக்கு எதிரான, தமிழ் மக்களை புறக்கணிக்கின்ற செயல்பாடுகளை நாளாந்தம் இலங்கை அரசு செய்து கொண்டிருக்கின்றது.

இதேவேளை, தமிழ் மக்களின் நலன்கள் மற்றும் தமிழ் மக்களுக்காண தீர்வு விடயத்தில் அமைச்சர் அலி சப்ரியும் இரட்டை வேடத்தை போடுகின்றார்.

அவரின் விருப்பத்திற்கு அமைய சம்பந்தம் இல்லாத கருத்துக்களை வெளியிடுகின்றார்.

இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதற்கு சர்வதேச நாணயநிதியத்தின் கடன் ஒப்புதல் மட்டும் போதாது, தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வின் மூலமே அது சாத்தியமாகும்.” இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

தொடரும் பொருளாதார நெருக்கடி – இந்தியாவை நோக்கி அகதிகளாக செல்லும் இலங்கை தமிழர்கள்!

தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 10 இலங்கை தமிழர்கள் இன்று (23) காலை தனுஷ்கோடி அடுத்த முகுந்தராயர் சத்திரம் பகுதியை சென்றடைந்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் உணவு பொருட்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இதனால் கடந்த மார்ச் முதல் இலங்கையில் இருந்து 198 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக சென்றடைந்துள்ளனர்.

இந்நிலையில் இலங்கை வவுனியா மாவட்டம் கணேசபுரத்தை சேர்ந்த உதயசூரியன் அவரது மனைவி பரிமளம் மற்றும் அவரது நான்கு குழந்தைகள் மற்றும் வவுனியா மாவட்டம் புவரசம் குளம் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி மற்றும் அவரது மூன்று குழந்தைகள் என இரண்டு குடும்பத்தை சேர்ந்த 10 பேர் இலங்கை மன்னாரில் இருந்து நேற்று (22) இரவு படகில் புறப்பட்டு தனுஷ்கோடி அருகே உள்ள முகுந்தராயர் சத்திரம் பகுதியில் இன்று (23) காலை சென்றடைந்தனர்.

தகவலறிந்த ராமேஸ்வரம் மரைன் பொலிஸார் இலங்கை தமிழர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் குழந்தைகளை வைத்துக் கொண்டு இலங்கையில் வாழ வழி இல்லாததால் தமிழகத்திற்கு அகதிகளாக வந்ததாக தெரிவித்தனர்.

பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பிறகு 10 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு இலங்கையிலிருந்து சென்ற அகதிகள் எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

“நாட்டை பிளவுபடுத்தாமல் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு வழங்க திட்டமிடுகிறேன்.” வவுனியாவில் ஜனாதிபதி ரணில் !

வடக்கின் பிரச்சினைக்குத் தீர்வு காணும் போது சிங்கள, தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து அதற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க தயார் என்றும் 75 ஆவது சுதந்திர தின விழாவின் போதாவது இந்நாட்டின் அனைத்து மக்களும் ஒரு தாயின் பிள்ளைகளாக வாழக்கூடியதாக இருக்க வேண்டுமென தான் பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் செயற்படும், வடமாகாண அபிவிருத்தி விசேட பிரிவின் உப அலுவலகத்தை நேற்று (19) வவுனியாவில் திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

நீண்ட காலமாக வடக்கு மற்றும் தென்னிலங்கை மக்கள் பல்வேறு காரணங்களால் சிரமப்படுவதாகவும், அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வை பெற்றுக்கொடுக்க தாம் துரிதமாக செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அங்கு ஜனாதிபதி மேலும் கூறியதாவது:

இந்த அலுவலகத்தில் இருந்தபடி வடக்கு மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட முடியும். யாழ்பாணத்திற்கு மட்டுமே அனைத்தும் வழங்கப்படுவதாக அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார். தற்போது வவுனியாவிலும் அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் இது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்.

அமைச்சுக்களிலுள்ள அதிகாரிகளும் இந்த அலுவலகத்திற்கு நேரில் வந்து வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு முற்படுவார்கள் என நான் நம்புகின்றேன். அனைத்து மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.

