இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க

இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க

அனுர அலை அடித்துக் கொண்டே இருக்கிறது – எச்சரிக்கிறார் சுமந்திரன் 

அனுர அலை அடித்துக் கொண்டே இருக்கிறது – எச்சரிக்கிறார் சுமந்திரன்

 

அனுர அலை இன்னும் குறையவில்லை. அதனை குறைத்து மதிப்பிட முடியாது. அத்துடன் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதில்லை என தமிழரசுக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளரும், பதில் பொதுச் செயலாளருமான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

அங்கு எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவிக்கையில், வடக்கு – கிழக்கு மாவட்டங்களின் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் இலங்கை தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடும். இம்முறை நாடு அனுர அலையில் உள்ளது. பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தனிப் பெரும்பான்மையை பெற்றுள்ளது. திருகோணமலையில், மட்டக்களப்பில் நாம் பெரும்பான்மை பெற முடியாது. வடக்கில் நாம் தான் பெரும்பான்மை. எனினும் மக்கள அநுர அலையில் சிக்கி ஜனாதிபதி தேர்தலைக் காட்டிலும் பாராளுன்ற தேர்தலில் அதிக வாக்குளை வழங்கியிருந்தார்கள். ஜனாதிபதித் தேர்தலில் நாம் ஆதரவு வழங்கிய ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாச அவர்களே வடக்கு – கிழக்கில் பெரும்பான்மை பெற்றார்.

ஆனால் பாராளுமன்ற தேர்தலில் இந்த நிலை மாறியது. தற்போது அநுர அலை குறைந்து விட்டது என்கிறார்கள் சிலர். அப்படி கூற முடியாது. அநுர அலை தற்போதும் இருக்கிறது. அது குறைவடைய சில காலம் செல்லலாம். நாம் கவனமாக தேர்தலை கவனமாக அணுக வேண்டும் . நாமும் அநுர அலையோடு அள்ளுண்டு போக கூடாது. “ நாடு அநுரவோடு இருக்கட்டும். நமது ஊர் நம்மோடு. நாம் வீட்டோடு என செயற்பட வேண்டும்.” என்றார்.

ஜனாதிபதி அனுர குமாரவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் – எச்சரிக்கிறது புலனாய்வு !

ஜனாதிபதி அனுர குமாரவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் – எச்சரிக்கிறது புலனாய்வு !

 

பல்வேறு பேரணிகளின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பொது இடங்களில் தோன்றுவது அவரது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அரச புலனாய்வு அமைப்புகள் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது குறித்து ஜனாதிபதிக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது.

குறிப்பாக, நாட்டில் தற்போது நடைபெற்று வரும் பாதாள உலக நடவடிக்கைகள் உட்பட சில நடவடிக்கைகள் படிப்படியாக அதிகரித்து வருவதாகவும், அந்த பாதாள உலக நடவடிக்கைகளுக்குப் பின்னால் வேறு ஏதேனும் செல்வாக்கு உள்ளதா என்ற சந்தேகம் பாதுகாப்புப் படையினருக்கு இருப்பதாகவும் அறியப்படுகிறது.

இதன் விளைவாக, தொடர்புடைய பாதாள உலக நடவடிக்கைகளுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து புலனாய்வு அமைப்புகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ‘நல்லமா நல்லமா’ – ட்ரெட்ன்டிங்கில் சாமர சம்பத் 

‘நல்லமா நல்லமா’ – ட்ரெட்ன்டிங்கில் சாமர சம்பத்

 

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்தில் வைத்து, மக்களிடம் ‘நல்லமா, நல்லமா’ எனக் கூறியதை நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பாராளுமன்றத்தில் கிண்டலடித்த காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நேற்று முன்தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில், “நீங்கள் சம்பந்தப்பட்டுள்ள மோசடிகள் குறித்த கோப்புகள் எங்களிடம் உள்ளன, நாங்கள் அனைத்தையும் விசாரிப்போம்” என்று அமைச்சர் வித்யாரத்ன கூறினார்.

“சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது நீங்களும் அரசாங்க அமைச்சர்களும் பொது நிதியை வீணடித்து முந்திரி பருப்பை சாப்பிட்டது பற்றி தான் இப்போது மக்கள் பேசுகின்றனர். நீங்கள் என் மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம். நான் பயப்படவில்லை” என்று எம்.பி. சாமர சம்பத் கூறினார்.

மேலும் , வடக்கு மக்களின் நல்வாழ்வு குறித்து விசாரிக்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு எப்படி தைரியம் வந்தது… ?

“அரிசி இல்லை, உப்பு இல்லை, இப்படி அரசாங்கம் அடிப்படைத் தேவைகளை வழங்கத் தவறியபோது, வடக்கு மக்களிடம் எல்லாம் நன்றாக இருக்கிறதா என்று ஜனாதிபதி எப்படிக் கேட்க முடியும்..? இந்த அரசாங்கத்தின் உறுப்பினர்கள் எவ்வளவு அதிகமாகப் பேசுகிறார்களோ, அவ்வளவு அதிகமாக வாக்குகளை இழக்க நேரிடும் என்று தசநாயக்க கூறினார்.

நல்லமா நல்லமா என நளினத்துடன் சாமர சம்பத் தசநாயக்க கூறியது தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகின்றது.

“தனிநாடு தருகிறோம் என கூறிய தலைவர்களை ஒதுக்கி விட்டு தமிழ் மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.” ஜனாதிபதி அனுர

“தனிநாடு தருகிறோம் என கூறிய தலைவர்களை ஒதுக்கி விட்டு தமிழ் மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.” ஜனாதிபதி அனுர

 

“தனிநாடு தருகிறோம் என கூறிய தலைவர்களை ஒதுக்கி விட்டு தமிழ் மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.” என ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க குருநாகலில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது, நான் யாழ்ப்பாணம் சென்றிருந்தேன். யாழ். மக்கள் முதன்முறையாக தெற்கு அரசு மீது, தெற்குத் தலைவர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளதைக் காணமுடிந்தது. இது மிக முக்கியமாகும். வடக்கில் உள்ள சில தலைவர்கள் தனிநாடு தருகின்றோம் எனக் கூறியபோதும், அப்படி கூறியவர்களின் அரசியல் பரம்பரையில் வந்தவர்கள் இருக்கின்றபோதிலும் மக்கள் எம்மை தேர்வு செய்தனர்.

அவர்களுக்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. அவற்றை நாம் நிறைவேற்ற வேண்டும். எம்மிடையே மீண்டும் பிரிவினைவாதம், போர், நம்பிக்கையீனம் என்பன இல்லாத, அனைவரும் ஒன்றியைணக்கூடிய நாடொன்றைக் கட்டியெழுப்ப வேண்டும். அதற்குரிய ஆசிர்வாதம் வடக்கு மக்களிடமிருந்து கிடைத்துள்ளது.

30 வருடகால போர் மற்றும் அரசியல் காரணங்களால் வடக்கு பகுதிக்கு அபிவிருத்திகள் சென்றடையவில்லை. அந்தப் பகுதி மக்களின் பிரச்சினைகளை வேகமாகத் தீர்க்க வேண்டும் என்றார்.

அரிசி பதுக்கினால் அரிசி ஆலைகள் இராணுவவசமாகும் அரிசி மாபியாக்களுக்கு எச்சரிக்கை !

அரிசி பதுக்கினால் அரிசி ஆலைகள் இராணுவவசமாகும் அரிசி மாபியாக்களுக்கு எச்சரிக்கை !

ஜனவரி 21 தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற ஜனாதிபதி அநுர அரசியை பதுக்கும் ஆலை உரிமையாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் நிலவும் அரிசித் தட்டுப்பாட்டை நீக்க அஅரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

இந்நிலையில் அரசாங்க அறிவுறுத்தல்களை பின்பற்றாத போது அரிசி அறுவடையாகி களஞ்சியத்திற்கு கொண்டு செல்லப்படும் வரை இராணுவ கண்காணிப்பு போட வேண்டி வரும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார் ஜனாதிபதி அனுரா.

இனிமேல் அரிசிக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள நிர்ணய விலையை விட ஒரு சதம் கூட அதிகமாக விற்க இடமளிக்கப்பட மாட்டாது எனவும் கடும்தொனியில் எச்சரித்தார் ஜனாதிபதி அநுர.

நாட்டில் அவசரநிலை காலங்களில் இராணுவ உதவி பெறப்படுவது வழமைதான் என்கிற போதும் அரிசிப் பிரச்சினையை தீர்க்க காத்திரமான வேறு பல பொறிமுறைகள், கலந்துரையாடல்கள் மற்றும் ஆலோசனைகளையும் பெறலாம் அல்லது முன்னெடுக்கலாம்.