பயங்கரவாதத்தால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கும் வடக்கு மக்களுக்குள்ள பிரச்சினைகளுக்கும் நாம் தீர்வுகளை வழங்க வேண்டும். அதேபோன்றே, இலங்கை சமூகத்தில் தமக்குள்ள உரிமைகள் தொடர்பில் முஸ்லிம்களுக்கும் பிரச்சினைகள் உள்ளன. மலையக மக்களுக்கும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இப்பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட வேண்டும் என்ற சமூக கருத்து நிலவுகிறது.

எனவே இந்த பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்க இதுவே சிறந்த சந்தர்ப்பம். இந்தப் பிரச்சினைகள் முறையாகத் தீர்க்கப்பட வேண்டும். இது தொடர்பில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுடன் கலந்துரையாடவும் நாட்டைப் பிளவுபடுத்தாமல் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கவும் நான் எதிர்பார்க்கின்றேன்.

முதலில் மக்களின் சந்தேகங்கள் களையப்பட வேண்டும். நாம் அனைவரும் இணைந்து செயற்படும்போது அந்த சந்தேகம் நீங்கிவிடும். போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கிடைக்கும். 83 இல் இருந்து நாம் வெகுதூரம் வந்துவிட்டோம். அதுபோன்றே 2009 இல் இருந்தும் வெகுதூரம் வந்துவிட்டோம். எனக்கு தேசிய கீதத்தின் ஒரு வரி நினைவுக்கு வந்தது. அது, “ஒரு தாயின் பிள்ளைகளாக வாழ்வது” என்பதாகும். 75வது சுதந்திரதின விழாவின் போதாவது ஒரு தாயின் பிள்ளைகளாக வாழக்கூடியதாக இருக்க வேண்டுமென நான் பிரார்த்திக்கின்றேன்.

இங்கு உரையாற்றிய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, 2015ஆம் ஆண்டு வடக்கு மக்களுக்கு தீர்வுகள் வழங்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார். எனினும் ஏதோவொரு காரணத்தால் வடக்கு மக்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை. இப்போது, போனது போகட்டும். நாம் எதிர்காலத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்போம். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த வகையில் நெகிழ்வாக இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எவ்வாறாயினும் நாம் இவ்வாறு ஒன்றிணைந்து செயற்பட்டால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கும் நாட்டின் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்கக்கூடியதாக இருக்கும்.

இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு குறித்து மிகவும் மகிழ்ச்சி. வடக்கின் அபிவிருத்தி தொடர்பில் இவ்வாறானதொரு அலுவலகத்தை ஸ்தாபித்தமைக்காக ஜனாதிபதிக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். அதேபோன்று தமிழ் மக்களின் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும் என்றும் நாம் நம்புகின்றோம்.

இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,

ஜனாதிபதி, பிரதமராக இருந்த போது வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்காக செயற்பட்டுள்ளார். 2015ஆம் ஆண்டு நீங்கள் பிரதமராக இருந்தபோது வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவதற்காக செயற்பட்டீர்கள். எனினும் அப்போது இடம்பெற்ற ஒரு சில குறைபாடுகள் காரணமாக எங்களால் அதனைப் பெற முடியவில்லை. இன்று நீங்கள் ஜனாதிபதியாகிவிட்டீர்கள். எனவே, வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்படும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. உங்களது வேலைத்திட்டங்களுக்கு எமது ஆதரவை வழங்கும் அதேநேரம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.” என தெரிவித்தார்.

தமிழகத்தில் அகதிகளாக உள்ள இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை.?

இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் தமிழகத்தில் அகதிகளாக உள்ள இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுமா என உச்ச நீதிமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து 2014 ஆம் ஆண்டு டிசம்பர்  31 ஆம் திகதிக்கு முன்னதாக இந்தியா சென்று குடியேறிய முஸ்லிம் அல்லாதோருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் குடியுரிமை திருத்த சட்டம் 2019 டிசம்பரில் இயற்றப்பட்டது.

இந்த திருத்த சட்டத்தை எதிர்த்து, 200-க்கும் மேற்பட்ட மனுக்கள் இந்திய உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

தலைமை நீதியரசர் யு.யு.லலித் தலைமையிலான நீதியரசர்கள் குழாம் முன்னிலையில், நேற்று (31) இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் சட்டத்தரணி  வில்சன் வாதங்களை முன்வைத்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்தின் பலனை மூன்று நாடுகளுக்கு மட்டும் என கட்டுப்படுத்துவதில் நியாயம் இல்லை எனவும்  இதர அண்டை நாடுகளிலும் இதேபோன்ற துன்புறுத்தலை எதிர்கொள்ளும் சிறுபான்மையினர் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி கூறியுள்ளார்.