கஜேந்திரகுமாருக்கும் அறளைபெயருகிறது: சங்கரி ஐயாவுக்கு போட்டியாக கடிதம் எழுதுகிறார்!

கஜேந்திரகுமாருக்கும் அறளைபெயருகிறது: சங்கரி ஐயாவுக்கு போட்டியாக கடிதம் எழுதுகிறார்!
தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்துமாறு கோரி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தமிழர் விடுதலைக் கூட்டணி சங்கரி ஐயா தான் கடிதம் எழுதுவதில் வல்லவர். அவருக்குப் போட்டியாக கஜேந்திர குமாரும் கடித எழுத ஆரம்பித்துள்ளார்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அனுரவுடன் எவ்வித ஆக்கபூர்வமான பேச்சுகளையும் இதுவரை முன்னெடுக்காத நிலையில், இந்தக் கடிதத்தை கஜேந்திரகுமார் அனுப்பியுள்ளார். குறித்த கடிதத்தில், இலங்கை ஒற்றையாட்சிக் கருத்தைக் கைவிட்டு தமிழ் மக்களை உள்ளடக்கிய பெடரல் அரசியலமைப்பை தயாரிக்க, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்துமாறு மோடியை அவர் கோரியுள்ளார்..
கடந்த எழுபத்தைந்து வருடங்களில் இலங்கையின் கொள்கை மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்க தவறியமையே நாடு இவ்வளவு கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் வீழ்ச்சியை எதிர்கொள்வதற்கு காரணம் என அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைத் தமிழர் விவகாரத்தை தன்னுடைய நலன் தவிர வேறு எதற்காகவும் இந்தியா கையிலெடுக்கப் போவது இல்லை. தமிழர்களுக்கான தீர்வு தொடர்பில் இலங்கை அரசின் மீது அது எவ்வித அழுத்தத்தையும் பிரயோகிக்கப்போவதும் இல்லை. இனப் பிரச்சினைக்கான தீர்வு என்பது ஆட்சியிலுள்ளவர்களுடன் தமிழ்ப் பிரதிநிதிகள் ஆக்கபூர்வமாக தொடர் பேச்சுக்களை முன்னெடுத்து புரிந்துணர்வின் அடிப்படையில் அணுகப்பட வேண்டிய ஒன்று. பேசிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தயாராகவுள்ள தலைவராக அனுரகுமார திசநாயக்க காணப்படுகின்றார். ஆனால் அதைச் சரிவர பயன்படுத்தாது வெறும் கண்துடைப்புக்காக இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் பொன்னம்பலம் கஜேந்திரகுமார்.
தமிழர் விவகாரத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தம்முடைய அரசியல் இருப்புக்காகவே பயன்படுத்துகின்றனர் என்பது மீண்டும் இந்த சம்பவத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இவர்களுடைய அரசியல் சாயம் வெழுத்து வாக்கு வங்கி கவிழ்ந்து ஒரு ஆசனம் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முன்னணியினர் தொடர்ந்தும் பூகோள அரசியல் என்ற பெயரில் மக்களை ஏமாற்றினால் அடுத்த ஆசனமும் பறிபோகும் என்கின்றனர் அரசியல் அவதானிகள். இந்தியாவை வைத்து இலங்கைக்கு குட்டலாம் என்ற போர்மிலா காலாவதியாகிப் போனது காலாவாதியாகிப் போய்க்கொண்டிருக்கின்ற பொன்னம்பலம் சஜேந்திரகுமாருக்குப் புரியவில்லையா அல்லது அவருக்கும் அறளைபெயருகிறதா? என்கிறார் ஆய்வாளர் மாவடி ஏஆர் சிறிதரன்.

மக்களால் வெறுக்கப்படும் நாடாளுமன்றம் மக்களை ஆள்வதற்கு தகுதியற்றது. – கொள்கைப் பிரகடன உரையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க!

இனவாத அரசியலுக்கு மீண்டும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னி அமர்வு ஆரம்பமாகியிருக்கும் நிலையில், ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வருகை தந்து தனது கொள்கைப் பிரகடன உரையை உரையாற்றினார்.

மேலும்,சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான மூன்றாவது மீளாய்வுக்கான பணியாளர் மட்ட ஒப்பந்தம் எதிர்வரும் 23 ஆம் திகதி கைச்சாத்திடப்பட உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் தமது கொள்கை உரையில் பேசிய ஜனாதிபதி

மக்களுக்கு நாட்டின் நீதித்துறை மீது அவ நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கை கட்டியெழுப்பப்படும்.