இலங்கையில் இருந்து ஏராளமான தமிழர்கள் இந்தியாவில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளதாகவும் அவர்களுக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் குடியுரிமை வழங்கப்படுமா என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் எனவும் தெரிவித்த சட்டத்தரணி, இதற்கு சொலிசிட்டர் ஜெனரலிடம் பதில் இல்லை எனவும் கூறியுள்ளார்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை  டிசம்பர்  மாதம் 6 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

தமிழர்களின் தேசிய அபிலாசைகள் தொடர்பிலும் வலியுறுத்துங்கள் என குமார் குணரத்தினத்திடம் மனோகணேசன் கோரிக்கை !

தமிழர்களின் தேசிய அபிலாசைகள் தொடர்பில், கோட்பாடுகளையும் வலியுறுத்துங்கள் என குமார் குணரத்தினத்திடம் மனோகணேசன் கோரிக்கை !

 

“நாட்டின் அரசியல் கலாச்சாரத்தினை மாற்றுவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இதை புறந்தள்ளி செயற்படுவது முறையானதல்ல. மீண்டும் பழைய பாதையிலேயே போக கூடாது” என முன்னிலை சோஷலிச கட்சியின் பொது செயலாளர் குமார் குணரத்தினம் கூறுகிறார். இதுவே எமது கொள்கையாகவும் இருக்கிறது. இதனாலேயே நாம் எப்போதும் ராஜபக்ச அரசியல் கலாச்சாரத்தை எதிர்த்து வந்துள்ளோம். ஆனால், இந்த உத்தேச புதிய அரசியல் கலாச்சாரம், தமிழர் அபிலாஷைகளையும் வெறும் ஒருசில கோஷங்களுக்கு அப்பால் சென்று, கோட்பாடுகளாக உள்வாங்க வேண்டும். இதை போராட்டக்காரர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். இதற்கு குமார் குணரத்தினத்தின் முன்னிலை சோஷலிச கட்சியும், ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஒத்துழைக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறினார்.

இதுபற்றி மனோ எம்பி மேலும் கூறியதாவது;

அரசியல் சட்டங்களுக்கு அப்பால் மக்கள் சக்தி உருவாகியுள்ளது. அந்த சக்தியின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற வேண்டியது அதிகாரத்தில் உள்ளவர்களின் கடமையாகின்றது. அது உண்மை. ஆனால், இதே விதமான சட்டத்துக்கு அப்பால் சென்றுதான், கடந்த காலங்களில் தமிழர்கள் ஒடுக்கு முறையை சந்தித்தார்கள். இப்போதும் சந்திக்கிறார்கள்.

ஆகவே மக்கள் சக்தியை அடிப்படையாகக் கொண்ட மக்கள் சபைகள் உருவாக்கப்படட்டும். புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு தீர்வுகள் வரட்டும். நாமும் அவற்றை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். ஆனால் சட்டங்கள் வரமுன் அவற்றுக்கு அப்பால் முதலில் கோட்பாடுகள் வர வேண்டும். அவையே பின்னர் அரசியலமைப்பில் இடம்பெறும்.

இப்போது போராட்டக்காரர்கள் மத்தியில், தமிழர்களின் தேசிய அபிலாசைகள் தொடர்பில், கோட்பாடுகளை நாம் காணவில்லை. எமக்கு வழங்கப்பட்டுள்ள பல்வேறு போராட்டக்கார அமைப்புகளின் ஆவணங்களில் ஒருசில மென்மையான கோஷங்களைத்தான் நாம் காண்கிறோம்.

ஆகவே தமிழர் அபிலாஷைகளையும் கோஷங்களாக மட்டும் இல்லாமல், கோட்பாடுகளாக உள்வாங்க வேண்டும். இதற்கு மக்கள் விடுதலை முன்னணி, முன்னிலை சோஷலிச கட்சி ஆகிய அமைப்புகள் ஆவன செய்ய வேண்டும்.” என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.