இதற்காக யாரையும் பழிவாங்கும் எண்ணம் இல்லாமல் அனைவரும் சுதந்திரமாக செயற்படும் வகையில் நீதித்துறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும்.

நாட்டில் யாரும் நீதிக்கு மேன்மையானவர்களாக இருக்க மாட்டார்கள்.நாட்டின் அரச சேவை தொடர்பாக மக்கள் அதிருப்தியில் உள்ளார்கள்.

தற்போதைய அரசாங்கமே அதிகப்படியான அரச சேசையாளர்களின் ஆதரவைப் பெற்ற அரசாங்கமாகும். அந்தவகையில், திருப்திகரமான அரச சேவைத்துறையை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன் மக்கள் பெரும்பான்மையான ஆணையை வழங்கிய அரசாங்கம் என்ற அடிப்படையில், நாடாளுமன்றின் கௌரவத்தை பேணுவது முதலாவது கடமையாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

எதிர்வரும் 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், குறை நிரப்பு பிரேரணை எதிர்வரும் மாதம் சமர்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக அரச சேவையாளர்களின் வேதனம் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி இதன்போது உறுதியளித்தார்.

அத்துடன், வரவு – செலவு திட்டத்தின் ஊடாக அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு அதிகரிக்கப்படும் என்றும், வறுமை நிலையில் உள்ள மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக விசேட கொடுப்பனவு வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பணியாளர் மட்ட இணக்கப்பாட்டு ஒப்பந்தம் சனிக்கிழமை (23) கைச்சாத்திடப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தம்மீதும் அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை வைத்துள்ள அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

தேர்தலில் ஆதரவளித்த, ஆதரவளிக்காத அனைவரையும் இலங்கை பிரஜைகள் என்றே நான் கருதுவேன் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார். தேசிய நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

இந்த நாட்டில் இனி இனவாதத்துக்கும், மதவாதத்துக்கும் இடமில்லை என்று ஜனாதிபதி கூறினார்.

 

தற்சமயம் நாடாளுமன்றத்தில் ஆற்றி வரும் தமது கொள்கைப் பிரகடன உரையின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

 

இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்ற வகையில் தனியொரு கட்சி நாட்டை ஆள வேண்டும் என்று ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

 

எனவே, அனைத்து பிரஜைகளின் தேவைகளையும் நிறைவேற்றுவதற்கு தாம் கடமைப்பட்டிருப்பதாகவும், அதற்கு பொறுப்புக் கூறுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

 

மேலும், இந்த தருணத்தில் இருந்து ஜனாதிபதி என்ற வகையில் மக்களின் பொறுப்பை முழுமையாக ஏற்றுக்கொள்வேன் எனவும், இனவாத அரசியலுக்கு மீண்டும் எமது நாட்டில் இடமில்லை எனவும் இதன்போது ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

 

மக்களால் வெறுக்கப்படும் நாடாளுமன்றம் மக்களை ஆள்வதற்கு தகுதியற்றது. ஆகவே மக்களால் விமர்சிக்கப்படும் நாடாளுமன்றம் தோற்றம் பெற இடமளிக்க முடியாது என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நாடாளுமன்றம் மக்களுடன் நெருக்கமாக செயற்பட வேண்டும் என்றும் இந்த நாடாளுமன்றம் மக்களின் பரிசோதனையில் சித்தி பெற வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதி உட்பட அனைவரும் நாட்டின் சட்டத்துக்கு அடிபணிய வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய குற்றங்களை முறையாக விசாரணை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுப்போம் என்றும் ஜனாதிபதி இதன்போது கூறினார்.

மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களின் விபரங்களை வெளியிடாமல் இருப்பது அனுர தரப்பு மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது – எம்.ஏ. சுமந்திரன்

அரசியல்வாதிகளுக்கு கொடுக்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களின் விபரங்களை வெளியிடும்படி பல தடவைகள் நான் கேட்டிருக்கிறேன். தேசிய மக்கள் சக்தி அரசும் அந்த தகவலை வெளியிடாமல் இருப்பது சந்தேகத்தையே ஏற்படுத்துகின்றதென முன்னாள் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்​ தெரிவித்தார்.
அரசியல் வழிகளில் மதுபானசாலை அனுமதிப்பத்திரம் பெற்றவர்களின் பெயர்களை வெளியிடுமாறு அரசிடம் சுமந்திரன் பல தடவைகள் கோரிக்கை விடுத்திருந்தார்.
மதுபான விற்பனை அனுமதிப்பத்திரம் வழங்குவது இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு சமூகப் பிரச்சினை எனவும் அவ்வாறு அனுமதிப்பத்திரம் வழங்குவது வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டுமெனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான உரிமங்களில் அரசியல் தொடர்புள்ள தனிநபர்களின் நிதி ஆதாயத்துக்காக வழங்கப்படுவதாகவும் சுமந்திரன் கூறினார்.

காங்கேசன்துறை துறைமுகத்தை நவீனமயமாக்கும் நடவடிக்கைகளுக்காக 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கும் இந்தியா !

இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள முதலீடுகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கலந்துரையாடியுள்ளார்.

இதன்படி, காங்கேசன்துறை துறைமுகத்தை நவீனமயமாக்கும் நடவடிக்கைகளுக்காக 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை இந்தியா வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கை தொடருந்து திணைக்களத்துக்கு 22 டீசல் இயந்திரங்களைப் பரிசாக வழங்குவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எரிசக்தி, வலுசக்தி, சுகாதாரம், சுற்றுலா, பால்வள மேம்பாடு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் இலங்கைக்கான விஜயத்தின் போது இந்திய வெளிவிவகார அமைச்சர் கலந்துரையாடியுள்ளதாக அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கே உரித்தான சிறுவர் உலகை மீண்டும் வெல்வதே எமது மறுமலர்ச்சிப் பணிகளின் இறுதி இலக்கு – சிறுவர் தின வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க!

குழந்தைகளுக்கே உரித்தான சிறுவர் உலகை மீண்டும் வெல்வதே எமது மறுமலர்ச்சிப் பணிகளின் இறுதி இலக்கு என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க  சர்வதேச சிறுவர் தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

உலகம் சிறுவர்களுக்கானது, அவர்களின் உலகத்தை நம் கரங்களினால் உருவாக்குவோம் என்றும் ஜனாதிபதி அநுரகுமார தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட சிறுவர் தினச் செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவிக்கையில், ஏழ்மை, போசாக்குக் குறைபாடு, சுகாதாரம் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு, கல்வியில் ஏற்றத்தாழ்வு, சமூக வாய்ப்புகளில் ஏற்றத்தாழ்வு, போதைப்பொருள், அத்துடன் தொழில் நுட்பத்தின் தவறான பயன்பாட்டிற்கு பலியாவது போன்றன இந்த மிலேனியத்தில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் சவால்களாக நாம் அடையாளம் கண்டுள்ளோம்.

மேலும், சிறுவர்களின் உளவியல் சமூக வளர்ச்சியைத் தடுக்கும் சமூக விளைவுகள் மற்றும் மன அழுத்தம் நிறைந்த பரீட்சையை மையமாகக் கொண்ட கல்வி முறைகள் போன்ற தாக்கங்களில் இருந்து தற்போதைய தலைமுறைச் சிறுவர் சமூகத்தை விடுவித்து பிள்ளைகளுக்கே உரித்தான சிறுவர் உலகை மீண்டும் அவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதே நமது மறுமலர்ச்சிக் காலப் பணியின் முக்கிய குறிக்கோளாகும்.

உடலாலும், உள்ளத்தாலும் ஆரோக்கியமான சிறுவர்களின் தலைமுறையை உருவாக்குவதன் மூலம், எதிர்கால உலகை வெல்லும் சுதந்திரமான கற்பனைத்திறன் கொண்ட கனிவான மற்றும் உன்னதமான மனிதர்கள் உருவாக்கப்படுவதாக நாம் நம்புகிறோம்.

அதற்கு அவசியமான பொருளாதார சுதந்திரம் மற்றும் மனித நேயம், பரஸ்பர நம்பிக்கை, மரியாதை மற்றும் ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றைக் கொண்ட சமூகத்தை உருவாக்குதல் மற்றும் இயற்கை வளங்கள் நிறைந்த சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் தேவையான அரசியல் மாற்றத்தை நமது முன்னுரிமைப் பணியாகக் கருதி செயற்படுத்த அர்ப்பணிப்போம்.

அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு நாம் அனைவரும் பொறுப்புடன் செயற்படுவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.